(Reading time: 5 - 9 minutes)

இயற்கையின் தீர்ப்பு - மலர் மாணிக்கம்

Nature

லையிலிருந்து சலசலவென அருவி விழுந்து வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. அந்த பகுதியில் உயரமான மரங்களும், அடர்த்தியான புல்வெளியுமாக இருந்தது. அங்கங்கு வண்ணபூக்கள் பூத்து காற்றில் தலையசைத்துக் கொண்டிருந்தன. அந்த அழகான பகுதியில் எல்லா விலங்குகளும் ஒன்று கூடி யாருக்காகவோ காத்திருந்தன.

திடீரென்று மின்னலொன்று வெட்டியது. அந்த இடம் முழுவதும் பிரகாசமானது.ஜொலிக்கும் வண்ண உடையில், தலையில் கீரிடமும் கையில் மந்திரக் கோலுடனும், சிறகடித்து பறந்து வந்து தரை இறங்கினாள் தேவதை. எல்லா விலங்குகளும் வணங்கின

. ‘என்னை அழைத்ததற்கான நோக்கம் என்ன”? என்று கேட்டது தேவதை.

கூட்டத்தின் நடுவே தும்பிக்கையை தூக்கி பிளிறிக்கொண்டு வந்த யானை

‘தேவதையே வணக்கம், இப்ப என்ன நடக்குதுன்னு தெரியுமா? இந்த மக்கள் உயர உயரமா இருக்க மரங்களையும், காடுகளையும் அழிச்சு கட்டிடங்களா கட்டுறாங்க. . இப்படியே போனா காடே இல்லாமல் போயிறும், இத தடுக்கனும் தேவதையே” என்றது.

ஓடிக்கொண்டிருந்த தண்ணீரிலிருந்து குதித்து வந்தது ஒரு குட்டி மீன்,

‘தேவதையே நீர் நீராவே இல்ல. எல்லாம் கெட்டு போச்சு. இப்ப தண்ணீர் ஒடுறது இல்ல, சாக்கடையும், தொழிற்சாலை கழிவும் கலந்து தான் ஒடுது. ” என்றது.

அடுத்து வந்தது குயிலக்கா,

‘நான் பாடுறதுக்கு முன்னாடி, தோட்டம், தோப்பெல்லாம் இருந்தது. ஆனா இன்னைக்கு அதெல்லாம் குறைச்சிருக்சு, அப்படியே பாடுனாலும் என் பாட்டு சத்தம் கேட்கிறது இல்ல, ஒரே இரைச்சல் சத்தமா தான் கேட்குது. அந்த அளவுக்கு வாகனங்கள் பெருகிட்டே வருது ” என்றது.

‘ இப்பலாம் சுத்தமான காத்தே சுவாசிக்க முடியறதுல்ல. வாகனங்கள், தொழிற்சாலைகள்ல இருந்து வர்ற புகையால காற்றே கெட்டு போச்சு. மனுசங்க பயன்படுத்துற ஏ.சி, பிரிட்ஜ்ல இருந்து நச்சு புகையிலாம் காத்துல தான் கலக்குது ’ என்றது அணில்.

இப்படி ஒவ்வொரு விலங்குகளும் தங்களது குறைகளை கூற, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் தேவதை.

இறுதியாக ‘இயற்கை பாதுகாக்க வேண்டும்” என்று எல்லா விலங்குகளும் ஒருமித்த குரலில் கூறின. ‘நான் பார்த்து கொள்கிறேன்” என்று சிறகடித்து தேவதை கிளம்பினாள்.

றுநாள் உலக நாட்டு அரசனின் கனவில் தோன்றி தனது ஐந்து விரல்களை காட்டினாள். பின் கடைசி இரண்டு விரல்களை மடக்கினாள். மீதியுள்ள முதல் மூன்று விரல்களையும், பாதுகாப்பாக வைத்து காட்டி விட்டு மறைந்து போனாள்.

இரவில் கண்ட கனவிற்கு அர்த்தம் தெரியாமல் குழம்பிப் போனான் அரசன். ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டான். யாருக்கும் தெரியவில்லை.

கடைசியாக ஒரு பெரியவர் விளக்கம் சொன்னார். ‘5 விரல் - ஐம்பூதம் (நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்) கடைசி இரண்டை தவிர்த்து விட்டால், மீதியுள்ளது நீர், நிலம், காற்று தான். இம்மூன்றும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டியது உன் கடமை” என்றார்.

அரசனும், அமைச்சர்களும் ஒன்று கூடி பல்வேறு திட்டங்களை தீட்டினர். காடுகள் அழிப்பதை தடுப்பது, ஆபத்து தரும் தொழிற்சாலைகளை மூடுவது, பிளாஸ்டிக் பொருளை தவிர்ப்பது, நச்சு காற்று வெளியேறுவதை நிறுத்துவது, அணு ஆயுதத்தை தவிர்ப்பது என முடிவு செய்தனர்.

சில நாட்கள் கழித்து, சில அமைச்சர்கள் ஒன்று கூடி அரசனிடம் போய்,

‘நமது திட்டத்தை நிறைவேற்றினால், நமது நாடு வளர்ச்சியில் பின்னால் போய்வீடும். அறிவியல் வளர்ச்சி பெறாது” என்றனர்.

அரசன் யோசிக்க ஆரம்பித்தான், ‘நீண்ட நேரத்துக்கு பிறகு தேவதை கூறியதை விட்டுவிடுவோம்” என முடிவு செய்தான்.

சில ஆண்டுகளில் நாடு நவீனமயமானது, வளர்ச்சி பல மடங்கானது. மக்கள் அறிவியல் வளர்ச்சியால் மாறிப் போயிருந்தனர். ஆனால் இயற்கை வளம் குறைந்து கொண்டே வந்தது.

பால் போல ஓடிய தண்ணீர், சாக்கடையும் தொழிற்சாலை கழிவுமாக ஓடியது.

குடியிலோசை கேட்ட காற்றில், காதை கிழிக்குமளவு இரைச்சலாக இருந்தது.

ஆலமரமும், வேல மரமும் நின்ற இடத்தில், உயர உயரமான கட்டிடமும் மாளிகையுமாக இருந்தது.

இயற்கை மாற்றத்தினால் சில உயிரினங்கள் இனத்தோடு அழிந்து போயின.

ஆனால் சிலமக்கள் மட்டும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பது, பிளாஸ்டிக்கை தவிர்ப்பது, விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குவது, நீர் நிலைகளை பாதுகாப்பது என இயற்கை நேசித்தனர்.

நாட்கள் செல்ல செல்ல புமி மிகவும் மோசமானது. தேவதை அரசனிடம் சென்று மீண்டும் எச்சரித்தாள். அரசன் அதை கண்டுக்கொள்ளவில்லை.

நாட்டில் மழை பெய்வது கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையானது. நாடு வறண்டு போனது. புதுப்புது நோய்கள் வந்தது. அரசனும், மக்களும் அளவுக்கதிமாக கஷ்டப்பட்டனர்.

திடிரென்று மழை பெய்ய ஆரம்பித்தது நிற்கவேயில்லை. நாடு முழுவதும் தண்ணீராக நிரம்பியது, மக்கள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

அந்நேரம் சிறகடித்து பறந்து வந்தது தேவதை. இயற்கையை நேசித்தவர்களை மட்டும் தூக்கி சென்றது. மற்றவர்களை கண்டுகொள்ளவில்லை.

வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த அரசன், ‘காப்பாத்துங்க”... காப்பாத்துங்க”… என்று கத்தினான். தேவதை அவனை கண்டு கொள்ளவில்லை.

கடைசியாக தேவதை அவனைப் பார்த்து சொன்னது

“கடவுள் எப்போதும் மன்னிப்பார்

மனிதன் எப்போதாவது மன்னிப்பான்

ஆனால்,

இயற்கை ஒருபோதும் மன்னிக்காது, தண்டித்து விடும்” என்றது.

‘இயற்கையை பாதுகாக்க தவறியது என்னுடைய தவறுதான்” என்று உயிரை விட்டான் அரசன். இயற்கையை பாதுகாக்க தவறிய அனைவரும் அழிந்து போனார்கள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.