(Reading time: 54 - 107 minutes)

ன்ன விஜி.. இன்னைக்கு நைட் யமுனா இங்க இருக்கறதுல என்னாகிடப் போகுது..”

‘என்ன அண்ணி புரிஞ்சு தான் பேசறீங்களா? ரெண்டுப்பேரும் புதுசா கல்யாணம் ஆனவங்க.. நம்ம கங்கா காணாம போய், அதுக்கு காரணம் நம்ம செல்வான்னு தெரிஞ்சு, ஒருப்பக்கம் நம்ம நர்மதா கோபப்பட்டு, இன்னொரு பக்கம் அக்கா காணாம போனான்னு யமுனாவும், தோழின்னு தேடி அலைஞ்ச இளங்கோன்னு, எல்லோருமே ஒருமாதிரி மனக்கஷ்டத்துல இருந்து, நம்ம ராஜா கங்கா சேர்ந்ததும், சடங்கு, பார்டின்னு எல்லாத்துக்கும் வேலைப் பார்த்து, இன்னிக்கு நம்ம  வீட்டுக்கு கங்கா வந்தாச்சு.. இந்த நேரம் நம்ம ராஜாவும் கங்காவும் ஒன்னா இருக்கறப்போ, புதுசா கல்யாணம் ஆகியிருக்க, நம்ம செல்வாவையும் இளங்கோவையும் பத்தி யோசிச்சீங்களா? இந்த நேரம் பொண்டாட்டி கூட இருக்கணும்னு நினைக்க மாட்டாங்களா? இது நர்மதா, யமுனாவுக்கு தான் தெரியலன்னா, நீங்களும் புரிஞ்சிக்காம யமுனாவை இருக்கச் சொல்றீங்களே..?”

“அட ஆமாம்.. இது எனக்கு தெரியலப் பாரு.. இதுக்கு தான் விஜி வேணும்னு சொல்றது.. கொஞ்ச நாள் நீ முடியாம படுத்திருந்தப்போ எனக்கு ஒரு கையே உடைஞ்சு போச்சு போ.. இப்போ உன்னை நல்லா பார்க்கப்போ தான் மனசுக்கு சந்தோஷமா இருக்கு..”

“ஆனா இப்போ தான் எனக்கு குற்ற உணர்வா இருக்கு அண்ணி.. உங்க தம்பி கங்காக்கு என்ன செய்ய நினைச்சாருன்னு பார்த்தீங்கல்ல.. சாகும்போது கூட உண்மையை சொல்லலையே.. அப்படி என்ன ஜாதி வெறி அண்ணி.. தப்பெல்லாம் அவர் மேல இருக்குன்னு தெரியாம நான் கங்காவை என்னல்லாம் பேசியிருக்கேன்.. ஆனா நடந்ததையெல்லாம் மறந்துட்டு கங்கா அம்மா அம்மான்னு சொல்றப்பல்லாம் எனக்கு என்ன நினைச்சாலே அசிங்கமா இருக்கு அண்ணி.

போன ஜென்மத்துல நாங்க என்ன பாவம் செஞ்சோமோ எங்களுக்குன்னு ஒரு குழந்தை கூட இல்ல.. இதுல இப்போ அவர் மனசார கங்காவுக்கு செஞ்சதுக்கு இன்னும் அடுத்த ஜென்மத்துக்கும் சேர்த்து அனுபவிக்க போறோம்..”

“அதையே நினைச்சு கவலைப்படாத விஜி.. அண்ணாமலை உனக்கு மட்டும் தான் புருஷனா.. எனக்கும் தான் தம்பி.. உயிரோடு இல்லாதவனை பத்தி பேசி என்ன ஆகப் போகுது.. அவன் கெட்டதை நினைச்சு செஞ்சாலும், அதுலயும் ஒரு நல்லதுன்னா அது கங்கா நமக்கு மருமகளா கிடைச்சது தான்.. நம்ம ராஜாவை. நினைச்சு எவ்வளவு கஷ்டப்பட்டோம்.. இப்போ மனசுக்கு எத்தனை நிம்மதியா இருக்கு.. கங்காவுக்கும் நம்ம ராஜாக்கும் கடவுள் நல்லா இறுக்கமா முடி போட்டு வச்சிருக்கார்.. அதான் இவ்வளவு நடந்த பிறகும், கங்கா ராஜா கூட சேர்ந்திருக்கா..”

“சரியா சொன்னீங்க அண்ணி.. சரி வாங்க 3 பேரும் என்ன செய்றாங்கன்னு பார்ப்போம்..” என்று இருவரும் அங்கே சென்றார்கள்.

அறையை தான் அலங்கரிக்கக் கூடாது, ஆனால் உங்களை அலங்கரித்து தான் அனுப்புவோம் என்று கங்காவை இழுத்து பிடிச்சு உட்கார வைத்து அலங்கரித்துக் கொண்டிருந்தனர் நர்மதாவும் கங்காவும், இதில் அங்கே வந்த கோமதியும் விஜியும் வேறு அவளுக்கு நகையெல்லாம் பூட்ட சொன்னார்கள். அவள் வேண்டாமென்று மறுத்தாலும் அவர்கள் கேட்பதாயில்லை. அவர்கள் பேச்சை கேட்கக் கூடாது என்று எதுவும் இல்லை. ஆனால் இந்த சூழ்நிலை அவளுக்கு ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது. ஏனென்று தெரியவில்லை. இந்த நேரம் அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்..  ஆனால் மனதில் மகிழ்ச்சியை விட இறுக்கமே சூழ்ந்திருந்தது. ஆனால் மற்றவர்களிடம் அதை கங்கா வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. மற்றவர்களுக்கும் அது புரியவில்லை. நால்வரோடு சேர்ந்து இன்னும் வாணியும் உடன் சேர அங்கே சிரிப்பும் பேச்சுமாக பொழுது போனது.

“யமுனா இளங்கோ இன்னுமா வரல..?” கோமதி கேட்க,

“தெரியல அத்தை.. நான் போன் செஞ்சு பார்க்கிறேன்..” என்றாள்.

“இதுக்கு மேல இளங்கோ வந்து நீ  கிளம்ப லேட்டாகும்.. அதனால ட்ரைவரை கொண்டு போய் விடச் சொல்லு..” என்றவர்

“ வாணி ட்ரைவரை கூப்பிடு.. யமுனாவை பத்திரமா கூட்டிட்டு போய் விட சொல்வோம்..” என்ற கோமதியிடம்,

“அம்மா அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், நீங்களும் விஜிம்மாவும் போய் படுங்க.. நேரமாகுது பாருங்க.. நான் இங்க இருந்து எல்லாம் பார்த்துக்கிறேன்..” என்ற கூறிய வாணியோடு சேர்ந்து மூன்று பெண்களும் அதையே தான் கூறினர். அதை ஆமோதித்த பெரியவர்கள் தங்களது அறைக்குச் சென்றனர்.

“சரி நான் ட்ரைவர் கிட்ட போய் சொல்லிட்டு வரேன்.. நீ ரெடியா இரு யமுனா..” என்று சொல்லிவிட்டு வாணி சென்றுவிட,

“நான் இன்னைக்கு நைட் இங்கேயே இருக்கேன்னு சொன்னா யாருமே கேக்க மாட்டேங்குறாங்க க்கா..” என்று யமுனா கங்காவிடம் செல்லம் கொஞ்சினாள்.

“என்னது இன்னைக்கு நைட் இங்க இருக்கப் போறீயா எதுக்கு? யமுனா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஞாபகம் இருக்கா? இல்லையா? இந்த பத்து நாளில் நீ நிறைய நாள் அங்க என்கூட தான் இருந்த.. இன்னும் எதுக்கு இங்க இருக்கணும்.. நீ இளங்கோ கூட நல்லப்படியா தானே வாழற..” ஒரு அக்காவாக தங்கையை குறித்து கவலையோடு கேட்டாள்.

அப்போது தான் யமுனாவிற்கு மண்டைக்குள் பல்பு எரிந்தது. அக்காவையும் நர்மதாவையும் பிரிந்திருந்தவள், இப்போது சில நாட்களாக அவர்களோடு இருக்கும் சந்தர்ப்பம் அமைந்ததால், இன்றும் நர்மதாவோடு இருக்கலாம் என்று நினைத்து தான் கேட்டாள். ஆனால் இதில் இப்படிப்பட்ட கேள்விகள் வரும் என்று அவள் நினைக்கவில்லை. அக்காவுக்காக என்று இத்தனை நாள் இளங்கோவை விட்டு  விலகியிருந்தாள் தான், ஆனால் இப்போது ஒரு பெண்ணாக  அவளாகவே கணவனை நெருங்க அவளுக்கு தயக்கமாக இருந்தது. இத்தனை நாள் இன்று அக்காவோடு இருக்கிறேன் என்று சொன்னால் சரி எனும் கணவன், இன்று அவளை வீட்டிற்கு அழைத்ததற்கான காரணமும் புரிந்தது. அதில் அவளது முகத்தில் வெட்கத்தின் சாயல்,

“என்னடி புதுசா வெட்கமெல்லாம் பட்ற..?” அவள் முக மாற்றத்தை பார்த்து நர்மதா கேளியாக கேட்டாள்.

“நான் சாதாரணமா தான் இருக்கேன் நர்மதா..” என்றவள், “நான் சும்மா தான் இங்க தங்கறேன்னு சொல்லிட்டு இருந்தேன் க்கா.. சரி இளன்கிட்ட நானே வர்றதா சொல்லிட்டேன்.. அவர் எனக்காக வெய்ட் பண்ணுவார்.. வரட்டுமா..” என்று கேட்கவும், வாணியும் வந்து வண்டி தயாராகிவிட்டது என்று கூறினார். உடனே அவளும் மூவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள். இதுவரை எப்படியோ, இப்போது அவள் செல்வதை பார்த்தால், இனி அவள் கணவனுடன் நல்லபடியாக வாழ்வாள் என்ற நம்பிக்கை கங்காவிற்கு இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.