(Reading time: 20 - 39 minutes)

07. என் இனியவளே - பாலா 

En Iniyavale

சிலை போல் நின்ற இனியாவிற்கு வந்தவரை போய் வரவேற்கும் எண்ணமே தோன்றவில்லை. கடைசியில் முன்னே தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த அபி தான் அந்த பெண்மணியை வரவேற்றாள்.

“வாங்க பாட்டி. நல்லா இருக்கீங்களா? நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா. அங்கிள் யாரும் வரலையா” என விசாரித்தாள்.

வந்தவர் இளவரசனின் தாய்.

இதற்குள் தன்னை சரிப்படுத்திக் கொண்ட இனியா சென்று “வாங்கம்மா. நல்லா இருக்கீங்களா” என்றாள்.

“நான் நல்ல இருக்கேன்மா. அன்னைக்கு நடந்த விசயத்துக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.”

“என்னம்மா, நீங்க வயசுல பெரியவங்க. நீங்க போய் என் கிட்ட மன்னிப்பு அப்படின்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க. எனக்கு கேட்கவே கஷ்டமா இருக்கு. இனி இப்படி ஒரு வார்த்தை சொல்லி என்னை கஷ்டபடுத்தாதீங்க.”

“இல்ல அன்னைக்கு நடந்த விசயத்துக்கு மன்னிப்புன்னு இல்லனாலும் வருத்தமாவது தெரிவிக்கறது தானே முறை. அதான். எனக்காக நீ அந்த விசயத்த மறந்துடணும்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இனியாவின் தாய் வெளியே வந்தார்.

இனியா அவள் தாயிற்கு இளவரசனின் தாயை அறிமுகப்படுத்தினாள். இனியாவின் தாயும் அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

வீட்டிற்குள் சென்றதும் இனியா அவரை அமர சொல்லிவிட்டு அவருக்காக காபி எடுத்து வர உள்ளே சென்றாள்.

அதற்குள் இனியாவின் தாய் ஜோதிக்கு இளவரசனின் தாய் ராஜலட்சுமியை அறிமுக படுத்தி வைத்தாள்.

அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ராஜலட்சுமி அவர்களின் தொழிலை பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் போது அரசன் குரூப் ஆப் கம்பெனி தங்களுடையது என்று சொல்லவும் ஜோதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெரியவர்கள் இருவருக்கும் ஜோதியின் சிரிப்பின் காரணம் தெரியவில்லை.

லட்சுமி தான் முந்திக்கொண்டு “என்ன ஜோதி, இப்ப எதுக்கு சிரிக்கிற. நீ இப்படி சிரிக்கறது பெரியவங்கள அவமதிக்கிற மாதிரி இல்ல இருக்கு. நீ எதுக்கு சிரிச்ச. அதுக்கு முதல்ல பதில் சொல்லு என்று விசாரித்தார்.”

ஜோதியின் முகம் ஒரு நிமிடம் கன்றியது. பிறகு அன்று அவர்களின் கடைக்கு சென்றிருந்த போது தங்கை அரசன் என்ற பெயரை கிண்டல் செய்தது நியாபகம் வந்தது என்று சொல்லி அரசனாம் யாருக்கம் எந்த நாட்டிற்காம்” என்று தங்கையை போல் சொல்லி காண்பித்துக் கொண்டிருக்கும் போது இனியா காபியுடன் உள்ளே வந்தாள்.

இனியாவின் தாயிற்கு தான் வந்தவர்கள் என்ன நினைப்பார்களோ. இந்த ஜோதி வேறு பைத்தியம் மாதிரி இனியா கூறியதை இப்படி சம்மந்த பட்டவர்களிடமே உடைப்பாள் என்று கவலையாக இருந்தது.

ஆனால் இனியாவை பார்த்த ராஜலட்சுமியோ அடக்க முடியாமல் சிரிக்கவும் தான் இனியாவின் தாயிற்கு நிம்மதியாக இருந்தது. மற்ற இருவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

இனியா வந்த போது மூவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இனியாவுடன் வந்த அபியும் எல்லோரும் சிரிப்பதை பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள். இனியாவிற்கு தான் என்னவென்றே புரியவில்லை.

“என்ன எல்லோரும் சிரிக்கிறீர்கள். என்ன விஷயம்” என்று பொதுவாக எல்லோரையும் பார்த்துக் கேட்டாள்.

யாரும் பதில் கூறாமல் இன்னும் அதிகமாக சிரித்தனர்.

இனியா ஜோதியிடம் திரும்பி, “என்ன அக்கா. ஏன் இப்படி சிரிக்கிறீர்கள். எனக்கும் சொன்னால் நானும் சிரிப்பேன் அல்லவா” என்றாள்.

“இல்லை இனியா. இதை சொன்னால் உன்னால் சிரிக்க இயலாது.” என்று கூறி விட்டு ஜோதி இன்னும் சிரிக்க ஆரம்பித்தாள்.

இனியா ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

ராஜலட்சுமியே சிரித்துக்கொண்டு “எந்த நாட்டுக்கு அரசன்னு சொல்லலாம் எங்க ஊரு திருநெல்வேலி பக்கம், அதனால திருநெல்வேலிக்கு அரசன்னு சொல்லலாமா, இல்ல இப்ப சென்னைல பரவலா எங்க கம்பெனி இருக்கு. சென்னைக்கே அரசன்னு சொல்லலாமா. சென்னைன்னு மட்டும் இல்ல இனியா, தமிழ்நாட்டுல மொத்த ஊருலயும் எங்க கம்பெனி இருக்கு என்றார் சிரித்துக்கொண்டே.

இனியா கண்ணை பெரிதாக்கி முழித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவள் தமக்கையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்றோ விளையாட்டை சொன்னதை இப்படியா மாட்டி விடுவார்கள் என்று அவள் மேல் கோபமாக வந்தது. ஆனால் என்ன செய்வது, ஒன்றும் செய்ய இயலாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

சிறுபிள்ளை தவறு செய்து விட்டு விழிப்பதை போல் நின்றுக்கொண்டிருந்த இனியாவை பார்க்க எதிரில் இருந்த அனைவருக்குமே சிரிப்பாக தான் வந்தது.

அதை மாற்றும் விதமாக ராஜலட்சுமி தான் “என்ன இனியா காபியை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் நின்றுக் கொண்டிருப்பாய். எங்களுக்கு தரும் உத்தேசம் இருக்கிறதா இல்லையா” எனக் கேட்டார்.

இனியாவும் அசடு வழிந்தவாறே “இதோ ஆன்ட்டி. இந்தாருங்கள் என்றுக் காபியை கொடுத்தாள்.”

அதற்குள் இனியாவின் தாய் அபியிடம் திரும்பி “அபி செல்லம் தாத்தா எங்கே என்று போய் பாருடா, அவரை காபி குடிக்க வர சொன்னேன்னு சொல்லு” என்றார்.

பிறகு, “ஆன்ட்டி. நான் அன்று ஏதோ விளையாட்டை பேசி விட்டேன் ஆன்ட்டி. அப்போது நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் ஆன்ட்டி” என்றாள்.

“என்னம்மா நீ. இதற்கு போய் வருத்தப் படுகிறாயே. நான் அதை எல்லாம் ஒன்றும் மனதில் வைத்துக் கொள்ளவில்லை.”

“இருந்தாலும்” என்று இனியா மறுபடியும் ஆரம்பிக்க,

“என்ன இருந்தாலும், இதை நீ மறந்து விடு. சரி தானா. இந்த சின்ன விஷயத்தை போய் பெரிது படுத்துவானேன். என் மகன்களும் இப்படி தான் எதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள் என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே போனவர்கள் சிறிது நிறுத்தி  ஆனால்  இப்போதெல்லாம் இப்படி எங்கள் வீட்டில் யாரும் உரையாடுவதே இல்லை தெரியுமா” என் வருத்தப்பட்டார்.

இனியாவிற்கு இதற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. மற்ற இருவருக்கும் அதே எண்ணம் தான்.

அதற்குள் ராஜலட்சுமியே தொடர்ந்தார்.

“இனியா நீ தான் எனக்கு உதவி செய்யனும். எனக்கு என்னவோ உன்னால தான் இந்த உதவியை செய்ய முடியும்னு தோணுது. செய்வாய் அல்லவா” என்றார்.

அதற்குள் இடையிட்ட இனியாவின் தாய் லட்சுமி “என்ன நீங்கள் அவளிடம் போய் உதவி என்ற பெரிய வார்த்தை எல்லாம் பேசுகிறீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அவள் தட்டாமல் செய்வாள். அதற்கு போய் எதற்கு இவ்வளவு பெரிய வார்த்தையை பேசுகிறீர்கள்.” என்று கூறிவிட்டு “நீங்கள் அவளிடம் ஏதும் தனியாக பேச வேண்டும் என்றால் இந்த அறைக்குள் போய் பேசுங்கள்” என்றார்.

“இல்லை, வேண்டாம். எனக்கு உங்களை எல்லாம் பார்த்தால் வேற்றாள் மாதிரியே தோன்றவில்லை. ஏதோ எனக்கு வேண்டியவர்கள் போல் தான் உணர்கிறேன். அதனால் நீங்கள் இருப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. அதோடு நான் ஒன்றும் பொக்கிச ரகசியத்தை பற்றி பேச போவதில்லை. என் குடும்ப பிரச்சினையை பற்றி கூறி அதில் இனியாவின் உதவியை தான் நாட போகிறேன் என்றார்.

 

“சரி ஆன்ட்டி. சொல்லுங்கள்” என்றாள் இனியா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.