(Reading time: 9 - 18 minutes)

கனம் - பூர்ணிமா செண்பகமூர்த்தி

kanam

விமானப்பயணங்கள் மிகவும் சோர்வு தருபவை. பூமியில் இருந்து பார்க்கும் மேகங்களின் அழகு வானிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை. இரவு நேரப்பயணம் என்றால், இன்னும் சோர்வானவை. சிங்கப்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மூன்று மணி நேரம் தான் என்றாலும், அந்த மூன்று மணி நேர விமானப்பயணத்தில் ரதிக்கு துளியும் சுவாரசியமில்லை. தனது கணவன் மாதவனைப் பார்த்தாள், நன்கு அயர்ந்து தூங்கிவிட்டான். விடுமுறை கிடைக்க வேண்டுமென்றால் ஓவர்டைம் வேலை பார்க்க வேண்டும் என்று அவன் நிறுவனத்தில் சொல்லிவிட, இந்த வாரம் முழுவதும் வேலை பார்த்திருக்கிறான். மாதுவின் சித்தி மகனுக்குக் கல்யாணம், தன்னுடன் சிறுவயதில் இருந்து உடன்வளர்ந்த அன்புத்தம்பியின் திருமணம் என்பதால் எப்படியேனும் வந்து விடவேண்டும் என்று முயற்சி செய்து கிளம்பிவிட்டான். எப்போதும் சென்னையில் வந்து இறங்கி அங்கிருந்து தான் ஊருக்கு வருவார்கள். முதல் முறையாகத் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்திருந்தார்கள். நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் நடுப்பட்ட அந்நேரத்தில் விமான நிலையத்தில் இருந்து ஒரு டாக்சி பிடித்து, ரயில் நிலையம் வந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் பிடித்து விருதுநகர் வரை செல்ல வேண்டும். இரண்டரை மணிக்கு விமானம் தரையிறங்கி விட்டது. எங்கிருந்தாலும் தாய் மண்ணில் கால்பதிக்கும் போது வரும் உணர்வை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

தூக்கக் கலக்கத்தில் இருந்தே விடுபட முடியாமல் மாது நடந்து வந்தான். பெட்டியை எடுத்துக் கொண்டு, வெளியில் வந்தார்கள். ஒரு பெரியவர் வந்து, நான் டாக்சி அல்லது ஆட்டோ கூப்பிடுகிறேன் என்று கேட்கவும், மாது சரி என்று சொன்னான். பெரியவர்  ஒரு இண்டிகா காரை அழைத்து வந்தார். திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் சென்று இறக்கி விட எவ்வளவு என்று மாதவன் கேட்க, நானூறு ரூபாய் என்றார் அதன் ஓட்டுனர். அந்த நேரத்தில் அங்கே ஆட்டோக்களும் இல்லை. சரி இந்தக் காரில் போய்விடுவோம் என்று முடிவெடுத்தனர். அந்த முதியவர் பெட்டியைத் தூக்கி வண்டியில் வைத்துவிட்டு, தலையைச் சொறிந்தார். “மாது பணம் கேட்கிறார்! என்றாள் ரதி. அவன் பர்சைத் திறந்தான். சுத்தமாகச் சில்லறை இல்லை. அவசரத்தில் சில்லறை மாற்றாமல், அப்படியே மணி எக்ஸ்சேஞ்சில் வாங்கி உள்ளே வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. ஐநூறு ரூபாய் தாள்கள் தான் இருந்தது. சாரி, சில்லறை இல்லை, என்று சொல்லவும், நான் அப்புறம் அவருக்குக் கொடுத்துவிடுகிறேன் சாரே என்றார் அந்த ஓட்டுனர். ஏறி அமர்ந்ததும், கார் சிட்டாகப் பறந்தது, மாதுவுக்கு அயற்சியால் தூக்கம் வந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டான். அதிகாலை நேரம், தெரியாத ஊர், பாதுகாப்பை எண்ணியும் மனதில் ஒரு பயம். ஓட்டுனர் நீங்கள் எந்த ஊர் போக வேண்டும் என்று கேட்டார். விருதுநகர் என்று சொல்லவும், விருதுநகர் வரை காரிலேயே போய்விடலாம். ஆறாயிரம் தந்தால் போதும் என்றார்.

இன்னும் சில உறவினர்கள், ரயிலில் வருகிறார்கள் அவர்களுடன் தங்களும் சேர்ந்து செல்ல வேண்டும் என்று மாதவன் சொன்னதும், அவர் ஒன்றும் சொல்லவில்லை. திருவனந்தபுரம் ரயில் நிலையம் வந்தது, ஓட்டுனருக்குப் பணம் தர ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான் மாது.  “சில்லறை இல்லையே சாரே!” கொடுங்க உள்ளே கடையில மாத்தித் தரேன் என்று சொல்லி முடிப்பதற்குள், "பரவாயில்லை சாரே!" என்று ஐநூறு ரூபாய் தாளோடு வண்டியில் ஏறிக் கிளம்பி விட்டார். "அடப்பாவமே! பரவாயில்லைன்னு நாம சொல்ல வேண்டியது.! அதிகாலை ட்ரிப்புன்னு இஷ்டத்துக்கு வாங்கிட்டானே.

அந்த பெரியவருக்குப் பணம் கொடுத்தாரோ என்னவோ?" என்று ரதி சொன்னாள்.

"ஹூம்! ஆட்டோவுக்கு நூறு ரூபாய் தான் கேட்பாங்கன்னு என் நண்பன் சொன்னான். வந்ததும் ஐநூறு ரூபாய் காலி!"

"சரி விடுங்க. எப்பவோ ஒரு தடவை வர்றோம். செலவாகுது. ரயில்வே ஸ்டேஷன்  உள்ளே போய் உட்காருவோம்!"

ரயில் நிலையம் வெறிச்சோடி இருந்தது. ஒன்றிரண்டு பணியாளர்கள் மட்டும் தட்டுபட்டனர்.

அந்நேரத்திலும் ஒரு கடை திறந்து இருந்தது.

"மாது, ஒரு தண்ணி பாட்டில் மட்டும் வாங்கிக்கலமா?"

"வாங்கிப்போம். கடைல பாரு நேந்தரம் சிப்ஸ். இரண்டு பாக்கெட் வாங்கவா?"

"வாங்குங்க மாது!"

"சிங்கப்பூர்ல இருக்கும் போது வாடா, போடா..இங்கே வந்தால் வாங்க, போங்க.. நீ பேசுறத நினைச்சா எனக்கு சிரிப்பா இருக்கு ரதி!"

"என்ன பண்றது, பெரியவங்களுக்குப் பயந்து அப்படித் தானே பேச வேண்டியிருக்கு. அதுக்கு தான் இப்பலிருந்தே வாங்க, போங்கன்னு பேசிட்டு இருக்கேன்!"

"ஒரு வாட்டர் பாட்டில் கொடுங்க!"

"அக்வாபினா மட்டும் தான் இருக்கு!"

"சரி கொடுங்க!"

"ரதி! பாட்டிலை வாங்கிக்க!"

"தர்ட்டி பை ரூபீஸ் கொடுங்க!"

"மாது, பாட்டில்ல இருபது ரூபான்னு தான் போட்டு இருக்கு!"

"இங்கல்லாம் அப்படித் தான். கேள்வி கேட்கமுடியாது!"

"நேந்திரம் சிப்ஸ் பாக்கெட் ரெண்டு கொடுங்க!"

"எவ்வளவுன்னு கேட்டுட்டு வாங்குங்க மாது!"

"அதை என்ன விலை குறைச்ச விக்கப் போறான். இப்போ எனக்கும் சில்லறை தேவை. அப்புறம் ஐநூறா எல்லார்ட்டயும் நீட்ட முடியாது!"

"பாக்கெட் எவ்வளவு?" என்றாள் ரதி.

" 67 ரூபாய்"

"நாற்பது ரூபாய் தானே கவர்ல போட்ருக்கு!"

"மேடம், உங்களுக்கு வேணும்னா வாங்கிக்கங்க. இந்த விலைல தான் என்னை விக்க சொல்லி இருக்காங்க. நான் என்ன பண்றது சொல்லுங்க. குறைச்சு விக்க என்னால முடியாதே!"

"சரி!சரி!கொடுங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.