(Reading time: 21 - 41 minutes)

2017 போட்டி சிறுகதை 12 - இனி தொடங்கும்... ஒரு இனிதான தொடக்கம்...!!  - சித்ரா.வெ.

This is entry #12 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ் நிலைக் கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - சித்ரா.வெ.

Love_triangle 

மாலை அலுவலகத்தில் வேலை முடிந்தும், வீட்டிற்கு கிளம்பாமல் அலுவலகத்திலேயே அவன் இருக்கையில் அமர்ந்திருந்தான் வாசவன்... ஏனோ வீட்டுக்கு போக அவனுக்கு மனம் வரவில்லை... இதோ இன்னும் ஒரு மாதம், இதோ இன்னும் 15 நாள், என்று நாட்கள் நகர்ந்து, இன்னும் ஐந்து நாட்கள் தான் இருக்கிறது...

அதன்பின்பு விஸ்வேஷ் வந்துவிடுவான்... லயாவையும் கூட்டிச் சென்றுவிடுவான்... மீண்டும் யாருமில்லாத தனிமை உலகிற்கு இவன் சென்றுவிடுவான்... அந்த வேதனை இவனை இப்போது வாட்டிக் கொண்டிருக்கிறது...

ஒருவருடத்திற்கு முன்பு ஒரு பெண்ணுக்காக இவன் வேதனைப்படுவான் என்று யாராவது சொல்லியிருந்தால், இவன் நம்பியிருக்க மாட்டான்.... தாய், தந்தை இல்லாமல், மாமாவின் ஆதரவில் ஒரு அடிமை போல் இருந்தவன் தான் இவன்...

எப்படியாவது நன்றாக படித்து ஒரு உயர் நிலைக்கு வரவேண்டும் என்பது மட்டும் தான் அவனின் ஒரே குறிக்கோளாக இருந்தது... இதில் ஒரு பெண்ணின் மேல் காதல், கல்யாணம் இதையெல்லாம் இவன் சிந்தித்துப் பார்த்ததில்லை... சிறுவயதில் இருந்தே பணத்தை வைத்து தான் ஒருவருக்கு மதீப்பீடு என்பதை தவறாக புரிந்துக் கொண்டவன்... எதையும் வியாபார நோக்கோடு பார்க்கும் எண்ணம் கொண்டவன்...

அவனின் குறிக்கோளில் இன்று ஜெயித்துவிட்டான்... இந்த சமுதாயத்தில் இவனுக்கென்று ஒரு அந்தஸ்து இருக்கிறது... இவனை அலட்சியமாக நடத்தியவர்கள் எல்லாம், இன்று இவனை உயர்வாக நினைக்கின்றனர்... இவன் எதிர்பார்த்த எல்லாம் கிடைத்தும் இன்று அந்த ஆனந்தத்தை அவனால் அனுபவிக்க முடியவில்லை...

மனைவி என்று கைப்பிடித்தவள், இதோ இன்று இன்னொருவனுக்கு சொந்தமாக போகிறாள்... அதுவும் இவனால் தான் வந்தது... அன்று அந்த காரியத்தை துணிந்து செய்தபோது... அதில் எதுவும் இவனுக்கு தவறாக தெரியவில்லை... அதில் வரும் இலாபம் மட்டும் தான் அன்று இவனுக்கு தெரிந்தது... ஆனால் இன்றைய மனநிலை அப்படியில்லை...

இன்னும் ஐந்து நாட்களில் விஸ்வேஷ் வந்துவிடுவான்... இன்னும் லயா இவனின் மனைவி தான் என்றாலும் இவனோடு அவள் இருக்க முடியாது... அது நியாயமுமில்லை... இவர்களுக்கு முறைப்படி விவாகரத்து ஆகும் வரை அவர்களின் திருமணம் நடக்காது என்றாலும், லயாவை இவனோடு வைத்திருக்க முடியாது...

விவாகரத்திற்காக வக்கீலை கூட பார்த்தாகிவிட்டது... "என்ன சார் ரெண்டுப்பேருக்கும் நான் தான் வக்கீலா..??" ஆச்சர்யப்பட்டார் அவர்...

"நாங்க ரெண்டுப்பேரும் சேர்ந்து தான் சார் இந்த முடிவெடுத்திருக்கோம்... இன்னும் கேட்டா, எங்க கல்யாணமே ஒரு உடன்படிக்கையில் தான் சார் ஆரம்பிச்சுது... அந்த கணக்குப்படி எங்க இந்த 3வருஷ உடன்படிக்கை முடியப்போகுது... அதனால நாங்க விருப்பப்படி பிரிய முடிவெடுத்திட்டோம்.." என்றான் வாசவன்.

"கல்யாணம்னா உங்களுக்கெல்லாம் விளையாட்டாப் போச்சு... முன்னோர்கள் இதெல்லாம் எதுக்கு உருவாக்கி வச்சாங்களோ... அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போய்கிட்டு இருக்கு... நீங்கல்லாம் சினிமாப் பார்த்து இதெல்லாம் செய்றீங்களா...?? இல்லை இதெல்லாம் பார்த்து சினிமா எடுக்கறாங்களான்னு தெரியல...

ச்சே ஏண்டா இந்த தொழிலுக்கு வந்தோம்னு இருக்கு... இப்போல்லாம் நிறைய விவாகரத்து வழக்கு, அண்ணன் தம்பிக்குள்ள சொத்து தகறாரு... இப்படி தான் போய்கிட்டு இருக்கு... சரி ரெண்டுப்பேரும் பிரியனும்னே சேர்ந்திருக்கும் போது, நான் என்ன சொல்ல... லீகலா நோட்டீஸ் ரெடிப்பண்ணி ஒருவாரத்துல உங்களை வந்துப் பார்க்கிறேன்... அதுல நீங்களும், உங்க மனைவியும் கையெழுத்து போட்டுக் கொடுத்திடுங்க... அப்புறம் சீக்கிரம் விவாகரத்து வாங்கி தர முயற்சி பண்றேன்..." என்று அந்த வக்கீல் சொல்லிவிட்டு சென்றார்.

இன்று அந்த வக்கீல் சொல்லிய அளவுக்கு கூட அன்று இவனுக்கு எடுத்து சொல்ல யாரும் இல்லை... அதுதான் இவ்வளவு நடந்ததுக்கும் காரணம்... இப்போது இதனால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை... லயா அந்த விஸ்வேஷோடு ஆனந்தமாக தான் வாழப்போகிறாள்... அதன்பின் ஏன் வருத்தப்பட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்... இந்த ஐந்து நாட்களாவது லயாவோடு இருக்கப் போவதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்... என்று நினைத்தவன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல கிளம்பினான்.

ன்று நடந்த சம்பவத்திற்கு சந்தோஷப்படனுமா..?? இல்லை வருத்தப்படனுமா...?? என்று தெரியவில்லை ஸ்ருதிலயாவிற்கு... ஏன் நீ இதற்கு சந்தோஷம் தானே படனும்...??" மனசாட்சிக் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை இவளால்... அப்படியே இவள் இதற்கு சந்தோஷப்பட்டாலும், அதை வெளியில் சொல்ல முடியுமா..?? அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று இவளுக்கு புரியவும் இலலை... இரண்டு ஆண்களுக்கு இடையே அவர்கள் விளையாடும் பொம்மையாக இருந்ததால் வந்த நிலைதான் இது என்று லயாவுக்கு தோன்றியது....

சிறுவயதிலேயே தாயை இழந்தவள் தான் ஸ்ருதிலயா... சிற்றன்னையாக வந்தவள், இவளை கொடுமைப்படுத்தவும் இல்லை, அன்பு செலுத்தவும் இல்லை... சிற்றன்னைக்கு பயந்து தந்தையும் இவளை ஒதுக்கிதான் வைத்திருந்தார்... ஓரளவுக்கு செல்வ செழிப்பு இருந்தும், அன்புக்காக ஏங்கினாள் லயா...

கல்லூரியில் படித்தப்போது விஸ்வேஷிடம் காதல் கொண்டாள்... இருவருமே ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழிந்தனர்.... விஸ்வேஷ் நடுத்தரக் குடும்பம் தான்... இதில் அவன் படித்துக் கொண்டிருந்த போதே தந்தையும் இறந்துவிட, விஸ்வேஷ் தான் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவானது...

அதன்படி படித்து முடித்ததும், துபாயில் வேலை செய்யும் தன் அக்காவின் கணவர் மூலம் மூன்றாண்டுகள் ஒப்பந்தத்தில் பேரில் விஸ்வேஷும் துபாய்க்கு சென்றான்...

இங்கே லயாவின் சிற்றன்னையோ, லயாவுக்கு திருமணத்தை சீக்கிரம் முடித்துவிடும்படி தன் கணவரை தொல்லை செய்துக் கொண்டிருந்தார்... தனக்கு இருக்கும் ஆண் வாரிசு மட்டுமே இந்த சொத்துக்களுக்கு உரிமையானவனாக இருக்க வேண்டும்... லயா பெண் என்பதால், அவளுக்கு சீக்கிரம் திருமணம் முடித்து வெளியே அனுப்ப வேண்டும் என்பது தான் அவரின் எண்ணம்...

லயாவின் தந்தைக்கோ தன்னிடம் திறமையாக வேலை செய்யும் வாசவனை தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள தன் பெண்ணையே அவனுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார்...

விஸ்வேஷும் இங்கு இல்லாத இந்த சமயத்தில், இந்த திருமண ஏற்பாட்டை தடுத்து நிறுத்த லயா போராட வேண்டியிருந்தது... தந்தையும் சிற்றன்னையும் இவளை இந்த திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினர்...

வேறுவழியில்லாமல் விஸ்வேஷ் இவளை தொடர்பு கொண்ட போது, அவனிடம் தன் நிலைமையை எடுத்துரைத்தாள் லயா...

"ஸ்ருதிம்மா... இப்படி சொன்னா இப்போ என்ன பண்றது... நான் இப்போ தான் வந்து வேலைக்கு சேர்ந்திருக்கேன்... லீவ் போட்டுட்டும் வர முடியாது... வேலையை விடவும் முடியாது... இந்த வேலையை நம்பி தான் என் குடும்பம் இருக்கு... உனக்கே தெரியுமில்ல... நீயே இதை எப்படியாவது சமாளி..." என்று சொல்லி போனை வைத்துவிட்டான்..."

அப்போது தான் இவள் மனதிலிருந்து அவன் கொஞ்சம் விலகிச் சென்றானோ..?? என்று இப்போது பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறாள்... ஆனால் அப்போது அப்படியெல்லாம் நினைக்க தோன்றவில்லை... விஸ்வேஷால் இப்போது என்ன செய்ய முடியும்...?? அவர் குடும்பத்தையும் அவர் பார்க்க வேண்டும் அல்லவா..?? இந்த நேரத்தில் நான் தான் ஏதாவது செய்ய வேண்டும்... என்று நினைத்தவள்,சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்று நினைத்து வாசவனை பார்க்கச் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.