(Reading time: 2 - 3 minutes)

என் உயிர் நீதானே... - கிருஷ்ண பாபு

Heart

வானம் பார்த்துக் கிடந்தனர் இருவரும்.

'அழகான எழுதுபலகை போல் இருக்கிறது அல்லவா இன்றைய வானம்?'

'ம்…'

'அதிலொரு கவிதை எழுதட்டுமா?'

'ம்…'

சுட்டுவிரலால் வானத்தை கீறியபடி சொல்ல ஆரம்பித்தாள்.

'அழகுதான்…

அகலம்தான்…

ஆனாலும் ஈடல்ல நீ

என் வேந்தன் திண்மார்புக்கு…'

மார்போடு அணைத்துக் கொண்டான்.

'அருமை!'

'இந்த நிலவை நொடியில் சிவப்பாக்க முடியுமா உங்களால்?'

'ம்…?ம்ஹூம்!'

'நான் செய்யட்டுமா?'

தன் சிவப்பு சேலையால் அவன் முகத்தை மூடி

'இப்போது பாருங்கள்!'என்றாள்.

சிரித்தான்.

'குழந்தையாய் இருக்கிறாய் தேவி!'

'குழந்தைகள் காதலிப்பதில்லை மன்னவா!'

மீண்டும் சிரித்தபடி சொன்னான்.

'உன்னை பேசி ஜெயிக்க முடியாது!

என்னை வீசி ஜெயிக்க முடியாது!'

'அப்படியா சொல்கிறீர்கள்?'

அமைதியாய் கேட்டாள்.

மௌனமாய் பதிலளித்தான்.

'துரோகத்தை வெற்றியென நான் கருதுவதில்லை! நீ கிளம்பு தேவி! உனக்கு நிறைய வேலை உண்டு!'

'இதுதான் இறுதிவேலை வேந்தே!'

இதழில் மெலிதாய் முத்தமிட்டவள் பட்டென விலகி பேச்சை மாற்றினாள்.

'குட்டி விண்மீன்களையும் பெரிதாய் பார்க்கும் வித்தை எனக்குத் தெரியுமே!'

விரல்களை வளைத்து கையை குழலாக்கி அதன்வழியே பார்க்கத் தொடங்கினாள்.

'நம் காதல் நினைவுகள் போல் சலிக்காத வானம் அல்லவா?'

புன்னகைத்து கேட்டான்.

ஆமோதித்து தலையசைத்தவள் கேட்டாள்.

'இப்போது இறுதியாய் ஒரு கவிதை எழுதட்டுமா?'

பதில் எதிர்பாராமல் வானில் எழுத ஆரம்பித்தாள்.

'விண்ணே பொறு…

மண்ணே பொறு…

எங்கள் உயிரும் உமதே…

ஊனும் உமதே…

ஓடி விளையாட

வானும் வானளவு காதலும்

உள்ளது எங்களிடம்…

வருகிறோம்…

வருகிறோம்…'

அவன் தோள் தழுவியபடி அடங்கினாள் மெல்ல.

அவள் நெற்றியில் முத்தமிட்டு தன் இறுதிமூச்சை  நெஞ்சின் அம்பு வழியே விட்டான் யுத்தகளத்தில் மன்னன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.