(Reading time: 23 - 45 minutes)

08. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

தோ இதோ என்று நினைத்து முதல் ஆண்டு பரீட்சை முடிந்து, விடுமுறை நாட்களும் முடிந்து, இரண்டாம் வருட கல்லூரி காலம் துவங்கியது. விடுமுறை நாட்கள் முழுவதும் வீட்டில் சகல கவனிப்புகளும் குறை இல்லாமல் நன்றாக நடந்தது விடுதி மாணவ மாணவிகளுக்கு. விடுமுறையில் அவ்வப்போது அனன்யாவின் நினைப்பு அஸ்வதிற்கும் அஸ்வத்தின் நினைப்பு அனன்யாவிற்கும் வந்து போனது. ஒரே ஊராக இருந்தாலும் சொல்லி வைத்து சந்திக்கும் அளவிற்கு இருவருக்கும் தோன்றவில்லை தொலைபேசியில் அழைத்துக்கொண்டனர் ஆனால் அதுவும் காரணம் இல்லாமல் அழைக்க வெட்கமாக இருந்தது. தேஜுவும் அவளது அன்னையும் விடுமுறை நாளில் சுற்றுலா சென்றுவிட, தேஜுவும் அனன்யாவும் தொலைபேசியில் மட்டும் மணிகணக்கில் பேசிக்கொண்டனர்.

மற்ற நாட்களிலேயே மணிகணக்கில் பேசுபவர்கள், தேஜு அவளது புதியவனை பற்றியும் அனு அஸ்வத் பற்றியும் பேசியே நாட்களை கடத்தினர். இன்னும் 20 நாட்கள், இன்னும் 10 நாட்கள் என்று எண்ணி விடுமுறையும் முடிந்தது. விடுமுறை துவங்கும் போது வந்த சோர்வு பறந்து போக புதிய துள்ளலுடன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர். இப்போது தாங்கள் ஒரு வருட சீனியர் என்ற பெருமையே அருண் மற்றும் குழுவினருக்கு தலையில் ஒரு கொம்பினை தந்தது.

இரு ஜோடிகளின் நிலை இப்படி இருக்க, ஒரு ஜோடி புறாக்கள் மட்டும் கனவிலேயே காதலித்தனர். தேர்வும் முடிந்தது அடுத்து பேச்சு எழக்கூடாதே என்று எண்ணி அடுத்த மாதமே எம்.பி.எ சேர்ந்தாள் அஹல்யா. வேலையின் சுமை அதிகரிக்க அர்ஜுன் வீட்டிற்கு வருவதே குறைந்துப் போனது. ஒரு நேரம் மற்றவரின் நினைப்பு மலைபோல் எழுந்து காதலை பெருகினாலும் மறு நிமிடமே வருத்தமாக இருந்தது. ஜோடி ஜோடியாக செல்பவர்களை பார்க்கும்ப் போதெல்லாம் கோவமாக வந்தது அர்ஜுனுக்கு. ஆனால் ஏதோ ஒரு உள் உணர்வு மட்டும் அவளை விரைவில் சந்திப்பாய் என்று கூறியது. அதே நம்பிக்கையில் காலம் தள்ளினர் இருவரும்.       

****சென்னை****

றையின் ஒரு ஓரமாக ஜன்னல் வழியாக இரவு நேர குளிர் காற்றை திவட்டாமல் ரசித்தவாறு ஒரு கையில் பென்னையும் மடியில் தனது பர்சனல் டைரியை விரித்து வைத்துக்கொண்டு மறுக்கையில் ஒரு அழகிய சில்வர் ரிங்கை வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டு இருந்தாள் அனு.

பெரிய வேலை பாடுகள் இன்றி வெறும் வளையமாக இருந்தது. அதன் மேல் rough கோட்டிங் கொடுக்கப்பட்டு அதில் ‘A ‘ என்று வளைவாக மெலிதாக செதுக்கிருந்தது. தன் விரல்களால் அதை ஆட்டிக்கொண்டே அந்த ரிங்கையே பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள் அனு. சிறிது நேரம் அதை பார்க்கவும் ஏதோ யோசனையில் இருப்பதுமாக இருந்தவள் அந்த  ரிங்கை தன் விரல்களில் அணிந்துப்பார்த்தாள், அதுவோ அந்த மெல்லிய விரல்களில் பொருந்தாமல் விளையாட்டுக்காட்டி வெளியே வெளியே வந்தது. அந்த ரிங் தன் கைகளில் பொருந்தாமல் விழுவதைப் பார்த்து தானாக சிரித்துக்கொண்டாள். ஒரு கையில் அந்த சில்வர் ரிங்கை தன் விரல்களுள் அழுத்திக்கொண்டு மடியில் இருந்த தன் பர்சனல் டைரியில் எழுத துவங்கினாள்...

“இந்த ரிங் யாருதுன்னு தெரியுதா கணேஷ்? அழகா இருக்குல. இன்னைக்கு நிறையா நடந்துச்சு கணேஷ் முதல்ல இருந்து சொல்லனும்னா..” என்று இன்று நடந்தவற்றை கதையாக எழுத துவங்கினாள்.

சித்ராவின் வகுப்பு நடந்துக்கொண்டு இருந்தது, மதிய உணவு முடிந்து முதல் வகுப்பு உண்ட மயக்கத்தில் தோழிகள் அனைவரும் வகுப்பை மட்டைப்போட்டு விடுதியில் தங்கிவிட அனைவரது assignment யும் கொடுப்பதற்காக வகுப்பிற்கு அனுவை மட்டும் அனுப்பிவைத்தனர். தூக்கம் கண்ணைகட்ட தோழிகளை திட்டியவாறே வந்து வகுப்பில் அமர்ந்தாள். சித்ராவிடம் assignment கொடுத்தப்பின் அமர்ந்தவளுக்கு தூக்கம் சொக்கியது. தலையை இடது கையில் தாங்கியவாறு கண்களை திறந்தவாறே தூங்க துவங்கினாள். தூக்கத்தில் தலை சரிய முழித்தவள் தான் மட்டும் தான் இப்படி தூங்குகிறோம் போல என்று எண்ணி சுத்தி பார்த்தவளுக்கு அருண் கண்ணில் பட்டான், பாதி வகுப்பு மாணவர்கள் சொக்கி சொக்கி விழுந்துக்கொண்டிருக்க, அருண் மேசை மேல் படுத்தேவிட்டான். அவனை பார்த்து சிரித்தவாறு திரும்பியவளின் கண்ணில் அஸ்வத் தென்பட்டான். ஊரே தூங்கிக்கொண்டிருக்க ஆந்தை மட்டும் இரவு விழித்து இருக்குமாம், அது போல் எல்லா மாணவர்களும் சித்ராவின் வகுப்பில் தூங்கிக்கொண்டிருக்க அஸ்வத் மட்டும் கவனித்தான். அவனை பார்த்து “இது திருந்தாத கேஸ்” என்று தலையில் அடித்துக்கொள்ள, சித்ரா திரும்பிய நேரத்தில் ஒரு சின்ன சாக் பீஸ் துண்டை அவன் மீது எறிந்தாள்.

எறிந்த சாக் பீஸ் அஸ்வத்தின் நெற்றியை பதம் பார்க்க அதை தேய்த்து விட்டவாறு யார் என்று திரும்பி பார்த்தான். (இதை சைகை பேச்சா imagine பண்ணிக்கோங்க)

“என்ன பண்ற?” (அனன்யா)

“இது என்ன கேள்வி கவனிக்கறேன்”, கொஞ்சம் கடுப்பாக தலையை தேய்த்தவாறு கூறினான்.

“உன்னை சுத்தி பாரு எல்லாரும் தூங்குறாங்க நீ மட்டும் ஏன் இப்படி இருக்க?”

அவள் கேட்ட விதத்தில் லேசாக தலைசாய்த்து புன்முறுவல் பூத்தான் அஸ்வத். அவனது சிகை அசைந்து அழகுகாட்ட, மெல்லிய இதழ் வளைந்து மேலும் அழகு சேர்த்தது. ஒரு நொடி பேச்சிழந்து அமர்ந்தவள் உடனே சுதாரித்துகொண்டாள்.

“எனக்கு தூக்கமா வருது...” என்று பாவம்ப் போல் முகத்தை வைத்துக்கொண்டு கூற அவளது கண்கள் கொஞ்சுவது போல் சுருங்கி விரிந்தது. முத்துபோன்ற கருவிழி அங்கும் இங்கும் அலைய அதை பாதுகாக்கும் சிப்பி போல் இமைகள் மூடி திறந்தன. 10cm அகளம் கூட இருக்காத அந்த கண்கள் தன்னை இந்த பாடாய் படுத்துகிறதே என்று எண்ணிக்கொண்டு தலையை சிலுப்பிக்கொண்டான்.

“சரிவா கான்டீன் போகலாம்” என்று அவன் கை அசைக்க, நிஜமாகவே அவன் தான் அழைக்கிறானா என்று புரியாமல் தன்னை தானே கிள்ளிக்கொண்டாள்.

அவள் என்ன செய்கிறாள் என்று புரியாமல், “என்ன?” என்பது போல் அவன் புருவம் தூக்க 

“இல்லை... நிஜமாவே நீ தானான்னு ஒரு சந்தேகம் அதான்” என்று அவள் நக்கல் அடிக்க, அவன் விளையாட்டாக முறைத்தான், அந்த வகுப்பு முடிய இருவரும் காத்து இருந்தனர். இருவரும் சேர்ந்து கான்டீனுக்கு செல்வது அதுவே முதல் முறை.     

பெல் அடித்து மறுநிமிடம் வெளியே வந்துவிட்டனர், கான்டீன் உள்ளே செல்ல அங்கே அங்கும் இங்குமாய் ஜோடி ஜோடியாய் அமர்ந்து இருந்தனர் சிலர். அவர்களை எல்லாம் வேடிக்கை பார்த்தவாறே ஒரு இடத்தில் அமர்ந்து இருக்க அவள் வேடிக்கை பார்க்கும் நேரத்தில் அவர்கள் பருக ஜூஸ் வாங்கி வந்தான் அஸ்வத். அவன் வாங்கி வந்ததை பருகியவாறே, “எப்படிதான் இப்படி உக்கார்ந்து இருக்காங்களோ?” என்று சுற்றி பார்த்தவாறே கூறினாள்.

“ஏன்? என்ன பண்ணினாங்க?” என்று அவளை கண்ணெடுக்காமல் பார்த்தவாறே கேட்டான்

“என்னவா? இப்படி பப்ளிக்கா ஜோடி ஜோடியா ஒக்காந்து வலியுறாங்க” என்று முகத்தை சுளித்தவாறு கூறிக்கொண்டிருந்தாள். அவளது அசைவுகளை எல்லாம் பார்த்தவாரே பேசியவனுக்கு அவளது பதில் சிரிப்பாக இருந்தது.

அவனிடம் இருந்து பதிலே வராமல் போக திரும்பிப் பார்த்தாள். அவனோ சிரித்துக்கொண்டிருக்க “ஏன் சிரிக்கிற?” என்று புரியாமல் வினவினாள்.      

அவன் ஒரு விரலை மட்டும் வைத்து தங்கள் இருவரையும் சுட்டி காட்டினான். அவனது செயலில் நாமும் ஜோடியாக தான் வந்திருக்கிறோம் என்று சொல்வது புரிந்து போக பார்வையை திருப்பிக்கொண்டாள். அவள் சிறிது தடுமாறுவதை கண்டு குதுகலமாக இருந்தது அஸ்வதிற்கு. அவனது மௌன சிரிப்பு அவளை உறுத்த தப்பிப்பதற்காக “நம்ம ஒன்னும் அவங்களை மாதிரி lovers இல்லையே!” என்று புத்திசாலித்தனமாக துப்பு கண்டு பிடித்தது போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.

“பின்ன...?” என்று அவன் அந்த வார்த்தையில் அழுத்தம் தந்து கேட்க

“நண்பர்கள்” என்று அவள் இலகுவாக கூறினாள், அவளது பதிலுக்கு எதுவும் பேசாமல் “ஓஹோ...” என்று மட்டும் நக்கலாக பெரிதாக இழுத்தான். அந்த ஒரு ஓஹோ வில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று புரிந்தாலும் புரியாதவள் போல் இருந்துக்கொண்டாள், மேலும் அவன் நக்கலாக ஏதோ கூற வருகிறான் என்றும் புரிந்தது.

“இந்த மோதிரம் நல்லா இருக்கா?” என்று தன் விரலில் இருந்த மோதிரத்தை காட்டி கேட்டான் அஸ்வத். அதே மோதிரம் ‘A’ என்று பொதிக்கப்பட்ட மோதிரம்... “ம்ம்ம்... A for ashwath?” அப்படி தான் இருக்கும் என்று எண்ணி அவள் கேட்க அவன் எதுவும் கூறாமல் மௌனமாக அவளையே பார்த்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.