தொடர்கதை - நல்ல முடிவு - 08 - ரவை
மாலை ஆறரை மணிக்கு செட்டியாரின் ரூமிலேயே ஐவரும் கூடினர்.
சூடாக காபி குடித்தபின் செட்டியார் பேசினார்: " எனக்கு உங்க மனையும் அது இருக்கும் சுறுசுறுப்பான பகுதியும் என் கடையைத் துவக்கப் பொருத்தமாக இருக்கும். அதனாலே, எத்தனை விரைவாக, உங்களால் காலி செய்து தரமுடியும் என்பதை சொல்லுங்கள்!" " ரொம்ப மகிழ்ச்சி, எங்க மனை உங்க கடைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பது! எத்தனை விரைவில் தரமுடியுமோ அத்தனை சீக்கிரம் ஒப்படைக்கிறோம். அதற்கு ஒரு யோசனை சொல்கிறேன்.
அக்ரிமெண்டில், ஆறுமாத காலத்திற்குள் மனை காலி செய்து தரப்படவேண்டும் என எழுதினாலும், காலி செய்வதை விரைவுபடுத்த, ஊக்கத்தொகை அளிப்பது உதவும்......."
" நிச்சயம், நிரஞ்சன்! எனக்கு பணம் சற்று அதிகம் ஆனாலும் பரவாயில்லை. சொல்லுங்கள், நிரஞ்சன்!"
" ஆறுமாத முடிவில் மனை ஒப்படைக்கப்படும் போது, மொத்த விலை இருபது கோடியை கொடுத்து பத்திரம் பதிவு செய்யலாம்.
தவிர, இன்றுமுதல் ஒரு மாத காலத்துக்குள் தன் பிளாட்டை காலி செய்து தருபவர்களுக்கு ஐம்பது லட்ச ரூபாய் கொடுப்பதாக அறிவிப்போம். அதேபோல, இரண்டு மாதங்களுக்குள் காலி செய்தால், நாற்பது லட்சம் என்றும், மூன்று மாத காலத்தில் செய்வோருக்கு முப்பது லட்சமும், நான்கு மாதங்களில் செய்வோருக்கு இருபது லட்சமும், ஐந்துமாத காலத்தில் செய்வோருக்கு பத்து லட்சமும் ஊக்கத் தொகையாக தருவதாக அறிவிப்போம்.
முதல்மாத காலத்தில், என்னுடைய கணிப்பு, பத்து பிளாட் காலியாகிவிடும்.
இரண்டாவது மாத அவகாசத்தில் மேலும் ஐந்து பேர் காலி செய்யலாம்.
மூன்றாவது மாதம் முடிவதற்குள், கடைசி ஐந்து பிளாட்டுகளும் காலி யாகிவிடும்.
என்ன காரணம் எனில், ஊக்கத்தொகை அந்த அளவு கணிசமாயிருப்பது!
செட்டியார்! வாடகை குடித்தனக்காரனை கொஞ்சம் பணம் தந்துதான் விரட்டமுடியும், மூன்று மாத காலத்தில்!
அதனால், இந்த ஊக்கத் தொகையை கறுப்பு பணமாக தரவேண்டும். இறுதியில், தரும் இருபது கோடி, வெள்ளைப் பணமாக இருக்கட்டும்.
நாங்கள் இருபது பேரும் தங்களுக்கு அதிகபட்ச ஒத்துழைப்புத் தர தயங்கமாட்டோம்.
பெயருக்குத்தான், நீங்கள் வாங்குபவர், நாங்கள் விற்பவர்கள்! ஆனால், இந்த இடத்தில் நீங்கள் கடையை துவக்கம் ப்ராஜெக்டில், நாம் அனைவரும் ஒரே நோக்கம் கொண்டவர்கள்.
பிளாட்கள் இடிக்கும் பணியிலும், பின்னர் புதிய கட்டிடம் எழுப்பும் பணியிலும் எங்கள் உதவி முழுமையாக கிடைக்கும்.