(Reading time: 12 - 24 minutes)

உன்னாலே என்னாளும் என் ஜீவன் வாழுதே - லேகா

Heart

வ்வளவு நாள் கழித்து வந்திருக்கிறேன்?  கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து இப்போது தான் இங்கு வர முடிந்தது (வேலைப்பளு காரணமாக).  ஏகப்பட்ட விஷயங்கள் மாறிவிட்டன.  அங்கே இருந்த பார்க்கிங் ஸ்லாட் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது.  கேன்டீனும் சீரமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் பல சிறு சிறு மாற்றங்கள்; ஆனால், அழகானவை.  அவற்றினை ரசித்துக் கொண்டே நின்று விட்டேன் என் நண்பன் வந்து என் தோள் தொடும்வரை.

“வாடா மாப்ள!  எப்படி இருக்க?  இந்த வருஷமாவது வந்தியே.  வா வா!” என்று புன்னகையும் அதிசயமுமாய் கேட்டான் அவன், புகழேந்தி.  புகழ் என் கல்லூரித்தோழன்.  எங்களது எட்டு வருட நட்பு; ஒவ்வொரு வருடமும் இங்கு வருமாறு என்னை தொடர்ந்து வற்புறுத்தி இன்று வரவும் வைத்துவிட்டான். 

இன்று எங்களது கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.  இது வருடாவருடம் நடப்பது தான் என்றாலும், நான் வருவது இதுவே முதல் முறை.  ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டே வந்தேன்.  நாம் கல்லூரியயோ பள்ளியையோ நினைத்து ஏங்குகிறோம் என்று கூறும்போது, அது பொதுவாக அந்த இடத்தில் நாம் சந்தித்த மனிதர்களைத் தானே தவிர, அந்த இடத்தை அல்ல என்று இங்கே வந்தபோது தான் புரிகிறது.  இந்த கல்லூரியும் வகுப்பறைகளும் கல்லும் மண்ணும் கலந்து கட்டப்பட்டவை என்றாலும், இதனை நினைவில் வைக்கத்தகுந்த இடங்களாக மாற்றியது, இங்கு நான் சந்தித்த, பழகிய மனிதர்கள் அல்லவா?  ஆசிரியர்களாக, நண்பர்களாக, அலுவலக பணியாளர்களாக நான் இங்கு சந்தித்தவர்களே இந்த கல்லூரியில் நான் வாழ்ந்த காலத்தை பசுமையாக்கிச் சென்றனர். 

எத்தனை இனிமையான நினைவுகள் அவை?  முதன்முதலில் இங்கு வந்தபோது ராகிங்கை நினைத்து பயந்து 20 பேராக கும்பலாக சுற்றியது, இரண்டாம் வருடத்தில் அடையாள அட்டை இல்லை என்று வெளியில் துரத்தியபோது எதுவுமே நடக்காதது போல் சினிமா சென்றது, மூன்றாம் வருடத்தில் கலைவிழாவில் ஆடிய ஆட்டத்திற்கும், போட்ட கூச்சலுக்கும் திட்டு வாங்கி முதல்வர் அலுவலகத்தின்முன் நின்றது, கடைசி வருடத்தில் ப்ராஜெக்ட் என்ற பெயரில் ஓ.டி. வாங்கி ஊர் சுற்றி இறுதிக்கட்டத்தில் முடித்தது என்று எல்லாமே கண்முன் ஒரு கணம் வந்துபோனது. 

இதற்குள் என் மற்ற தோழர்களும் வந்துவிட்டனர்.  பின் அனைவரும் பேசி வம்பிழுத்தபடியே விழா நடக்கும் இடத்திற்குச் சென்றோம்.  நாங்கள் நாயமடித்து வரும்வரை பொறுத்திருப்பார்களா என்ன? விழாவை எப்போதோ தொடங்கிவிட்டிருந்தார்கள்.  நாங்களும் ரொம்ப அறுவையாக இருந்தால் எழுந்து ஓடுவதற்க்கு ஏதுவாக இடம் தேடி அமர்ந்தோம்.  அங்கு மேடை அருகிலேயே தான் நுழைவாயில் என்பதால், முன்வரிசை ஒன்றிலேயே அமர வேண்டியதாய் போயிற்று (இல்லையேல் நாங்களாவது முதலில் உட்காருவதாவது?).  முன்வரிசையில் அமர்ந்தால் பறிக்கப்படும் பேச்சுரிமை (நாகரீகம் கருதி) எங்களுக்கும் இல்லாமல் போனதால் அமைதி காத்துக்கொண்டிருந்தோம்.

எங்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருந்தனர்.  என்ன பேசுகிறார்கள் எனத் தெரியாமலேயே கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு கனவு கண்டுகொண்டிருந்தேன்.  அப்போது என் கனவை கலைப்பதற்கென்றே திறந்தது கதவு.  தேவதைகள் கனவு கலைந்த பின்பும் கண்ணுக்குத் தெரியுமா?  எனக்குத் தெரிகிறதே! 

ஆம், கதவைத் திறந்து வந்தது ஒரு தேவதை.  ‘இவள் இவ்வளவு அழகா?’ என்று என் உள்மனம் கேள்வி கேட்டது.  ஆனால் இன்னொரு மனமோ, ‘இது உனக்கு இப்போ தான் தெரியுதா?’ என இடித்துரைத்தது.  நான் இவ்வாறு இரு மனங்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் அவள் என்னைத் தாண்டி சென்று என் வரிசையில் இருந்த கடைசி இருக்கையில் அமர்ந்தாள்.  அதைக் கண்டு என் மனம் துள்ளியதன் காரணம் தெரியவில்லை.

எனக்கு ஒரு வயது இளையவள் அவள்; விருந்தா என்று பெயர்.  இருவரும் வேறு வேறு பாடப் பிரிவுகளில் தான் படித்தோம்.  ஆனால், எப்படி என்னைத் தெரியும் என்று அறியாமலிருந்தாலும், அவள் என்மீது கொண்ட காதலை நான் அறியாமலில்லை. அவளுக்கு தமிழ் என்றால் உயிர்.  எந்த பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை என அனைத்திலும் கலக்கிவிடுவாள்.  நானும் போட்டிகளிலும் தொண்டு நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்பபதால் அறிந்திருக்கலாம் என்பது என் யூகம்.  எப்பொழுதும் என்னைத்தாண்டிப் போகும்போது ஒரு பார்வை.  அவ்வளவுதான்.  என்னிடம் அவள் பேச விழைந்ததும் இல்லை, என்னை பிடிக்கும் என்று பிறரிடம் கூறியதும் இல்லை. அப்போது அது பெரிதாக தெரியவும் தெரியவில்லை.  அவள் காணாத போது நான் சிலமுறை அவளை கண்டதுண்டு; சில சமயம் இது வெறும் ஈர்ப்பு தான் என்று நினைத்துப் போவதுமுண்டு.  அதன் பின் படிப்பு முடிந்து நான் வெளியேறியபின் இன்று தான் அவளை பார்க்கிறேன். 

ஒவ்வொரு வருடமும் அவள் தவறாமல் இங்கு வந்துவிடுவாள் என்று முந்தைய ஆண்டுகளின் புகைப்படங்களைப் பார்த்து தெரிந்துகொண்டேன்.  இப்பொழுது அந்த விருந்தாவைப் பார்த்ததும் ஒரு ஆர்வம்.  அவள் என் மீது கொண்டது காதலா, ஈர்ப்பா?  (அவளுக்குத் திருமணம் இன்னும் ஆகவில்லை என்பது வரை எனக்குத் தெரிந்தே இருந்தது).  விடை தெரிவதற்கு என்று சொல்லிக்கொண்டு அவளை அவ்வப்போது திருட்டுத்தனமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.  ம்ம்ஹூம்.  அவள் என்னைப் பார்த்தது போல் தெரியவில்லை.  சில நேரம் கழித்து ஏதோ தோன்ற அவள்புறம் திரும்பினேன்.  இப்போது கலைநிகழ்ச்சி ஆரம்பித்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.