(Reading time: 6 - 11 minutes)

11. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

ல்லோருக்குமான வானம் விரிந்து பரந்து கிடந்தது. யாரும் பங்கு போட முடியாத வானம்.  கடவுள் இங்கு தான் இருக்கிறார் என எல்லோரும் நம்பும் வானம்.    இரவில் ஒரு முகமும் பகலில் ஒரு முகமுமாய் முகமூடி மாட்டிக் கொள்ளும் வானம். 

இருட்டியிருந்த வானத்தைப் பார்த்து பயம் இன்னும் அதிகாகிக் கொண்டிருந்தது தயாவுக்கு. ஷைனி இன்னும் வீடு திரும்பவில்லை. 

என்னிக்கும் ஆறு மணிக்கெல்லாம்  ஆஃபீஸில் இருந்து வந்து விடுவாளே….. இன்னிக்கு ஏன் வரவில்லை. காலையில் நடந்த சண்டையில்  கொஞ்சம் கூடுதலாகத்தான்  கோபப் பட்டேன் அதற்காகவா ஒருத்தி  வீட்டை விட்டு ஓடி விடுவாள்?  ஃபோனை எடுக்காததுதான் இன்னும் கவலையாக இருந்தது… சண்டை முடிந்ததும்  இப்பிடியாக வதைப்பது எப்போதும் தயாதான்.

கொடியில் இன்னும் அவளின் துணிகள் அவள் வாசம் சுமந்தபடி அசைகின்றது.

சின்றெல்லாவின் செருப்பு தேடி அலைந்த இளவரசனைப் போல் அவள் விட்டுச் சென்ற ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாகத் தேடிப் பார்க்கலாமா???

வீடு முழுவதுமாய் அவளின் இல்லாதிருத்தலின் இருப்பு வதைத்துக் கொண்டேயிருந்தது. ஒரு டீ போடக் கூடத் தெரியவில்லை தயாவுக்கு.எந்தப் பொருட்களின் இடமும் தெரியவில்லை. மின்சாரம் போனதில் அரை மணி நேரமாய்த் தேடியும் எமெர்ஜென்ஸி லைட் இருக்குமிடம் தெரியவில்லை.  தீப்பெட்டியைத் தெடிக் கண்டு பிடித்து  குச்சி குச்சியாக உரசித் தேடியாயிற்று…….. எங்கே வைத்துத் தொலைந்தாளோ …. எனக் கோபமாக வந்தது.  மீதி இருக்கும் நாட்களை எப்படி இப்படிப் பொருட்களைத் தேடிக் கொண்டே கழிக்கப் போகிறோமோ  என்று பயமாயிருந்தது.. அவள் அவனை விட்டு ஓடிப் போய் விட்டாள் என்று முடிவே செய்து விட்டான் தயா.

யாருக்குப் ஃபோன் போடுவது?... தீபக்  மட்டும்தான் நினைவுக்கு வந்தான். அவனிடம் பயங்கரக் கோபத்திலிருந்தான் தயா.   தீபக் சொன்ன கல்யாண மண்டபத்தில்  காத்துக் கிடந்து  ஏமாந்து போன வருத்தத்தில் அவனிடம் இனிப் பேசவே கூடாதென நினைத்திருந்தான் தயா….. இப்படியொரு இக்கட்டு உடனே வரும்  என நினைத்தே பார்க்கவில்லை.

ஷைனியின் தோழிகள் பற்றிய ஒரு ஐடியாவும் இல்லை… ஒரு நம்பர் கூட இல்லை கூப்பிட்டு விசாரிக்க… ஆஃபீஸில் கேட்டதில் எப்பவும் போலக் கிளம்பியாச்சுன்னு சொல்லிட்டாங்க………..  மனம் முழுவதும் அவள் ஓடி விட்டாள் தன்னிடமிருந்து தப்பித்து  ஓடி விட்டாள் என்றே நினைத்தான்.

வண்டியை எடுத்துக் கொண்டு தேடலாம் என்று நினைத்தவன் ….. கிளம்பிப் போயிருக்கும் போது வந்து விட்டால் தேடுவாளே என நினைத்தான். மனம்  ஆயிரம் எண்ணங்களோடு  கடல் அலை போல ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. வருவது வரட்டும் என நினைத்து வண்டியை எடுத்தவன்….வரட்டும்…வந்தவுடன் முதல் வேலையா வேலையை விட்டு விடச் சொல்ல வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்.

இப்போது புதிதாக ஒரு பயம் வேறு வந்திருக்கிறது... போலீஸ் வருமோ??? நான் சரிதான் ... அவள்தான் ஒருமாதிரி எனச் சொல்வதற்கு என்னென்ன செட் அப்  செய்ய வேண்டுமோ என தயா யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

மணி ஒன்பது தாண்டியதும்  இனி  ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்  தீபக்  நம்பருக்கு ஃபோன் பண்ணினான்.

தீபக்  தயாவின் நம்பரைப் பார்த்ததும்  எடுக்கக் கூடாது என்ற முடிவுடன் கண்டு கொள்ளாமல் இருந்தான்.  தயா  எப்படியும் கல்யாண மண்டபத்தில்  தன்னைத் தேடிப் பார்த்து காணாமல்  கோபத்தில்  இனித் தொடர்பு கொள்ள மாட்டான் என நினைத்திருந்தான். ஆனால் அவன் மீண்டும் அழைக்கவே  மீண்டும் மீண்டும்  கட் செய்தான்.

சிறிது நேரத்தில்  “I ‘m in  north Bangalore  police station. pls help me “

என்ற மெஸேஜ் பார்த்ததும்  எவ்வளவுதான் விலக நினைத்தாலும்  உடனே போக வேண்டும் போல் மனது பர பரத்தது.  மணி ஒன்பது கடந்து விட்டது…. என்ன சிக்கலோ…. எங்கே போய் மாட்டிக் கொண்டானோ?  இல்லை என்னைப்  பார்க்க வேண்டும் என்பதற்காக  பொய் சொல்கிறானோ  என்றெல்லாம் குழப்பத்திலிருந்தான் தீபக் .  என்ன செய்வதென்று  ரவிக்கு ஃபோன் செய்தான்.  விவரத்தைச் சொல்லி  அவனை வரச் சொல்லி சுபாக்காவிடம் மட்டும் விவரத்தைச் சொல்லி விட்டு அம்மாவிடம்

“இதோ  ரவி கூடப் போயிட்டு வந்துரேம்மா….” என்றவாறு கிளம்பினான்.

“டேய் …ஏதாவது வெட்டியா அலைய வெச்சான்னா….பாரு  பின்னியெடுத்துருவேன்…..”

“இல்லைடா…ஏதாவது பிரச்னையாயிருக்கும்டா…இதிலெல்லாம் விளையாட மாட்டாண்டா…”

“அவனை வெட்டி விடணும்னு சொல்றே …… அப்புறம் இப்பிடி விழுந்தடிச்சு ஓடுறே… எனக்கென்னவோ சும்மா… நேற்று நீ அவனை அலைய விட்டதுனாலே உன்னை இன்னிக்கு அலைய விடுறான்னு தோணுதுடா…”

“அப்படி மட்டும் இருக்கட்டும்….. அவன் தொலைஞ்சான்…….. ரவி வண்டியை நிறுத்துடா….. அவனுக்குப்   ஃபோன் பண்ணிப் பேசிட்டு மேற்கொண்டு போகலாம்.”

ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு தயாவுக்கு ஃபோன் போட்டான்………..

”ப்ச்……….. நாட் ரீச்சபிள்…”

“சரி விடுடா….. கிளம்பியாச்சு……..போய்ப் பார்த்துட்டு வந்துரலாம்.”

“சரிடா” என்றவாறு மீண்டும் கிளம்பினார்கள்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே அப்பாவியாக நின்றிருந்தான்  தயா.

“நீ வர மாட்டேன்னு நினைச்சேண்டா……”

“என்னடா பிரச்னை?... எப்படி… .என்ன செஞ்சு மாட்டிக்கிட்டே……. எப்பிடி விட்டாங்க…..”

தயா ரவியைப் பார்த்துத் தயங்கினான். தீபக் அதைப் பார்த்ததும்….

”என் ஃப்ரெண்ட்தான்…சொல்லு…………” என்றான்

“எனக்கொண்ணுமில்லைடா……….ஷைனி வீட்டை விட்டு ஓடிப் போயிட்டாடா….”

“என்ன……………?” என்று அதிர்ந்தான் தீபக்.

“லெட்டர் எதுவும் எழுதி வச்சுருக்காங்களா?...”

“இல்லை”

“உன் கிட்டே சொன்னாங்களா………ஏதும்?”

“அப்புறம் எப்பிடிச் சொல்றே ஓடிப் போயிட்டாங்கன்னு?...”

“காலைலே ஆஃபீசுக்குப் போனவ இன்னும் திரும்பலை….ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டேங்குறா……..”

“ஆஃபீசுலே விசாரிச்சியா……….?”

“ஆமா….எப்பவும் போலக் கிளம்பிட்டாங்கன்னு சொல்றாங்க………….”

“அவங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்டே விசாரிச்சியா?...”

“அவங்க நம்பர்லாம் என் கிட்டே இல்லை….”

“என்னடா…லூசா நீ?... உடனே ஓடிப் போயிட்டாங்கன்னு சொல்வியா……….ஏதாவது வழிலே பிரச்னையாயிருக்கும்……இரு பார்க்கலாம்….. விசாரிக்கலாம்”

“காலைலே ரொம்ப சண்டை போட்டோம்டா…………..எடுத்தெறிஞ்சு பேசிட்டுப் போனாடா…..அவ என்னை விட்டு ஓடித்தான் போயிட்டாடா…………..”

தீபக்குக்கு  எரிச்சலாக   வந்தது. ரவிக்கு அதற்கு மேலக் கோபமாக வந்தது.

“சரி.. இப்போ எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் வந்திருக்கே?...”

“ஷைனியைக் கண்டு  பிடிக்கத்தான்……..”

“அவசரப் படாதே தயா………….. கொஞ்சம் பொறுமையா இரு……..நல்லா விசாரிச்சுட்டுத் தேடிப் பார்த்துட்டுப் போலீசுக்குப் போலாம்….முதல்லே இங்கேருந்து கிளம்பு…”

“இரு மறுபடியும் அவங்க நம்பருக்குக் கால் பண்ணு….”

“எனக்குப் பதட்டமாயிருக்கு தீபக் நீதான் ஃபோன் போடு….” என்றவாறு ஃபோனை தீபக்கிடம் கொடுத்தான் தயா………”

“the number you have dialed is either switched off or not reachable” என்று வந்தது.

தொடரும்

Karai othungum meengal - 10

Karai othungum meengal - 12

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.