(Reading time: 39 - 77 minutes)

25. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

லுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் மாலை மதுவை தனது வீட்டிற்கு அழைத்தாள்  சந்தியா. மதுவோ மலைத்த படி,

“அன்னைக்கே நடு ராத்திரி முழிப்பு வந்து பயந்துகிட்டே இருந்தேன். ரொம்ப நேரம் தூங்கவே இல்லை. எப்படா எங்க வீட்டுக்கு போவோம்ன்னு இருந்தது. உங்ககிட்ட சொன்னா வருத்தப் படுவீங்கன்னு தான் சொல்லலை. நான் வீட்டிலே படுக்கிறேன் ப்ளீஸ்”, என்று பயந்து கொண்டு வர மறுக்க, இந்த முறை  அவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன் என உறுதி அளித்து அவளிடம் ஒப்புதல் வாங்கினாள்.

பின் மது, சந்தியாவிடம், “இந்த நிரு ஜீராவோட சிரிப்பில தான் வாழ்க்கையே இருக்குன்னு சொல்றான். அவ காதலை நிராகரித்து விட்டால் நிரு பாவம். அதான் அந்த ஜீராகிட்ட நிருக்காக பேசலாம்ன்னு நினைக்கிறேன்“ என்றாள்.

“என்னது நீ பேசப் போறியா? எதுக்கு?” அதிர்ந்து கேட்டாள் சந்தியா.

“நிரு ஜீரா பத்தி சொல்றப்போ அழுது முகம் எல்லாம் வீங்கி போய் வந்தான் தெரியுமா? நான் என்ன பேபியா அவன் அழுதது கூட தெரியாம இருக்கிறதுக்கு. கேட்டா ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டான். இந்த அளவுக்கா லவ் பண்ணுவாங்க? அந்த ஜீரா என்ன சொல்லுமோன்னு எனக்கே டென்ஷனா இருக்கு…அது யாரு என்னன்னு கேட்டு பார்ப்போமா? நாம கூட ஜீராகிட்ட பேசலாமே! " அவனுக்காக வருந்தி சந்தியாவிடம் யோசனை  கேட்டாள் மது.

"முதல்ல உன்னை லவ் பண்றவனை கண்டுபிடி. அப்புறமா பொதுச் சேவை செய்" ஆர்வமின்றி சொன்னாள்  சந்தியா.

“அதுக்கு அவசியம் இல்லை. இங்க பாரு“ என்று தனது போனில் கார்த்திக் முந்தைய நாளே  அனுப்பிய மின்னஞ்சலை காண்பித்தாள்.

"அடுத்த வாரம் சென்னைக்கு கான்பரென்ஸ் வர்றப்போ  ஹோட்டல் பார்க்கில் சந்தியா சொன்னவரை உனக்கு   அறிமுகப்படுத்துறேன். நீ என்ன பண்ற... சக்தி, சந்தியா கூடவே  சென்னைக்கு வந்துடு. நம்ம பீச் ஹௌஸ்ல அவ காலேஜ் பிரண்ட்ஸ் கூட  தங்கிக்கோ. இதை சொன்னவுடனே அய்யோ வீட்டை விட்டு வெளிய தங்க பயமாயிருக்குன்னு சிணுங்குறது எனக்கு கேக்குது  மொட்டை…. அதுக்கு தான் மச்சான் உன் பேவரெட் சுலோ பாட்டியை கம்பெனி குடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்...ஹேப்பியா பிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு  க்ரைபேபி! இன்னொரு விஷயம்... நானும் நிருவும் வெள்ளிக்கிழமையே அங்க வந்து உங்க கூட ஜாயின் பண்ணிக்குவோம். இதை என் பேய்க்கிட்ட சொல்லிடாத!”  என்று இருந்தது அந்த மின்னஞ்சல்.

அவனை பார்க்க போகிறோம் என குதித்த உள்ளம் கடைசி வரியை பார்த்ததும் யோசனையாய்  “என்கிட்ட சொல்லாதன்னு போட்டிருக்கார் கார்த்திக் “  என கேட்டாள் சந்தியா.

“அதான் சொல்லலை. நீயே பாத்துக்கோ“ என்றாள் மது புத்திசாலித்தனமாக.

“சூப்பர்!!! மது!  இப்போ தான் பூ வோட சேர்ந்த நாரா மணக்க ஆரம்பிச்சிருக்க” என்று சிரித்த படி அவளை பாராட்டினாள்.

“ஹே சுலோ பாட்டி அத்தையோட அம்மா. எனக்கு என் பாட்டி அளவுக்கு சுலோ பாட்டி பிடிக்கும்.  எங்க பாட்டி மாதிரி ஸ்ட்ரிக்ட் கிடையாது. பாசக்காரப் பாட்டி. எங்க பாட்டிக்கு நான் சுலோ பாட்டி கூட பேசுனா பொறாமை வரும்...“ என்று பாட்டி சண்டைகளை பற்றி கதை சொல்ல, சந்தியா ஒப்புக்கு தலையாட்டிக் கொண்டே அவன் வருகையை எண்ணி மருகினாள்.

ந்தியா வீட்டில் தோழிகள் அரட்டை ஆரம்பித்த நேரம் நிரஞ்சன் அழைப்பு வர, சந்தியாவும் சக்தியும் மதுவிற்கு தனிமை அளித்து சிட்டாய் பறந்து விட்டனர்.

மது நிரஞ்சனிடம் ஜீராவை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க ஏன் இப்படி ஜீரா சிரித்தால் போதும்னு நினைகிறீங்க. ஒருத்தவங்க முடியாதுன்னு சொன்னா வேற வாழ்க்கைக்கு உங்களை தயார் பண்ண பழகுங்க நிரு“, அறிவுரையை அவிழ்த்து விட்டாள்.

“அது முடியாது. நான் வேற வழ்க்கு ரெடி ஆகாது”, உறுதியாக சொன்னான் நிரு.

“ஜீராவை எத்தனை வருஷமா லவ் பண்றீங்க?”, கேட்டாள் மது.

“அதே பாத்தப்போ இருந்து….”, என்றாள் நிரு.

“கண்டதும் காதலா” கேட்டாள் மது.

“அப்படி இல்லே! ஆனா, ஜீரா நேரில் பாத்த பின் ஜீரா மட்டம் தான் முட்வு பண்ணது” என்றான் நிரஞ்சன்.

“ஜீரா மட்டம் தான் முடிவு பண்ணீங்களா...இது தெரிஞ்சா ஜீரா அடி பிச்சு பிச்சு” போலியாக மிரட்டி சிரித்து

“ஜீரா மட்டும் தான்”ன்னு சொல்லணும் “ என திருத்தினாள்.

“ஜீரா மாட்டும் தான்”, என்றான் மீண்டும் பிழையாக.

“கண்டிப்பா மாட்டும். கவலைப் படாதீங்க “ சொல்லி சிரித்து விட்டு மீண்டும் அவனுக்கு சரியான உச்சரிப்பை சொல்லிக் கொடுத்தாள்.

“மது உனக்கு  ரொம்ப பொராமே “, நிரு.

“பொறாமையா ? எனக்கா? ”, புரியாமல விழித்தாள்.

“இல்லே. பொர்மே… ஐ மீன் பேஷன்ஸ்”

“ஓ..பொறுமையா….ஜீராவுக்காக தமிழ் படிக்கணும்ன்னு நினைக்கிறீங்களே! உங்க பொறுமை கடலினும் பெரிது. எனக்கு ஜீரா மேல பொறாமை தான். உங்க கூட லைப் லாங்கா இப்படி பேசுறதை கேட்டு சிரிக்கிற பாக்கியம் கிடைக்குதே. அவங்க  மலேசியாவா?”

“சிட்டிசன்ஷிப் வாங்கலே… வில் கெட் இட் சூன்”

“நீங்க தமிழ்ழே பேசுங்க நிரு..அப்போ தான் பழக்கம் வரும். ”

“சிட்டிசன்ஷிப்க்கு தமிலே என்னது?”, கேட்டான் நிரு.

“குடிமகள்”, என்றாள் மது.

“குடி மீன்ஸ் டரின்கிங்… ட்ரிங்கிங் கேர்ள்???!!!!” புரியாமல் கேட்டான் நிரஞ்சன்.

“குடி ன்னா அந்த குடி இல்லை….அய்யோ  என்னால விளக்கம் கொடுக்க முடியலை… நான் டிக்னரி பார்த்துட்டு நாளைக்கு சொல்றேன். ஜீராகிட்ட இன்னும் ஏன் உங்க லவ்வை சொல்லலை?“, மீண்டும் அவனை கேள்வியால் துளைத்தாள்.

“அடுத்த மல்லு நிலா வருது முன்னாடி  நான் சொல்லுது.  ”, நிரஞ்சன்.

“மல்லு நிலாவா?? மல்லுன்னா மலையாளி தானே… அப்போ அடுத்து நிலாக்காக மலையாளம் படிக்க போறீங்களா?”, கிண்டலாய் கேட்டாள் மது.

“இல்லே நான் பூர்ணிமா சொல்லுது ......”

“பூர்ணிமா எந்த ஸ்டேட்? இருந்தாலும் உங்க நாட்டு பற்று சூப்பர்… வேற்றுமையில் ஒற்றுமையா… “, கிண்டலடித்தாள் மது.

“அது கேர்ல் நேம் இல்லே….புல் மூன் அதே சொல்லுது. மல்லு நிலா “, என்றான் நிரஞ்சன்.

“ஓ...முழு நிலாவை மல்லு நிலான்னு சொல்றீங்களே... அய்யோ நீங்க சொல்றதை புரிஞ்சிக்க தலையை பிச்சிகிடலாம் போல இருக்கு….” என்றாள் மது.

அடுத்து தொடர்ந்த உரையாடலில் ஜீராவை பற்றி விசாரிக்க ஆரம்பிக்க, நிரஞ்சன் அவளுக்கு சந்தேகம் வராத வண்ணம் அந்த பேச்சிலிருந்து நழுவுவதுமாக முடிந்தது.

ன்றைய இரவு லக்ஷ்மியிடம் சாக்கு சொல்லி அவரை கழட்டி விட்டு தோழிகள்  சந்தியா அறையிலே படுத்துக் கொண்டனர். சக்தியும் சந்தியாவும் அவளுக்கு சில விவகாரமான ஜோக்குளை சொல்ல, மது பேந்த பேந்த விழிக்க, இவர்கள் அர்த்தத்தை விவரித்ததும் முகத்தை சுழித்து ,

“இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?” அதிசயமாய் கேட்பதும்,

“உனக்கு 23 வயசுல இது கூட தெரியலன்னா உன்னை பேக்குன்னு சொல்லுவாங்க” என்று அவர்கள் சொல்வதும்,

“ஹே… நான் பிக் கேர்ல் தான்...பேக்கு கேர்ல் இல்லை” என வாதாடுவதுமாக அரட்டை அடித்து ஓய்ந்து போய் கண்களை சொருகினர்.

நடுநிசியில், தெருவில் நாய் குழைக்கும் சத்தம் மெலிதாக கேட்டது திடுக்கிட்டு விழித்த மதுக்கு, வேர்த்து கொட்டியது. இதயம் பலமடங்கு வேகத்தில் அடிக்க, ‘லப்டப்’ சத்தம் அவள் காதுகளில் தெளிவாக கேட்டது, திடீர் என்று ஒரு வித பயம் நாடி நரம்புகளுக்குள் பரவ மிரண்டவளாய் கை கால்களை சுருக்கி கண்களை இறுக மூடிக் கொண்டு, “நோ மம்மி, ப்ளீஸ் மம்மி” நடுக்கத்துடன் உதடுகள் தானாக உச்சரிக்கும் பொழுது  உடலும் கிடுகிடுவென நடுங்கியது. அவள் முனங்க ஆரம்பித்த சில நொடிகளில்,

“மது”  என ஒரே நேரத்தில் மென்மையாய் அழைத்தனர் சக்தியும் சந்தியாவும். சந்தியா எழுந்து போய் விளக்கை ஆன்  செய்ய, சக்தி ஆதரவாய் மது முடியை கோதிய படி, “பயப்படாத மது! “ இதமாக மெல்லிய குரலில் சொன்னதும், மதுவிற்கு முகத்தில் லேசாக தெளிவு பிறக்க சில நொடிகளில் தன்னிலைக்கு வந்தாள். அவளாக பேசட்டும் என காத்திருந்த இருவரிடமும்,

“நீங்க தூங்கலையா ??” , வியந்த படி வினவினாள் மது.

“அரட்டை அடிக்கிறதுக்கு மட்டும் தான் பிரண்ட்ஸ்ன்னு நினைச்சியா?” கேட்டாள் சக்தி.

“இந்தா பிடி…” கையில் இருந்த போனை கொடுத்தாள் சந்தியா…

போனை வாங்கி காதில் வைத்தவளிடம்,

“நீரா ரூம் காட்லே  எடுத்தே

நில்லாம ஆட...அந்த   கேலி லொல்லுகும்  

சீரா ரூம் வதனா மீனா திகில்  பார்த்தே  கண்டம் ஆதல்  “

எதிர் முனையில் நிரஞ்சன் ஏற்ற இறக்கத்தோடு மெய் மறந்து தமிழ் தாய் வாழ்த்து பாட, மதுவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை…அவள் சிரித்து முடித்தவுடன்,

“மதுக்கு  பேய்மா? எனக்கு கால் பண்ணது. சிரிக்குது. இப்போ தூங்குது. குட் நைட்” என்றான் நிரஞ்சன்.

“இன்னும் தூங்கலையா நிரு? “, மது வியப்பாக கேட்டாள்.

“சந்தியா ப்ளான் பண்ணி கால் பண்ணுது.  உனக்கு பேயம் போனதா?”

“நிரு எனக்கு பயம் போயே போச்சு. நடுராத்திரி எழுந்தது கஷ்டமா இல்லையா?” கரிசனத்துடன் கேட்டாள் மது.

“இல்லே. எப்போன்னாலும் நான் உன் கூட பேசி தமில் புல் மேய வழுக்குது.”, என்றான் நிரு.

அவன் சொல்வதைக் கேட்டு சிரித்தவள், “புலமை வளர்க்க, விடா முயற்சி! இருந்தாலும் தேங்க்ஸ் நிரு”, நெகிழ்ச்சியுடன் சொன்னாள்.

“சந்தியா, சக்தி போல நானும் ஹெல்ப் பண்ணுது... பேயமா இருந்தா எப்போ வேணா கால் பண்ணுது. நான் தமில் தாய் பாடுது. மது சிரிக்குது.  நல்லா தூங்குது.”, கொஞ்சம் கூட எரிச்சல்  காட்டாத அதே அக்கறை கலந்த நட்புடன்  அவன்  பேசிவது  மதுவை கவர்ந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.