(Reading time: 21 - 42 minutes)

ஹா! இந்த ரம்பை, ஊர்வசி என்பார்களே, அத்தகைய அழகிய அரம்பையர்களைத் தோற்கடித்து, இவள் நடந்து வந்தாள். இந்த அன்ன நடை என்பார்களே, அதுவே கேவலம் - இவள் நடையே தனி அழகு. வேண்டுமானால், ஒரு உவமைக்கு அவள் அழகை இப்படி வருணிக்கலாம் - அவள் நடையோ அன்னம், அவள் கன்னம் மதுக்கிண்ணம்| அவள் கூந்தல் கார்மேகம், அவளைக் கண்டவுடன் கொள்வோம் மோகம்| அவள் வயது இருக்கலாம் பதினெட்டு, அவள் வாடாது வர்ண மெட்டு.

என்ன, வார்த்தைகள் வந்து விழுகிறதே எனக்கு! 

இதோ, முழித்த வண்ணம் ஒரு கனவு – நாச்சியார் கண்ட  கனவு: 

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து, நான் நடந்து வர, பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நடப்பட்டுள்ளது| இதோ, இந்திரன் வருகிறான் -

தேவர் கூட்டம் நெருங்குகின்றது – என்னிடத்து வந்து இந்த தேவதையை மணம் பேச வந்துள்ளார்கள் - மந்திரத்தாலே என்னை புனிதமாக்குகிறார்கள்| மத்தளம் கொட்ட, வரிச்சங்கு ஊத முத்து உடைய மாலைகள் தொங்கும் பந்தலின் கீழே, நம்பியான நான், அவளுடைய பசுந்தளிர் போன்ற வளைகரத்தை பற்றுகிறேன்!

ஆஹா! என்னவொரு அழகிய கனவு – ஆனால் பிரத்யட்ச நினைவு?

அவள் நடந்து வந்து கொண்டிருக்கிறாள் அவ்வளவு தான். 

அந்தக் கடற்கரையில் ஆள்நடமாட்டம் அப்போது இல்லை. நான் தான் முன்பே சொன்னேனே நான் பாடிக்கொண்டிருக்கிறேன் என்று? நான் என்ன கே. பி. சுந்தராம்பாளா பத்தாயிரம் பேர் அமர்ந்து கேட்கும்படி பாட? ஜனக்கூட்டம் இருந்திருந்தால் என் அபஸ்வரத்திற்கு அஞ்சி தெறித்து ஓடியிருப்பார்கள்! சரி, கதைக்கு வருவோம். 

அவள் என்னருகே வருவதை நான் உணர்ந்தேன். அவள் எதனாலோ, என்பால் ஈர்க்கப்பட்டே என்னிடத்து வருகிறாள் என்றே தோன்றியது.

இப்படித் தான் நான் இலங்கைக்குச் சென்றிருந்த போது ஒரு சம்பவம் நடந்தது. ஊர் தான் கொலைக்களமே தவிர மற்றபடி இயற்கை அன்னையின் அருட்கடாட்சம் அங்கு இருந்தது என்று சொல்ல வேண்டும். நான் கடற்கரையில் மணல் துகள்களை அள்ளி வீசியபடியே சில மணி நேரம் அமர்ந்திருந்தேன்.

அப்போது யாரோ ஒரு பெண் என்னைத் தேடி ஓடிவருவது போல் இருந்தது. இருப்பினும் ஏதோ சிந்தையில் நான் ஆழ்ந்துவிட்டபடியால் அதை கவனிக்கவில்லை. இருப்பினும் என் அருகில் யாரோ வருவது போன்ற உணர்வு எழுந்தது. அந்த உணர்வு தான் என்னை சிந்தனைத் தொட்டிலிலிருந்து தட்டி எழுப்பியது. நான் நிமிர்ந்து பார்த்த போது, யாரோ ஒரு பெண்ணும் ஒரு ஆணும் போய்க் கொண்டிருந்தார்கள்.

சரி என்று நானும் என் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டேன். இருப்பினும் எனக்குள் ஒரு சந்தேகத் துளி – அதில் யாரோ ஒருவர் நிச்சயம் என்னைப் பார்க்கத் தான் வந்திருப்பார்கள் என்று.

அப்படித் தான் இருந்தது இந்தப் பெண்ணின் வருகையும்.

நான் இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கையில் (அதாவது நான் முன் சொன்னவற்றை எழுதி முடிக்க எத்தனை நேரம் ஆகியிருக்குமோ அத்தனை நேரம் எனக் கொள்க) அவள் எனக்கு அருகில் வந்து விட்டாள். அவள் நிச்சயம் என்னை அவ்விடத்து எதிர்பார்த்திருக்க வேண்டும் என்பதை அவள் விழிகள் உணர்த்தின.

“ஸார்! நீங்கள் மதராஸ் தானே செல்லவிருக்கிறீர்கள்?”

என்றாள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் மதராஸ்தான் என்பதை இவள் எப்படி உணர்ந்து கொண்டாள்? எப்படி இவளுக்குத் தெரியும்? இவளை நான் பார்த்ததாக எனக்கு நினைவே இல்லையே?

“நான் மதராஸ் என்பது உனக்கு எப்படித் தெரியும்? பெண்ணே, நீ யார்?” என்று நான் கேட்டேன். அவள் யாராவது வந்துவிடப் போகிறார்கள் என்ற பீதியில் சுற்றும் முற்றும் பார்த்தவளாய்,

“நானும் மதராஸ் செல்ல வேண்டும்| சென்றவுடன் நிச்சயம் நான் உங்களிடம் நான் யாரென்று சொல்லிவிடுகிறேன். ஆனால் உங்களுடன் தான் நான் பயணிப்பேன்| சென்ட்ரலில் இறங்கியதும் நிச்சயம் நான் விவரங்களைச் சொல்லி விடுகிறேன். தயவுசெய்து ஒரு அபலைக்குக் கருணை காட்டுங்கள்!” என்றாள். எனக்குப் பரிதாபம் சுத்தமாக ஏற்படவேயில்லை. குயில் போன்ற குரலும் மயில் போல உருவமும், துரைசானிகள் (ஆங்கிலேயர் வீட்டுப் பெண்களை அப்படி அழைப்பது அன்றைய வழக்கம்) அணியும் அந்த நவநாகரீக(மற்ற) குட்டைப் பாவாடையைத் தான் அவள் அணிந்திருந்தாள். அவள் கையில், அவள் வேறு இடத்திலிருந்து வருகிறாள் என்பதற்கு அடையாளமாய் ஒரு பெட்டி மட்டும் இருந்தது.

நானும் என்னவோ ஏதோ என்று நினைந்திருக்கையில்,

“எப்போது பயணம் உங்களுக்கு?” என்று கேட்டாள். 

“இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் பயணப்படுவேன்!” என்றேன். உடனே அவள் அருகில் இருந்த மணல்மேட்டில் அமர்ந்து கொண்டாள். அந்த ஒரு மணி நேரம், நான் கடலைப் பார்க்கிறேன், அவளைப் பார்க்கிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.