(Reading time: 32 - 63 minutes)

இயற்கை – மீரா ராம்

Iyarkai

னவிலும் எண்ணிப் பார்த்திடாத நிலை இன்று எனக்கு வந்திருக்கிறதா?... என்னால் அதை நம்ப முடிகிறதா???.... உடம்பின் ஒவ்வொரு அணுவும் துடிப்பதை உணராமல் இருக்க நான் உணர்ச்சியற்றவள் இல்லையே… நினைக்கவே நெஞ்சம் ரணத்தை கக்குகிறது… இருந்தும் அதிலிருந்து வெளிவந்து காயம் ஆறும் ஒரு நிலை உண்டா?... நிச்சயமாய் இல்லை… ஆனால் மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு என்ற வாக்கியம் உண்மை என்றால், என் மனப்போராட்டத்திற்கும் தீர்வு கிடைக்குமா?... இருதலைக்கொள்ளி எறும்பாக என்னை ஏன் தவிக்க விடுகிறாய் கடவுளே… உனக்கு கண் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?.. நான் அனுபவிக்கும் வேதனை அனைத்தும் பார்த்துக்கொண்டிருக்கிறாயே இப்படியே சிலை என சமைந்து… என தன் நிலையை கடவுளிடம் சொல்லி கண் மூடி நின்றாள் ஸ்வதாயினி…

சிலை என்று சொன்னதும், தனக்கு எதிரே இருந்த கார்மேக வண்ணனை விழிகளில் இருந்த நீர்த்திரையோடு கண்டாள் அவள்…

கண்ணீர்ப் போர்வைக்கு பின் கலங்கலாக இருந்த அந்த நீலநிற உடல் கொண்டவனை விழி அகலாமல் பார்த்தவள், எனக்கு ஏன் இந்த சோதனை?... நான் என்ன பாவம் செய்தேன்??... உன்னையே நம்பி இருக்கும் எனக்கு என்ன வழி தான் காட்டப்போகிறாய் நீ?... என அவள் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவள் செல்போன் சத்தம் கொடுத்தது…

மங்கை இவளின் வேதனை

நங்கை இவளின் சோதனை

அகிலம் இவளை ஏற்குமா?...

பிறந்தால் இவள் வேள்வியில்

வாழ்வானதோ இன்று கேள்வியில்

சதி செய்த விதி தன்னை வெல்வாளா?...

விதியின் விளையாட்டை மதியால் வென்றவர் உண்டோ

சதி செய்த விதி தன்னை இவள் மதியைக்கொண்டு வெல்வாளோ?...”

என அவள் நிலையைப் பிட்டு பிட்டு வைத்தது அந்த பாடல் வரிகள்…

ஏனோ மகாபாரத்தில் திரௌபதியின் சங்கடமான நிலையில் ஒலித்த பாடல் ஸ்வதாயினியின் மனதைக் கவர, அந்த பாடலை தனது ரிங்டோனாக வைத்திருந்தாள்…

அவளிடம் இந்த பாடலை ஏன் வைத்திருக்கிறாய் என பல பேர் கேட்டபோதெல்லாம், அந்த வரிகளை கேட்கும்போது ஏனோ வைக்க வேண்டும் என்று தோன்றியது என பதில் சொல்லிவிட்டு போய்விடுவாள்…

இன்று அந்த கேள்வியை யாரேனும் அவளிடம் கேட்டால், அந்த வரிகள் தான் இன்றைய தன் வாழ்வின் நிலை என்று அவள் மனம் உரைத்திருக்கும் தனக்குள்ளே…

தனக்குள்ளே பேசிக்கொண்ட மனதை அவள் திசை திருப்புவதற்குள் பாடல் நின்றுவிட்டிருந்தது… யார் அழைத்தார்கள் என அவளும் கவனிக்கவில்லை… யாராக இருக்கும் என்று எண்ணவும் அவள் மனம் விழையவில்லை அப்போது கொஞ்சமும்…

“எனக்கு பயமா இருக்கு கிருஷ்ணா… என்னால சம்மதிக்கவும் முடியலை… அதே நேரத்துல மறுக்கவும் முடியலை… இப்போ நான் என்ன செய்யட்டும்?... என்னை ஏன் இப்படி அழ வைச்சு பார்க்குற?... உனக்கு எப்படி மனசு வந்தது என்னை இந்த நிலையில நிற்க வைக்க?... கேட்குறேன்ல சொல்லு கிருஷ்ணா?.. சொல்லு…” என மண்டியிட்டாள் அவள் அந்த யசோதை மைந்தனின் முன்னால்…

“விவரம் தெரிந்த நாள் முதல் நீ என்னுடன் இருப்பதாகவே நான் என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும், நாளிலும் எண்ணியிருந்தேன்… அதெல்லாம் பொய் தானா?... எனில் இன்று நீ என்னுடன் இருந்தால், எனக்கு இந்த நிலை வந்திருக்காதே… என்று வருந்தியவள், உடனேயே நீ என்னுடன் தான் இருக்கிறாய்… இப்போதும் நான் விரும்பும் என் கிருஷ்ணனாக…” என்று சொல்லிய வேளையில் அவள் செல்போன் மீண்டும் சிணுங்க, சட்டென்று குனிந்து செல்போன் திரையைப் பார்க்க, அவளின் கண்ணீர் கன்னம் வழிந்து, அந்த திரையைத்தொட்டது…

செல்போனில் இருந்த நீரை துடைத்தவள் அதில் மின்னிய பெயரைக்கண்டதும், மேலும் சில நீர்த்துளிகளை திரையில் சிந்த, நடுங்கும் உதடுகளோடு, படபடப்புடன் அழைப்பை ஏற்றாள்..

“ஹலோ….” என இவள் சொல்வதற்குள், எதிர்முனையில் கேள்வி வந்தது சட்டென்று…

“எங்க இருக்குற?...”

“……”

“உங்கிட்ட தான் கேட்டேன்… இருக்குறீயா?... ஹலோ…” என எதிர்முனையில் அழுத்தமாக குரல் பதிய,

“ஹ்ம்ம்….” என்றாள் அவள் மெதுவாக…

“எங்க இருக்குறன்னு கேட்டேன்….”

“கோவிலில்…”

“ஓ சரி…”

“ஹ்ம்ம்…”

“எப்ப வர்ற?...” என்ற கேள்வி வந்ததும், அதுவரை ஹ்ம்ம் சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு வார்த்தை சுத்தமாக வரவில்லை… நா வறண்டு நெஞ்சு துடித்தது அவளுக்கு…

“ஹலோ… இருக்குறீயா இல்லையா?..”

“…..”

“சரி என்னாச்சு?.... சொல்லு….”

“அது….”

“சரி வீட்டுக்குப் போ… குட் நைட்…”

“இல்ல நான்….”

“என்ன?...”

“வீட்டுக்குப் போகலை…”

“சரி…” என்று எதிர்முனையில் பதில் வரவும், அவள் அமைதி காத்தாள்… அந்த அமைதி அவளைக்கொல்லாமல் கொல்ல, இறுக கண்மூடிக்கொண்டு

“நான் வரேன்…” என்றாள்…

“எங்க?...”

“வீட்டுக்கு….”

“சரி….” என்றபடி அழைப்பு துண்டிக்கப்பட, அவள் அப்படியே அருகிலிருந்த தூணில் சாய்ந்தாள் கண்களை இன்னும் திறவாத வண்ணம்…

“கிருஷ்ணா…” என உச்சரித்துக்கொண்டே விழி திறந்தவள், அந்த மாயவனை பார்த்தாள்…

“விதி என்னோட கண்ணாமூச்சி ஆடப்பார்க்குது… ஆனா அந்த விதியை நான் ஜெயிப்பேனா?... இல்ல விதி என்னை ஜெயிக்குமான்னு எனக்குத் தெரியலை… நிஜமாவே அந்த விதியை நான் எதிர்கொள்ள போகிறேன்னு நினைச்சா பயமா கூட இருக்கு… இருந்தாலும் எனக்கு நிழலா நீ இருக்குறீயே, அதனால நான் இப்போ போறேன்… அந்த விதியைத் தேடி…”

“நான் ஏன் கிருஷ்ணா கவலைப்படணும்?.. எதுக்கு இப்படி லூசுத்தனமா அழறேன்???... நான் அடி எடுத்து வைக்கிற பாதையை வகுத்ததே நீதானே… அப்போ நான் எதுக்கு வருத்தப்படணும்?... என் வாழ்க்கையில நான் செய்யுற ஒவ்வொன்றையும் எனக்கு முன்னாடி தீர்மானிக்கிறதே நீதானே… நான் போற பாதையில முள் போடணுமா? பூ போடணுமான்னு முடிவெடுக்குற அதிகாரம் உனக்கு இருக்கும்போது நான் ஏன் மனசை அலைபாய விடணும்?... எனக்குத்துணையா நீயே இருக்கும்போது நான் ஏன் கலங்கணும்?...” என்றவள் கண்களைத் துடைத்துக்கொண்டு மனதில் ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்…

“என் வாழ்க்கையோட முக்கியமான கட்டத்துல நான் இருக்குறேன்னு மட்டும் எனக்கு புரியுது கிருஷ்ணா…. நான் போறேன் கிருஷ்ணா…” என அவள் துதிக்கும் அந்த தூயவனிடம் சொல்லிக்கொண்டு எழுந்தாள்…

மனதில் குடியிருந்த சஞ்சலம் அனைத்தும் அந்த மாயவனிடம் சொல்லிவிட்ட வார்த்தைகளில் சற்றே அமைதி கொள்ள, அங்கிருந்து புறப்படத் தயாரானாள்…

கோவிலின் வாசல் வரை சென்றவள், திரும்பி நின்று ஒருமுறை அந்த மாயவனை மீண்டும் விழிகளில் நிறைத்தாள்… பின் விருட்டென்று அங்கிருந்து வெளியேறினாள்….

அழைப்பு மணியில் நடுங்கும் விரலைக் கட்டுப்படுத்திக்கொண்டு கடினப்பட்டு பலம் கொண்ட மட்டும் அழுத்தி மணியோசையை எழுப்பினாள்….

சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டதும், படபடவென்று நெஞ்சம் துடிக்க நின்றிருந்தவளை வியந்து போனவனாய் இமை அகற்றாமல் பார்த்தான் அவன் தன் அழகிய விழிகளால்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.