(Reading time: 15 - 30 minutes)

காசாம்பு ரொம்ப கருப்பு.... - தங்கமணி சுவாமினாதன்

Maid

ம்மா..அம்மா..கூப்பிட்டுக் கொண்டே பட் பட் என்று கதவைத் தட்டினாள் காசாம்பு.

தோ வரேன்..ஏன் இப்பிடி கத்தர..?சொல்லிக்கொண்டே வந்து கதவைத்திறந்தார் ஜானகி மாமி.

எதுக்கு இப்பிடி சத்தம் போடற மெதுவா கூப்டக் கூடாது...என்ன தொண்டையோ துரு எடுத்தாப்ல..என்றார்

கையில்,ஆசிட் பாட்டிலோடு நின்ற காசாம்புவைப் பார்த்து..

அம்மா வரச் சொன்னீங்களே..

ஆமா..ஒன்ன இன்னிக்குதான் வரச் சொன்னேம் பாரு...சொல்லி எத்தன நாளாச்சு..செத்தன்னிக்கு வான்னா பத்தன்னிக்கு வருவியே..விருந்தாளிங்கல்லாம் வந்துட்டு போயாச்சு இப்பதான் சாவுகாசமா வருவியோ?

இல்லீங்கமா..வூட்டுக்கு கீத்து வேஞ்சேன்..கொஞ்சம் வேலையாயிடுச்சி..அதாம்மா..

ஆமா... பொலம்பு...

இல்லீங்கம்மா நெசந்தாம்மா..அதோட எம்மருமவ இன்னிக்கி செஞ்ச அக்குறும்பு..அந்த சாண்ட...என்று ஆரம்பித்து அடுத்த ஐந்து நிமிடத்திற்கு அவள் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளுக்கு எந்த அகராதியில் அர்த்தம் தேடினாலும் கிடக்காது.

அதுவும் சிட்டியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அவள் துப்பும் எந்த வார்த்தைகளுக்கும் பொருள் புரியவே புரியாது.அப்படியே பச்சைபச்சையாய் அவள் திட்டும் அத்தனை வார்த்தைகளும் அச்சேற்ற முடியாதவை.அசராமல் அரை மணி நேரத்திற்குக் கூட விதவிதமாகத் திட்டுவாள் காசாம்பு.ஒரு முறை உபயோகித்த வார்த்தையை மீண்டும் உபயோகிக்க மாட்டாள்.வெறும் வார்த்தையோடு மட்டுமல்லாது அவற்றிர்கேற்ப அங்க அசைவுகள் வேறு.காசாம்பு திட்ட ஆரம்பித்து முடிக்கும் வரை தெரு நாய் கூட  அந்தப் பக்கம் வராது. அப்படித் தப்பித்தவறி எந்த நாயாவது வந்து விட்டால் இவளின் பச்சைபச்சையான திட்டுக்களைக் கேட்டு தாங்கமுடியாமல் பின்னங்கால் இரண்டிற்கும் இடையில் வாலை விட்டுக்கொண்டு அப்படியே நின்ற இடத்திலேயே விழுந்து உயிரை விட்டு விடும்.எந்த ஆம்பளயாவது தப்பித்தவறி காசாம்புவிடம் வாயைக் கொடுத்துவிட்டால் தீர்ந்தது அவன் கதை.அதன் பிறகு அவன் நாண்டுகிட்டுத்தான் சாக வேண்டும்.பெரும்பாலும் தெரு ஆண்கள் காசாம்புவைக் கண்டால் தெறித்து ஓடிவிடுவார்கள்.பெண்கள் படீர் படீர் என்று கதவைச் சாத்திக்கொண்டு வீட்டிற்குள் போய்விடுவார்கள்.

ஆனால் எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் அவள் யாரையாவது திட்ட ஆரம்பிக்கும் போது அவளிடமிருந்து கொஞ்சம் தூரமாய் நின்று அவள் வித விதமாய்த் திட்டும் வார்த்தைகளைக் கேட்டபடி ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வர்கள்.அந்த தெருக்குழந்தைகள் அனைவருக்கும் அவளின் அத்தனைத் திட்டுக்களும் அத்துப்படி.பிள்ளைகள் அனைவரும் விளையாடும் போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் போதும் காசாம்புவிடமிருந்து கற்றுக்கொண்ட அத்தனைத் திட்டுகளையும் ஒருவர் மீது ஒருவர் அள்ளி வீசுவதுண்டு.காசாம்புவின் திட்டுக்கள் ஊர்முழுதும் மிகவும் பிரசித்தி என்பதால் அக்கம் பக்கத்தெருப் பசங்களெல்லாம் அந்தத் தெரு பசங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொள்வதுண்டு.அப்படித்தான் எனக்கும் காசாம்புவின் திட்டுக்களெல்லாம் அத்துப்படியாயிற்று.

ஐயோ போறும் போறும் நிறுத்து நிறுத்து..ராம..ராமா..ஈஸ்வரா..இவளோட ரொம்ப பாடா இருக்கேடாப்பா..

இப்ப கன்னாபின்னான்னு திட்றத நிறுத்தப் போறியா இல்லியா...?..கண்ராவி..கண்ராவி ஜானகி மாமி காதைப் பொத்திக்கொண்டார்..

சரிங்கம்மா..எந்த கக்கூஸ தேச்சிக் கழுவணு..இங்கியா மேம்மாடில இருக்குதுதே அதையா..?

இங்க இருக்கே அதையும் பாத்ரூமையுந்தான்..

சரிங்கம்மா..அடுத்த அரை மணி நேரத்தில் லெட்ரீனையும் பாத்ரூமையும் பளிச்சென்று தேய்த்துக் கழுவிவிட்டுக் கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்தாள் காசாம்பு.

மாமி சுடச் சுடக் கொண்டுவந்து கொடுத்த இஞ்சி டீயை ஆசையாய் வாங்கிக் குடித்தாள்.செம்பை அலம்பிக் கவிழ்த்துவிட்டு புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

இந்தா.. மாமி கொடுத்த பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்தவள் வழக்கமாய்க் கொடுக்கும் நூற்றி இருபது ரூபாய்க்கு மேல் கூடுதலாய் இருபத்தைந்து ரூபாய் இருக்க முகம் மலர்ந்தாள்.என்னா மாமி கூடுதலா துட்டு குடுத்திருக்க?

ஆமா..காசாம்பு கொல்லைல பூச்செடில்லாம் தண்ணி இல்லாம வாடிக்கிடக்குங்க..எல்லாத்துக்கும் கொஞ்ச தண்ணி பிடிச்சு ஊத்திட்டுப் போயேன்..ஒனக்குப் புண்ணியமா போகும்..

அதானே பாத்தேன் என்னடா துட்டு கூட இருக்குதேன்னு..இல்லீங்கம்மா..தண்ணீல்லாம் புடிச்சி ஊத்த என்னால ஆவாதும்மா..எனக்கே முதுகு இடுப்பெல்லாம் நோவுது...கொட்டாயி போட்டப்பொ ஒரு ஆளா நானும் நின்னது ஒடம்பெல்லாம் ஒரே வலி..இந்தாங்கம்மா இருத்தஞ்சி ரூவா..பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினாள் காசாம்பு.

மாமியின் முகம் சிறுத்துப் போயிற்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.