(Reading time: 32 - 64 minutes)

26. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ந்தியா நான் கட்டிக்கப் போறவ. அனாவசியமா அவ ஒழுக்கத்தைப் பத்தி பேசுறது எனக்கு பிடிக்கலை மம்மி”, மிதமான கோபத்தில் சற்று அழுத்தமான குரலில் கார்த்திக் சொல்வதை கேட்டு அதிர்ந்தனர் அனைவரும். அவன் வெளியிட்ட திருமண செய்தி எல்லாருக்கும் பிடித்தமானது என்றாலும், அதைக்கேட்டு மகிழும் நிலையில் யாரும் இல்லை....!

 

அதுவரை கார்த்திக்கும், சௌபர்ணிகாவும் பேசியதை கண்டு மனதில் இருந்த கோபத்தை அடக்கி இருந்த சதாசிவம், “காதி, என்ன தான் கட்டிக்க போற பொண்ணா இருந்தாலும் கண்ட கண்ட தியேட்டர்க்கு போறவன்னு கீழ்த்தரமா பேசுறது தப்பு. அந்த நேரமே  கன்னத்தில் பளார்ன்னு அறையனும்ன்னு இருந்தது. நீ பேசியது சந்தியாவுக்கோ  இல்ல அவங்க பெத்தவங்களுக்கோ கேட்டா சங்கடமா இருக்காது? முதல் முறையா இப்படி ஒரு பிள்ளையை பெத்துட்டுமேன்னு வேதனைப் பட வைத்துட்ட காதி“, வருத்தத்துடன் முடித்தவரை கண்டு அதிர்ந்தான்.

 

“நீங்க வேதனை படுற அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்? கோபத்தில் கூட ஐ டின்ட் மீன் எனிதிங் ராங். சாருலதா தியேட்டர்ஸ்ன்னு அந்த லேடி பேரைக் கூட சொல்ல வெறுப்பா இருந்தது. அதான் அந்த வெறுப்புல கண்ட தியேட்டர்ன்னு சொன்னேன். சந்தியா மாதிரி மதுவால நம்ம ஊருக்குள்ள அவ்வளவு ஈஸியா நடமாட முடியாது.... இன்னார் பொண்ணுன்னு தெரிந்தா மது  காது படவே ஏதாவது சொல்லுவாங்க. இதை நாசூக்கா மதுகிட்ட இப்படி தான சொல்ல முடியும்? இவங்க எங்க போறாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இந்த ப்ராப்ளமே வந்திருக்காது. கொட்டை எழுத்தில தியேட்டர் பேரைக் கூட பார்க்காம  சந்தியா சொன்னான்னு கண்ணை மூடிகிட்டு போனவளை திட்டக் கூடாதா? இவங்க ரெண்டு பேரையும் கண்டிக்க எனக்கு உரிமை இல்லையா?” ஆதங்கமாய் கேட்டான் கார்த்திக்.

 

“உரிமைக்கு வரம்பு இருக்கு. உன்னுடைய வார்த்தை பிரயோகம் சரியில்லை. அது அவங்க மனசை நோகடிக்கும் காதி. மதுவை மத்தவங்க நோகடிக்கக் கூடாதுன்னு சந்தியாவை வார்த்தையால் வதைக்கிற. என்னைக்காவது மத்தவங்க முன்னிலையில் மீராவை நான் திட்டி பார்த்து இருக்கியா?”, கார்த்திக்கின் தலையில் உரைக்கும் படி கேட்டான்  சூர்யா.

 

“ஹய்யோ....” என்று நெடிய மூச்சை விட்டவன், “இதுக்கு தான் நான் கோபத்தில் இருக்கிறப்போ பேசுறதே கிடையாது. அப்படியேனாலும் இங்கலிஷ்ல திட்டுடுவேன்....தமிழ்ல சொன்னா டிசைன் டிசைன்னா புள்ளி வச்சு கோலம் போடுவீங்க”, எரிச்சலாக பதிலளித்தான்.

 

“எந்த மொழில பேசினாலும் கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது.“ பதிலுக்கு எரிச்சலாய் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார் சதாசிவம். குற்ற உணர்ச்சியில் யோசனையுடனே கார் சாவியை எடுத்தான்.

 

கார்த்திக் என்ன தான் கோபம் என்றாலும் அடுத்த சில நொடிகளில் சமாதானம் பேச வந்து விடுவான்.. அவன் பேசவில்லை என்ற ஏமாற்றமும், சந்தியாவின்  முகத்தில் தெரிந்த கவலையும் மது மனதை பிசைந்தது.

 

வீட்டை நோக்கி கார் சென்று கொண்டிருக்க  தனக்கு யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா என சக்தியைப் பார்த்தாள். அவளோ தன் அம்மாவிடம் வாயடித்துக் கொண்டிருந்தாள். “நான் இவங்களுக்கு மகளா பிறந்திருக்கலாம்“, பட்டு மாமியை பார்த்து ஏக்கம் தொற்றிக் கொண்டது.

 

பாட்டியின் மறைவிற்கு பின் இன்று போல் வருந்தும் நிலை இதுவரை அவளுக்கு யாரும் உருவாக்கியது இல்லை...

”வீட்டிற்கு போனதும் மீராக்காகிட்ட கொட்ட வேண்டியது தான்” எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்ததும் மீராவை தேடி ஓடினாள். அப்பொழுது தான் மீரா குழந்தைகளை தூங்க வைக்க முயன்று  கொண்டிருந்தாள்.

 

மது அவளை அழைத்ததும் “வா மது... ஷாப்பிங் எப்படி போச்சு?”

 

“அது நல்லா தான் போச்சு மீராக்கா. ஆனா இந்த காதி” என வேகமாக சொல்ல ஆரம்பிக்கும் சமயம்,

 

“மாம், நித்தி முடி இழுக்குறா”, சிணுங்கினாள் நிக்கிதா.

 

“நித்தி”, என அதட்டினாள் மீரா நித்திஷாவைப் பார்த்து.

 

“நிக்கி கிக்டு பர்ஸ்ட்..யு ஆல்வேஸ் திட்டு மீ”, மழலையாய் சிணுங்கினாள் நித்திஷா.. அவள் சொல்லி முடிப்பதற்குள் நிக்கிதா அவளைத்  தள்ள, நித்திஷா பதிலுக்கு தள்ள, சண்டயை மூள, இருவரையும் மீரா அதட்ட, ஓவென ஒன்றாக அழ ஆரம்பித்தனர். குழந்தை அழுதாலே பதறுமே தாய் மனம்! மீரா மதுவிடம்,

 

“மது நேப் டைம்... தூங்கற வரைக்கும் க்ராங்கி ஆகிடுவாங்க. நான் தூங்க வச்சிட்டு வந்து உன்கூட பேசுறேன்’ என சொன்னதும் லேசாக ஏமாற்றம் எட்டிப் பார்க்க தலையாட்டலுடன் கிளம்பினாள்.  

 

“மகளைப் பார்க்க சென்ற நல்ல சிவம், மகன்களோடு நேரம் ஒதுக்கும் சதாசிவம், குழந்தைகளுக்கு பார்க்கும் மீரா, எனக்கு யார்? இத்தனை பேர் இருந்தும் எனக்குன்னு யாருமே இல்லையா?” தீடீர் என்று தனிமைப்படுத்தப் பட்ட உணர்வு..

 

அழுத குழந்தைகளை கிச்சு கிச்சு மூட்டி விளையாட, கலகலவென்று சிரித்த குழந்தைகளை அணைத்து “என் ஸ்வீட் செல்லங்களா..” என மீரா கொஞ்சும் சத்தம் வெகு தூரம் தள்ளி வந்தாலும் சன்னமாக கேட்க, ஏக்கத்துடன் நெஞ்சு பாரமாக ஓடிப் போய் தனது கட்டிலில் விழுந்து அழுதாள்...வெகு நேரம் அழுதவள், பின்,

 

“எதுக்கு மது அழுகுற?...ஆறுதல் சொல்லக் கூட உனக்குன்னு  யாரும் இல்லயே! பாட்டி கூடவே போயிருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது!”, சுய பச்சாபிதாபம் மன இறுக்கத்தை அதிகரிக்க, விரக்தியுடன் எழுந்தவள் கடனே என போனை நோண்டினாள்... முந்தைய இரவு நிரஞ்சன் விசாரித்ததாக கார்த்திக் அனுப்பிய செய்தி கண்களில் பட்டது.

 

நிரஞ்சன் தனது அலுவலக உயர்நிலை ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்...”வேலை நேரத்தில் சொந்த அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முடிந்த மட்டும் தவிர்ப்பது நல்லது..” எனும் பொழுது மது அழைப்பு வர, கண்கள் ஒளிபெற்று அதை எடுக்க போனவனின் மீது அனைவர் பார்வையும் விழுந்தது. “கேர்ள் ப்ரண்ட் கால்? யு கான்ட் மிஸ் இட் அட் ஆல் ”  மதுவிடம் இருந்து வந்த முதல் அழைப்பிற்கே பெருமையடித்துக்  கொண்டு அறையை விட்டு வெளியேறி அழைப்பை எடுத்தான்...

 

“நிரு” என்றாள் கேவியது படி...

 

“மது அழத்து?”, அதிர்ச்சியும், கவலையுமாய்  கேட்டான் நிரு.

 

“ம்ம்ம்... எனக்குன்னு யாரு இருக்கா? அதான்” , சொல்லிக் கொண்டே அழுதாள்...

 

“நான் இருக்குது... ஒய் வொர்ரி. கீப் ஸ்மைலிங்!”, ஆறுதலாக.

 

“உங்களுக்கு ஜீரா இருக்காங்களே”, குழந்தை போல கேட்டாள் மது.

 

“மதுவும் ஜீராவும் ஒன்னு... “ என்றவன் வேகமாக, “ஒன்னு இல்லே ரண்டு...லைக் ரண்டு கன்... என்கு ரண்டு கன் மாறி”, சமாளித்தான்.

 

“இல்லை...பொய். நீங்க ஜீராவை லவ் பண்றீங்க. அவங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பீங்க”, சிணுங்கியவாறு சொன்னாள்...

 

“நான் கீதா மால கை வெக்கவா?, கேட்டான் நிரு.

 

‘கீதா மேல கையை வைக்கவாவா??!!!”, அதிர்ச்சியாய் கேட்டாள் மது.

 

“நோ தபூ... “, என்றான் நிரு.

 

“தபூ? “, மது.

 

“இல்ல.... தப்ப்பூ... நான் கீதா சொல்லுது....பகவத் கீதா மால ப்ராமிஸ் பண்ணுது. உன்க்கு மா, பாபா அண்ட் ப்ரண்ட்டா நான் இர்க்குது.... கீப் ஸ்மைலிங்”, என்றான் உறுதியான குரலில்.

 

அவன் சொன்னது மனநிறைவைத் தர சிரித்தாள் மது. “உங்க கூட பேசி தமிழ் மறக்குது. அந்த து தொத்திக்குது... “

 

“தேட்ஸ் ஓகே. பட், நீ கேவலப்பட கூடாது!”, அக்கறையாய் சொன்னான்.

 

அவன் பிழையாய் சொல்வதை கேட்டு, “அய்யோ... முடியலை நிரு... “ சொல்லி விட்டு சிரித்தாள்...

 

“இப்போ நான் தமில் பாட்டு படிக்குத்து...நீ சீறுக்குது”

 

“நைஞ்சுக்கள் பேய்த்திடும் மாமூலே..

நரிக்கள் முல்ங்கட்டும் தாமூரே...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.