(Reading time: 22 - 44 minutes)

25. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ஸ்வேதாவின் மெசேஜ் பார்த்தவுடன் ஏனோ மனதிற்குள் இருந்த சந்தோஷம் எல்லாம் வடிந்தது போல் இருந்தது இனியாவிற்கு.

இப்போது என்ன செய்வது என்பதை மட்டும் அவளால் தெளிவாக முடிவு செய்ய முடியவில்லை. யோசித்து யோசித்து தலை வலிப்பதை போல் இருக்கவே எழுந்து கீழே சென்றாள்.

தன் அப்பாவிற்கு காபி கொடுத்துக் கொண்டிருந்த ஜோதி இவள் கீழே இறங்கி வருவதை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

“என்னக்கா”

“ஒன்னும் இல்லையே. உனக்கு காபி எடுத்துட்டு வரவா”

“இல்லக்கா வேண்டாம். நான் அப்புறம் குடிக்கறேன்”

“என்னம்மா இவ்வளவு நேரம் உன்னை காணோம். இந்த குட்டிப் பொண்ணை எங்களால வச்சிக்கவே முடியலையே” என்றார் ராஜகோபால்.

சிறிது நேரம் என்ன கூறுவது என்று தெரியாமல் இனியா விழிக்கும் போதே,

“அவளை ஏன்ப்பா டிஸ்டர்ப் பண்றீங்க. அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கும்” என்றாள் ஜோதி.

தன் அக்காவை முறைத்தவாரே “இல்லப்பா ஒரு போன் வந்துச்சி, பேசிட்டு இருந்தேன்” என்றாள்.

அவரும் அதைப் பற்றி மேலும் ஏதும் கேட்காமல் வேறு பேச்சை பேசி விட்டு சென்று விட்டார்.

தந்தை அந்த புறம் சென்றவுடன் இனியா ஜோதியை வெளிப்படையாகவே முறைத்தாள்.

“என்னடி. என்ன ஏன் இப்படி முறைக்கற”

“பின்ன என்னவாம். இப்படி என்ன அப்பா கிட்ட போட்டு குடுத்தா உன்ன முறைக்காம என்ன பண்ணுவாங்களாம்”

“நான் என்ன சொன்னேன். உனக்கு வேலை இருக்கும்னு தானே சொன்னேன்” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

“போதும்க்கா. இப்படி பச்சை புள்ள மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு என்னை இப்படி போட்டு குடுக்கறியே. இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா”

“அடிப்பாவி. யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற. என் கிட்ட இப்படி எல்லாம் பேசுறதுக்கு முன்ன யோசிச்சி பேசும்மா. அப்புறம் நாளை பின்ன என் கிட்ட தான் நீ உதவின்னு வந்து நிக்கணும்”

“ஹாஹஹா” என்று சிரித்தவாறே “நான் ஏன் உன் கிட்ட வந்து நிக்க போறேன். எனக்கு எங்க மாமா இருக்காங்க. அவரு பார்த்துப்பாரு எல்லாம்” என்றாள்.

“ஏய். என்னையே இப்படி சொல்லிட்டியா. நான் இல்லாம உனக்கு மாமா எங்கடி வந்தாரு. அப்ப அவரு தான் உனக்கு உசத்தியா”

“அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா. எனக்கு எங்க மாமா தான் பர்ஸ்ட்” என்றாள் இனியா சிரித்துக் கொண்டே.

“உங்க மாமா உனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. ஓகே தான். ஆனா போன வாரம் வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் சண்டைக்கோழி மாதிரி முறுக்கிட்டு இருந்தீங்களே. நான் தானே பிளான் பண்ணி உன்னை பெங்களூர்க்கு கூட்டிட்டு போனதால தானே உங்களுக்குள்ள சண்டை முடிஞ்சது”

“ம்ம்ம். அதெல்லாம் ஓகே தான். இருந்தாலும் எனக்கு எங்க மாமா தான் முக்கியம்ப்பா”

“அதுசரி நீ உங்க மாமாவை விட்டு குடுப்பியா” என்றவளின் பேச்சு முடிவுறாமல், அவளின் பார்வை தன்னை தாண்டி நிலைக்குத்தி நின்றுவிட

“என்னக்கா” என்றவாறே திரும்பியவளின் பேச்சும் அப்படியே நின்றுவிட்டது.

அங்கு லக்ஷ்மியும், ராஜகோபாலும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

இனியாவிற்கும், ஜோதிக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தனர்.

ராஜகோபாலிற்கும் அதே நிலை தான்.

லக்ஷ்மி தன் மகள்கள் இருவரையும் முறைத்ததோடு சேர்த்து தன் கணவரையும் முறைக்க ஆரம்பித்தார்.

எல்லோரையும் கோபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்ப எத்தனித்த மனைவியின் கையை பிடித்து நிறுத்திய ராஜகோபால் “இரு. இப்ப எங்கே போற. வந்து கொஞ்சம் மட்டும் சாப்பிடு. இவ்வளவு நேரம் அதை தானே சொல்லி கூப்பிட்டேன்” என்றார்.

“வேண்டாம்” என்று ஒரே வார்த்தையாக சொல்லிவிட்டு திரும்பிவிட்டார் லக்ஷ்மி.

அவர் சென்றவுடன் சோர்வாக அமர்ந்து விட்டார் ராஜகோபால்.

ஜோதிக்கும், இனியாவிற்கும் இன்னமும் பயம் குறையவில்லை.

“என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க” என்றார்.

“இல்லப்பா. நீங்க எப்ப வந்தீங்க” என்றாள் ஜோதி.

“நீயே வாக்குமூலம் குடுத்தியே அப்ப தான் வந்தோம்”

“என்ன சொல்றதுன்னே தெரியலைப்பா. நீங்க வருவீங்கன்னு எங்களுக்கு எப்படிப்பா தெரியும். அதுவும் காலைல இருந்தே அம்மா வெளியே கூட வரலையே”

“நீ தானேம்மா அவ காலைல மாப்பிள்ளை வந்து பேசிட்டு போனதுல இருந்து வெளியவே வரலை, சரியா சாப்பிட கூட இல்லைன்னு சொன்ன, அதான் நான் அவளை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேன்.”

இத்தனைக்கும் இனியா ஒன்றுமே பேசவில்லை.

அவளை கவலையுடன் பார்த்து விட்டு, “இப்ப என்னப்பா பண்றது”

“எனக்கும் தெரியலையேம்மா. மாப்பிள்ளை வந்து பேசனதுக்கு அப்புறம் அவ கொஞ்சம் யோசிச்சிருப்பா. இப்ப நாமளே அதை கெடுத்துட்டோமோன்னு தோணுது”

“என்னப்பா இப்படி சொல்றீங்க”

“சரி விடும்மா. பார்த்துக்கலாம். நீங்க ரெண்டு பெரும் ஒன்னும் பீல் பண்ணாதீங்க.” என்று கூறி விட்டு போய் விட்டார்.

அப்பா சென்ற பின் திரும்பி பார்த்தால் இனியா சோர்வாக சோபாவில் அமர்ந்திருந்தாள்.

“சாரி டீ” என்றாள் ஜோதி.

“விடுக்கா. ஆரம்பத்துல இருந்தே இப்படி தானே ஏதாவது பிரச்சனை நடந்துட்டு இருக்கு. இப்பவும் அப்படி தான். காலைல இருந்து ரொம்ப சந்தோசமா இருந்தேன் இல்ல, அதான் இப்படி”

“ஏண்டி லூஸ் மாதிரி பேசிட்டிருக்க. விடு. மாமா திரும்ப வந்த உடனே எல்லாம் சரி ஆகிடும்”

ங்கைக்கு ஆறுதல் சொன்னாலும் ஜோதிக்கே கூட உள்ளுக்குள் உதறல் தான். ஆனால் என்ன செய்வதென்று தான் தெரியவில்லை. அதை வெளியில் சொல்லி தங்கையை இன்னும் பதற வைக்க மனமில்லாமல் தைரியமாக பேசினாள்.

இரவும் சாப்பாடு வேண்டாம் என்று அடம் பிடித்த லக்ஷ்மியை ராஜகோபால் தான் வருந்தி அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் லக்ஷ்மியோ வேண்டாம் என்பதை மட்டும் கூறி அழுத்தமாக மறுத்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு தான் வருத்தமாக இருந்தது.

கடைசியாக அவரே போய் உணவை அறைக்கு எடுத்து வந்து விட்டார்.

இரண்டு தட்டுக்களில் உணவு இருப்பதை கேள்வியோடு லக்ஷ்மி பார்த்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.