(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 09 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.9 : ரவிவர்மன்

சூரியன் தற்காலிகமாக இந்த உலகத்தை விட்டுப் பிரிய மேற்கில் நகர்ந்திருந்தது. அதனுடைய வெப்பத்தின் வீரியம் குறைந்து பொன்னிறமாகக் காட்சி தந்தது. மரங்கள் மெதுவாக அசைந்து தென்றலுடன் பேசிக்கொண்டிருந்தன. வானில் பறவைகள் தங்கள் இருப்பிடத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. வெண் மேகங்களில் ஆங்காங்கே கரு மேகங்கள் குடியமர்ந்தன. வெப்பத்தை அனுபவித்த பூமி குளிர்ச்சியடையத் தொடங்கியது.

ஓர் அழகிய அற்புதமான வனம். அவ் வனத்தில், ஏராளமான புங்கை மரங்களும் தாகம் தீர்க்கும் தென்னை மரங்களும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் பனை மரங்களும் ஆல மரங்கள் தங்கள் விழுதுகளைப் பூமியை நோக்கித் தொங்கவிட்டுக் கொண்டும் இருந்தன. ஆல மரத்தின் பழுத்த காய்கள் பூமியில் சிதறி இருந்தன. மாதுளை மரத்தில் பழங்கள் செந்நிறத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே பழுத்த இலைகளும் காய்ந்த இலைகளும் காற்றில் உருண்டோடிக் கொண்டிருந்தன. குரங்குகள் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்குத் தாவி ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தன.

பறவைகளின் புகலிடமாக அந்த வனம் அமைந்திருந்தது. சுறுசுறுப்புக்குப் பெயர் போன சிட்டுக்குருவிகள் அங்கும் இங்கும் தத்தித் தத்தி நடந்தும் சிறிது தூரம் ஆங்காங்கே பறந்து சென்றும் தங்கள் சிறு அலகுகளால் பூமியைக் கொத்தி தங்கள் உணவைத் தேடிக்கொண்டும் இருந்த காட்சி சோம்பேறி மனிதர்களுக்கு பாடம் கற்பிப்பதைப் போலிருந்தது. மரங்கொத்தி வேப்ப மரத்தைத் தன் அலகால் கொத்தி அவ்வப்போது தலையை அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தவண்ணம் துளையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தாய்ப் பறவை ஒன்று தன் குஞ்சுகளுக்கு அலகால் உணவூட்டிக்கொண்டு இருந்த காட்சி தாய்மையை வெளிப்படுத்தியது. வித விதமான பறவைகளின் "கீச்..கீச்" ஒலிகள் ஒன்று சேர்ந்து ஒரு ரம்மியமான சூழலை உருவாக்கியது.

அந்த வனத்தின் நடுவே ஓர் அற்புதமான மைதானம் அமைந்து இருந்தது அவ்வனத்திற்கே அழகு சேர்த்தது. மைதானத்தில் வீரர்கள் குழுமி இருக்க அவ்வீரர்களின் மத்தியில் வாள் சண்டை ஆரவாரத்தோடு நடந்து கொண்டிருந்தது. சண்டையின் இடையே கரகோஷங்களும் எழுந்தன. வாள்கள் ஒன்றோடு ஒன்று மோதிய ஒலி எட்டுத் திக்கும் ஒலிப்பது போலிருந்தது.

இளவரசன் ரவிவர்மன் புத்துணர்ச்சியோடு எதிராளியிடம் மோதிக் கொண்டிருந்தான். ரவிவர்மனின் முகத்தில் வியர்வைத் துளிகள் வழிந்து கொண்டிருந்தன. அவன் எதிராளியை வீழ்த்துவதிலேயே முழு கவனம் செலுத்தினான். அவனுடைய பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் புலியிடம் மாட்டிய மானைப் போல் எதிராளி வெகு சீக்கிரமே அடிபணிந்து விட்டான். எதிராளி தரையில் வீழ்ந்தான்.

சுற்றி நின்ற இளவரசனின் நண்பர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். இளவரசனின் மனது, 'வீழ்ந்தவன் இடத்தில் சம்யுக்தன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்' என்று எண்ணிப் பார்த்தது. உடனே, அவனுள் ஒரு புது உணர்ச்சி எழுந்தது. அவனையறியாமல் அவன் கையிலிருந்த வாள் எதிராளியின் நெஞ்சை மெதுவாக அழுத்தியது.

கீழே வீழ்ந்திருந்தவன் "இளவரசே!" என்று பயத்தில் அலறினான்.

அந்த அலறலைக் கேட்ட இளவரசன், அவன் மனதை ஆட்டி வைத்த மாய பிம்பத்திடமிருந்து தப்பித்து தன் கட்டுப்பாட்டிற்குள் நுழைந்து கொண்டான். வாளை வேகமாக விலக்கி தான் செய்த தவற்றிற்கு மன்னிப்புக் கோரும் தொனியில் அவனைப் பார்த்தான்.

கீழே வீழ்ந்திருந்தவன், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தவனைக் காப்பாற்றிக் கரையில் விட்டது போல ஒரு பய மூச்சை விடுவித்துக்கொண்டே எழுந்து நின்று, வாள் பட்ட இடத்தைப் பார்த்தான். ஒரு சிறு கீறல் அவன் நெஞ்சில் துளி ரத்தத்தை வரவழைத்திருந்தது.

அதைக் கையால் துடைத்துக்கொண்டே இன்னும் பயமூச்சு அடங்காமல் இளவரசனை நோக்கி, "என்ன ஆயிற்று உங்களுக்கு? நான் மட்டும் அலறாமல் இருந்திருந்தால் இந்நேரம் வாளை என் நெஞ்சில் இறக்கி இருப்பீர்கள்" என்று கூறினான்.

இளவரசனோ அவனைப் பார்க்காமல் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் ஒரு மெல்லிய அமைதி அங்கு நிலவியது. காற்று கூட வீசுவதை நிறுத்தி விட்டது போலிருந்தது அவ்வமைதி.

இளவரசன் ரவிவர்மன் வாளின் நுனியில் தன் விரலை வைத்து மெதுவாக அழுத்தினான். அந்தக் கூர்மை அவனுக்கு வலியை உண்டாக்கியது. இருந்தும் அவனுக்கு ஏனோ அது பிடித்திருந்தது. முகத்தை மெதுவாகத் திருப்பி தன் நண்பர்களைப் பார்த்தான். அனைவரின் கண்களும் இளவரசனையே துளைத்தன.

தன்னால் காயப்பட்ட நண்பனைப் பார்த்து தாழ்ந்த குரலில் "மன்னித்துவிடு நண்பா! என்னையுமறியாமல் தவறு நிகழ்ந்து விட்டது." என்று கூறினான்.

"என்ன இளவரசே! மன்னிப்பு என்ற வார்த்தையெல்லாம் உபயோகிக்கிறீர்கள். சண்டையிடும்போது உணர்ச்சி வசப்படுவது இயல்பு தானே"

இளவரசன் ஒரு சோகப் புன்னகையை பதிலாக்கினான். "இன்றைக்குப் பயிற்சி போதும் என்று நினைக்கிறேன். நாளை தொடரலாம். நீங்கள் செல்லுங்கள்" என்று கூறினான்.

"நீங்கள் எங்களுடன் வரவில்லையா" .

"இல்லை, நான் சற்று நேரம் தனிமையில் இருக்க விரும்புகிறேன். நீங்கள் செல்லலாம்"

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறே இளவரசனின் நண்பர்கள் அங்கிருந்து சென்றார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.