(Reading time: 6 - 12 minutes)

10. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

ரொம்ப சீக்கிரமாகவே எழுந்து குளித்து விட்ட படியால் ஞாயிற்றுக் கிழமை போலவேயில்லை தீபக்குக்கு. நேரம்  போகாமல் அங்குமிங்குமாக உலாத்திக் கொண்டேயிருந்தவனுக்குக் கீர்த்தியைப் பற்றியே நினைப்பு வந்தது.

அவளிடமிருந்து வந்த மெசேஜை மறுபடி மறுபடி படித்துக் கொண்டேயிருந்தான்.  என்ன பதில் போட என்று யோசித்து

“ good…thank God everything alright. Take care. Deepak.

என்று அனுப்பிவிட்டு பதில் அனுப்ப மாட்டாளா என்று மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான்.  ஆஃபீஸ் இருந்திருந்தால் கூட வேலையில் கவனம் போயிருக்கும் போல……திடீரென நினைவுக்கு வந்தவன் போல  ஃபேஸ் புக்கைத் திறந்து  கீர்த்தி சென்னை என்று அடித்து  தேடினான்.  கீர்த்தி என்ற பெயரில் நிறைய பேர் வரவும்….எரிச்சல் பட்டு மூடினான்.மனம் எதிலும் லயிக்கவில்லை.

ஏதோ நினைவுக்கு வந்தவனாக பைக்கை எடுத்துக் கொண்டு  கீர்த்தி அவங்க அம்மாவைச் சேர்த்த ஆஸ்பத்திரியை நோக்கி வண்டியை ஏதோ எதிர்பார்ப்பில் போனான்.

மழை திடீரெனக் கன்னத்தில் ஒன்றும் கைகளில் ஒன்றுமாகப் புள்ளி வைக்க ஆரம்பித்திருந்தது.  தீபக் ஒரு மழை விரும்பி.  சந்தோஷமாக நனைந்தான். எதிரில் வரும்  வண்டிகளில் எல்லாம் கீர்த்தி தென்படுகிறாளா என்று பார்த்துக் கொண்டே சென்றான்.

கொஞ்சம் மழை வலுப் பெற்றதும் வண்டி ஓட்ட முடியாமல்  கண்களுக்குச் சிரமம் கொடுக்க  அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு ஓரமாக  வண்டியை நிறுத்தி விட்டு தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டு ஒரு சிலுப்பு சிலுப்பிக் கொண்டே  திரும்பிப் பார்த்தவன் 

“ ஏய் நீ என்னடா இங்கே ….?” என்றான்   எதிரில் வந்தவனைப் பார்த்து. ரவி தெப்பலாக நனைந்தபடி நின்றிருந்தான் . ரவி தீபக்கின் ஆஃபீஸ் நண்பன். ரெண்டு பேரும்  நெருங்கிய  நண்பர்கள்.  தீபக்குக்கு  ரவியைப் பார்த்தது  “ஆஹா”  என்றிருந்தது. கீர்த்தியைப்  பற்றி  யாருடனாவது  பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. நல்ல வேளை ரவி அகப்பட்டான் என்று நினைத்துக் கொண்டான்.

“அட….வீட்டுக் கோழி நீ எங்கடா  ஞாயிற்றுக் கிழமை  வீட்டை விட்டு வெளியே வந்திருக்கே……” என்றான் ரவி.

ரவி….நேற்று ஒரு விஷயம் நடந்ததுடா…..” என ஆரம்பித்து ஆரம்பம் முதல் நடந்ததைக் கூறினான்.

“ஓ  இவ்வ்ளோ நடந்துருக்கா…… இப்போ கீர்த்தி  ஆஸ்பத்திரிலே இருக்க மாட்டாளாங்கிற எண்ணத்துலே தானே இங்கே சுத்திட்டிருக்கே…………என்னங்கடா இது…….ஒருநாள் பார்த்திருக்கே  ……………அதுக்குள்ளே   இப்பிடி எப்பிடிடா    மாறுறீங்க……………? எனக்கேண்டா  இதுவெல்லாம்  வர மாட்டேங்குது……”

என்று கலாய்த்தான் ரவி.

“ ஏய்ய்….என்னடா…..இது…..அம்மாவை ஒத்தையிலே கவனிக்க யாருமில்லாம  திண்டாடிக்கிட்டிருப்பாங்களேங்கற அக்கறை  மட்டும்தான்டா……..”

“நான் நம்பிட்டேம்ப்பா….” என்றவாறு கண்ணடித்தான் ரவி.

மழை விட்டபாடில்லை……பக்கத்தில் ஒரு காபி  ஷாப்…..இருவரும் அதையே நினைத்துக் கொண்டது போல ஒன்றாகச் சிரித்துக் கொண்டு  காபி ஷாப்பை நோக்கிப் போனார்கள்.

“ஏய்ய்ய்ய்…ரவி நில்லுடா……..கீர்த்திடா…..”

“ஏய் உனக்கு யாரைப் பார்த்தாலும் கீர்த்தியாய்த் தெரியுது……சும்மா வாடா…”

“கீர்த்தியேதாண்டா…………..”

கீர்த்தி பழங்கள்  வாங்கிக்  கொண்டிருந்தாள். தீபக்கைக் கவனிக்கவில்லை.

“போய்ப் பேசுடா”

“அவங்க பார்க்கட்டும்டா….”

“ஆமா….அவங்க பழம் வாங்கிட்டு  நின்னு உன்னைத் திரும்பிப் பார்த்துட்டுப் போகப் போறாங்க……போடா…போய்ப் பேசு….”

ஏதோ ரவி தந்த தைரியத்தில் கீர்த்தியின் பக்கத்தில் போய்  நின்று கொண்டு…

“ஆப்பிள் என்ன விலைப்பா…?” என்று கொஞ்சம் கூடுதல் சத்தத்துடன்  கேட்டான்.

ட்டென்று திரும்பிப் பார்த்த கீர்த்தியின் கண்கள்  பெரிதாய் விரிந்தது.  சிரிக்கவா வேண்டாமா  என யோசிப்பவள் போல ஒரு  மென் புன்னகை ஒன்றை வீசினாள். ‘மழைத்துளி  படர்ந்த கருங்கூந்தலுடன் பெண்கள்தான் திடீரென எவ்வ்ளோ அழகாக மாறி விடுகிறார்கள்’….என  நினைத்தான் தீபக்.

“என்னங்க….இப்போ அம்மாவுக்கு எப்பிடி இருக்கு?......காலைலே கிளம்பி ஆஸ்பத்திரிக்கு வரலாம்னு தான் இந்தப் பக்கம் வந்தேன்”

“நாந்தான் அம்மா டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்கன்னு  மெஸேஜ்  அனுப்பினேனே”

பதில் மெசேஜ் அனுப்பியதை மறந்து  சட்டென்று 

“எனக்குக் கிடைக்கவில்லையே “ என்று சொல்லிய உடனேயே  பதில் அனுப்பியது நினைவுக்கு வர ஒரு வெட்கத்துடன்  குனிந்து கொண்டான்.

அவளும் அவனை மேலும்  வெட்கப் படவைக்க விரும்பாமல்  “அதான் பதில் அனுப்பினீங்களே” என்று சொல்லாமல் விட்டாள்.

தீபக் ரவி நிறபதையே மறந்து  அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.  ரவி மெல்ல அருகில் வந்து…………”என்ன சார் பழம் வாங்கிட்டீங்கன்னா கிளம்பலாமா?...........”

என்றவுடன்  இருவரையும் அறிமுகப் படுத்தி விட்டு  அட்ரஸை வாங்கி விட்டு  வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்க்க வருவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பலாம்னு நினைக்கும்  போது  மொபைல் அழைத்தது.

தயா………..

சே ……….எவ்வ்ளோ அருமையான மூட்லே இருக்கும் போது…இவனெதுக்குக் கூப்பிடுறான்?

ரவி யார் என்பது போலப் பார்த்தான்.  

” தயா” என்றான்.

தரையில் தேங்கிய  நீரில்   குருவி தலயைச் சாய்த்துச் சாய்த்துத் தண்ணீர் குடிக்கும் போது  அந்தத் தண்ணீரில் கல்லெறிந்து கலைத்து விட்டதைப்  போல இருந்தது  தீபக்குக்கு.

எடுக்காமலேயே விட்டான்.  திரும்பத் திரும்பக்  கூப்பிட்டுக் கொண்டேயிருந்தான் .

“அவந்தான் அரக்கனாச்சே….விட மாட்டான் எடுத்துத் தொலை”

மனமேயில்லாமல்  எடுத்தான்  தீபக்.

“ஏண்டா எடுக்க மாட்டேங்குறே?.........நீயும் என்னை   ஒதுக்குறேதானே?.......ஏண்டா இவ்வ்ளோ நேரமா எடுக்கலை?”

“அட தூங்கிட்டு இருந்தேம்பா……இப்போ என்ன அதான் எடுத்துட்டேன்லே …சொல்லு…”

“நீ ஏண்டா இவ்வ்ளோ நேரமா எடுக்கலை?” என்று  மறுபடியும் ஆரம்பித்தான்.

“ஏய் இப்போ நீ எதுக்குக் கூப்பிட்டேன்னு சொல்லப் போறியா….இல்லை நான் ஃபோனை வைச்சுறட்டுமா?”

“எனக்கு மனசே சரியாயில்லைடா”

“ஏன் இப்போ என்னாச்சு”

“ஷைனி ரெண்டு நாளா பேசலைடா….”

‘காதலித்துத் திருமணம் கூட எளிது போல….ஆனால் அதைக் கட்டிக் காப்பாத்துவது ஏன் தான்  இந்தப் பசங்களுக்கு வர மாட்டெங்குதோ?  இப்பிடிப் பார்த்துப் பார்த்து உயிரை விட்டுருவேன்னு மிரட்டிக் கல்யாணம் பண்ணி இன்னைக்கு என்ன சாதித்து விட்டிருக்கிறான் தயா.  இதில் மாட்டிக் கொண்டது ஷைனியா….இல்லை தயாவா என்பது கூடக் குழப்பமாகவே இருந்தது.  அவனிடம் எவ்வ்ளோ தூரம் பேசக் கூடாதுன்னு நினைகிறானோ அவ்வ்ளோ  அதிகம் அவன் தீபக்கிடம் ஒட்டிக் கொள்கிறான்.

“ஏன் பேசவில்லை…? நீ என்ன பண்ணினே”

“உன் கிட்டே பேசணும்டா…….ஃபோன்லே பேச முடியாது…………ஞாயிற்றுக் கிழமைதானேடா……….வீட்டுக்கு வாயேன்…”

அய்யோடா என்றிருந்தது தீபக்குக்கு………

“அவசரமாக….இல்லேடா வேற ஒரு ப்ரோக்ராம் இருக்குடா…………என்னாலே வர முடியாதுடா…”

“ப்ரோக்ராம் எங்கே?........இடம் சொல்லு நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.”

“அய்யோ இது வேற தயா…….அங்கேலாம் நீ வந்து பேச முடியாது….. நான்   வேற ரொம்ப பிஸியாயிடுவேன்…..”

“அய்யோ இது ரொம்ப முக்கியம் தீபக்…..ஒரு பத்து நிமிஷம் எனக்காகக் கொடுக்க மாட்டியா?”

“இல்லே தயா என் கஸின் நிச்சயதார்த்தம்…….அங்கே வந்து என்ன பேச முடியும்?”

“பரவால்லே ….நீ மண்டபம் சொல்லு …நான் வந்து உன்னைப் பார்க்குறேன்”

கேட்டுக் கொண்டிருந்த ரவி ஒருவழியாக  தயா கிடுக்கிப் பிடி போடுவதை உணர்ந்து

புருவம் உயர்த்தினான்.

மொபைலை மூடிக் கொண்டு   “மண்டபத்துக்கே வர்றேன்னு சொல்றாண்டா…….” என்றான்.

“தூரமா ஒரு மண்டபத்தைச் சொல்லுடா….”

என்ன சொல்வதென்று முழித்துக் கொண்டிருந்தான் தீபக்.

தொடரும்

Karai othungum meengal - 09

Karai othungum meengal - 11

 

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.