(Reading time: 16 - 32 minutes)

08. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னியாவிற்கு அந்த பாடலை கேட்டுவிட்டு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. அந்த பாடல் எந்த திரைப்படம் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. தனக்காக தான் அந்த பாடலை வைத்துள்ளான் என்பது மட்டும் புரிந்தது. அவனை பார்த்தவாறே அமைதியாக இருந்தாள்.

இளவரசனுக்கு அவளின் முகத்தில் கோபம் இல்லாததே பெரிய விசயமாக இருந்தது. தம்பி வேறு இல்லாதது அவனுக்கு சாதகமாக தோன்றியது. அவள் திட்டினாலும் யாரும் இல்லாத போதே வாங்கி கொள்ளலாம் என்று எண்ணி அவளை நோக்கி சென்றான்.

“என்ன மேடம், என்னிடம் எல்லாம் பேச மாட்டீங்களா” என்றான்.

இனியாவிற்கு இப்போதும் இவனிடம் எப்படி சாதரணமாக பேசுவது என்று புரியவில்லை. ஸ்வேதாவின் பேச்சு கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது. அவனும் அதன் பின்பு அதை பற்றி பேசவில்லை. தானாக அதை பற்றி பேச வாய்ப்பும் ஏற்படவில்லை. அதற்காக அதை விடவும் இயலாது. தன் அத்தான் அவளை தன் தங்கையாக நினைப்பது அவளுக்கு தெரியும். எனவே எப்படி அவளை விட்டு கொடுத்துவிட்டு இவனிடம் பேசுவது என்ற எண்ணமே தோன்றியது.

அதனால் ஸ்வேதாவின் பிரச்சினையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது தான் பல நாட்களுக்கு பிறகு இருவரும் நார்மலாக பேசிக் கொள்வது போல் பேச்சு ஆரம்பித்திருக்கிறது. அதை கெடுத்துக் கொள்ள வேண்டுமா என்றும் யோசித்தாள்.

இளவரசனின் குணத்தை பற்றி ஆன்ட்டி கூறியது நினைவிற்கு வரவும், இப்போது இதை பற்றி பேச வேண்டாம் என முடிவு செய்தாள். இளவரசனின் குணம் தான் இந்த பிரச்னைக்கே காரணம், அவனின் இந்த பிரச்னையை மட்டும் சரி செய்து விட்டால் இந்த பிரச்சனைக்கே இடம் இருக்காது. எனவே அதுவரை ஸ்வேதாவை பற்றி அவனிடம் பேச கூடாது என்று தீர்மானித்தாள்.

இனியா அவளின் யோசனையில் இருந்து வெளி வருவதற்குள் இளவரசன் நான்கைந்து முறை அவள் பெயரை கூப்பிட்டிருந்தான். இளவரசன் அவள் பெயரை கத்தி அழைக்கவும் இனியா அவள் சிந்தனையில் இருந்து வெளியே வந்தாள்.

திகைப்பாக நோக்கிய இனியாவை பார்த்து “என்ன இனியா என்னாயிற்று. உடம்புக்கு ஏதும் சரியில்லையா” என்றான்.

“இல்லை. ஏதோ யோசனையில் இருந்தேன்”

“ஓ அப்ப சரி. உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்லல்ல”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்.”

“சரி. அப்புறம் என்ன மேடம். என் கிட்ட வர வர பேசவே மாட்டேங்கறீங்க.”

இனியாவிற்கு ஏனோ அவன் மேடம் என்றது பிடிக்கவில்லை. முதலில் அவன் ஒருமையில் அழைத்தது ஒரு மாதிரி தான் இருந்தது. ஆனால் பிறகு அதுவே பழகி போயிற்று. இப்போது அவன் மேடம் என்று யாரோ ஒருவரை போல் அழைப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.

அவளின் எண்ணங்களை எல்லாம் மறைத்தவாறே “உங்களிடம் பேச நேரம் கிடைக்கவில்லை. நீங்களும் இப்ப தானே வந்து பேசறீங்க” என்றாள்.

“ஓ. அப்படியா. நான் மேடம் தான் ரொம்ப பிஸின்னு நினைச்சேன். நீங்க என்னன்னா நான் வந்து பேசலன்னு சொல்றீங்க.”

“நான் அப்படிலாம் சொல்லல. பேசற சந்தர்ப்பம் கிடைக்கலன்னு தான் சொன்னேன்.”

“அப்ப என் மேல எந்த கோபமும் இல்லன்னு சொல்ற” என்று பழையவாறே ஒருமைக்கு திரும்பி இருந்தான்.

இதை வைத்தே அவனுக்கு அவள் மேல் எந்த கோபமும் இல்லை என்பதை உணர்ந்தவாறே “இல்லை” என்றாள்.

“அப்படி என்றால் சந்துரு சொன்ன மாதிரி இன்னைக்கு எங்க வீட்டுல தான் சாப்டுட்டு போகணும். அப்ப தான் உனக்கு என் மேல கோபம் இல்லன்னு அர்த்தம் சரியா” என்றான்.

“ஓகே. சரி சாப்டுட்டா போச்சி” என்றாள்.

அதற்குள் தாயை அழைத்துக் கொண்டு வந்த சந்துரு “அம்மா நீங்களே சொல்லுங்க. இவங்க நம்ம வீட்டுல ஒரு வேளை சாப்பிட்டா என்னவாம். நான் எவ்வளோ சொன்னாலும் கேட்கறதே இல்லை. இன்னைக்கு கட்டாயம் சாப்பிடனும்னு சொல்லுங்கம்மா” என்றான்.

சந்துருவின் தாய் பேச ஆரம்பிப்பதற்குள்ளாகவே இனியா “ஆன்ட்டி நான் இங்க தான் சாப்டுவேன்னு சொன்னேன். சந்துரு தான் அதெல்லாம் கூடாதுன்னு சொல்லிட்டு, இப்ப பாருங்க நான் உங்க கிட்ட சொல்றதுக்குள்ள இப்படி பேச்ச மாத்தி சொல்றாரு” என்றாள்.

இனியாவின் இந்த பேச்சைக் கேட்ட சந்துரு, இளவரசன் இருவருமே அதிர்ச்சியாக பார்க்க, இனியா அவர்கள் தாய் கவனிக்காத நேரத்தில் இருவரையும் பார்த்து கண் சிமிட்டினாள்.

திரும்ப இனியாவே “நான் இங்கு சாப்பிடலாம் இல்லையா ஆன்ட்டி, எனக்கு அதற்கு உரிமை இல்லையா” என்றாள்.

“என்னம்மா இப்படி சொல்கிறாய். நீ தாராளமாக இங்கே வரலாம், சாப்பிடலாம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் போதுமா” என்றார்.

“அதை முதலில் சந்துருவிடம் சொல்லுங்கள் ஆன்ட்டி”

அதற்குள் இடையிட்ட சந்துரு “அம்மா நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லம்மா. இவங்க பொய் சொல்றாங்க. நான் போய் அப்படி சொல்வேனா அம்மா. அவங்க வேண்டுமென்றே சொல்றாங்க அம்மா.”

அதற்குள் இனியாவே “ஓகே. நான் சும்மா தான் ஆன்ட்டி சொன்னேன். சும்மா சந்துரு கிட்ட விளையாடினேன்” என்றாள்.

“நீங்க இப்படி எல்லாம் கூட விளையாடுவீங்களா” என்று அதிசயப்பட்டு போனான் சந்துரு.

இத்தனை நடந்ததற்கும் இளவரசன் வாயே திறக்கவில்லை. அவனுக்கு இனியாவின் இந்த முகம் வித்தியாசமானது. அவன் இனியா கோபப்பட்டு பார்த்திருக்கிறான். ஆனால் இனியாவின் இந்த சிறுபிள்ளை முகம் அவன் கண்டதில்லை. அதுவும் அவள் கண் சிமிட்டிய நேரத்தில் அவன் எல்லாவற்றையும் மறந்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு நால்வரும் அமர்ந்து சாப்பிடும் போதும் இனியா வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாள். சந்துரு தான் அதில் மாட்டிக் கொண்டிருந்தான். அவனை தான் அவள் பேச்சில் வாரிக் கொண்டே இருந்தாள். இளவரசன் மட்டும் அமைதியாக அவள் பேச்சை ரசித்துக் கொண்டே இருந்தான்.

கடைசியில் இனியா அங்கிருந்து கிளம்பி வரும் போது அவள் மனநிலை மிகவும் சந்தோசமானதாக இருந்தது. சில நாட்களாக அவளுக்கும் இளவரசனுக்கும் இடையே நடந்து வந்த “கோல்ட் வார்” முடிந்து சகஜ நிலை திரும்பியுள்ளது அவளுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்தது.

இனியா வீட்டிற்குள் வந்து நுழைந்த உடனே “வீட்டிருக்கு போய் விட்டாயா” என்று இளவரசனிடம் இருந்து மெசேஜ் வந்தது.

அவளின் மனநிலை இன்னும் அதிக சந்தோசமாயிற்று. வந்து சேர்ந்து விட்டதாக அவளும் ரிப்ளை செய்தாள்.

அதற்கு பின் இருவரும் திரும்ப “குட் மார்னிங், குட் நைட், சாப்டாச்சா” என்று மெசேஜ் செய்து கொள்ள ஆரம்பித்தார்கள்”

அதற்கு பின் இனியா செல்லும் போதெல்லாம் இளவரசனை சந்திக்கவே இயலவில்லை. ஒரு முறை மட்டும் அவள் அவர்கள் வீட்டிற்கு போகும் போது அவன் வெளியே காரை எடுத்துக் கொண்டிருந்தான். இவள் செல்லவும் திரும்பி வந்து ஒரு 5 நிமிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவசரமாக வேலை இருக்கிறது. சாரி” என்று சொல்லிவிட்டு சென்றான்.

இனியாவிற்கு அவனை அவ்வளவாக பார்க்க முடியாதது கஷ்டமாக இருந்தாலும் அவளுக்கு அந்த மெசேஜ் ஒன்றே போதுமானதாக இருந்தது. ஒவ்வொரு மெசேஜ் வரும் போதும் இளவரசனே நேரில் வந்து குட் மார்னிங், குட் நைட் என்று கூறுவது போல் அவள் எண்ணிப் பார்த்துக் கொள்வாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.