(Reading time: 13 - 26 minutes)

"வசந்த் உண்மையிலேயே அமேலியாவை லவ் பண்ணுறான்னு நினைக்கிறியா?" என்று கேட்டாள் ஜெஸிகா.

"ஆமா"

"அவனுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா?"

"காதல் பைத்தியம்"

"இந்த காதல் எப்படி நிறைவேறும்?"

"அது தான் காதல்"

"பைத்தியக்காரத்தனம்"

"உன்ன போல ஆட்களுக்கு இதெல்லாம் புரியாது"

அமேலியாவின் சந்தோசம் பன்மடங்கு எகிறியது. அவளது ஆடை முழுவதும் நனைந்திருந்தாலும் அவளுக்கு குளிரவில்லை. அந்தளவு அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்.

பின்னர், கடல் உணவுகளை தயாரிக்கும் ஹோட்டலுக்கு சென்று மதிய உணவை சாப்பிட்டார்கள். அதன் பின்னர் சிறிது நேரம் மரத்தடியில் ஓய்வு, மாலை நேரத்தில் மீன்களை பிடிப்பது என அந்த நாள் சந்தோசமாக கழிந்தது.

மீண்டும் ரிஸார்ட்டிற்கு திரும்ப மணி பத்து ஆனது. உடல் முழுவதும் களைப்பாலும் வலியாலும் சூழப்பட்டிருந்தது. பேசுவதற்கு கூட நேரமில்லாமல் படுத்து உறங்க தொடங்கினார்கள்.  

அமேலியா மட்டும் அந்த இரவு வேளையில் விழித்துக்கொண்டிருந்தாள். அன்று நடந்த விஷயங்களை நினைவலைகளாக ஓட்டி மகிழ்ச்சியடைந்தாள். அவளையும் அறியாமல் இதழ்கள் புன்னகை சிந்தின.

விடியற்காலை ஐந்து மணிக்கு வசந்திற்கு விழிப்பு வந்தது. நீண்ட நாட்கள் கழித்து நல்ல நிம்மதியான தூக்கம். உடலை முறுக்கிக்கொண்டே மெல்ல எழுந்தவன், அமேலியாவை கண்டான். 'இவளுக்கு தூக்கமே வராதா எப்பவும் ஜன்னல் ஓரத்திலேயே பேய் மாதிரி நின்னுட்டு இருக்கா' என்று எண்ணியபடி அவளருகில் சென்றான்.

திடீரென பின்னால் ஓர் உருவம் வந்து நின்றதைக் கண்டு திடுக்கிட்டாள் அமேலியா.

"ரிலாக்ஸ். நான் தான்"

அமேலியாவின் முகம் கலவரமானது.

"உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும். வெளியே வா. ஒரு வாக்கிங் போய்கிட்டே பேசலாம்"

அமேலியாவிற்கு புரியவில்லை.  

"என்னோடு வா" என்று சைகையில் அழைத்தபடி வெளியில் செல்வதற்கு ஷூ மாட்டினான்.

அமேலியா தயக்கத்தோடு நின்றாள்.

"என்ன மரம் மாதிரி நின்னுட்டு இருக்க? வா"

அவன் வற்புறுத்தி அழைத்ததாலும் வேறு வழியில்லாததாலும் அவனோடு சென்றாள் அமேலியா.

இன்னும் முழுவதுமாக பகல் நெருங்காத காலைப் பொழுது. சில்லிடும் பனி இன்னும் சிதறிக்கொண்டிருந்தது. மனித நடமாட்டமும் அவ்வளவாக இல்லாத வேளை. சாலையின் இரு பக்கங்களிலும் புற்களும் மரங்களும் நிறைந்திருந்தன. சுவாசிப்பதற்கு இதமான காற்று. இன்னும் நிலா வானில் மிதந்துகொண்டிருந்தது. குளிர் சற்று அதிகம். ஆனாலும் பிடித்திருந்தது.

அந்த அமைதியான அழகான சாலையில் இருவரும் நடந்து சென்றனர். வசந்தின் கையில் நோட்டு புத்தகம். எதற்காக இவன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறான் என்ற சந்தேகம் அமேலியாவிற்கு. அவள் மனம் சந்தேகத்தை தூர வைத்துவிட்டு இயற்கையை நாடியது. தான் கண்ட உலகில் இது போல் காட்சிகளில்லை என நினைத்தாள் அமேலியா.

வழியில் சின்ன காபி பார் ஒன்று வசந்தின் கண்களில் தென்பட அமேலியாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். அந்த கடையின் பெயர் வித்தியாசமாக ஐ லவ் யூ என இருந்தது.

"வெல்கம் சார்! ஐ லவ் யூ காபி பாருக்கு உங்களை வரவேற்கிறேன்"  என்றாள் அந்த நடுத்தர வயது குண்டு பெண்.

"இரண்டு காபி கொடுங்க" 

ஐ லவ் யூ என்ற வாக்கியம் மரியாதை நிமித்தமாக சொல்லப்படுவது போலும் என எண்ணினாள் அமேலியா. முன் பின் அறிமுகமில்லாத இந்த வயதான பெண்மணியே சொல்கிறாள் என்றால் நிச்சயம் அது நல்ல வார்த்தையாகத்தான் இருக்கவேண்டும் என நினைத்தாள்.

வசந்த் காபி கப்பை அமேலியாவிடம் திணித்தான். அவள் மரியாதை நிமித்தமாக ஐ லவ் யூ என்றாள். வசந்த் அதிர்ச்சியடைந்தான். பின்பு, நடந்தவற்றை ஊகித்தபோது அவனுக்கு உண்மை புலப்பட்டது. புன்னகை புரிந்தான்.  

காபிக்கான தொகையை செலுத்திக்கொண்டிருக்கும்போது இளம் வயது பெண் அங்கு வந்து நின்றாள். ஜாகிங் செய்திருந்த களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது. யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தது போல் சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள்.

அவளை விட சற்று மூத்தவனாக இருக்கலாம், வாலிப பருவத்தை விட்டு நடுத்தர வயதை நெருங்கக் கூடிய ஆண், வேலை செய்ய விருப்பப்பாடாதவன் போல தொந்தியை வளர்த்து வைத்திருந்தான். "ஓ டியர் இன்னைக்கும் நீ தான் ஜெயிச்ச" என்று சலிப்போடு அவளை அணைத்து ஐ லவ் யூ என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.