(Reading time: 23 - 46 minutes)

05. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

"ந்துமா" என்று அழைத்தபடி தன்னை நோக்கி வந்த தன் அத்தையை விழிவிரிய பார்த்தாள் நந்து. இரு கைகளையும் நீட்டியபடி முகத்தில் பிரியத்தோடும் ஏக்கத்தோடும் தன் முன்னால் வேகமாக வந்தவரைப் பார்த்து, நந்து அவளையறியாமலேயே இரண்டடி முன்னால் சென்று நீட்டிய கைகளை பற்றிக்கொண்டாள். அவளை இருக்கமாக  அனைத்தவர் நடுங்கும் தன் விரல்களால் அவள் முகத்தை தடவி,

"எவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்திட்டா....!!! குட்டியா அத்தை அத்தைனு என்னையே சுத்தி வந்த நந்துமாவா இது....?"

என்று தன் அண்ணனை கேட்டபடி, தொலைந்துபோன பொக்கிஷம் திரும்ப கிடைத்தால், அதை ரசிப்பதுபோல் அவளையே திரும்ப திரும்ப பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.

"ஆமாம்மா... உன்னோட அதே குட்டி நந்துமா தான்...." என்று கூறிய பாஸ்கரனின் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

"அத்தையை ஞாபகம் இருக்கா கண்ணு?" என்று அவர் எக்கத்தோடு கேக்க,

"ம்ம்......இருக்கு அத்தை, நீங்க ‘நந்துக்கண்ணா’னு கூப்பிடறது நல்லா ஞாபகம் இருக்கு. அம்மாவோட ஞாபகம் வர்றப்போ எல்லாம், கூட உங்க ஞாபகம் வரும்.. ஆனா உங்களோட சின்ன வயசு photo-வ பார்த்து தான் உங்கள ஞாபகம் வச்சிருந்தேன். அதனாலே இப்போ சட்டுனு அடையாளம் தெரியல அத்தை..!" என்றாள்.

"அப்போ இப்ப எனக்கு வயசாயிரிச்சுனு சொல்றியா?" என்று செல்லமாக மிரட்டியவர், பின்பு சிரித்துகொண்டே,

"பரவாயில்லடா, இப்பயாவது உன்கூட இருக்கிற சந்தர்ப்பத்தை கடவுள் குடுத்திருக்காரேனு சந்தோஷப்படுவோம். இனிமே என்ன ஆனாலும் உங்க ரெண்டு பேரையும் என்னால விட்டுட்டு இருக்க முடியாது" என்றார் தீவிரத்துடன்.

தன்னுடைய சின்ன வயதிலே பிரிந்து சென்ற நளினியை நந்துவால் மறக்க முடியவில்லை. மனது கஷ்டமாக இருக்கும் பொழுது பழைய photo க்களை எடுத்துப் பார்க்கையில், சிறு வயது ஞாபகம் எல்லாம் வரும், அதில் அவள் அந்த கஷ்டத்தை மறந்தே போவாள்.  'ஏன் அத்தை நம்மை பார்க்க வருவதில்லை' என்று சின்ன வயதில் தன் தந்தையை நச்சரித்தது ஞாபகம் இருந்தது. அப்படி கேட்கும் பொழுதெல்லாம் அவரின் முகம் வாடுவதை கண்டு அப்படி கேட்பதையே நிறுத்திக் கொண்டாள். என்றாலும் தன் அத்தையை என்றாவது ஒரு நாள் பார்ப்போம், அந்த நாள்லில் எப்படி எல்லாம் பேச வேண்டும் என ஒத்திகை பார்த்துக் கொள்வாள். அதேபோல் இன்று தன் அத்தையை பார்த்தவுடன் மற்றது எல்லாம் மறந்து, இடைப்பட்ட பிரிவு நிகழவே இல்லை என்பது போல் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

"ஏன் அத்தை இதுவரைக்கும் என்ன பார்க்கவே வரலை? ஒரு phone கூட பேசினதில்லை. நான் ஏதாச்சும் தப்பு பண்ணிட்டேனா?”

பல நாட்களாக குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டாள். கேட்டவளை அன்புடன் பார்த்த நளினி,

"இல்ல கண்ணா, நீ எப்பவும் யாரையும் கஷ்டப்படுத்த மாட்ட. எல்லாம் இந்த பெரியவங்க பண்ணினது" என்றவர், 'உனக்கு எப்படி புரிய வைப்பது' என்று யோசித்து விட்டு

"வா இப்படி உட்கார்" என்று தன் அருகிலேயே கோவில் பிரகாரத்தில் அமர வைத்துக்கொண்டு..

"பார் கண்ணா, உங்க மாமாவுக்கும் அப்பாவுக்கும் சின்ன, இல்ல பெரிய பிரச்சனை. அதனால நான் உங்கள விட்டு தள்ளிப்போக வேண்டியதாயிருச்சு. இப்போ அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைச்சிருக்கு, அதனால அந்த பிரச்சனையை சரி பண்ணி நாம எல்லாரும் சேர்ந்தே இருக்கலாம்" என்றார் மகிழ்ச்சியுடன்.

"ஆமாம்மா.. இதுவரைக்கும் எப்படியோ தள்ளி முள்ளி வளர்த்திட்டேன். இனிமேல் இவள் உன் பொறுப்பு" என்றார் பாஸ்கரன்.

"ஏன்னா அப்படி சொல்ற.. இதவிட எப்படி நல்லா வளர்க்க முடியும்.. பாரு பெரிய dentist ஆயிருவா.. இல்லையாடா?" என்று நந்துவை கேட்க

"கண்டிப்பா அத்தை" என்றாள் நந்து நம்பிக்கையுடன்.

"நந்துமா நம்ம பிர..." என்று சொல்ல வந்தவர் நளினியை பார்த்ததும் பேச்சை நிறுத்த, நந்துவும் திரும்பி தன் அத்தையை பார்த்தாள்.

"நீ போய் சாமியை சேவிச்சிட்டு வாடா.. நானும் அப்பாவும் இங்க இருக்கிறோம்" என்று அவளை அனுப்பி வைத்தவர், பாஸ்கரனிடம் திரும்பி

"இப்போ எதுவும் அவகிட்ட சொல்லவேணாண்ணா.. இப்போ தானே college-ல join பண்ணியிருக்கா.. கொஞ்ச நாள் போகட்டும்.." என்று கீழே பார்த்திபடி சற்று தயக்கத்துடன் சொன்னார் நளினி.

"அப்போ பிரபுக்கும் என் மேல கோபமா.." என்று கலக்கத்துடன் கேட்க

"சே.. சே.. அப்படியெல்லாம் இல்லண்ணா.." என்றவர் தன் அண்ணனின் கவலை தீராததை பார்த்து, வேறு என்ன சொல்லி அவரை மாற்றுவது என்று யோசித்தவருக்கு கவலையே மிஞ்சியது. சந்துருவுக்கு இப்படி ஒரு மாமாவும், அவருக்கு ஒரு பொண்ணும் இருப்பதே ஞாபகம் இல்லாத பொழுது, எங்கிருந்து கோபம் வரும். அப்படியே தெரியவந்தாலும் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவன் இல்லையே. இன்னும் கொஞ்ச நாள் போனால், அவன் மனதை மாற்றி அதன் பிறகு நந்துவைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் என்று நினைத்திருந்தாள் நளினி. ஆனால் இதை எல்லாம் எப்படி தன் அண்ணனிடம் சொல்வது, பிரபு பற்றி தெரிந்தால் தன் மகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படுவாரே என்று எண்ணி கலங்கியவர்

'முருகா.. ஏன் இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கினாய்..? அவன் வாழ்வில் மட்டும் அந்த கசப்பான சம்பவம் நடந்திராவிட்டால், இந்நேரம் இவர்களை இப்படி யாருக்கும் தெரியாமல் சந்திக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதே..! இதை எப்படி சமாளிக்கப் போகிறேன், நீ தான் சரியான வழியைக் காட்ட வேண்டும்' என்று வேண்டிக்கொண்டு கண்களைத் திறந்தவர் முன் புன்னகையுடன் நின்றிருந்தாள் நந்திதா. தன் கையில் இருந்த பிரசாதத்தை எடுத்து நளினியின் நெற்றியில் இட்டவள்,

"இனிமேல் எல்லாம் சரி ஆயிரும் அத்தை" என்றாள். அவள் எதை நினைத்து சொன்னாளோ தெரியாது, ஆனால் அவளின் அந்த வார்த்தை கேட்டு நளினியின் மனம் குளிர்ந்தது.

'முருகா.. இதை நீ சொன்னதாகவே எடுத்துக்கொள்கிறேன்' என்று நினைத்தபடி

"அப்படியே ஆகட்டும் கண்ணா.." என்று நந்துவின் கன்னத்தை தட்டினார். தன் தந்தைக்கும் இட்டு விட்டவள், அவர் முகம் கவலையோடு இருப்பதை பார்த்து

"என்னாச்சுப்பா..?" என்றாள்.

"ஒ.. ஒண்ணுமில்லடா, ஏதோ யோசனை..!" என்றவாறு மகளை பார்த்து புன்னகைத்தவர், நளினியிடம் திரும்பி

"குணா தம்பி எப்படி இருக்குமா, இப்போ எங்கே இருக்காப்ல..?" என்றார்.

குணாவின் பெயரைக் கேட்டதுமே முகம் வாடி கண்கள் கலங்கியது நளினிக்கு.

"குணா தவறிப் போய்ட்டான் அண்ணா... ஒரு வருஷம் ஆகுது" என்றார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.