(Reading time: 6 - 12 minutes)

03. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

"ன்னடா ரெடியா"   என்றான் மனோ.

"புரிந்துவிட்டிருந்தது அவளுக்கு. மனோ கண்களை திறந்ததும் விரியப்போகும் காட்சி என்னவென்பது தெளிவாய் புரிந்துவிட்டிருந்தது அவளுக்கு.

சுவாசத்தை சீராக்கி கொண்டாள் அர்ச்சனா.

"என்ன அர்ச்சனா கண்ணை திறக்கலாமா?" என்றபடி மெல்ல மெல்ல விரல்களை விலக்கினான் மனோ

அவள் எதிர்பார்த்த காட்சி அப்படியே கண்முன்னால் விரிந்தது.

நின்றிருந்தான் அவன்.

"மனமார நேசிப்பதென்றால் என்னவென்று அவளுக்கு காட்டிய வசந்த்

"இதமான அன்னியோன்னியம் எப்படி இருக்கும் என்று அவளுக்கு காட்டிய வசந்த்'

"இது எதுவுமே வேண்டாமென்று அவள் தூக்கி எறிந்த போதும் அவளைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டு நிற்கும் வசந்த்."

காற்றில் ஆடும் கேசமும், துரு துரு கண்களும் , நேர்த்தியான உடையும், அவனை பார்த்தபடியே நின்று விட்டாள் அர்ச்சனா.

உதடுகளில் ஓடிய புன்னகையுடன் மெல்ல மெல்ல அவள் முகத்தை ஆராய்ந்தான் வசந்த்.

மனோ சற்று குனிந்து புன்னகையுடன் அவள் முகத்தை ஆராய்ந்தான். அந்த நொடியில் சட்டென இயல்புக்கு வந்தவளாய்

"வசந்த் தானா ? இதுக்குதான் இவ்வளவு பில்டப் குடுத்தியா? என்றாள் சாதரணமாய்.

திகைத்தே போனான் மனோ.

"என்ன மனோ நீ.? முதலிலேயே வசந்த் வீட்டுக்கு போறோம்ன்னு  சொல்லியிருந்தேனா நான் ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பேன். இப்போ பாரு வெறுங்கையோட வந்திருக்கேன்."

அவள் முகத்தைப்பார்த்தப்படியே நின்றிருந்தான் வசந்த். "என்ன சொல்ல வருகிறாள் இவள்.?

"அப்புறம் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு வசந்த்?"  என்றாள் வெகு இயல்பாய். "நீ எப்போ பெங்களூர் வந்தே ? நாம ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ் தானா? எதுவுமே சொல்லலை பாரு இந்த மனோ." என்றபடியே ஸோபாவில் சென்று அமர்ந்தாள் அர்ச்சனா.

"ஆக்சுவலா எனக்கு நேத்து வரைக்கும் உன் ஞாபகமே இல்லை வசந்த். நேத்து திடீர்னு இந்த புடவையை பார்த்தவுடனேதான் உன் ஞாபகம் வந்தது." நிதானமாக சொன்னாள் அர்ச்சனா.

எதுவுமே பேசாமல் அவள் முகத்தை ஆராய்ந்த படியே நின்றிருந்தான் வசந்த்

" நேற்று நடந்ததை இப்படி கூட சொல்லலாமா?" சுள்ளென்று ஏறியது மனோவின் கோபம் "என்ன காட்டிக்கொள்ள விரும்புகிறாளாம்? அவள் இயல்பாய் இருக்கிறாள் என்றா? அவள் மனதில் வசந்த் இல்லையென்றா? இல்லை அவளுக்கு மனமென்ற ஒன்றே இல்லையென்றா?

"நான் கிளம்பறேண்டா ஆபீஸுக்கு டைம் ஆச்சு" ஏதாவது தவறாக பேசிவிடக்கூடாது  என்று எண்ணியபடி மனோ நகரப்போன நேரத்தில் சட்டென கேட்டாள் அர்ச்சனா

"கல்யாணம் ஆயிடிச்சுதானே வசந்த் உனக்கு? உன் கல்யாணத்துக்குதான் கூப்பிடலை உன் wife எங்கே? நான் அவங்களையாவது பார்க்கணும்.

கொதித்தே போனான் மனோ. சட்டென்று அவள் அருகில் வந்து சொன்னான்

"அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அவன் wife உன்னை விட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு நல்ல பொண்ணு. அவனை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கறா போதுமா? ஊருக்கு போயிருக்கா வந்ததும் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்"

" நான் வரேன்டா " நகர்ந்தான் மனோ.

வாசலுக்கு வந்தவனை தொடர்ந்து வந்தான் வசந்த்.

"ராட்ஷசி! நடிக்கிறாடா. அவ அப்பாவுக்காக நடிக்கிறா. உனக்கும் அவளுக்கும் எதுவுமே இல்லையாமாம். உன்னை மறந்துட்டாளாம் சொல்லாம சொல்றாடா"

பதில் சொல்லாமல் சிரித்தான் வசந்த்.

"முன்னாடியே சொல்லியிருந்தா ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பாளாம். என்ன தந்திட முடியும் அவளாலே? உன் பாசத்துக்கும், நீ இழந்த இழப்புக்கும், அவளையே மொத்தமா கொடுத்தாலும் ஈடுக்கட்ட முடியாது." பொங்கினான் மனோ.

அவன் தோள்களை பற்றி அழுத்தினான் வசந்த். " சரி விடுடா. நீ கிளம்பு"

"ஆயிரம் தடவை சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். அவளை தூக்கி போட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ .உன் மனசுக்கு நீ சந்தோஷமா இருப்பே"

சிரித்தான் வசந்த். "டைம் ஆச்சு பாரு. நீ கிளம்பு"

"லூஸுடா நீ. உலகமகா லூஸு. எவ்வளவு அனுபவிச்சாலும் திருந்த மாட்டே" புலம்பிக்கொண்டேதான் சென்றான் மனோ. அவன் மனம் முழுக்க ஆதங்கம். நண்பனுக்கான ஆதங்கம்.

ள்ளே வந்தான் வசந்த். தன் உள்ளங்கைகளுக்குள் முகத்தை புதைத்தபடி அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

அவன் காலடி சத்தத்தில் நிமர்ந்தவள் "கிளம்பலாமா வசந்த்" என்றபடி எழுந்தாள்.

"போலாம் போலாம் உட்காரு. ஒரு காபி குடிச்சிட்டு போலாம்" அவள் பதிலையே எதிர்பாராமல் சமையலறைக்குள் நுழைந்தான் வசந்த்.

அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இரண்டு கோப்பைகளுடன் வந்து ஒன்றை அவளிடம் நீட்டிவிட்டு அவள் எதிரில் அமர்ந்தான்.

அவன் எதிரில் அமர்ந்து ஏதோ சொல்லத்துவங்கியவளை தன் உதடுகள் மீது கை வைத்து நிறுத்தினான்

"உஷ்! போதும் நிறைய பேசியாச்சு. காபியை முடிக்கிற வரைக்கும் ஒரு வார்த்தை பேசக்கூடாது."

காபியை மெது மெதுவாய் ருசிக்க துவங்கினான்.

இருவருக்குமிடையில் வெறும் மௌனம் மட்டுமே நிலவிக்கொண்டிருந்தது.

தவிர்த்து, தவிர்த்து பார்த்தவளின் கண்கள் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் கண்களை சந்தித்தே விட்டன.

அவள் கண்களுக்குள் பார்த்துகொண்டே இருந்தான் வசந்த். அவன் இதழ்களில் மெல்ல மெல்ல புன்னகை ஓடத்துவங்கியது.

"என்ன சொன்னதாம் அந்தப்புன்னகை?" " நீ என்ன பேசினாலும் என்னவள்தான் என்றா?"

அடுத்த நொடி சரேலென நிரம்பி விட்டிருந்தன அவள் கண்கள். சட்டென காபியை முடித்துவிட்டு எழுந்துவிட்டிருந்தாள். வேறு புறம் திரும்பி கண்களை துடைத்துக்கொண்டாள் அர்ச்சனா.

எப்படியாம்? எப்படியாம் அது? அவனை மறந்தே விட்டாளாம். அந்த புடவைதான் ஞாபகபடுத்தியதாம். சிரித்துக்கொண்டான் வசந்த்.

எப்போதுமே அவள் கண்ணீர் அவனை சுட்டுவிடும். சற்று நிலைதடுமாறித்தான் போவான். ஆனால் இந்தமுறை அப்படி தோன்றவில்லை அவனுக்கு.

அந்த மூன்று சொட்டுக்கண்ணீர் அவள் வார்த்தைகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி போட்டுவிட்டதைப்போல் தோன்றியது.

"போதுமடிப்பெண்ணே. என் மூன்று வருட காத்திருப்புக்கு இது போதும்."

ஆபீஸுக்கு கிளம்பி விட்டிருந்தனர். காரை செலுத்திக்கொண்டிருந்தான் வசந்த். அவன் அருகில் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

சென்னையில் அதே நேரத்தில் மனம் நிறைய குழப்பத்துடன் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார் அர்ச்சனாவின் அப்பா.

மனோவின் திருமணதிற்கு பிறகு இவருடைய அண்ணனான மனோவின் அப்பாவிற்கும் இவருக்கும் பேச்சு வார்த்தையே நின்று போயிருந்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து கடந்த மூன்று, நான்கு மாதங்களாக மனோ திடீரென்று நெருங்கி வந்ததே அவருக்குள் சந்தேகத்தை கிளப்பிக்கொண்டுதான் இருந்தது.

நேற்று அவர் கண்ணால் 'அதை' பார்த்துவிட்ட பிறகு அவர் நிம்மதி காணாமல் போய்விட்டது.

அவர் மனம் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறது

" வசந்த் பெங்களூரில் இருக்கிறானா? அர்ச்சனாவை தேடி வருவானா?

காரில் அமர்ந்தபடியே தன் கையிலிருந்த கைபேசியை பார்த்தாள் அர்ச்சனா.

காலையில் அவள் அழைத்ததோடு சரி. அதன் பிறகு அப்பா அழைக்கவில்லை.என்னவாயிற்று அவருக்கு? யோசனையுடன் அதை காரின் டேஷ் போர்டில் வைத்த போது அதன் திரையில் இருந்த அவள் அப்பாவின் புகைப்படம்  ஒளிர்ந்தது.

இயல்பாய் திரும்பிய வசந்தின் கண்ணில் சட்டென பட்டது அந்த புகைப்படம். அடுத்த நொடி மெல்ல மெல்ல மாறத்துவங்கியது அவன் முகம்.

அவன் முக மாறுதலை கவனித்தவள், சட்டென ஏதோ நினைவு வந்தவளாய் கேட்டாள்

" உங்க அப்பா நல்லா இருக்காரா வசந்த்?"

அந்தக்கேள்வி அவனுள்ளே ஒரு பிரளயத்தையே நிகழ்த்தியது. அந்த தினம், அவன் அப்பா தன்னை மாய்த்துக்கொண்ட அந்த தினம் அவன் கண்முன்னே நிழலாட அவன் உடல் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது.   

தொடரும்

Manathile oru paattu episode # 02

Manathile oru paattu episode # 04

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.