(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 10 - ஸ்ரீலக்ஷ்மி

SS

 நம் வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு சம்பவமும்

நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது…!!

ரை நெருங்கும்போதே தாரைத் தப்பட்டைகள் முழங்கிக் கொண்டிருக்கும் ஓசை காதைப் பிளந்தது.. ஊர் எல்லையில் இருக்கும் துர்க்கை அம்மன் கோயிலில் தான் ஆடி மாசம் என்று விழாக் கோலம் பூண்டிருந்தது.. ஊரே திரண்டு பொங்கல் வைப்பதும் கிடா வெட்டுவதும் அமர்க்களமாய் இருந்தது.

அதிலும் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் நெட்டித் தள்ளும். அங்கே சுத்துப்பட்டுக் கிராமங்களில் நிறையக் கிராம தேவதை வழிபாடுகள் அதிகம்.. அதிலும் ரேணுகாம்பாள் கோவில் மிகவும் பிரசித்தி.

அந்த வகையில் இவர்கள் வீடு வாழையூரிலிருந்து ஒரு மூன்று நான்கு கிலோமீட்டர்த் தொலைவில் இருந்தது.. வீட்டின் மிக அருகே ஒரு ஏரியும் அதை ஒட்டிய ஒரு சிறு எல்லை அம்மன் கோவிலும் உண்டு.

சில வருடங்களுக்கு முன் வரை வருடாந்தரத் திருவிழா கொண்டாட்டங்களை இவர்கள் வீட்டில் விமரிசையாகக் கொண்டாடியவர்கள் தான்.. ஆனால் இந்த மூன்று வருடங்களாக.. ஒண்ணும் இல்லை.

அதிலும் அவன் தந்தை முத்துசாமியின் மரணம் அனைத்துக் கொண்டாட்டங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

அதன் பின் எப்போதும் எதாவது ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இதோ இன்றைக்குக் கூட அவன் தாய் உடனடியாக வரச் சொன்னதே ஏதோ ஒரு அணுகுண்டை இறக்கத்தான் என்பது அவனுக்கு நிச்சயம்தான்.. ஆனால் அது எதுவாக இருக்கக் கூடும் என்பதை ஆராய அவனுக்கு நேரமில்லாமல் போனது.

அந்த வாரம் வெள்ளி சனி ஞாயிறு என்று மூன்று நாட்களும் விடுமுறையாகிப் போனதால் அவனும் வீட்டுக்குக் கிளம்பிவிட்டான்.

அவர்கள் ஊருக்கு அருகே தான் கமண்டல ஆறு ஓடுகிறது.. ஓடுகிறது என்றுதான் பெயர்.. இதுவரை அவன் அதில் நீரைப் பார்த்ததே இல்லை..தென்னகத்தில் பல ஆறுகளும் நீர் நிலைகளுக்கு இதே கதிதான். அருகே இருக்கும் சில பல இயற்கை ஊற்றுக்களையெல்லாம் மக்களின் பேராசை பலி வாங்கிவிட்டது.. எங்குப்பார்த்தாலும் ரசாயனக் கழிவுகளும் நெகிழியும் (பிளாஸ்டிக்கும்).. எப்படி நிலத்தடி நீர் கெடாமல் இருக்கும்.

எப்போதாவது மழை அதிகமாக இருக்கும்போது காட்டாற்று வெள்ளம் தான் பார்த்திருக்கிறான்.. மற்றபடி வறண்ட மணல்வெளி தான்.

எப்போதோ சிறு வயதில் தந்தையோடு ஒரு முறை நீர் இருந்த பகுதியில் நீச்சல் போனது அவனுக்கு நியாபகம் வந்து தந்தையின் நினைப்பை அதிகரிக்கச் செய்தது.. பாவம்..சாகும் வயதா அவருக்கு.

எப்போதும் கஷ்டத்தையே அனுபவித்தவர்.. என்ன செய்ய வானம் பார்த்தப் பூமி.. அப்படியும் கூட அவர்கள் தோப்பும் துறவுமாகத்தான் இருந்தார்கள்.. அதெல்லாம் ஒரு காலம் என்றாகிப் போனது.. ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒவ்வொன்றாக விற்கத் தொடங்கியவர், விழித்துக் கொள்ளும் போது முக்கால்வாசி கடனிலேயே போயாகிவிட்டது.

மீதி இருந்ததில் பயிர் செய்யவும் கூடப் பணத்திற்குப் பிறரிடமோ இல்லை வங்கியிலோ கடன் வாங்கும் அளவிற்குத்தான் இருந்தது அவர் நிலை. மகன் தலையெடுத்து ஏதோ கொஞ்சம் கடனில்லாமல் இருக்கலாம் என்று நினைத்தவர் நினைப்பின் மண்தான் விழுந்தது.. என்னதான் பெரிய படிப்புப் படித்தாலும் கூட இன்னமும் கை நிறையச் சம்பாத்தியம் சிங்கார வேலனுக்கு இல்லைதான்.. சம்பளம் வந்தாலும் கடன் அதை விட மிக அதிகமாகத்தான் இருந்தது.

இதில் எப்போது கடனை அடைத்து நிலத்தை மீட்டு.. பெரிய அளவில் விவசாயம் செய்வது...என்றுக் குழம்பியவருக்கு நிச்சயம் வேலனின் அயராத உழைப்பும் புத்திசாலித்தனுமுமான அணுகுமுறையும் ஓரளவுக்கு மீட்சியைத் தந்தது தான்.. ஆனால் அவரால் அதை அனுபவிக்கமுடியவில்லை அதிக நாள்.

தேவையில்லாத சமயத்தில் அதி முக்கியமாய் நிகழ்ந்த நிகழ்வுகள்.. எதிர்பாராமல் அவர் உயிரைக் குடித்தது.

ஏதேதோ எண்ணியபடியே குறுக்கு வழியே வீட்டை அடைந்தவனுக்குத் தெருமுனையை எட்டும் போதே வாசலை அடைத்தபடி இருந்த நித்திய மல்லிக் கொடியின் மலர்கள் தங்கள் இனிய சுகந்தத்தைத் தவழவிட்டு வரவேற்பை அள்ளித் தெளித்தன.

இனிமையான நறுமணம் மனதை ஏதோ செய்ய.. கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். பெரிய மச்சு வீடுதான் அவர்களது.. என்ன எல்லாம் காலி டப்பா இப்போது.

வாசலில் இருபக்கமும் வாசனைக் கமழும் மல்லிகளும் நாட்டு ரோஜா வகைகளும் மதி மயக்கத்தைத் தந்தன.

அனைத்தையும் விற்று விடுவார் அவன் தாய்.. அதிகாலையிலேயே மல்லியைப் பறித்துத் தொடுத்துப் பூக்காரியிடம் கொடுத்துவிடுவார்.. ரோஜாக்களும் அப்படித்தான்.. தவிர முருகை வாழை, மா, நெல்லி என்று எதையும் விடமாட்டார்.

நிலைமை அப்படி அவர்களுக்கு ஒவ்வொரு நாணயத்தையும் பார்த்துப் பார்த்துச் செலவழிப்பார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.