(Reading time: 5 - 10 minutes)

2017 போட்டி சிறுகதை 48 - வாழவைத்த காதல் - மகேஸ்வரி

This is entry #48 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்...

எழுத்தாளர் - மகேஸ்வரி

Love

மேளதாளங்கள் முழங்க “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற மனிதக் குரல்கள் முழங்க மந்திரங்கள் உச்சரிக்கப்பட அவள் கழுத்தில் தாலி கட்டினான் மணாளன் தயாளன்.

மீதமிருந்த சடங்குகளும் முடிக்கப்பட மாப்பிள்ளையும், பெண்ணும் தனியாக உட்கார வைக்கப் பட்டு உணவருந்த வைக்கப்பட்டனர். மணப்பெண் சுகந்தியின் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின...

ரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு சுகந்தியும், அவள் காதலன் ஆதவனும் ஊருக்கு வெளியே உள்ள அம்மன் கோவிலின் குளத்துப் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். ஆதவன் தொண்டையை கனைத்துக் கொண்டான்.

“என்னை வரசொல்லிவிட்டு அமைதியாக இருந்தால் எப்படி? என்ன சொல்லனும் சீக்கிரம் சொல்லு. எனக்கு நிறைய வேலை இருக்கு .”

 சுகந்திக்கு அழுகையாக வந்தது. இந்த ஆறு மாத காலமாக ஆதவன் மிகவும் மாறி விட்டான் அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த ஆதவன் இப்போதெல்லாம் வெறுப்பை மட்டுமே காட்டுகிறான். இப்படியெல்லாம் கூட ஆதவனுக்கு பேசத் தெரியுமா? என்று நினைக்கும் அளவுக்கு வெறுப்பை காட்டுகிறான். எப்பொழுதும் சிரித்த முகமாய் இருப்பவன் இப்போதெல்லாம் சிடுமூஞ்சியாய் மாறி விட்டான். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறான்.

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து மாமாவின் தயவில் ஒண்டி வாழும் சுகந்திக்கு ஆதவனின் அன்பு மட்டுமே முழு உலகமாய் இருந்தது. இந்த ஆறு மாத காலமாக அதுவும் கிடைக்காமல் வாழ்க்கையே வெறுத்து விட்டது அவளுக்கு.

“மாமா மாப்பிள்ளை பார்த்திருக்கிறாராம். பெயர் தயாளன், சென்னையின் என்ஜினீயராக வேலை பார்க்கிறாராம். நிச்சயம் பண்ண அடுத்த மாதம் ஊருக்கு வரப் போகிறார்கள். அதற்கு முன்பு நீங்கள் வந்து மாமவிடம் பேசிவிட்டால் நன்றாக இருக்கும்.”

எப்படியோ மனதிற்குள் பலமுறை உருப் போட்டதை சொல்லிவிட்டாள் சுகந்தி. முன்பெல்லாம் ஆதவனிடம் பேசுவது அவ்வளவு இலகுவாக இருக்கும். ஒரு தாயிடம் மகள் பேசுவது போல அனைத்தையும் பேசி விடுவாள். ஆதவனை விரும்பிய பிறகு அவள் தாயில்லாத குறையை உணர்ந்ததே இல்லை. கடவுளுக்கு தன்மீதும் இரக்கம் இருக்கிறது என்று நினைத்திருந்தாள். இப்பொழுது அதுவும் இல்லை என்றாகிவிட்டது.

“நான் வந்து என்ன பேசமுடியும். நானே தாய், தந்தை இல்லாமல் அக்கா குடும்பத்தோடு ஒண்டி வாழ்பவன். எனக்கு நிறைய நகை போட்டு பெண் எடுக்க வேண்டும் என்று என் அக்கா நினைக்கிறாள். நான் வேண்டாம் என்று சொன்னால் என்னைத் தூக்கி வளர்த்த அக்காவிற்கு மனம் ஆறுமா? உன் மாமாவால் அவ்வளவு நகை போட முடியுமா? அது மட்டுமா? நீ வேற சாதி! நான் வேற சாதி! காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதான் ஆனால் கல்யாணத்திற்கு நகை, பணம், சாத்தி எல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறது. நீ உன் மாமா பார்த்த வரனை ஏற்றுக் கொள்வது தான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது” என்று ஒரு வெறித்த பார்வையோடு சொல்லிவிட்டான்.

“இனி என்னை இவ்வாறு பேச அழைக்காதே! இனி நீ வேறு ஒருவருக்கு மனைவியாக வேண்டியவள்...” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்து விட்டான்.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்க முடியாது ஏங்கி ஏங்கி அழுது விட்டாள் சுகந்தி. இது இவருக்கு முன்னாடியே ஏன் தோணவில்லை. ஆதவன் மட்டும் தன் காதலை சுகந்தியிடம் சொல்லியிராவிட்டால் சுகந்தி காதல் என்ற ஒன்றை மனதாலும் உச்சரித்திருக்க மாட்டாள். அவள் அவ்வளவு மனக் கட்டுப்பாட்டோடு இருந்தவள் இரண்டு வருட காலம் கல் மனதைக் கரைத்து காதல் விதையை ஊன்றியவன் ஒரே வார்த்தையில், ஒரே வெறித்த பார்வையில் அதை பிடுங்கக் காரணம் என்ன?

எவ்வளவு யோசித்தும் சுகந்தியால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சுகந்தியை கல்யாணம் பண்ண முடியாது என்று அவன் சொன்ன காரணங்கள் முன்பே பலமுறை அவர்களால் அலசி ஆராயப்பட்டவையே. அவள் பயந்தும் பலமுறை அவளுக்கு தைரியம் கூறியவன். ஏன் அதையே காரணம் கூறினான் என்பது அவளுக்கு புரியவில்லை. ஆனால் அது காரணம் அல்ல என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

மாமாவின் வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை. அப்படியேத் துணிந்து தட்டினாலும் பின்பு எவ்வாறு வாழ்வது என்ற மனப்பான்மையும் , தைரியமின்மையும் அவளைத் தயாளனோடானத் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்தது. சம்மதம் சொன்னாள். இதோ பக்கத்தில் தயாளன்.

நாட்கள் ஓடின. சுகந்திக்கு புது வாழ்க்கை பழகி விட்டது. தயாளன் மிகவும் அன்பாக இருந்தான். என்றாவது ஒன்றிரண்டு நாள் ஆதவனின் ஞாபகம் வரும். ஏன் அவ்வாறு செய்தான் என்று நினைத்துக் கொள்வாள். காதல் எல்லோரும் சொல்வது போல் பொல்லாதது. வாழ வைக்காது என்று நினைத்துக் கொள்வாள்.

தயாளனோடான அவளது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருந்தது. அவர்களது அன்பிற்கு அடையாளமாய் இதோ சுகந்தி ஏழு மாத கால கர்ப்பவதி. பிரசவத்திற்கு மாமா வீட்டிலிருந்து வந்து அழைத்தார்கள். தயாளன் சிறிது கவலையோடு அனுப்பி வைத்தான்.

மாமாவின் வீட்டில் அனைவரும் அன்போடு இருந்தனர். அவளின் தோழி அன்பரசி அவளைக் காண வந்திருந்தாள். அன்பரசி அன்பானத் தோழி. ஆதவனைப் பற்றி அறிந்தவளும் கூட. இன்று எப்படியும் ஆதவன் எப்படி இருக்கிறான் என்று கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

“அன்பு நீ எப்படி இருக்கிறாய்? உன் குழந்தை எப்படி இருக்கிறான்?”

“நான் நன்றாக இருக்கிறேன் சுகு. உனக்கு ஒன்று தெரியுமா? நம்ம மேல வீட்டு ஆதவன் அண்ணன் போன மாசம் இறந்து விட்டார். அவருக்கு இதயத்தில் ஏதோ ப்ராப்ளமாம். சரி செய்ய முடியாது என்று 1 1/2 வருடத்திற்கு முன்னாடியே சொல்லிட்டாங்களாம். அதனால் கல்யாணமே செய்ய மாட்டேன் என்று இருந்தாராம் அந்த அண்ணன். அவங்கக்கா சொல்லி ஒரே புலம்பல். நல்லவேளை நீ அவரைக் கல்யாணம்  செஞ்சுக்கலைடி.”

மீதி அன்பரசி பேசிய எதுவும் சுகந்தியின் காதில் விழவில்லை. அவள் கண்களில் கண்ணீர்த் துளிகள் திரண்டு அவள் கேட்கும் திறனையும், பார்வையும் மறைத்துக் கொண்டிருந்தன...

மனம் மட்டும் நினைத்துக் கொண்டது “காதல் வாழ வைக்கும்” என்று.

 

This is entry #48 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்...

எழுத்தாளர் - மகேஸ்வரி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.