(Reading time: 9 - 18 minutes)

கண்டிப்பின் எல்லை - வின்னி

Kandippu

ப்பா மிகவும் கண்டிப்பானவர். இராணுவத்தில் கேர்னலாக இருந்தவர். வீட்டையும் இராணுவம் மாதிரி நடத்துபவர். ‘சொல்வதை செய் பிறகு முறையிடு' என்ற கொள்கையைக் கடைப் பிடிப்பவர். அம்மாவுக்கும் அதே சட்டம்தான். இராணுவத்தில் இருந்து இளைப்பாறியதும் அவரது நடத்தைமிக மோசமானது. 

எனக்கு அப்பாவின் கண்டிப்பு பிடிக்காது! அவர் மற்றப் பெற்றோர் போல பிள்ளைகளுடன் நட்பாகவும், சந்தோசமாகவும் இருப்பதில்லை. மனம் திறந்து பேசுவதியில்லை! அவரது தடித்த மீசையும், பெரிய உருவமும், சிரிப்பு வராத பார்வையும், என்னையும் ஒரு எதிரி போல நடத்துவது, அவரது குணமா?

நான் மகன், அவர் சொல்வதைக் கேட்கிறேன், அம்மா ஏன் சுதந்திரமாக தான் நினைத்ததை செய்வதில்லை, சாமி கும்பிடுவதைத் தவிர? அம்மா ஏன் இப்படிப் பயந்து சாகவேணும்? அதுதான் அவள் கடவுளை அதிகமாக நம்புகிறாளோ? அவள் அடிமை போல்அப்பாவிடம் படும் கஷ்டங்களை பார்த்து பதினாறு வயதான எனக்கு கடவுளில் நம்பிக்கை குறைகிறது?

அம்மா சமய அனுட்டானங்களை ஒழுங்காகக் கடைப் பிடிப்பவள். அவள் ஒரு பழமைவாதியும் கூட. அம்மாவின் அளவுக்கு மீறிய பக்தியும் மூட நம்பிக்கைகளும் எனக்கு பிடிக்காது. நான் என்னை ஒரு பகுத்தறிவாளன் என்று நினைப்பவன்.

அம்மா உண்டியலில் போடும் காசை ஏன் ஏழைகளுக்கு கொடுக்கக் கூடாது என்று நினைப்பவன்? கோவிலுக்குத்தான் கோடிக்கணக்கில் சொத்திருக்கே? காசை வாரிக் கோவில்களுக்குக் கொடுக்கத்தான் செல்வந்தர் பலர் இருக்கிறார்களே!   

அண்ணாவுக்கு படிப்பைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. டாக்டராக வரவேணும் என்று கஷ்டப்பட்டு படிப்பவன். கஷ்டப்பட்டு படிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை! சாமர்த்தியமாக படித்து சோதனை பாஸ் செய்தால் போதும் என்று நினைப்பவன் நான். படிப்பதில் அவனைவிட அதிக நேரம் செலவு செய்யாமல், கூட மார்க் வாங்கி விடுவேன். அது என்னால் எப்படி முடியும் என்று அவன் ஆச்சரியப்படுவது உண்டு. என்னிடம் பொறாமைப் படுவதும் உண்டு!

நான் அவர்கள் எல்லோருக்கும் எதிர்மாறானவன்! 

வெள்ளிக்கிழமை, அம்மாவுடன் முருகன் கோவிலை நோக்கிப் போகிறேன். சரியான கூட்டம். கொடியேற்றமல்லவா கூட்டமில்லாமல் வேறென்ன இருக்கும்? அப்பா அவளுடன் கோவிலுக்கு போவதில்லை, நான் போவதே அவளுக்காகத்தான். அண்ணாதான் படிப்பு படிப்பு என்று இருந்து விடுவானே!  ஆகஷ்ட் விடுமுறையிலும் அவனுக்குப் படிப்பு!              

வழியெல்லாம் சர்க்கரைப் பந்தல்கள், மாவிலை தோரணங்கள், நிற நிறமான கண்ணைப்பறிக்கும் அலங்கார விளக்குகள், தெருவின் இரு மருங்கிலும் பலவிதமான கடைகள். அங்கு வரும் பெண்களெல்லாம் எவ்வளவு அழகாக உடுத்திருக்கிறார்கள். நகைகளை வாரி வாரிப் போட்டிருக்கிறார்கள். எல்லாம் சரியாகப் பார்த்து முடிப்பதற்கு ஒரு நாள் போதாது.

அம்மாவுடன் வந்து என் விருப்பத்துக்கு அலைந்து திரிய முடியுமா? கோவிலைச் சுற்றித் திரிய நண்பர்களுடனல்லவா வரவேணும். எப்படி முடியும்? நண்பர்களுடன் சுற்றித் திரிவதுதான் அப்பாவுக்குப் பிடிக்காது! 

"பரமேஷ் மச்சாள்" யாரோ அம்மாவைக் கூப்பிடுவது கேட்கிறது.யார் அவள்? அவளுடன், கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற பாவாடை, சட்டையில் ஒரு அழகான பெண்! ஒரு பதினைந்து வயதிருக்கும். இருவரும் தாயும் மகளும் போலத் தெரிகிறது.   

அம்மாவுக்கும் நண்பர்களா? அவள் கோவிலைத்தவிர வெளியே செல்வதில்லையே! அவளுக்குத் தெரிந்த ஒருவரும் வீட்டுக்கும் வருவதில்லை. அப்பாதான் ஒருவரையும் வரவேற்பதில்லையே!  

அம்மாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிகின்றன. அவர்கள் இறுகக்  கட்டித் தழுவுகிறார்கள் “எப்படி இருக்கிறாய் கமலா? கண்டு கன காலம்? “  அம்மா அப்படிச் சந்தோசமாக இருந்து நான் பார்த்ததில்லை.

“இது உன் மகள் ஷீலாவா? குழந்தையாய் கண்டது.உன்னை மாதிரி அழகாக இருக்கிறாள்”. என் தலை என்னை அறியாமலே அவள் சொல்வதை ஆமோதிப்பது போல் மேலும் கீழும் சிறிது அசைகிறது. ஆமாம் அவர்கள் இருவருமே அழகானவர்கள்தான்!

"உன்னுடைய மகனும் வளர்ந்திட்டான். நீங்கள்தான் எங்களது வீட்டுக்கு வருவதில்லையே. ஆண்களுக்கிடையே உள்ள பகையால எங்களுடைய தொடர்பும் அறுந்து போச்சுது. பிள்ளைகளாயாவது அந்த முருகன் சேர்த்து வைக்கட்டும்".  "நான் வருகிறேன் அக்கா அவர் தேடுவார்" என்று கண் கலங்கியபடி சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர்கிறாள் கமலா.

 "அம்மா யார் அது?" என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. சிறிது தயக்கத்துடன்"அவள் உன் அத்தையடா". எனக்கு ஒரு அத்தையா? நான் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தேன்."ஆமாம் அவள் உன் அப்பாவின் தங்கை”.

இவ்வளவு காலமும் எனக்குத் தெரியாமல் ஒரு அத்தையா? ஷீலா என் மச்சாளா?

“அத்தை அப்பாவின் சம்மதமில்லாமல் வேற சாதியில் வேலையில்லாத ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்தவள்". எனது அடுத்த கேள்விக்கு பதில், நான் கேட்க முதலே அம்மாவிடமிருந்து வந்துவிட்டது.

வீடும் வந்துவிட்டது! அம்மாவும் மௌனமாகிவிட்டாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.