(Reading time: 7 - 13 minutes)

நல்லதா ? கெட்டதா? - ஜான்சி

Husband

ருக்மிணி தன்னுடைய கணவனையே வெகு நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனந்த் இந்த நாற்பது வயதிலும் பார்வைக்கு கம்பீரமானவனாகவே தெரிந்தான். ஆனால், அவன் முகத்தில் சிரிப்பைத் தான் காணோம். ஏன்? எங்கே போனது அவன் சிரிப்பு? அவன் என்ன முன்பே இப்படி இறுக்கமாகவா இருந்தான். முதன்முறை அவனைச் சந்தித்த போது கண்ட அவன் முகம் கண் முன் நிழலாடியது. ஏற்கெனவே பெரியவர் ஒருவர் இவர்கள் இருவருக்குமாக திருமணம் நிகழ்ந்தால் நலமாக இருக்கும் என்ற தன்னுடைய அபிப்ராயத்தைச் சொல்லி, இரண்டு குடும்பங்களும் பொதுவான உறவு முறையில் நிகழ்ந்த ஒரு திருமண விழாவில் சந்திக்க ஏற்பாடுச் செய்திருந்தார்.

 அம்மா, அப்பா, அக்கா, அக்கா கணவன் , சித்திக் குடும்பம் அவர்கள் மகன்கள் அண்ணா அண்ணாவென அவன் தோள் சாய்ந்து விளையாட்டுக் கதைப் பேசி உற்சாகமாய் சிரிக்கும் விதத்தை தான் அவள் பார்த்திருந்தாளே? அவனுடைய அந்தச் சிரிப்பு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது திருமணம் முடியும் வரைக்கும்.

 பிறகு அவன் வீட்டினர் எல்லோருடனும் சகஜமாக பேசுவது , சிரிப்பது, சித்திக் குடும்பத்திற்கு மாதம் ஒரு முறைப் போய் சந்திப்பது எல்லாம் அவளுக்கு பிடிக்காதது ஆயிற்று . தனக்கு மட்டுமாக யாரிடமும் பகிர்ந்துக் கோள்ள விரும்பாமல் அவனை சிறைப் பிடிக்கத் தோன்றியது. ஒரு முறை தனக்கு அவன் மற்றவர்களிடம் பழகுவது பிடிக்கவில்லை என்று நேரடியாகவே கூடச் சொல்லி விட்டாள்.

 அவனோ மென்மையான மனம் படைத்தவன். தன் குடும்பத்தோடு பேசுவது அவளுக்கு பிடிக்கவில்லையாவெனெ அறிந்தது முதலாய் வெகுவாக திகைத்தான். அதே நேரம் அவளை அழ வைப்பதிலும் அவனுக்கு விருப்பம் இல்லை. மனைவி கர்ப்பவதியாக இருக்கும் போது தன் இருக் கைகளிலும் வைத்து தாங்க வேண்டும் என்று ஆசைப் பட்டவனாயிற்றே. கொஞ்சம் கொஞ்சமாக மனைவிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டான். அதற்கு காரணம் அவள் மீது அவன் கொண்டிருந்த அன்புதான். பிறர் தன்மீதுக் கட்டும் அன்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் ஒரே இனமாகிய மனித இனத்தில் பிறந்திருந்ததால் அதை எல்லா விதத்திலும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 இதோ குழந்தைப் பிறந்து ஓரிரு வயதாகி விட்டது. வீட்டில் மாமியாரிடம் நல்ல மருமகள் என்ற பெயர் எடுத்திருந்தாள். அமைதியாக பேசுவது, தவறென்றால் உடனே மன்னிப்பு கோருவது. சின்ன சின்னப் பிரச்சினைகள் வந்தால் பெரிது படுத்தாமல் இருப்பது என்று ஆனால், ஏனோ அந்த அறுபது வயது மூதாட்டியின் சிந்தனைக்கு எட்டாத விதமாகவும் பல விஷயங்கள் நடந்துக் கொண்டிருந்தது. 

 மருமகளுக்கு முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்று அதிகம் நடமாட முடியாவிட்டாலும் இருந்த இடத்திலிருந்தே காய்கறிகள் வெட்டிக் கொடுப்பது, மசாலா அரைத்துக் கொடுப்பது என்று பாதி வேலைக்கு மேலாகவே செய்துக் கொடுப்பார் அவர். பேரப் பிள்ளையை கவனிப்பதும் கூட. பகல் முழுவதும் உள்ள வேலையை செய்து விட்டு மகனை மாமியாரிடம் விட்டு விட்டு தூக்கம் போடுகின்றவள், கணவன் வந்த நேரம் முதலாக வீட்டிற்கு உள்ளேச் சுழற்றி விட்டப் பம்பரமாக சுழலுவாள்.

 மொட்டை மாடிக்கும் வீட்டுக்குமாக துணி காயப் போடுவதும் , எடுப்பதுமாக ஏறி இறங்குகிற வேகத்தில் ஏணியே சலித்துக் கொள்ளும் என்றால் பாருங்கள். மாமனார், மாமியார், மகன், மருமகள், பேரன் என்று ஐந்து பேர் மட்டும் இருக்கும் வீட்டில் சமையற்கட்டில் என்னேரமும் அப்படி என்ன வேலை இருக்குமோ? தெரியாது. இரவாகும் வரை சமையற்கட்டிலேயே பழியாக கிடப்பாள்.

 கணவன் பத்து முறை கூப்பிட்டால், பதினொன்றாவது முறை தான் அறையில் போய் நிற்பாள், "ஏங்க , கொஞ்ச வேலை இருந்தது. இப்போ முடிச்சிட்டு வறேன்" என்பவளின் மெலிந்த குரலைக் கேட்பவன் என் மனைவியை இப்படித்தான் நாள் முழுவதும் வேலை வாங்குவார்கள் போல என்று உள்ளம் பொறும ஆரம்பித்தான்.

 மனம் விட்டுப் பேசினாலாவது பரவாயில்லை , கேட்டால் பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற ஒரு தயக்கம். மனைவியை இவ்வளவு வேலைச் செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மனதிற்கு பொறுக்கவில்லை.ஒரு சின்னப் பாத்திரம் சிங்கில் விழுந்தாலும் சட்டென்று அதை எடுத்து விளக்கி , கழுவி , அறைக்குள் வர அவளுக்கு மணி இரவு பதினொன்று ஆகும். இவ்வளவிற்கும் உடனே நீ இதை செய்தாக வேண்டும் என்று அவளுக்கு கட்டளை இடுவோர் அவ்வீட்டில் யாரும் இல்லை.

 ஐயோ என் மனைவி கஷ்டப் படுகிறாள் என்று கணவன் மனது நோவதைக் குறித்து அவளுக்கு பிரக்ஜை இல்லை. என் கணவனை என் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறேன் என்னும் பெருமிதம் மட்டுமே உள்ளுக்குள்ளே 

 நாளாவட்டத்தில் அவன் பெற்றோர்களுடன் பேசுவதை சுருக்கிக் கொண்டான். தான் தன்னுடைய அறையிலேயே தனியாக சமைத்துக் கொள்ள விரும்புவதாக அவன் சொல்ல, அப்படியாவது அவன் மகிழ்ச்சியாக இருந்தால் சரிதான் என விட்டுக் கொடுத்தார்கள், வயது கூடியதோடு மட்டுமல்லாமல் மனமுதிர்ச்சியும், பெருந்தன்மையும் கொண்ட பெற்றோர்களல்லவா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.