(Reading time: 30 - 59 minutes)

13. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

வீட்டிற்கு சென்ற மது, “மீராக்கா ஏன் நீங்க சமைக்குறீங்க. அத்தையெல்லாம் எங்க போயிட்டாங்க?” என கேட்டாள் மீராவிடம்.

“அவங்க ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருக்காங்க. இருந்தாலும் நமக்கு டின்னர் ரெடி பண்ணிட்டாங்க. இது நித்தி, நிக்கிக்கு..நம்ம அத்தைங்க சமையல் எல்லாம் ஸ்பைஸி...அவங்க சப்பாத்தி வட்டமா  இல்லை... அது இதுன்னு குற்ற பத்திரிகை வாசிச்சுகிட்டு நான் தான் செஞ்சு தரணும்னு சொல்லி என்னை மறுபடியும் அதே கிட்ச்ச்னுக்குள்ள இழுத்து விட்டுடுறாங்க....” என்று அழுத்து கொண்டாள் மீரா.

மீராவிற்கு உதவியவாறு அன்று நடந்த விபத்தையும் அதன் பின் நடந்தவைகளை ஒப்புவித்துக் கொண்டிருந்தாள். “மீராக்கா சந்தியா சான்ஸே இல்ல...எப்படி தான் அவளால அந்த நிமிஷத்தில அவ்வளவு தைரியமா இருக்க முடிஞ்சதோ தெரியல. அதோட ஆபிஸ்க்கு ஓடி வந்து எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாம அழகா கிளையன்ட் கால் அட்டென்ட் பண்ணா. அது முடிச்சவுடனே  ஒரு பையனுக்கு சீரியஸ்னு AB -ve ப்ளட் தேவைப்படுதுன்னு வந்த smsஐ படிச்சிகிட்டு இருந்தா.....அதுக்குள்ள உங்க கொளுந்தனார்  பொறுக்காம அவ மேல கோவப்பட்டு  அவளோட நிலைமை தெரியாம அந்த சிக்மா டீம் முன்னாடி கெட் அவுட்டுன்னு கத்தியாச்சு ....நீங்களாவது அவன்கிட்ட சொல்லுங்க அக்கா...அவனக்கு மூக்கு மேல கோவம் வருது. நேத்து அத்தை அவ்வளவு அட்வைஸ் பண்ணியும் என்ன ப்ரோயேஜனம்“ என அலுத்து கொண்டவளை இமை அசையாமல் வியப்புடன் மீரா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதை கவனித்த மது “என்னக்கா அப்படி பாக்குறீங்க?” என கேட்க.

“ மது நான் காண்பது கனவா இல்லை நனவா...வண்டி இப்படி ஒரே நாள்ல தடம் புரளுது....நீ என்னைக்கும் காதிக்கு தான் சப்போர்ட் பண்ணுவ இன்னைக்கு என்கிட்ட வந்து  அவனை திட்ட சொல்ற....நம்பவே முடியல...இரு கிள்ளி பார்த்துக்கிறேன்...” என மீரா தன்னை ஒரு முறை கிள்ளி பார்க்க,

மது புன்னகைத்த படியே “சந்தியாவை நான் கூட தப்பா தான் நினச்சேன்...அவளுக்கு  எந்த அளவுக்கு விளாட்டுத்தனம் இருக்குதோ அந்த அளவுக்கு பொறுப்பும் இருக்குன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன். இன்னைக்கு அவ கூட அன்பு இல்லத்துக்கு போனேன்.... அத்தை சொன்ன மாதிரி அவளுக்கு சின்ன வயசுல இருந்து அங்க நல்ல பழக்கம் போல...அந்த பிள்ளைங்க ரெம்ப பாசமா இருந்தாங்க... அங்க டைம் போனதே தெரியல மீராக்கா” என்றவாறு நறுக்கிய காய்களை மீராவிடம் கொடுக்க,

அதை வாங்கி குக்கரில் போட்ட மீரா அவள் சொல்வது புரியாமல் “எதுக்கு அங்க போன மது?” என கேட்க,

“சந்தியா என்னை  ப்ளட் டொனேட் பண்ண GHக்கு கூட்டிட்டு போனா. சரியான நேரத்துக்கு வந்து அந்த பிள்ளையை பிழைக்க வச்சுடீங்கன்னு டாக்டர் கூட சொன்னாரு ...அப்பாடா  நாம ஒரு குழந்தைய பிழைக்க வைச்சிட்டோம்ன்னு என்னால சந்தோஷப்பட முடியல. ஏன்னா அப்ப தான்  இன்னொரு குழந்தை என் கண் முன்னாலயே இறந்தது....என்னால தாங்கவே முடியல மீராக்கா. ரெம்ப அழுது...காதிய கூப்பிட்டேன். அப்புறம் அவன் வந்து எங்களை அன்பு இல்லத்துக்கு  அனுப்பி வச்சான். ஆனா அங்க போனா அந்த இல்லத்தில ஒரு நியூ என்ட்ரி..... ரெம்ப ரெம்ப குட்டி பாப்பா ...நியூ பார்ன் பிங்கி .....கண்ணு கூட முழிக்க முடியாம கோழி குஞ்சு மாதிரி...சோ....ச்வீட்ட்...நானும் சந்தியாவும் அந்த குட்டிக்கு ஹர்ஷினின்னு பேர் வச்சோம்....ஏன் தெரியுமா? அந்த  ஆக்சிடென்ட்ல இறந்த பையன் பேரு ஹரீஸ்...அவனோட நியாபகார்த்தமா அப்படி ஒரு பேரு வைச்சோம்...அந்த குட்டி என் கண்ணுக்குள்ளே இருக்கு. சந்தியா டெய்லி ஆபிஸ் முடிஞ்சதும் அங்க டியூஷன் எடுக்க போவேன்னு சொன்னா. பேசாம நானும் அவகூட போய் அந்த குட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ண போறேன்...அத்தைகிட்ட பெர்மிஷன் வாங்கணும்”  என மது காய் நறுக்கிய கத்தியையும், பலகையையும் கழுவிக் கொண்டே சொல்ல,

மீரா அதற்கு “ம்....நீயே ஒரு குழந்தை நீ ஒரு குழந்தைய கவனிக்க போறியா...” என்றவாறு  குக்கரை மூடி வைத்தாள். பின் “ஆனா பாத்தியா...கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பார் ...இது உனக்கும் பொருந்தும் மது....உலகத்தில எல்லா ஆண்களும் கெட்டவங்க இல்ல. எல்லா அம்மாக்களும் கொடுமைக்காரவுங்க கிடையாது ....” என அவளிடம் சொல்லிக் கொண்டே பிசைந்து வைத்திருந்த சப்பாத்தி மாவை உருண்டைகளாக திரட்டினாள்.

மீரா பேசுவதை தொடர பிடிக்காத மது “ஆனா எல்லாருமே நல்லவங்களும் கிடையாது தான மீராக்கா....கடவுள் எனக்கு கொடுமைக்கார அம்மாவும் பொறுப்பே இல்லாத அப்பாவும் கொடுத்திட்டாரு. அதே நேரம், நீங்க சொன்ன மாதிரி இன்னொரு கதவா இப்படி ஒரு அருமையான பாட்டி வீட்டையும் கொடுத்திருக்காரு...பாட்டி உயிரோட இல்லாட்டினாலும் அவங்களை விட  அதிகமா பாசம் காட்டுற அத்தைகள், மாமாக்கள்  சூர்யா, காதி இவங்க எல்லாத்துக்கும் மேல நீங்க.. எனக்கு இந்த சந்தோஷம் போதும்....இதோட இதை  உங்ககிட்ட தொள்ளாயிரத்து தொண்ணித்தொம்போதுவாட்டி சொல்லிட்டேன்...ஆயிரம் வாட்டி சொல்ல வைக்காதீங்க மீராக்கா ” என்றாள்  உணர்ச்சியற்ற குரலில்.

அதை உணர்ந்த மது,“சரி...சரி....காதி விஷயத்துக்கு வருவோம். உன்னையும் சந்தியாவையும் அன்பு இல்லத்துக்கு அனுப்பி அவன் நல்லது தான் செய்திருக்கான். அவன் தேவையில்லாம சந்தியா மேல கோபப் பட்டிருக்க மாட்டான். என் சப்போர்ட்  காதிக்குத் தான் ” என மீரா கார்த்திக்கிற்கு ஆதரவளித்தாள்.

“இந்த விஷயத்தில நான் சந்தியாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் .... ஆனா மீராக்கா  இவங்க ரெண்டு பேரும் எப்போ அடிச்சிகிறாங்க எப்போ சேந்துக்கிறாங்ன்னே தெரியலை...ஒன்னு மட்டும் தெரிஞ்சிகிட்டேன்... இவங்க பேசும் போது தனியா மட்டும் மாட்டிடவே  கூடாது....” என அவள் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த கதையை  சொல்ல, மீரா அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே சப்பாத்திகளை சுட்டு எடுத்தாள்.

லுவலகத்தில் கார்த்திக் தான் தயாரிக்கும் மென்பொருள் பற்றி சந்தியாவிற்கு விவரித்துக் கொண்டிருந்தான். சந்தியாவும் அதை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள், அவளுக்கு மிக மிக விருப்பமான புள்ளியியலை மையமாக கொண்டதே...அவள் விடுவாளா... நேரம் போவதே தெரியவில்லை இருவருக்கும். திடீரென்று நினைவு வந்தவனாய் கணினியில்  மணி பார்த்தவன், “சந்தியா டைம் ஆகிடுச்சு. கிளம்பு. நான் டிராப் பண்ணிடுறேன்” என அவளை அவசரபடுத்தவும் வேகமாக மணியை பார்த்த சந்தியாவும் பயந்தவளாய் “ முருகா! 8:15 ஆச்சு...அப்பா எங்க போனாலும் 8 மணிக்கு வீடு திரும்பணும்ன்னு சொல்லுவாங்க. எனக்கு இன்னக்கு செம்ம டோஸ் இருக்கு.” என்று சொல்லிக் கொண்டே அவளது பையை எடுத்தாள்.

“நீங்க ட்ராப் பண்ண வேண்டாம் கார்த்திக். நானே ஆட்டோல போயிடுறேன்.” என அவனிடம் சொல்லிவிட்டு பையை எடுத்துக் கொண்டு கிளம்பியளிடம்

“ஆட்டோகாரனை நம்புவ...என்னை நம்ப மாட்ட?” என கோபத்துடன் கேட்க,

“அய்யோ அங்கரி பர்ட்...அப்படி இல்ல. நேத்து மதியம் சூர்யா, நைட் நீங்கன்னு மாறி மாறி கார்ல வந்து ட்ராப் பண்ணவுடனே எங்க தெருல புரணி பேசும் நடுத்தெரு நாயகிகள் இதை பத்தி துப்பு துலக்க, எங்க அம்மாக்கிட்ட காலேலே என்ன ஏதுன்னு கேட்டுகிட்டு இருந்தாங்க. அதான் வேண்டாம்ன்னு பாத்தேன்” என சொல்லி முடிக்கும் சமயம், கார்த்திகின் இண்டர்காம் ஒலித்தது.

அழைத்தது அந்த அலுவலக பியூன் மணி. அவர், “சார்...சந்தியாம்மா அப்பா அவங்களை அழைச்சிட்டு போக வந்திருக்காங்க.” என்றார். அவரிடம்  

“இதோ வந்துடுவாங்கன்னு சொல்லிடுங்க” என சொல்லி விட்டு சந்தியாவிடம் சொல்ல நிமிர்ந்தவனிடம்  

“அப்பா வந்துருக்காங்களா” என சந்தியா பதைபதைப்புடன் கேட்க,

“ஆமா...நான் வேணா வந்து சொல்லட்டா அங்கிள்கிட்ட?” என்றான்  அவளுக்கு உதவும் நோக்கத்தில்.

“வேற  வினையே வேண்டாம்...இன்னொரு நாள் அப்பா கூல்லா இருக்கிறப்போ உங்களை அறிமுகப் படுத்துறேன் ” என பதட்டத்துடன் சொல்லி விட்டு அவன் பதிலை ஏதிர்பார்க்காமல் குடு குடுவென ஓடினாள்.  

கார்த்திக், சந்தியாவுக்கென ஒதுக்கப்பட்ட மடி கணினியில் அலுவலக விவரங்களும் அவர்கள் தயாரிக்கும் மென்பொருள் விவரங்களையும் பதிவு செய்து கொடுத்திருந்தான். கிளம்பும் அவசரத்தில், அதை அங்கே விட்டு சென்றாள்.

வீட்டை அடைந்ததும், தன்ராஜின் பைக்கில் இருந்து இறங்கியவாறு கார்த்திக் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை கவனித்தாள்.

“உங்க அப்பாவும் ஆங்கிரி பர்ட்டோ?”

அதைப் பார்த்து சந்தியாவுக்கு சிரிப்பு வர, அந்த நேரம் பார்த்து தன்ராஜ் அவளை அழைக்க பாவி போல முகத்தை வைத்துக் கொண்ட சந்தியாவிடம் கடைக்கு பழம் வாங்க செல்வதாக கூறி விட்டு சென்றார் தன்ராஜ்.

“ஹ்ம்..ஆனா உங்க அளவுக்கு இல்ல “

என்று வீட்டிற்குள் நுழைந்த படியே  நொடிப்பொழுதில் அவள்  விரல்கள் நாட்டியமாடி செய்தியை அவனுக்கு அரங்கேற்றின. அவன் பதிலை எதிர்பார்த்து கைகளிலே போனை வைத்திருந்தாள்.

காரை ஓட்டி கொண்டே அதை பார்த்த கார்த்திக், நக்கலாக சிரித்த படி,

“...எந்த அளவுக்குன்னு லேப்ட்டாப்பை கொடுக்கலாம்னு வந்தப்போ கவனிச்சேனே...பயந்து போய் அப்படியே பேக்கடிச்சிக்கிட்டேன்...”

என்று ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டே, மறு கையில் போனை பிடித்தபடி கட்டை விரலால் குறுஞ்செய்தியை தட்டினான்.

“சித்தி வந்தாச்சு” என ஓடி வந்து அவள் கால்களை கட்டிய  அரவிந்தையும், யாழினியையும் இரு தூள்களில் தூக்க முனையும் போது, அவன் குறுஞ்செய்தி வர, “இருங்கடா..ஒரு நிமிஷம்” என்று குழந்தைகளிடம் கூறிவிட்டு கார்த்திக் அனுப்பிய குறுஞ்செய்தியை வாசித்து விட்டு,

“அப்பா அர்ச்சனை தெரிஞ்சிருச்சா...ஆமா...லேப்ட்டாப்பை மறந்துட்டேன். உங்க டிரைவர் கிட்ட கொடுத்து விட முடியுமா..நைட் கொஞ்சம் வேலை பாத்து வைக்கிறேன் “  

என்று பதில் செய்தி அனுப்பினாள்.

சற்று நேரத்தில் “வேண்டாம்...அதை நோண்டாம நீயும் தூங்கி, என்னையும் தூங்க விடு. நடுராத்திரி கால் பண்ணி இம்சிக்காத. நாளைக்கு பாக்காலாம்” என்று அவனின் விடை பெறும் செய்திக்கு பதிலாக அவளும் செய்தி அனுப்பி விடை பெற்றாள்.

“சித்தி வாங்க ஒளிஞ்சு விளையாட்டு விளாடலாம்” என அவள் கைகளை பிடித்து இழுத்த யாழினியிடம் விந்தியா “விடு யாழு...அவ சாப்பிடட்டும்” என்று அதட்டி விட்டு, சந்தியாவை பார்த்து “சந்து .....முதல்ல சாப்பிட்டு” என கூற,

சந்தியா அதற்கு “அட அக்கா.. தங்கச்சி மேல எம்ப்புட்டு பாசம் வச்சிருக்க...உனக்கு என் மொத மாச சம்பளத்தில ஒரு மைசூர் சில்க் வாங்கி தாறேன்...” என வாக்குறுதி அளிக்க,

“தோசை இப்போ தான்டி  சுட்டு வச்சேன்.  கொஞ்சம் லேட் ஆகிடுச்சுன்னாலும், பிரெஷ்ஷா சுட்டுக் கொடுன்னு தொல்லை பண்ணுவ. அதுக்கு தான் உங்களை தாங்க வேண்டியிருக்கு. ஏன்டி, நேத்து மொத சம்பளத்தில் வெள்ளி ஜரிகை வச்ச காஞ்சிபுரம் பட்டு வாங்கி தாரேன்னு சொன்ன..இப்போ மைசூர் சில்க்ன்னு சொல்ற... “ என கேட்க,

அருகில் நின்று கொண்டிருந்த ஸ்ரீ அதற்கு “நீ வேணா பாரு விந்தியா ...கடைசில உனக்கு ஒரு கர்ச்சீப் கூட வாங்கி கொடுக்க மாட்டா” என சந்தியாவை கிண்டலடிக்க, “அப்போ உனக்கு கண்டிப்பா கர்ச்சீப் தான்டி வாங்கி கொடுப்பேன் “ என்றாள் சந்தியா பதிலுக்கு ஸ்ரீயிடம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.