(Reading time: 29 - 57 minutes)

தர் ஜெர்மன் அவரது சுற்று பயணத்தை முடித்துவிட்டு ஒரு மாதத்திற்கு முன்பே குன்னூர் திரும்பியிருந்தார். அந்த விஷயமே ராதா அக்கா சொல்லி தான் கங்காவிற்கு தெரியும். ஒருநாள் யமுனாவை பார்க்க அவள் மருத்துவமனை சென்றிருந்த போது தான், ராதா அக்காவும் யமுனாவை பார்க்க வந்திருந்தார். சுடிதார் போட்டுக் கொண்டு கையில் பையோடு கல்லூரிக்கு செல்லும் பெண்ணாக பார்த்த அவளை இப்போது கழுத்தில் தாலியோடு புடவையில் பார்த்த ராதா அதிக அதிர்ச்சிக்கு உள்ளானாள்.. “என்னடி இது.. நீ எங்கேயோ வெளியூர்ல வேலை பார்க்கிறதா உன்னோட அத்தை சொன்னாங்க.. நீ என்னடான்னா இப்படி வந்து நிக்கற.. எப்போ கல்யாணம் ஆச்சு.. ஏன் எங்களுக்கெல்லாம் சொல்லல..” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் அவள்..

“அக்கா இப்போதைக்கு நான் எதுவும் சொல்ற நிலைமையில இல்லக்கா.. எனக்கு முக்கிய வேலை இருக்கு.. கண்டிப்பா உங்களுக்கு அப்புறம் நடந்ததை சொல்றேன் க்கா..” என்று கிளம்புவதில் கங்கா குறியாக இருந்தாள்.

“இங்கப்பாரு.. ஊருக்கு போன மதர் திரும்ப வந்துட்டாங்க.. வந்ததுமே விஷயத்தை கேள்விப்பட்டவங்க உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க.. ஆனா உன்னோட அத்தை மதர்க்கிட்ட உன் விஷயமா எதுவும் சொல்லல.. நீ மதரை மட்டுமாவது போய் பாரு..” என்று விஷயத்தை சொல்லிவிட்டு சென்றாள். கண்டிப்பாக யாரிடமும் ராதா அக்கா இவள் விஷயத்தை சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கை கங்காவிற்கு இருந்தது. ஆனால் கனகாவிடம் மட்டும் நடந்ததை அவள் கேட்டிருக்கிறாள். ராதா அக்காவிற்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டதில் இவளிடமும் கனகா கோபப்பட்டார். அதேபோல் மதரிடம் கண்டிப்பாக ராதா அக்கா சொல்லியிருப்பார். மற்றப்படி வேறு யாருக்கும் ராதா அக்கா மூலம் இவள் விஷயம் தெரிய வாய்ப்பில்லை.

இப்போது யமுனாவின் படிப்பு விஷயத்திற்கு மதர் மட்டுமே உதவ முடியும்.  படிப்பு மட்டுமல்ல, அவள் தங்குவதற்கும் ஏதாவது ஏற்பாடு செய்தால், தன் விஷயத்தை அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு கங்கா வந்திருந்தாள்.

ங்காவை பார்த்ததும் மதர் இன்முகத்தோடு வரவேற்றதிலேயே அவருக்கு அவளை பற்றி தெரிந்திருக்கிறது என்று புரிந்துக் கொண்டாள். அவரை பார்த்ததும் முதலில் அவரிடம் முட்டி போட்டு ஆசி வாங்கினாள்.

“காட் ப்ளஸ் மை சைல்ட்”

“எப்படி இருக்கீங்க மதர்..”

“எனக்கென்ன நான் ரொம்ப நல்லா இருக்கேன். ஆனா நான் இல்லாத கொஞ்ச நாளில் உன்னோட லைஃப் தான் அப்படியே சேஞ்ச் ஆகிடுச்சு.. வந்ததுமே எல்லாம் கேள்விப்பட்டேன். இங்க வந்தப்பிறகு தான் யமுனா விஷயம் எல்லாமே எனக்கு சொன்னாங்க.. முன்னாடியே எனக்கு தெரியப்படுத்தி இருந்தா நான் அங்க இருந்தே ஏதாவது ஏற்பாடு செஞ்சுருப்பேன்.. சரி அதைவிடு, இப்போ தான் யமுனாக்கு நல்லப்படியா ஆபரேஷன் முடிஞ்சிடுச்சே..”

ஆமா யமுனா எப்படி இருக்கா.. அவளை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்தப்ப, அவ டிஸ்சார்ஜ் ஆகியிருந்தா.. இப்போ உடம்பு பரவாயில்லையா அவளுக்கு..”

“அவ நல்லா தான் இருக்கா மதர்.. உடம்பும் பரவாயில்லாம தான் இருக்கு..

“வெரிகுட்.. ஆமா அவ எக்ஸாம் எழுதினாளா? எழுதியிருந்தா ரிசல்ட் வந்திருக்குமே?  மார்க் எப்படி எடுத்திருக்கா..”

“1010 மார்க் எடுத்துருக்கா மதர்..”

“உடம்பு முடியாத சமயத்திலும் நல்லா படிச்சு மார்க் எடுத்திருக்கா.. ஆமா அடுத்து அவ என்ன படிக்கப் போறளாம்..”

“அவளுக்கு டீச்சர் ஆகனும்னு தான் ஆசை மதர்.. அதுக்கு முன்ன ஏதாவது ஒரு டிகிரி முடிக்கனும்..”

“வெரிகுட்.. அக்கா தங்கச்சி ரெண்டுப்பேரும் டீச்சர் தானா? கங்கா நீ உன்னோட எக்ஸாம் எப்படி பண்ண? இந்த திடீர் கல்யாணம் எதுக்காக? உன்னோட ஹஸ்பண்ட் என்ன பண்றாரு.. யமுனா ஆபரேஷன்க்கு எப்படி பணம் கிடைச்சுது.. உன்னோட கல்யாணம் நடந்தததே தங்கச்சி ஆபரேஷன்க்காக இருக்கும்னு ராதா சொல்றா.. கங்கா  உன்னோட மேரேஜ் லைஃப் ஹாப்பியா தான இருக்கு.. உன்னோட அத்தைக்கிட்ட கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்க.. இப்போ திடீர்னு அந்த வீட்டையும் காலி பண்ணியாச்சு.. உனக்கு எல்லாமே நல்லதா தானே நடக்குது மை சைல்ட்.. சொல்லும்மா..”

“மதர் என்கிட்ட எதுவும் கேக்காதீங்க.. இப்போ நான் என்னைப்பத்தி எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கேன். நான் ஏதாவது தப்பு செஞ்சிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா மதர்?”

“ஏன் இப்படியெல்லாம் பேசற கங்கா.. நீ எந்த காலத்திலும் தப்பா நடந்துக்க மாட்ட..”

“ரொம்ப தேங்க்ஸ் மதர்.. உங்க கேள்விக்கெல்லாம் இப்போ என்கிட்ட எந்த பதிலும் இல்ல மதர்.. நான் இப்போ உங்கக்கிட்ட கேக்க வந்தது யமுனாக்காக தான்.. அவளுக்கு படிப்பு வேணும் மதர்.. அவ நல்லா படிச்சு அவ நல்லப்படியா வாழ்க்கையில செட்டில் ஆகனும்.. இப்போ அவளை படிக்க வைக்கிற நிலைமையில் நான் இல்ல மதர்.. அவளுக்கு நீங்க தான் உதவனும்.. இப்போ அவளுக்கு படிப்பும், அப்படியே தங்கறதுக்கு ஒரு இடமும் வேணும் மதர்.. உங்களால உதவ முடியுமா?”

“கங்கா உனக்கு என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லும்மா..”

“ப்ளீஸ் மதர் என்கிட்ட எதுவும் கேக்காதீங்க ப்ளீஸ்” சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

“கங்கா.. ஏன் இப்போ அழற.. எப்பவும் கர்த்தர் உனக்கு துணையா இருப்பார் மை சைல்ட்.. அழறத நிறுத்து.. இப்போ என்ன யமுனா படிப்பு தானே, அது முழுக்க என்னோட பொறுப்பு.. நீ இப்போ கரெக்ட் டைம்க்கு தான் வந்திருக்க கங்கா.. நாளைக்கு நீ வந்திருந்தா கூட என்னை பார்த்திருக்க முடியாது. அதேபோல நானும் உன்னை பார்க்க முடியாமலேயே ஊருக்கு போகனுமோன்னு நினைச்சேன்.. ஆனா அதுக்குள்ள நீயே வந்துட்ட..”

“ஊருக்கா.. எந்த ஊருக்கு மதர்..”

“நான் சென்னைக்கு போறேன் கங்கா.. அங்க எங்க ட்ரஸ்ட் நடத்தும் ஆசரமத்து பொறுப்பை ஏத்துக்க போறேன். அந்த ஆசிரமத்தோடவே பக்கத்துல ஸ்கூல், காலேஜ் எல்லாம் இருக்கு.. அங்க ஆதரவில்லாதவங்க மட்டுமில்லாம, ரொம்ப கஷ்டப்பட்ற பேரண்ட்ஸோட  பிள்ளைங்களையும் அங்க தங்க வச்சு அவங்களை படிக்க வைக்கிறோம். அவங்களுக்கு ஸ்காலர்ஷிப் ல்லாம் அரேஞ் பண்ணி கொடுக்கிறோம். அதனால யமுனாவும் அங்க தங்கி தாராளமா படிக்கலாம்..”

“மதர்.. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி மதர்.. இந்த உதவியை காலத்துக்கும் மறக்க மாட்டேன்.. மதர் நீங்க உங்கக் கூடவே யமுனாவையும் இன்னைக்கே அழைச்சிட்டு போறீங்களா மதர்..”

“கங்கா.. உனக்கு ஏதும் பெரிய பிரச்சனையா மை சைல்ட்.. கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற, ஆமாம் நீ எங்க இருப்ப.. உன்னோட ஹஸ்பண்ட் வீட்ல தான் இருப்பியா? இல்ல ஏதாவது பிரச்சனைன்னா நீயும் அங்க சென்னைக்கே வந்துட்றியா ம்மா..”

பேசாமல் மதரோடு சென்றுவிடலாமா? என்று தான் கங்காவுக்கும் தோன்றியது.. ஆனால் இவ்வளவு கேட்டும் மதரிடம் எதுவும் சொல்லாமல் அவரோடு செல்ல குற்ற உணர்வு தடுத்தது. இதில் இன்னும் யமுனாவையும் சமாளிக்க வேண்டும். எத்தனை நாள் அவள் எதுவும் கேட்காமல் அமைதியாக இருப்பாள். இவளது திருமணத்தைப் பற்றி ஒருநாள் கேட்டால் என்ன சொல்வதென்று கூட எதுவும் யோசிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் யமுனா முதலில் கல்லூரியில் சேரட்டும்.. இவளுக்கும் ஏதாவது ஒரு வேலை கிடைக்கட்டும் பிறகு யமுனாவிடம் உணமையை சொல்லலாமா? என்று யோசிக்கலாம் என்று முடுவெடுத்தவளாக இப்போது யமுனாவை மட்டும் அழைத்துச் செல்லுமாறு மதரிடம் கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.