(Reading time: 20 - 39 minutes)

24. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ரு நிமிடம் திகைத்த இனியா தன் அம்மாவை கண்டவுடன் அவசரமாக “அப்படியா. எனக்கு ஏதும் போன் வரலையே” என்று தடுமாற்றத்துடன் கூறினாள்.

“பிஸின்னு தான் வந்துச்சி அக்கா”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் “அம்மா. கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க. அடைக்கற மாதிரி இருக்கு” என்றாள்.

லக்ஷ்மியும் தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றார்.

“ம்ம். நீ சொல்லு ஸ்வேதா.”

“இல்லை பிஸின்னு வந்துச்சி. ஒருவேளை போன் பேசிட்டு இருந்தீங்களோ, அதுவும் நான் போன் பண்ணும் போது லேட் நைட். அதான் தான் கேட்டேன்”

“இல்லையே. சரி. ஏதோ போன் பிரச்சனைன்னு நினைக்கறேன்.  சரி சொல்லு. என்ன விஷயம்” என்று அம்மா வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே கேட்டாள்.

ஸ்வேதாவும் இது அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

ஸ்வேதா எப்படி ஆரம்பிப்பது என்று நினைக்கையிலே லக்ஷ்மி தண்ணியுடன் வந்தார்.

ஸ்வேதாவும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் லக்ஷ்மி அங்கு இருந்து அகலும் எண்ணமே இல்லாமல் தன் மகள் சாப்பிடுவதையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இனியா சாப்பிட்டு முடிப்பதற்குள் பாலு வந்து சேர்ந்தான்.

பாலுவை அங்கு பார்த்த ஸ்வேதா சற்று அதிர்ந்து தான் போனாள்.

இனியாவிற்கு தான் அவனை பார்த்து உற்சாகம் பீறிட “ஹாய் மாமா” என்றாள்.

“ஹாய். என்ன உற்சாகமான வரவேற்பு” என்று கேட்டுக் கொண்டே வந்தவன் முகம் ஸ்வேதாவை பார்த்த உடன் மாறி விட்டது.

“என்ன நீ இங்கே இருக்க” என்றான் ஸ்வேதாவை பார்த்தவாறே.

“ஏன் மாமா. நான் இங்கே வரக் கூடாதா?”

“நான் அப்படி சொல்லலை. ஆனா நீ பேச்சை மாத்தாத. சொல்லு என்ன இங்கே வந்திருக்க. இப்ப தான் உன் வீட்டுக்கு போயிட்டு வரேன். நீ ஏதோ ப்ராஜெக்ட் வொர்க்கா வெளியே போயிருக்கன்னு சொன்னாங்க. ஆனா நீ இங்கே இருக்க”

“அது அது வந்து, ப்ராஜெக்ட் விஷயமா தான் ப்ரண்ட் வீட்டுக்கு போயிட்டிருந்தேன். அப்படியே அக்காவை பாக்கலாம்ன்னு வந்தேன்”

“விடுப்பா ஏன். அவளை போய் இப்படி பேசிக்கிட்டு. இப்ப அவ இங்கே வந்தா என்ன” என்றார் லக்ஷ்மி.

பாலு மட்டும் அவளை சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன மாமா அப்படி சந்தேகமா பார்க்கறீங்க”

“இல்ல. உன் மாமா நான். உனக்கு எங்க வீட்டுக்கு வர தெரியலை. என்னை வச்சி தான் இவங்களை உனக்கு தெரியும். ஆனா நீ உரிமையா இங்கே வரியே, அதான்” என்றான்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. என் ப்ரண்ட் வீடு இங்கே பக்கத்துல தான் இருக்கு. அதான் வழில இங்கே வந்தேன். ஆனா உங்களுக்கு தான் பிடிக்கலையே. சரி. நான் கிளம்பறேன்”

“ஐயோ என்ன ஸ்வேதா இப்படி. மாமா சும்மா கிண்டல் பண்றாரு” என்றாள் இனியா.

இவ்வளவு நேரம் ஏதும் பேசாமல் இருந்துட்டு இப்ப மட்டும் என்ன என்று எண்ணியவாறே “பரவால்லைக்கா. நான் போயிட்டு வரேன்” என்றவாறே கிளம்பிவிட்டாள்.

“என்னப்பா. இப்ப எதுக்கு அவ கிட்ட இப்படி பேசி அனுப்பிட்ட. என்ன கோபம் உனக்கு அவ மேல” என்றார் லக்ஷ்மி.

“விடுங்க அத்தை. அவ போயிட்டு போறா. அவ எல்லாம் ஒரு ஆளுன்னு பேசிக்கிட்டு” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜோதி சிரிக்கும் சத்தம் கேட்டது.

எல்லோரும் திரும்பி அவளையே பார்த்தார்கள்.

“என்னடி வரும் போதே சிரிப்பு” என்று லக்ஷ்மி அவளை கேட்டார்.

“இல்ல. என் வீட்டுக் காரர் கூட இப்பல்லாம் அறிவாளியா ஆகிட்டாரே. அதான் ஒரே சிரிப்பா வந்துடுச்சி” என்று விட்டு திரும்ப சிரிக்க ஆரம்பித்தாள்.

அதை பார்த்து லக்ஷ்மியோ முறைக்க, அவளை பார்த்து முறைக்க முயற்சி செய்து அது முடியாமல் பாலு சிரிக்க ஆரம்பித்தான்.

“உனக்கு வரவர ரொம்ப திமிராயிடுச்சி” என்று லக்ஷ்மி கண்டிக்க ஆரம்பிக்கும் போதே இடை புகுந்த ஜோதி,

“அம்மா. வெயிட். நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன். பாரு. அவரே சிரிக்கறாரு. அதை நீயே பேசி விஷயத்தை காம்ப்ளிகேட் பண்ணாத” என்றாள்.

“நீ ஏண்டி பேசமாட்ட. இங்கே பாருங்க மாப்பிள்ளை. எல்லாம் நீங்க குடுக்கற இடம் தான் இவ இப்படி ஆடுறா”

“விடுங்க அத்தை. நானே முதல்ல ஸ்வேதாக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன். பட் இப்ப எனக்கே அவ மேல கொஞ்சம் கோபம் வருது.”

“என்னவோ. இவ பேச்சை மட்டும் கேட்காதீங்க. ஸ்வேதா சின்ன பொண்ணு. அவ தப்பே செஞ்சா கூட நாம தான் பதமா சொல்லணும். நாமளும் அவளுக்கு ஈடுக்கு ஈடா மல்லுக்கு நின்னோம்ன்னா சரி படாது. இவ பேச்சைக் கேட்டு அவ மேல கோப படாதீங்க”

“ஏன் அத்தை. நான் ஒன்னு கேட்கலாமா. நீங்க தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே”

“என்னப்பா. என் கிட்ட எதை பத்தி பேச இவ்வளவு தயக்கம். நான் போய் என்ன நினைக்க போறேன்.”

“இப்ப சொன்னீங்களே அத்தை. ஸ்வேதா தப்பே செஞ்சா கூட நாம பதமா தான் பேசணும்ன்னு, அது ஸ்வேதாக்கு மட்டும் தானா அத்தை. நம்ம இனியாக்கு கிடையாதா. அதுவும் நம்ம இனியா தப்பு கூட ஏதும் செய்யலையே. தப்பே செய்யாத பொண்ணுக்கு எதுக்கு அத்தை தண்டனை கொடுக்கறீங்க. அதுவும் இளவரசன் மாமாவோட தங்கச்சி பையன் தானே, அதுக்கப்புறம் என்ன தான் அத்தை பிரச்சனை. எனக்கு நிஜமாவே இதுல என்ன பிரச்சனைன்னு புரியலை.

நான் இன்னைக்கு இதை பேசணும்ன்னு வரலை. ஆனா ஏதோ நீங்க அப்படி பேசினதும், யாரு வீட்டு பொண்ணுக்காகவோ நீங்க இப்படி பேசினதை கேட்டதால என் மனசுல இருக்கிற ஆதங்கத்தை கேட்டுட்டேன் அத்தை. நான் உங்களை அத்தைன்னு கூப்பிடரேனே தவிர, உங்களையும் என் அம்மா ஸ்தானத்துல தான் வச்சிருக்கேன். அதனால தான் என் மனசுல இருக்கறதை கேட்டுட்டேன்”

லக்ஷ்மிக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

பாலுவே தொடர்ந்தான்.

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் நீங்க இனியா கல்யாணம் பத்தி எவ்வளவு கஷ்டப் பட்டீங்க. ஆனா இப்ப அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளையே இருக்காரு. அதுவும் உங்க சொந்தத்துலையே. எந்த பிரச்சனையுமே இல்லாத இந்த கல்யாணத்துல உங்களுக்கு என்ன தான் அத்தை பிரச்சனை. இனியாவுக்கு ஒரு அண்ணன் ஸ்தானத்துல இருந்து கேட்கறேன். என் தங்கச்சி கல்யாணத்தை ஏன் நீங்களே தடுத்து நிறுத்தறீங்க சொல்லுங்க”

இனியாவின் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

தன் அன்னையுடன் தனக்காக சண்டையிடும் மாமாவை பார்த்து அவளுக்கு பெருமையாக இருந்தது. அக்காவாளோ, ஏன் தன்னாலே கூட அம்மாவிடம் இப்படி நேருக்கு நேர் கேட்க முடியாத ஒரு விஷயத்தை, அதை புரிந்துக் கொண்டு தனக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மாமாவை பார்த்தவாறே கண்ணீர் வடிய நின்றுக் கொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.