(Reading time: 60 - 120 minutes)

20. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

 

கார்த்திக்கிடம் பேசி முடித்த பின், சிவா முதலில் தானாக இழுத்து வைத்த தலைவலியை தரையிறக்க எண்ணி, கடத்தி வந்த நபரின் விவரம் அறிய அவரின் போனை எடுத்தான்.

 

“நான் பாண்டியனான்னு கேட்டதுக்கு தலையாட்டி எனக்கு ராங் இன்பர்மேஷன் கொடுக்கிற அளவுக்கு அப்படி எந்த அப்பாட்டக்கர்கிட்ட மெய்மறந்து பேசிக்கிட்டு இருந்த”

 

என்று  திட்டிக்கொண்டே போனில் கடைசியாக அழைத்த எண்ணை பார்த்தான். அது “பஞ்ச் பாண்டியன்” என்று அறிந்து அதிர்ந்தான். ஏனெனில் பஞ்ச் பாண்டியன் அந்த ஊரின் தாதா.

 

 “அடப்பாவி பஞ்ச் பாண்டியன் கூடவா பேசிகிட்டு இருந்த. நீ அவனோட  ஆளா…..அதுக்கு தான் பாண்டியனான்னு கேட்டப்போ அப்படி ஒரு லுக் குடுத்தியா?? “  பயத்தில் மிரண்டான்.

 

“பின்னாடி இருந்து தான் நாம அட்டாக் பண்ணோம். இருந்தாலும், ஏதாவது கேப்ல நம்ம முகத்தை பாத்திருப்பானா? நம்மள போட்டு கொடுத்தா? அய்யோ பஞ்ச் பாண்டியன்கிட்ட சிக்கினா  எழும்பு கூட மிஞ்சாதே.  ” என்று லம்பி விட்டு மீண்டும் அதே  மருத்துவமனையிலே மயக்கத்திற்கு சிகிச்சை அளிக்க அவனை சேர்த்து விட்டு, அவன் கண்ணில் படாமல் தப்பித்தான். பின் கார்த்திக் அனுப்பிய புது விவரங்களையும் பாண்டியனின் புகைப்படத்தையும் குறித்துக் கொண்டு அடுத்த திட்டத்தை சொதப்பாமல் செயல் படுத்த ஆயத்தமானான்.

 

ன்று காலையே சூர்யா மீராவை அவளது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருந்ததால், அவனை மருத்துவமனைக்கு அழைத்து அலைக்கழிக்க கார்த்திக்  விரும்பவில்லை. அதனால், விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சதாசிவத்திடம் மட்டும் சந்தியாவின் உடல்நிலை விவரத்தை தெரிவித்திருந்தான். மதியம் மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. சதாசிவமும் சௌபர்ணிகாவும் மதுவை அழைத்துக் கொண்டு சந்தியாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

 

அந்த நேரம் பார்த்து, மருத்துவரும் சந்தியாவை பரிசோதிக்க வந்தார். மிகவும் அனுபவம் வாய்ந்த அறுபதுகளில் இருந்த மருத்துவர், நோயாளிகளிடம் சற்று  வெளிப்படையாகவும் உரிமையாகவும் பேசும் குணம் படைத்தவர். மருந்தின் தாக்கத்தில்  சந்தியாவிற்கு காய்ச்சல் விட்டு இருந்தது.

 

ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை முடிவுகளை எல்லாம் பார்த்து விட்டு அவளுக்கு வேறு சிக்கல்கள் இல்லை என உறுதிப் படுத்தினார் மருத்துவர். உடம்பில் நீர்ச்சத்து குறைந்ததிற்கு முழுக்க முழுக்க  சந்தியாவின் அலட்சியம் மற்றும் அவள் உடல் நலன் மீது அக்கறை எடுத்துக் கொள்ளாததுமே என அவளை கடிந்தார் மருத்துவர். அவளுக்கு இப்பொழுது ஏறிக் கொண்டிருக்கும் குளுக்கோஸ் முடிந்த பின், வீட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி அளித்தார்.

 

மருத்துவர் நன்றாக போட்டுக் கொடுத்து செல்ல தன்ராஜ், லக்ஷ்மியுடன் சௌபர்ணிகாவும் சேர்ந்து சந்தியாவை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.  சதாசிவமும், மதுவும் பரம சாதுவாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாண்டியனின் பார்வை சந்தியாவை தீண்டிய வண்ணம்  இருக்க அவன் மனதிற்குள் தன்ராஜை உருட்டி மிரட்டியாவது திருமணத்தை நடத்த திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான். சந்தியா கிடைக்கும் வசவுகளை கேட்டு பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு மனதிற்குள்,

 

“சிங்கமே  சீக்குல உறும முடியாம இருமிகிட்டு இருக்கு…..எல்லாம் இந்த சகுனியால வந்தது. ஏதாவது ப்ரெஷ்ஷா யங்கா டாக்டர் ஏற்பாடு பண்ணியிருந்தா சைட் அடிச்சாவது பொழுதை போக்கியிருக்கலாம்.“ மனதிற்குள் கார்த்திகை பொரிந்து கொண்டிருக்கும் போது தான் பாண்டியனின் பார்வை அவள் மீது படிவதை கவனித்தாள். அவள் நைட்டியில் இருப்பது அவன் கண்ணை உறுத்துவதை அறிந்து என்ன செய்ய என்று யோசிக்கும் வேளையில்  சிவா அங்கே வந்தான்.

 

கார்த்திக் தன்னை உதவிக்கு  அனுப்பி உள்ளதாக சொன்ன சிவாவிடம், தன்ராஜ் தனது மருமகன்கள் இருப்பதால் அவன் உதவி தேவையிருக்காது என்று எவ்வளோ சொல்லியும் கேளாது, “சாரி அங்கிள். சிவா முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான்” என்று பெருமையாக சொல்ல,

 

“அது எந்த காலு? வலது காலா? இடது காலா?” என்று நக்கலாக கேட்டான் பாண்டியன்.

 

“நீங்க தானே பாண்டியன்?” புருவத்தை உயர்த்திக் கேட்டான்  சிவா.

 

“ஆமா.. என்னை தெரியுமா உங்களுக்கு?”  ஆச்சர்ய குறியாக கேள்விக்குறியை வைத்தான் பாண்டியன்.

 

“கேள்வி பட்டேன். உங்க முகத்தை பார்த்தாலே பாண்டியன் நாட்டு மன்னனாட்டும் ராஜ கலை தெரியுதே” என்று சொன்ன சிவா, “இந்த பேரால  பஞ்ச் பாண்டியன்ட்ட  இந்த பிஞ்சு உடம்பு சிக்கி பஞ்சு பஞ்சா ஆக பாத்ததே… உன் உடம்புக்கு ரெண்டு நாளு ஊரடங்கு உத்தரவு போடாம அடங்க மாட்டான் இந்த சிவா ” மனதிற்குள் சபதமிட்டான்.

 

 தண்டட்டி பாட்டியை கவனிக்க லக்ஷ்மி வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்ததால் சந்தியாவின் துணைக்கு  ஸ்ரீமா இருந்தாள். ஸ்ரீமா, மது மற்றும் சௌபர்ணிகா  மூவரும் ஆண்டிக் நகைகளை பற்றி  தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 

சந்தியாவிடம் வந்த சிவா “சிஸ்டர், ஒரு ப்ராஜக்ட் விஷயமா VIP ஒருத்தர்  உங்ககிட்ட டிப்ஸ் கேக்கணும்னு சொன்னாங்க. ஒரு நிமிஷம் போன் பேச உங்க ஹெல்த் ஒத்துழைக்கும் தானே?” என்று அவள் அருகில் வந்து பவ்யமாக கேட்க அவள் “யார் அந்த வி ஐ பி?” என யோசனையுடன் பார்க்க, சிவாவோ போனை கொடுத்து “ரொம்ப யோசிக்காதீங்க.  இதுல கால் வந்தா அட்டென்ட் பண்ணுங்க. நான் வெளிய போயிட்டு வந்துடுறேன்” என்று அவள் பதில் எதிர்பார்க்காமல் அவன் போனை அவளருகில் வைத்து விட்டு வெளியே சென்றான். அவள் மனதிற்குள் கார்த்திக்காக இருக்குமோ என்னும் ஏக்கம். அவன் அந்த நேரம் விமானத்தில் பறந்திருப்பான் என புத்திக்கு எட்டினாலும்,

 

“அலைபாயுதே கார்த்திக் மாதிரி நம்மளை பிரிய முடியாம எவனோ ஒருவன் யாசிக்கிறான்னு ஓடி வந்துடுவான்னோ? இல்ல போன்லே பீலிங்ஸ்ஸோட ஐ லவ் யு வள்ளிக்கண்ணுன்னு சொல்லுவானோ? ஐ மிஸ் யு டான்னு கொஞ்சுவானோ” என  வித விதமாக வண்ண வண்ண கனவுகளில் மூழ்கி இருந்தாள்.

 

விமானத்தின் இறக்கைகள் வானில் ஒரு உயரத்தை அடையும் வரை தொலை தொடர்பு  சாதனங்களை அணைத்து விட்டு உட்கார்ந்த கார்த்திக்கிற்கு, கண்ணில் பட்ட பயணிகள், விமான சிப்பந்திகள், இருக்கையின் முன் இருந்த LCD தொலைக்காட்சி என எதுவும் மனதில் பதியவில்லை. தீராத தேடலில் இருந்தது அவன் மனது. முந்தைய நாள் இரவில் குழம்பிய குட்டையான மனதை இன்னும்  கிண்டி கிளற   பல கேள்விகள்.....

 

“சந்தியாவின் உடல்நிலை அவள் வேண்டுமென்றே இழுத்து வைத்ததா? அதற்கு நான் தான் காரணமோ? அவள் மனதில் பாண்டியன் இருப்பானோ? அப்போ அந்த வசூல் ராஜா? ”  கேள்விகள் புற்றீசல் போல வந்து கொண்டே இருந்தன...விடை தான் இல்லை. சற்று நேரத்தில் பயணிகள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என அறிவிப்பு வந்தது.

 

“அப்பாடா” என பெருமூச்சு விட்ட படி மடிக் கணினியை விரித்தபடி சென்ற வாரம் நடந்த நிகழ்வுகளை முற்றிலுமாக மறந்து புது வாழ்க்கை துவங்க முடிவெடுத்தான்.. ஆனால், காலையில் சிறகொடிந்த பட்டாம்பூச்சி போல அவள் கண் மூடிக் கிடந்தது….அந்த நிலையில் பாண்டியனின் கள்ளப் பார்வை...அந்த கண்களில் ஆசை மட்டுமே தெரிந்தது. அக்கறையோ...அன்போ இருந்த மாதிரி தெரியவில்லையே! அவன் எப்படி அவளை நன்றாக வைத்திருப்பான்?”  என்று எண்ணங்கள் பழைய குருடியாய் சந்தியாவையே சுற்றி வந்தது.

 

சிவா கொடுத்து சென்ற போனில் சற்று நேரத்தில் அழைப்பு வந்தது. அதை எடுத்தவளிடம், “சிஸ்டர் நான் சிவா பேசுறேன் ” என்றான் சிவா.

 

“ஏதோ வி ஐ பின்னு சொன்னீங்க”, கேட்டாள் சந்தியா.

 

“ஹி...ஹி...நான் தான் சிஸ்டர்” என்று வழிந்தான் சிவா.

 

கார்த்திக்காக இருக்குமோ என்று ஆசையுடன் இருந்தவளுக்கு எரிச்சலாய் வர, “து…..” என  ஒலி எழுப்பினாள் சந்தியா.

 

“துப்புனீங்களா சிஸ்டர்?” அதிர்ச்சியாய் கேள்வி எழுப்பினான்.

 

“இல்ல து….தும்மல்ன்னு சொல்ல வந்தேன் ப்ரோ” சமாளித்தாள்.

 

“சாரி சிஸ்டர்..நீங்க உடம்புக்கு சரியில்லாத நேரம் தொந்தரவு செய்றேன் தப்பா நினைக்காதீங்க. எனக்கு நீங்க காபில பேதி மருந்து கலந்த ட்ரிக்கை விவரிக்கணும்” என்றான் சிவா.

 

“எதுக்கு?”, சந்தியா கேட்டாள்.

 

“அது ஒருத்தருக்கு அதே மாதிரி டிரீட்மெண்ட் கொடுக்கணும்”, சிவா

 

“யாருக்கு?”, கேட்டாள் சந்தியா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.