(Reading time: 11 - 22 minutes)

2017 போட்டி சிறுகதை 38 - நீதி வேண்டும் - ஜான்சி

This is entry #38 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - ஜான்சி

 Justice

வெகுவாக களைத்துப் போயிருந்தான் ரித்விக். எத்தனை மாதங்களாக அவளைத் தேடிக் கொண்டு இருக்கின்றான். ஒரு முறை அவளை நேரில் பார்த்து அவள் நலத்தை அறிந்துக் கொண்டால் போதும் என்று தவிப்பாக இருந்தது. அவள் நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்துக் கொள்வதற்காக கடந்த நான்கைந்து மாதங்களாக யாருக்கும் தெரியாமல் அவன் நடத்தும் தெடுதல் வேட்டையில் வெகுவாக களைத்துப் போயிருந்தான் அவன்.

எங்க இருக்க மந்திரா? நான் ஒரு மடையன். நம்முடைய கடைசி சந்திப்பில் நீ உன்னுடைய வயிற்றைப் பிடித்துக் கொண்டு வேதனையில் துடித்த போது கூட உடனே உனக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று உணராமல் போனேனே? உனக்கு என்னவாயிற்று என்று தெரிந்துக் கொள்ளவும், உன் வயிற்றுப் பிரச்சினை என்னவென்று அறியவும் வருவதற்க்குள் காலம் கடந்து போய் விட்டதே? எனக்கு முன்பே தெரிந்திருந்தால் உன்னை இப்படி அனாதை போல அலைய விட்டிருக்க மாட்டேன் என்று எண்ணியவாறு தான் வந்து இறங்கிய ரயில்வே ஸ்டேஷனை ஏறிட்டு உற்றுப் பார்த்தான் அவன்.

ரித்விக்கிற்கு இந்தியாவின் மாநிலங்கள் எங்கிலும் அடிக்கடி பயணம் செய்ய கூடிய வகையிலான வேலை. அதைத் தான் தனக்கு ஏற்ற விதமாக மாற்றிக் கொண்டு அதாவது தான் மந்திராவை தேட விழையும் இடத்திற்கேற்ப வேலையை அமைத்துக் கொண்டு, தினசரி வேலை முடிந்ததும், அல்லது வார இறுதிகளில் அவளைத் தேடுவான். இதுவரை தேடலில் வெற்றி கண்டதில்லை. ஆனால், இந்த முறை அவனுக்கு கிடைத்த தகவலின் படி அவள் இங்கு தான் இருக்க வேண்டும்.

“ஒரு முறை அவள் நலமாக இருப்பதை அறிந்துக் கொண்டால் போதும்” என மனது மற்றொரு முறை சொன்னதையே திரும்பச் சொல்ல, பெருமூச்செறிந்தான் அவன். மனக் கண்ணில் காட்சிகள் வந்துப் போனது,

"ரித்து……."

"ச்சே அதென்ன ரித்து, சத்துன்னு பொண்ணைக் கூப்பிடற மாதிரி, சும்மா முழு பேரையும் சொல்லி கூப்பிடு மந்திரா……."

"சரி சரி ஏதோ அவசரத்தில அப்படி கூப்பிட்டுட்டேன். நான் சொல்ல வர்றத முதலில கேளு. எங்க அப்பா எனக்கு திருமணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கார்…"

"வாழ்த்துக்கள் ……….எவ்வளவு சந்தோஷமான விஷயம், அதை இப்படி சோகமா சொல்றியே……..என்னாச்சு உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலியா?"

"சோகமெல்லாம் இல்ல ஆனா ரொம்ப குழப்பமா இருக்குடா, பிடிக்கிறது பிடிக்காம இருக்கிறதுக்கு நான் முதலில மாப்பிள்ளைய பார்க்க வேணுமில்லை. உனக்கு தான் தெரியுமே எங்க அப்பா எதிலுமே என் விருப்பம் கேட்க மாட்டார், அவர் சொன்னா சொன்னது தான். நமக்கு தான் அம்மா இல்லியே நமக்காக யாரு எல்லாம் கல்யாணம் காட்சின்னு நடத்துவாங்கன்னு எனக்கு அடிக்கடி தோணிட்டு இருக்கும். இப்போ நடக்கிறது எல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப ஆச்சரியமா தோணுது. பாதி நேரம் போதையிலயே இருக்கிற எங்க அப்பாவுக்கு எப்படி என்னோட கல்யாண விஷயம் எல்லாம் பேசுற அளவுக்கு யோசனை வந்ததுன்னு ஒரு பக்கம் ஆச்சரியமா இருக்குதுன்னா, இன்னொரு பக்கம் நகைப் பணம் கேட்காம எப்படி என்னைய பொண்ணு கேட்கிறாங்கன்னு இன்னும் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அதிலயும் அவங்க ரொம்ப பணக்காரங்களாம்."

"உன்னோட அப்பா இவ்வளவு பொறுப்பா நடந்துக்கிறாரேன்னு நீ சந்தோஷம் தானே படணும்?, ஏன் நீ ரொம்ப யோசிச்சு குழப்பிக்கிற, உன் வாழ்க்கையில் நல்ல நாட்கள் வரப் போகுதுன்னு சந்தோஷமா இருக்கு, எல்லாம் நல்லாதாவே நடக்கும்."

அவன் பதிலைக் கேட்டு அவள் முகத்தில் புன்முறுவல் வந்துச் சென்றது. ஒருவேளை நாம் அனாவசியமாக பயப்படுகிறோமோ? என்றெண்ணியவள் திருமணத்திற்கு மனதளவில் ஆயத்தமாக தொடங்கினாள் போலும்.

“சரி சரி யாராவது பார்த்தா தப்பா சொல்லப் போறாங்க நான் வர்றேன்” எனக் கூறியவளாய் புறப்பட்டாள் மந்திரா.

ஆமாம், ஆண் பெண் நட்பைக் கொச்சைப் படுத்தும் கூட்டத்தினர் அவ்வூரிலும் இருந்தனரே, எல்லாம் நலமாக தான் இருக்கும் என்று தோழியை குறித்து எண்ணியிருந்த ரித்விக் பக்கத்து ஊரில் மிகவும் செல்வாக்கான வீட்டில் மணப்பெண்ணாக அவள் அடியெடுத்து வைத்த சில மாதங்களுக்கு பின்னர் அவளைச் சந்திக்கும் போது தான் அவளது தோற்றத்தைக் கண்டு அவன் அதிர்ந்து போனான்.

அவ்வளவு மோசமாக இருந்தது அவளது உடல் நிலை. பக்கத்து ஊரில் ஒரு வேலையாகச் சென்றவன் கோயிலுக்கு வந்திருந்த இடத்தில் தான் அவளைப் பார்க்க நேர்ந்தது. அப்போது தான் அது அவள் திருமணமாகி சென்ற ஊர் என்று அவனுக்கு ஞாபகம் வந்தது. அவள் தோற்றத்தைப் பார்க்கையில் முதலிலும் அவள் ஒன்றும் குண்டானவள் இல்லை, ஆனால் இப்போதோ முகம் வெளுத்து, மேனி வதங்கி, கண்கள் பொலிவிழந்து புது மணப் பெண் போலவே காணப் படவில்லை. மாமியார் வீட்டின் கொடுமைகளை ஓரிரண்டு சொன்னவள் முகத்தில் அவ்வளவு சோகம். ஒரு வேலைக்காரியைப் போல அவளை நடத்துவது, பிறரோடு பேச அனுமதிக்காதது என்று ஒரு கைதி போலவே அவள் இருப்பது அறிந்து மனம் வாடிப் போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.