(Reading time: 31 - 61 minutes)

2017 போட்டி சிறுகதை 09 - என்னுள்ளே பொழியும் தேன்மழை! – புவனேஸ்வரி கலைசெல்வி

This is entry #09 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

 Couple

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன… இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்… நினைக்கும் போதே சுளீர் என வலித்தது.

யாரைக் கேட்டு இதெல்லாம் நடக்கிறது? யாரின் சம்மதத்தில் இது நடக்கிறது? பக்கத்தில் அமர்ந்திருப்பவன் என்ன பெரிய மகானா? தியாக செம்மலா? தாழ்த்தியிருந்த விழிகளை மெல்ல உயர்த்தி அவனைப் பார்த்தாள் ராகினி.

இதழோர புன்னகைக்கு கொஞ்சமும் ஓய்வு கொடுக்காமல் புன்னகைத்துக் கொண்டே இருந்தான் ஷ்யாம். பெயருக்கு ஏற்றார்போலவே அழகானவன். தனது இயல்பான கலகலப்பான சுபாவத்தில் அனைவரையும் வசீகரிப்பவன் ! இதோ அவன் அருகில் அமர்ந்திருக்கும் அவளைத் தவிர! அவளை மட்டும் அவனால் அத்தனை எளிதாக நெருங்கிட முடியவில்லை! இப்போதும் கூட, அவளுக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று அவனுக்குத் தெரியும். இருப்பினும், அவளது மறுப்பிற்கு பின்னால் உறைந்திருக்கும் காரணம் வலியே தவிர வெறுப்பு இல்லை! என்பதை அறிந்து வைத்திருந்தான் ஷ்யாம்.

ராகினியை கைப்பிடிக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் அவனது முகத்தில் ஒவ்வொரு அணுவும் சிரித்தது. மாறாக அந்த திருமணத்தை எண்ணி ராகினியின் உடலின் ஒவ்வொரு அணுவும் கூசியது! வேதனை நிரம்பிய விழிகளுடன், தன் எதிரில் நிற்பவர்களைப் பார்த்தாள். அவளது தாய் தந்தையர், ஒரு தற்கொலை நாடகத்தை ஆயுதமாக்கி, மகளுக்கு வாழ்க்கையை அமைத்து வைத்துவிட்ட மகிழ்ச்சியில் நின்று கொண்டிருந்தனர். அவர்களின் பக்கத்தில் ராகினியின் தம்பி! அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றான் மிருதன்!

மிருதன், ராகினி சுமந்து பெற்றெடுத்த மகன். மூன்று வயது பூர்த்தியாகிவிட்டிருந்த அந்த சிறுவனுக்கு திருமணத்தின் அர்த்தம் புரியவில்லை!

 “ஹை.. அம்மாவுக்கு கல்யாணம்” என்று கைத் தட்டி சிரித்துக் கொண்டிருந்த மகனை பார்க்க பார்க்க ராகினிக்கு கண்ணீர் பொங்கியது.

ஏனாம்? ஒரு பெண், கைம்பெண்ணாக சமுதாயத்தில் வாழ்ந்திட முடியாதா? எந்த காலத்தில் இருக்கிறோம் நாம்? புரியவில்லை அவளுக்கு. இந்த திருமணம் நல்ல முடிவுதான் என்று ஒரு சதவிகிதம் கூட அவளால் நினைக்க முடியவில்லை! அதுவும் அவளது கணவன் சங்கீதன், நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரன்! அவனது உயிர் தியாகத்தை எண்ணி ராகினி கண்ணீர் விட்டதை விட பெருமை பட்டதுதான் அதிகம்!

எத்தனை பேருக்கு கிட்டிவிடுகிறது நாட்டுக்காக பயன்பட்ட வாழ்க்கையை வாழும் பாக்கியம்? அதுவும் சங்கீதனுக்கு இளம்வயதிலிருந்தே நாட்டுப்பற்று அதிகம். கணவனை இழந்துவிட்ட வலி அவளுக்கு நிறையவே இருந்தது! எனினும் அதை எண்ணி ஒரு மூளையில் முடங்கிவிட விரும்பவில்லை ராகினி. எப்படியாவது மிருதனையும் சங்கீதனின் வாரிசாக, இராணுவ வீரானாக ஆளாக்கிவிட வேண்டும் என்று கனவு கண்டாள் அவள்.

அவளைப் பொறுத்தமட்டிலும் அவள் உலகத்தில் மிருதன் மட்டுமே இருக்கின்றான்! ஆனால் இன்றோ புதிதாய் இன்னொரு தியாக செம்மல் வரப்போகிறான். அவனது  பெயரைத் தவிர, அவனைப்பற்றி எதுவுமே  ராகினிக்கு தெரியாது! எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்திட வேண்டுமென்று அவள் நினைத்ததினால் ஷ்யாமைப் பற்றி அவள் எதையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.!

இதையெல்லாம் அவள் நினைத்து பார்த்து கொண்டிருக்கும்போதே ராகினியின் சங்கு கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்திருந்தான் ஷ்யாம். “ஹையா” என்று மிருதன் கைத்தட்டும் சத்ததில் நடப்புக்கு வந்தவள் துடிதுடித்து போனாள். துளைக்கும் பார்வையுடன் அவள் ஷ்யாமைப் பார்க்க, அவனோ வழக்கம் போல புன்னகைத்தான்!

“ உன்னை ஜெயித்து விட்டேன் பார்!” என்று அவன் ஏளனமாய் சிரிப்பது போல அவளுக்கு பிரம்மை தோன்றியது. மாறாக அவனோ,

“ வாழ்த்துக்கள் ராகினி, இந்த அப்பாவியை ஆயுள் முழுக்க சமாளிக்கும் வாய்ப்பை கடவுள் உனக்கு மட்டும்தான் தந்திருக்கான்!” என்று சிரித்தபடி கை குலுக்க, வலது கரத்தை நீட்டினான். அவனது கைகளைத் தொடக்கூடாது என்பதற்காகவே இரு கரங்களையும் இறுக மூடிக் கொண்டாள் ராகினி.

அவளது அந்த ஒதுக்கம் , மாப்பிள்ளை வீட்டார் யாருக்குமே பிடிக்கவில்லை! ஏற்கனவே ஷ்யாமின் இந்த திருமண முடிவிற்கு அவர்கள் முழுமனதாய் சம்மதிக்கவில்லை!

“ நான் முடிவு பண்ணிட்டேன்.. எனக்கு பொண்டாட்டின்னா அது என் ராகினி மட்டும்தான். இஷ்டம் இருந்தால் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க.. இல்லன்னா, இந்த வீட்டுக்கு வந்துட்டு போகிற விருந்தாளிகளிடம் ஏன் எனக்கு இன்னும் கல்யாணம் பண்ணி வைக்கலன்னு காலம் பூரா காரணம் சொல்லிட்டே உட்கார்ந்து இருக்கணும்!” என்று ஒரே போடாய் போட்டுத்தான் இந்த திருமணத்திற்கு அவர்களை சம்மதிக்க வைத்திருந்தான் அவன்.

அடுத்த திருமண சடங்காய் ஷ்யாமும், ராகினியும் அக்னியை வலம் வருவதற்காக சுண்டு விரலால் கையை பிடித்துக் கொள்ள அதை கண்ட மிருதன் “ நானும் வருவேன்” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான். அத்தனை நேரம் சமத்துப்பிள்ளையாய் இருந்தவன், திடீரென யாரோ ஒருவன் தனது அன்னையின் கரம் பற்றவும் அடம்பிடித்து அழ ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.