(Reading time: 17 - 33 minutes)

மனதை தொட்ட ராகங்கள் - 09 - வத்சலா

புத்தம் புது பூ பூத்ததோ.....

Flower

கோயம்புத்தூர்!!!!!

அன்று ஞாயிற்று கிழமை!!! ஜன்னல் வழியே தெரிந்துக்கொண்டிருந்தது அதிகாலை வானம். மெதுமெதுவாக ஆதவன் மேலே எழுந்துக்கொண்டிருக்க, நேரம் காலை ஆறரையை தாண்டிக்கொண்டிருந்தது.  பால் காய்ச்சிக்கொண்டிருந்தாள் ப்ரியா!!!! ரசிகப்ரியா!!!!

கார்த்திக் இன்னமும் எழுந்திருக்க வில்லையோ??? அவனுடைய அம்மாவும் அப்பாவும் ஊருக்கு சென்று இரண்டு நாட்கள் ஆகின்றன. வீடே நிசப்தமாக இருந்தது. அவளது கைப்பேசியில் மெலிதாக ஒலித்த பாடல்களின் ஒலி  மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

எழுந்து வந்தால் மட்டும் என்ன??? வாய்மூடாமல் பேசிக்கொண்டா இருக்க போகிறான்.??? இல்லை நான் தான் பேசிவிட போகிறேனா??? அவன் அவளை பெயர் சொல்லி அழைத்த தருணங்களே மிக குறைவு.

தர்மசங்கடம்!!!! தர்ம சங்கடத்தின் திரை இருவருக்கும் நடுவில்!!!! அவர்கள் திருமணம் நடந்தது முதலே இருக்கும் திரை.!!! எத்தனை தான் எல்லாவற்றையும் மறக்க பார்த்தும், திரையை தாண்டி வெளியே வர முயற்சித்தும் தோல்வியே முடிவாக கிடைக்கிறது இவளுக்கு. அவன் அதற்கான முயற்சிகள் எடுத்தானா என்று கூட புரியவில்லை!!!

சில நாட்களுக்கு முன் நடு இரவில், உறக்கம் நெருங்கி வராமல் போக, மனம் எங்கெங்கோ சுற்றி திரும்ப, அழுகை அழைக்காமலே அவள் அருகில் ஓடி வர, உறங்கிக்கொண்டு இருந்தவன் எப்படி விழித்தானோ சட்டென எழுந்து அமர்ந்தான்.

'என்னாச்சுமா???' தரையில் படுத்திருந்தவன் எழுந்து அவளுருகில் கட்டிலில் வந்தமர்ந்தான்.

'ஒன்றுமில்லை....' என்பதாக தலை அசைத்தவள் தலையணையில் முகம் புதைத்துக்கொள்ள...

'இங்கே பாரேன். ஒரு நிமிஷம் என்னை பாரேன்....' என்றான் அவன். அவள் நிமிரவில்லை.

'நானும் தினமும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன். சீக்கிரம் உனக்கு நல்லது நடக்கும் ப்ளீஸ் மா....' கொஞ்சம் பொறுமையா இரு. சொல்லிவிட்டு போய் படுத்துவிட்டான். விருட்டென எழுந்து அமர்ந்தாள் அவள்.. அவளது அழுகையும், அதன் காரணமும் என்னவாக அவனுக்கு புரிந்திருக்கிறது என்று அப்போதுதான் புரிந்தது அவளுக்கு.

அவன் எண்ணங்கள் போகும் திசையும் புரிந்தது. அதிர்ந்தது அவள் இதயம். எப்படி சொல்வதாம் அவனிடம்??? அவனிடம் தஞ்சம் அடைந்து விட்ட  தனது மனதை என்ன சொல்லி புரியவைப்பதாம் அவனுக்கு???

அவனை பற்றி யோசித்தபடியே, பொங்கிய பாலை பார்த்து அடுப்பை அவள் அணைத்த போதுதான் நடந்தது அது.....

'ப்ரியாமா...' அழைத்தது அவன் குரல். பதறிக்கொண்டு ஓடிவந்தவன் போலே வந்தான் அவன். அடுத்த நொடி அவளை அப்படியே சேர்த்தணைத்திருந்தான் அவன்.

'ப்ரியாமா...' உனக்கு ஒண்ணுமில்லையில்ல....' இறுகியது அவன் அணைப்பு. எதிர்ப்பார்க்க வில்லை அவள்.

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஹம்சானந்தி ராகத்தில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது அவள் கைப்பேசியில். மெதுமெதுவாக அவன் நெஞ்சில் புதைந்தது அவள் முகம். அந்த கனவு... அவனது கனவு. அதுதான் அவனை செலுத்தி இருக்கிறது இத்தனை தூரம்.

'நடுக்கூடத்தில் அவள் மாலையுடன் கிடத்தப்பட்டிருக்க அவள் அருகில் அவன் அமர்ந்து... கதறி...' அதை  இப்போது நினைக்கும்போது கூட அவன் உடல் நடுங்கத்தான் செய்ததது.

'என்னவோ கனவுடா ... உடம்பெல்லாம் நடுங்கிற மாதிரி...இருக்கு....  உனக்கு என்னவோ...' தன்னை மறந்து அவன் உதடுகள் முணுமுணுப்பது அவள் காதில் விழுந்தது. அவன் தனது கண்களை இறுக மூடிக்கொள்வது தெரிந்தது. அ

வன் உடல் நடுக்கத்தையும் அவளால் உணர முடிந்தது அவன் மனமும் அதனுள் இருந்த நேசமும் அவளுக்கு மெல்ல புரிய, சில நொடிகள் அப்படியே கடக்க.... திடீரென தீயை மிதித்த பாவனையுடன் அவளை விலக்கி விலகினான் அவன்

'ச்சே...' தனது தலையில் அடித்துக்கொண்டான் கார்த்திக். 'முட்டாள்... முட்டாள்... பைத்தியக்காரா.......' தன்னை தானே திட்டிக்கொண்டவன்........

'சாரிமா... ரொம்ப சாரி...' சொல்லிக்கொண்டே அவள் முகம் பார்த்தான் அவன். அவள் கண்களில் வெள்ளம்.

வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ

அவர்களுக்கு திருமணம் நடந்து கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் இன்றுதான் அவள் கண்களை நேராக சந்திக்கிறான் அவன். தவம். இந்த ஒன்பது மாத காலமாக அவன் செய்து வந்தது ஒரு தவம். அவளை தேவை இல்லாமல் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.