(Reading time: 10 - 20 minutes)

2017 போட்டி சிறுகதை 01 - நெகிழும் நிலவுகள்..!! - ப்ரியா

This is entry #01 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு  - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - ப்ரியா

Friendship

ந்த இரவு நேரத்தின் நிசப்தம் கூட அவளுக்கு கூச்சலிடும் நூறு பேர் அடங்கிய பெரியதொரு அறையில் இவள் மட்டுமே வாயை இறுக்கி மூடி அமர்ந்திருப்பதை போன்றிருந்தது..!! வலிக்கும் மனதுடன் பார்த்தால் எதுவுமே எரிச்சல் தான்.. மார்பு வரை போர்த்தியிருந்த குளிருக்கு இதமான போர்வையை சட்டென இழுத்து தலை வரை மூடிக்கொண்டாள்.

மூச்சு முட்டுவதை போல் இருந்தது.. மனதில் எழும் எண்ணங்களை எல்லாம் அடக்கி வைக்க முடியாமல் திணறுவது தெரிந்தும் வேறு வழியின்றி மௌனமாய் இருக்க வேண்டியிருந்தது!!

யாரிடம் சொல்வதாம்? ஏற்கனவே இதை பற்றி பிறரிடம் பேசியதால் வந்த வினை தான் இது.. இதற்கு மேலும் பேசிவிட கூடாது.. இதற்கு முன்னே கூட இவள் போய் பேசவில்லையே??! ஆனால்...

மீண்டும் மீண்டும் அதையே நினைத்து வட்டமிட்டு கொண்டிருந்த மனதை எப்படி அடக்குவது என்றறியாமல் போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்தாள் அவள்..!! மதியம் வந்த தொலைபேசி அழைப்பிலிருந்து தான் இந்த தலைவலி!!

"ப்ச் ச்சை" தன்னையே நொந்து கொண்டவள், தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு படுக்கையறையை விட்டு வெளியே வந்தவள் சத்தமில்லாமல் பால்கனிக்கு சென்று அமர்ந்தாள். இரவில் அங்கங்கே தெரிந்த வண்ண விளக்குகளுக்கு மேல் குளிர் ஒரு போர்வை போர்த்தியிருந்தது.

அவள் வசிக்கும் பெங்களூரு குளிரில் இரவு எட்டு மணிக்கு மேலேயே கதகதப்பான உடை அணியாமல் வெளியில் செல்வது கடினம். நடுராத்திரியில் பனிபொழியும் வேளையில் கையில்லாத தன் இரவு உடையில் அமர்ந்தபடி எங்கோ வெறித்து கொண்டிருந்தாள் அவள். இனியா!!

" எல்லாமே முடிஞ்சு போச்சு.. அவ்வளவு தான்.."

அந்த குரல் அவளுக்கு பரிச்சயமான அந்த குரலில் அவள் கேட்டிருக்கவே கூடாத வார்த்தைகள்..!!

"ஓ.. ரொம்ப நல்லா பேசிட்ட கமல்.. கதாசிரியர் ஆச்சே உனக்கு பேசவா கத்துக் கொடுக்கணும்.. முடிஞ்சதாவே இருக்கட்டும்" , வலியுடன்  இந்த வார்த்தைகளை இனியா சொல்லி விட்டு வைத்து சரியாக பன்னிரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது..!!

'கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் எப்படி இந்த வார்த்தைகளை கூற முடிந்தது?! அந்த கமல்..!! ஹ்ம்ம் ஹூம் நினைக்க கூடாது அந்த பெயர் வேண்டாம்..' தனக்கு தானே பேசிக் கொண்டவள் அந்த நினைவுகளில் இருந்து விடுபட முயன்று முயன்று தோற்று கொண்டிருந்தாள்.

மௌனம் அதற்கு இத்தனை சக்தியா?! கமலின் மௌனம்.. அது தனக்கு உணர்த்த தவறிய செய்தியால் இப்போது இவள் புகுந்திருக்கும் அடைக்கலம் மௌனம்!!

மௌனித்திருத்தல்!!

சுயத்தை தேடும் இடம்
கண்ணீர் சத்தமில்லாமல் வழியும் நேரம்
மனக்கசப்புகள் விலக நடத்தும் வேள்வி
பிரியமானவர்களின் பிரிவின் பதிவு
புரிதலின் முதற்புள்ளி
கோபத்தின் முற்றுப்புள்ளி
ஆழமான அன்பின் எதிர்பார்ப்பற்ற வெளிப்பாடு
ஒப்பில்லாத சுதந்திரம்

வழக்கம் போல மனபக்கங்களில் கிறுக்க தொடங்கிய மனதை கட்டுக்குள் கொண்டுவந்தாள். இரவு வெகு நேரம் ஆனதும் குளிரும் அப்போது புத்திக்கு உரைக்க சட்டென்று எழுந்து உள்ளே சென்று கதவை தாளிட்டவள் படுக்கையில் சரிந்தாள்!!

'இப்போது கமலும் என்னையே நினைத்துக் கொண்டிருந்தாள்?' இந்த எண்ணம் எழுந்த உடனேயே தன் அலைபேசியை தேடி எடுத்து கமல் உடைய முகநூல் பக்கத்தையும் 'வாட்சப்' பக்கத்தையும் பார்த்தாள். ஒரு வேலை 'ஆன்லைன்'-இல் இருப்பதாக இருந்தால்?!!

ஆனால் இல்லையே??!! என்ன நினைப்பதாம்? ஆனால் இதை மட்டுமாய் வைத்துக் கொண்டு அவர்கள் உறவின் மேல் மேலும் சந்தேகமா?!

'சந்தேகம்' இந்த வார்த்தை.. இது அவளுக்கு வந்ததே இல்லையே.. கமலை பற்றி பலர் பலவாறு கூறும் போது கூட இனியாவிற்கு கோபமும் அழுகையும் போட்டி போட்டதே தவிர சந்தேகம்??? அதற்கு அவள் இடமளித்தது இல்லையே..!!

ஆனால் எப்படி எல்லாம் வார்த்தைகளை கொட்டி??! மீண்டும் அந்த உரையாடலுக்கே மனம் சென்றது..

"ரொம்ப நல்லா நான் உன்மேல அன்பு வெச்சதுக்கு திருப்பி செஞ்சுட்டா மா நீ, எத்தனை பேரு என்னை பத்தி என்ன சொல்லி இருந்தாலும் என்கிட்டே வந்து நீ கேட்டு இருக்கனும் இல்ல? ஆனா நீ செய்யலை விடு முடிஞ்சு போய்டுச்சு இனி வேண்டாம் எதுவும் நமக்குள்ள"

அதெப்படி நான் இல்லாமல் முடிவை எடுக்கலாம்? நான் சொல்ல வேண்டாமா? முடிந்து விட்டதா? எனக்கென்ன? போகட்டும் எங்கோ எப்படியோ.. நான் மட்டும் படவில்லையா என்ன? பட்டு திருந்தட்டும்?

ஆத்திரத்தின் ஆதிக்கம் அதிகம் என்றாலும் வாய் வார்த்தையாய் இல்லாமல் மனதுக்குள் போராடுவது இனியாவிற்கு இதுவே முதல் முறை!! இன்றிரவு எப்படியும் தூக்கம் வரப்போவதில்லை என்று முடிவாக தெரிந்து விட்டது.

'பேசாமல் கமலுக்கு போன் செய்தால்?' வேண்டாம் தேவையில்லை. என்னாலும் தனியே இருக்க முடியும் இந்த முறை காட்டிவிட வேண்டும். ஆனால் முடியவில்லை.. விழி தாண்டிய கண்ணீர் கன்னம் நனைத்து தலையணையில் தஞ்சம் புகுந்தன..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.