(Reading time: 20 - 39 minutes)

சொர்ணாக்கா இவ்வளவு பிரச்சனைய சந்திச்சிருக்கா! எதையும் வெளிகாட்டாம எப்படி தைரியமா இருக்கா! இதனாலதா யாரிட்டயும் ஃப்ரீயா பேசி பழகாம எப்பவுமே இறுக்கமா இருக்காளோ, இந்த சொர்ணாக்கா? இந்த கடுப்புலதா எங்கிட்ட ரூடா பேசுறா போலும்… சரி விடு! இனிமேல் நீ என்னதா சத்தம் போட்டாலும் உங்கிட்ட என்னோட வீர செயல்களை காட்டமாட்டேன்’.

‘இப்போதைக்கு இந்த புக்கை அவ பார்க்கறதுக்கு முன்னாடி அந்த ரூமுல வச்சிடனும்’. 

தன்னுடைய துப்பட்டாவால் அதை சுற்றியவள் இங்கும் அங்கும் நோட்டம் விட்டபடி மிகவும் கவனமாக நடந்தாள்.  திடீரென யாரோ இரகசிய குரலில் பேசிக்கொள்வது கேட்கவும் அப்படியே நின்றுவிட்டாள்.

‘இன்னைக்கு என்ன நடக்குது? ஒரே இரகசிய ரிவீலிங்கா இருக்கு.  யாரிது இப்படி பேசுறது? யோசிச்சது போதும் கவனி கீர்த்தி…’

“சட்டுனு ஏன் மங்காக்கா மெல்ல பேசுற?”

“நாம பேசுறத யாராவது கேட்டா… என்னாகும்?! அதனாலதான்….”

‘நீங்க பேசுறததா இந்த கீர்த்தி கேக்குறாளே!’ பெருமை பட்டாள் கீர்த்தி.

மூன்று வருடத்திற்கு முன்….

“நைட்டு வீட்டுக்கு வரமாட்டேன்.  எனக்காக வெய்ட் பண்ணாம நீ சாப்பிட்டுட்டு படுத்திடு.  காலைல எட்டு மணிக்கு ஏ.எச். ஹாஸ்பிடலுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திரு”

“உங்களுக்கு என்னாச்சுமா? உடம்பு சரியில்லையா? நான் இப்பவே கிளம்பி வரட்டுமா?” சுலோசனாவிற்கு சுகமில்லையோ என்று பதறினாள் மங்கா.

“நான் நல்லாயிருக்க மங்கா! நீ மறக்காம நான் சொன்னத செஞ்சா போதும்” அதிகாரமாக பதில் வரவும்

“சரிங்கம்மா!” அழைப்பைத் துண்டித்தாள்.

‘இவங்களுக்குதா உடம்புக்கு என்னமோ ஏதோன்னு கேட்டா… எப்படி பதில் சொல்லுறாங்க… எனக்கு வேணும்… சொன்னத செஞ்சுகிட்டு இருந்தாலே கடைசி வரைக்கும் இந்த வேலையாவது மிஞ்சும்.  இதுவும் இல்லாம போனா எனக்குன்னு யாரிருக்கா? புருசனும் கொடுமக்காரனா போயிட்டா.  அவங்கிட்ட இருந்து என்னை காப்பாத்தின இந்தம்மா நால்லாயிருக்கட்டும்’ புலம்பியபடியே காலை சமையலுக்கு தேவையானவைகளை சரிப்பார்த்துவிட்டு படுத்துகொண்டாள்.

காலை சாப்பாட்டு கூடையுடன் ஹாஸ்பிடலுக்கு வந்த மங்கா, சுலோசனா டாக்டரிடம் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தாள். 

‘நல்லாதா இருக்காங்க.  அப்புறம் எதுக்காக இங்க சாப்பாடு கொண்டார சொன்னாங்க?’ யோசித்தபடியே அந்த அறையின் ஜன்னலோரமாக நின்றாள்.

“என்ன டாக்டர் இப்படி சொல்லுறீங்க? இது உண்மையா?” வேதனை கலந்த அதிர்ச்சி சுலோசனாவிடம்.

“உண்மைதான் சுலோசனா! அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் அவளை கொன்னாலும் கொன்னுடுங்க.. தயவுசெய்து எங்ககிட்ட அவளை அனுப்பிச்சிடாதீங்க.  நீங்க இதை செய்யலனா… நாங்க செய்ய வேண்டியிருக்கும்னு சொல்லிட்டு போயிட்டாங்க”

“நீங்க காரணத்தை கேக்கலையா?”

“கேட்டேனே! அந்த பொண்ணுக்கு ஒரு தம்பி இருக்கானாம்.  இவளோட நிலைமை வெளிய தெரிய வரும்போது அவனோட வாழ்க்கை பாதிக்கப்படும்னு மனசாட்சியே இல்லாம சொல்லிட்டு போயிட்டாங்க”

இதை கேட்ட சுலோசனா பேச்சற்று உறைந்து நின்றிருந்தாள்.

“எனக்கு புரியுது சுலோசனா! அந்த பொண்ணை நீங்கதா காப்பாத்தினீங்க… அவளோட நிலைமை என்னாகும்னு யோசிக்கிறீங்க… எனக்கு தெரிஞ்ச குழந்தைகள் காப்பகமிருக்கு… அங்கே இந்த பொண்ணை வேலைல வைக்கலாம்னு நினைச்சிருக்கே… முதல்ல அவ தேறி வரட்டும்” இப்போதும் அசைவின்றி நின்றிருந்த சுலோசனாவின் கையை ஆறுதலாக பற்றினார் மருத்துவர்.

“அந்த பொண்ணை நான் கூட்டிட்டு போறேன் டாக்டர்” முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது சொல்லியிருந்தாள் இவள்.

“அவ கொஞ்ச தேறட்டும்… அதுக்கப்புறம் நீங்க அவளை தாராளாமா கூட்டிட்டு போகலாம்.  உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க”

“தேங்க் யூ டாக்டர்!”

இருவரும் அந்த அறையிலிருந்து வெளியேறினர்.  அவர்களின் பேச்சை கேட்டு கொண்டிருந்த மங்கா அப்போதுதான் அங்கு வந்தவள் போல் சுலோசனாவிடம் சென்றாள்.

ந்த பொண்ணை பற்றி டாக்டரும் சுலோசனாம்மாவும் பேசுனாங்க மங்காக்கா?” ஆர்வம் பொங்கியது சுகுணாவின் கேள்வியில்.

“நம்ம கீர்த்திதா! ஆனா இந்த விஷயத்தை நீ யாருகிட்டையும் சொல்ல கூடாது.  கீர்த்தி யாரு? அவ எதுக்காக இந்த வீட்டிலிருக்கா? அவ ஏன் ஹாஸ்பிடல்ல இருந்தான்னு சுலோசனாம்மா இதுவரைக்கும் எங்கிட்ட கூட சொன்னதில்லை.  சுகுணா, உன்னை எனக்கு நல்லா தெரியுமேனு இதையெல்லாம் சொன்னேன்”

“என்னை பற்றி உனக்கு தெரியாதா மங்காக்கா.  இதை போயி யாருகிட்ட சொல்ல போற…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.