(Reading time: 8 - 15 minutes)

2017 போட்டி சிறுகதை 50 - கண்ணீர்த் துளிகள் - K.சௌந்தர்

This is entry #50 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை...

எழுத்தாளர் - K.சௌந்தர்

நிஷிதாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த அறையே சூனியமாக இருப்பதாகப் பட்டது. வருண் அறையை காலி செய்தது அவளை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவளே கூட எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் வருண் வேறு வேலைக்கு அப்ளை செய்தது முதல் அவனுக்கு அறை காலி செய்ய பேக் செய்த வரை கூட இருந்து உதவியது அவள்தான். அப்போதெல்லாம் தோன்றாத வருத்தம் இப்போது காலையில் அலுவலக அறையைத் திறந்து சீட்டில் அமரும்போது எதிர் சீட்டில் யாருமில்லாத வெறுமையைப் பார்க்கும்போது தோன்றுவானேன்.  கடந்த இரண்டு வருடமாக கிட்டத்தட்ட நிஷிதா வேலைக்கு சேர்ந்தவுடன் இந்த அறையில் அவளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.வருண் வேறு செக்ஷனைச் சேர்த்தவன் என்பதால் அவனுக்கும் அவளுக்கும் பிரச்சனையின்றி ஒத்துப் போனது. அனைத்து விஷயங்களையும் ஷேர் பண்ணிக் கொள்ள முடிந்தது. அதுவும் வருண் ஆண்களில் மிகவும் ஜென்டில்மேன். இதுவரை அவளை தவறாக ஒரு பார்வை கூட பார்த்தது இல்லை.

சில நேரம் அவள் தாமதமாக வரும்போதோ அல்லது சீக்கிரமாக வீட்டுக்கு கிளம்பினாலோ அவளது மேலதிகாரியிடம் ஏதாவது காரணம் கூறி சமாளித்து வைப்பான். அவ்வளோதான்.  அந்த அறைக்கு வெளியில் இருவரும் ஒன்றாக சேர்ந்து போனது கூட கிடையாது. இப்படிப்பட்ட ஒருவனைப் பிரிவதற்கு தான் ஏன்  இவ்வளோ வருத்தப் பட வேண்டும்? எப்போதும்போல அலுவலகம் விட்டு வெளியே சென்றால் மறைந்துவிடும் அவனின் ஞாபகங்கள் இன்று மட்டும் இருபத்திநாலு மணிநேரமும் தன்னையே தொடர்ந்து வருவது ஏன்? அவனது குரலைக் கேட்காமல் முடியாது போல ஒரு தவிப்பு. இரண்டு முறை செல்போனை எடுத்து சும்மா வைத்துவிட்டு மூன்றாவது முறையாக  டயல் செய்து அவனது குரல் கேட்கும் வரை தவித்துப் போய் விட்டாள் நிஷிதா. எப்போதும் போல எதாவாது காரணத்துடன்  போன் செய்தால்  இவ்வளோ படபடப்பு இருக்காதோ? இன்று அவனின் குரலைக் கேட்கவென்றே போன் செய்ததால் இதயத்துடிப்பு எகிறியது.

எதிர்முனையில் " ஹலோ நிஷிதா..." என்ற வரூணின் குரல் கேட்டதும் பதில் பேச அவளுக்கு  சில நிமிடங்கள் தேவைப் பட்டன.

“எஸ் வருண் எப்படி இருக்கீங்க..வேலை எப்படி ஈசியாயிருக்கா....?” என்பது போன்ற பொதுவான கேள்விகளைத்தான் அவள் கேட்டது

ஆனால் எப்படிதான் பத்து நிமிடங்கள் கரைந்து போனதோ தெரியவில்லை. அதுவும் அந்தப் பக்கத்தில் அவனது அம்மாவின் குரல் கேட்ட பிறகுதான் போனையே வைத்தாள் அவள். இரவு முழுக்க தூக்கமே இல்லை. என்ன செய்வது, அவன் இந்நேரம் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பான். தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மனசு.  ஒருவேளை இன்னும் சில நாட்கள் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தவளுக்கு மேலும் மேலும் அவனது நினைவுகள் அதிகமாகத்தான் ஆனதே தவிர குறையவில்லை.  இனி அவனைப் பார்க்காமல் இருக்கமுடியாது என்று என்று மனம் தவிக்கத் தொடங்கியது.

றுநாள் எப்படியும் அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு போயாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் மறுநாள் மதியம் வேலை அதிகமாக இருப்பதாக அவளது பர்மிஷன் மறுக்கப் பட்டது. வேதனையுடன் பைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள் எதிரே “ஹாய் நிஷி” என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்தாள்.  

வருண் தான்  நின்றிருந்தான். ச்சே ஏன் அவனது உருவம் இப்படி கலங்கலாகத் தெரிகிறது? எவ்வளோ சமாளித்தும் முடியாமல் இரண்டு சொட்டு கண்ணீர் அவள் கன்னங்களில் உருண்டது. கண்களை வேறு பக்கம் திரும்பி துடைத்துக் கொண்டாள்.

அவன் புறமாகத் திரும்பி “ஹாய் வருண் என்ன இந்தப் பக்கம்” என்றாள் உணர்ச்சிகளைத்  துடைத்த குரலில்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த வருண் ஒரு முடிவுக்கு வந்தவனாய் “வேற ஒண்ணுமில்லை. ஒரு பழைய கணக்கு முடிக்க வேண்டி இருந்தது. அதான் வந்தேன். அப்புறம் நா உடனே கிளம்பனும், கொஞ்சம் காபி ஷாப் வரைக்கும் வர்றியா...காலைலேர்ந்து ஒண்ணுமே சாப்பிடலை” என்றான்.

உடனே எழுந்துவிட்டாள் நிஷிதா.  

“என்ன வருண்..நேரத்துக்கு சாப்பிட மாட்டீங்களா...உடம்பு என்னத்துக்கு ஆகும் ...சரி வாங்க போகலாம்" என்றபடி முன்னே நடந்தாள்.

காபி ஷாப்பை அடைத்ததும் அவன் புது வேலையைப் பற்றியும் கூட வேலை செய்யும் ஆட்களைப் பற்றியும் பத்து நிமிடங்கள் பேச அவளுக்கு தலையை வலிக்க ஆரம்பித்தது.

“உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்னு தான் இங்கே கூட்டிவந்தேன் நிஷிதா. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியலை. என் கண்களைப் பார்..நா ஒழுங்கா தூங்கி பத்து நாள்  ஆச்சு....நா ஒரு பொண்ணை இந்த பத்து நாளா ரொம்ப சின்சியரா லவ் பண்றேன். இவ்ளோ நாள் எப்படித்தான் அவள் இல்லாமல் இருந்தேனோ தெரியலை. வர்ற வெள்ளிக் கிழமை

அந்தப் பொண்ணு வீட்டுக்கு பொண்ணு பாக்கப் போறேன். நீயும் லீவு போட்டுடு. நா வந்து பிக்கப் பண்ணிக்கறேன்” என்றான். நிஷிதாவுக்கு காலடியில் பூமி நழுவியது. தன் உணர்ச்சிகளைக் காட்டாமல் சமாளிப்பதற்கு அவள் பெரும்பாடு படவேண்டி இருந்தது. இது என்ன? தான் காதலை நன்றாக உணரும் முன்பே காதல் தோல்வியை உணர வேண்டும் என்பது தான் விதியா...இவனுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இருப்பதாகத் தெரியவில்லையே? ஒருவேளை இவனுக்கு உண்மையாகவே தன் மீது எந்த ஈடுபாடும் கிடையாதா? நாம் தான் தவறாகப்   புரிந் து கொண்டோமா? நிஷிதாவால் அன்று இரவும் தூங்க முடியவில்லை. அவன் யாரோ ஒரு பெண்ணின் நினைவில் தூங்காமல் இருக்க தான் அவன் நினைவில் தூங்காமல் இருப்பது அவளுக்கு அவமானமாக இருந்தது.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.