(Reading time: 32 - 63 minutes)

கார்  கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுக் கொண்டிருந்தது.. கார் முட்டுக்காடு அருகே வரவும், அங்கே உள்ள சின்ன ஏரியில் படகுகளில் சிலர் சவாரி செய்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த அவள், “ஹை போட்டிங்.. நாமலும் போட்டிங் போலாமா? நான் இதுவரைக்கும் போட்டிங் போனதே இல்லை.. யமுனாவாச்சும் ஸ்கூல் டூர் அப்போ ஊட்டிக்கு போய் போட்டிங் போயிருக்கா..  ஆனா குன்னூர்ல தான் இருந்திருக்கேன், இருந்தும் இன்னும் ஊட்டி லேக்ல போட்டிங் போனதில்ல.. போவோமா ப்ளீஸ்” என்று கேட்டாள்.

“போட்டிங் தான கண்டிப்பா போகலாம்..” என்றவன் அந்த இடத்திற்கு சென்று காரை நிறுத்தினான். பின் இருவரும் ஒன்றுக்கு இரண்டு முறை பெடலிங் படகில் சவாரி செய்தனர். பின் கூட்டமாக மக்கள் செல்லும் படகில் செல்லலாம் என்று கங்கா கூறினாள்..

“அதான் தனியா போனோமே.. இதுல எதுக்கு?” என்று அவன் கேட்டதற்கு,

“போலாம்ப்பா.. ப்ளீஸ்” என்று கெஞ்சினாள். சரி என்று அவனும் ஒத்துக் கொண்டான்.

அந்த படகில் ஏறிய பின், படகு கிளம்பியதும், அங்கிருந்தவர்களிடம்.. “ஃப்ரண்ட்ஸ்.. இதோ என்கூட இருக்காரே, இன்னைக்கு அவருக்கு பிறந்தநாள்.. உங்கக் கூட இங்கத்தான் கேக் வெட்டப் போறாரு.. எல்லோரும் அவருக்கு வாழ்த்து சொல்லுங்க” என்று கையோடு எடுத்து வந்த அந்த பெரிய கைப்பையில் இருந்து ஒரு கேக் பாக்ஸை எடுத்தாள்.

திடீரென அவள் செய்த செயலில் அதிர்ந்தவன், “அய்யோ கங்கா.. எதுக்கு இப்ப இதெல்லாம்? அதெல்லாம் வேண்டாம்” என்பதற்குள், அங்கிருந்தவர்களெல்லாம் வாழ்த்து சொன்னார்கள். அவனும் சிரிப்போடு அவர்கள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டவன், கண்ணாலேயே இதெல்லாம் வேண்டாம் என்று ஜாடை காட்டினான்.

“உங்க ஃபார்ம் ஹவுஸ்க்கு போனதும் கேக் வெட்டி உங்க பர்த்டேவ கொண்டாடலாம்னு நினைச்சேன்.. ஆனா இந்த இடத்துலேயே கொண்டாடலாம்னு இப்போ தான் தோனுச்சு.. என்ன கேக் தான் கிரீம் இல்லாத ரொம்ப சிம்பிளான கேக்” என்றவள், அந்த கேக்கை அங்கிருந்த ஒரு இருக்கையில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி, அவனிடம் கத்தியை கொடுத்து வெட்ட சொன்னாள்.

அதற்குள் மற்றவர்களும் அவர்களுடன் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள தயாராக, வேறு வழியில்லாமல் மெழுகு வர்த்தியை ஊதினான். பின் கேக் வெட்டும் போது, அவள் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாட, மற்றவர்களும் பாடினார்கள். அப்போது அந்த பாடலோடு சேர்த்து அவனது பெயரை உச்சரித்ததை குறித்து வைத்துக் கொண்டான்.

கேக்கை வெட்டி அவளுக்கு அவன் ஊட்ட, அவளும் அவனுக்கு ஊட்டிவிட்டாள். பின் மீதியை மற்றவர்களுக்கு அவள் பகிர்ந்துக் கொடுக்க, அதற்குள் படகு சவாரியும் முடிவுக்கு வந்தது.. அங்கிருந்தவர்களுக்கு இருவரும் நன்றியை தெரிவித்து விட்டு புறப்பட்டனர்.

“இந்த வருஷம் இப்படி நான் பிறந்தநாளை கொண்டாடுவேன்னு நிஜமா எதிர்பார்க்கல கங்கா, உண்மையிலேயே இது கனவா நிஜமான்னு இன்னும் நம்ப முடியல” என்று அவன் தன் உண்மை நிலையை கூறிய போது,

“அய்யோ இதெல்லாம் உண்மை தான் நம்புங்க” என்றவள், அவன் கையை நறுக்கென்று கிள்ளினாள். எதிர்பாராத அந்த செயலில் அவன் வலியால் முகம் சுளிக்க,

“ம்ம் வலிக்குதுல்ல.. அப்போ உண்மை தான்..” என்று சொல்லிவிட்டு அவள் சிரிக்க, அவனுக்கும் சிரிப்பு வந்தது.

அத்தோடு அவள் விடவில்லை, திரும்ப காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, கடற்கரையை பார்த்துவிட்டு அங்கும் போகலாமா? என்றுக் கேட்டாள். ஆனால் இப்போதே மதிய நேரத்தை நெருங்கியாகிவிட்டது.. அதனால் பண்ணை வீட்டிற்கு முதலில் சென்று அங்கு சாப்பிட்டதும், பிறகு கடற்கரைக்கு வரலாம் என்று அவன் சொல்லிவிட்டு, நேராக பண்ணை வீட்டிற்கு காரை கொண்டு சென்றான்.

உண்மையிலேயே அவள் பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டுமென்று கேட்டபோது,  ஒருநாளாவது அவளுடன் நேரத்தை செலவிட வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்பட்டான்.. காலையில் கோவில், அதன்பின் ஷாப்பிங், பின் நேராக பண்ணை வீட்டிற்கு செல்ல வேண்டும், மாலை வரை அவளுடன் அங்கே நேரத்தை செலவிட்டதும் விரைவில் வீட்டுக்கு கிளம்பிட வேண்டும்.. இது தான் அவன் திட்டமிட்டது.. ஆனால் இவன் கேட்டதற்காக வருவதாக சொன்னவள், ஒருநாள் முழுதும் எந்தவித தயக்கமுமில்லாமல் இவனுடன் இருப்பாளா? பண்ணை வீடு என்று சொன்னதால், வேறு மாதிரி ஏதாவது அர்த்தம் புரிந்துக் கொள்வாளோ? என்றெல்லாம் கங்கா வீட்டிற்கு வரும்வரை அவன் யோசித்தப்படி வந்தான்..  இன்று திட்டமிட்டதில் கொஞ்சமாவது அவள் சங்கடத்தை உணர்ந்தாலும், உடனே அவளை திரும்ப விட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்றெல்லாம் அவன் முடிவு செய்திருந்தான்.

ஆனால் கங்காவோ அவன் யோசித்ததற்கு முற்றிலும் மாறுதலாக நடந்துக் கொண்டதும் இல்லாமல், அவன் ஆசையை ஒரேநாளில் அவனே நினைக்காத அளவுக்கு நிறைவேற்றியதை அவனால் நம்பவே முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.