(Reading time: 13 - 26 minutes)

10. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

துடித்துப்போய் அவனருகே ஓடினாள் அர்ச்சனா. அதற்குள் சமாளித்துக்கொண்டு எழுந்து விட்டிருந்தான் வசந்த்.

அவன் நெற்றியில் ரத்தம் வழிய துவங்கி இருந்தது. விழுந்த வேகத்தில் அவன் எதன் மீதோ மோதிக்கொண்டிருக்க வேண்டும்.

சட்டென்று சென்று அவன் தோளைப்பற்றிகொண்டாள்  அர்ச்சனா.

'என்ன வசந்த் நீ. பார்த்து வரக்கூடாதா? எவ்வளவு ரத்தம் வருது பார்.? ரொம்ப வலிக்குதா வசந்த்?  தன் துப்பட்டாவால் அவன் ரத்தத்தை துடைத்தாள்.

எதுவுமே பேசாமல் சில நொடிகள் அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே இருந்தான் வசந்த். அவன் கண்கள் கேட்ட கேள்வி அவளுக்கு புரியாமல் இல்லை

'அது எப்படி அர்ச்சனா நேற்று அப்படி சொல்லிவிட்டாய்?'

அவன் கேட்ட கேள்விக்கு பதிலாய் அதுவரை அவள் கண்களின் உள்ளேயே தேங்கி நின்ற கண்ணீர் வெளியே வழிந்தது.

அந்த கண்ணீரில் அப்படியே தளர்ந்துதான் போனான் வசந்த். அதற்கு மேல் அவளை அழவைக்க விரும்பாதவனாய், சட்டென்று அவள் கண்ணீரை துடைத்தான்.

ரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த நிலையிலும் அவள் கண்ணீர் அவனை உலுக்கியது.

போதும்டா. என்றான் நீ எனக்காக நிறைய அழுதாச்சு. இதோட போதும். ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னான் வசந்த்.

'என்ன சொல்ல வருகிறான் இவன்? 'சட்டென்று அவள் நிமிர்ந்த நொடியில்,

'டேய் என்னாச்சுடா' பதறிக்கொண்டு ஓடி வந்தான் மனோ

'ஒண்ணுமில்லை. ஒண்ணுமில்லை பதறாதே.' என்றான் வசந்த்.

அவன் நெற்றியை சுற்றி கட்டுப்போட்டு அவனை காரில் அமரவைத்து மனோ காரை கிளப்புவதற்குள் காருக்குள்ளேயே அப்படியே மயங்கிவிட்டிருந்தான் வசந்த்.

ருத்துவமனையில் நின்றிருந்தனர் மனோவும், அர்ச்சனாவும்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்தான் வசந்த். இரண்டு மணிநேரம் ஆகியும் கண் திறக்கவில்லை வசந்த்.

'அடி ஒண்ணும் பலமா இல்லை' என்றார் டாக்டர் ஆனால் பிரஷர் தாறுமாறா ஏறியிருக்கு மிஸ்டர் மனோ. அதனாலேதான் மயக்கமா இருக்கார். அவர் மனசுலே ஏதோ ஒரு அழுத்தம் ஏன் அவருக்கு ஆபீஸ்லே ஏதாவது ஸ்ட்ரெஸ்ஸா?

மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்த மனோ .நேற்று நடந்தது எதையுமே அறியாதவனாய், சற்று திகைத்துதான் போயிருந்தான். அலுவலகத்தில் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லையே. என்னவாயிற்று இவனுக்கு.?

'ஆஃபிஸிலே ஏதாவது பிரச்சனையா அர்ச்சனா? என்றான் அவளிடம்.

கண்களில் கண்ணீர் சேர இடம் வலமாய் தலையசைத்தாள் அர்ச்சனா.

'எல்லாத்துக்கும் காரணம் நான்தான். நேத்து அவனை ரொம்ப காயப்படுத்திட்டேன்.'

பதில் பேசவில்லை மனோ. நேற்று என்ன நடந்தது என்று கூட கேட்கவில்லை அவன். சில நொடிகள் அவள் முகத்தை பார்த்தவன் அவளை விட்டு வலகி சென்று கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து விட்டிருந்தான்.

திகாலை மணி மூன்றரையை தொட்டிருந்தது. வசந்துக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை. டாக்டர் போட்ட ஊசிகள் எதுவுமே பயனளிப்பதாக தெரியவில்லை.

அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. ஓரிடத்தில் நிற்க கூட முடியாமல் தவிப்புடன் அலைந்து கொண்டிருந்தான் மனோ.

அர்ச்சனாவை பயம் பற்றிக்கொள்ள துவங்கியிருந்த நேரத்தில் ஒலித்தது அவள் கைப்பேசி

'மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டேமா' என்றார் அப்பா.

அவளுக்குள்ளே பகிரீன்றது. 'இதே போன்றதொரு நாள் இன்னும் நிறைய வர வேண்டுமா. வேண்டாம். போதும் இறைவா போதும்.

பதில் சொல்லவில்லை அவள்.

'என்னமா கிளம்பிட்டிருக்கியா? அஞ்சு மணிக்குதானே ப்ளைட்?

அப்போது தான் எல்லாம் நினைவுக்கே வந்தது அவளுக்கு. 'இப்போது ஊருக்கு கிளம்பவேண்டுமோ?

இ......இல்லைப்பா... இங்கே ஆபீஸ்லே கொஞ்சம் பிரச்சனைபா. இன்னைக்கு ஆ...ஆஃபிஸ் போகணும். முடிஞ்சா ஈவினிங் குள்ளே வந்திடறேன்பா'

லீவு நாளிலே என்னமா ஆஃபிஸ்? அவர் குரல் மெல்ல மாறியது.

'இல்லை பா. கொஞ்சம் அவசரம். வர முயற்சிப்பண்றேன்.'

'சரிம்மா உன் இஷ்டம்' என்றார் அப்பா. .

அடுத்த நொடி துண்டிக்க பட்டிருந்தது அழைப்பு.

யாருக்கு வரவில்லை பிறந்தநாள்.? ஏனோ மனதிற்குள் எரிச்சல் மண்டியது அர்ச்சனாவுக்கு.. குரங்கிலிருந்து  எருமைமாடு, கழுதை வரை எல்லாவற்றுக்கும்தான் வருகிறது பிறந்தநாள். அவையெல்லாம் என்ன கொண்டாடிக்கொண்டா இருக்கின்றன? 

அசைவில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தான் மனோ.

ஸ்வேதா ஊருக்கு கிளம்பிட்டிருக்கா. இங்கே வந்து உன்னையும் பிக்அப் பண்ணிக்க சொல்லியிருக்கேன். '

இடம் வலமாய் தலையசைத்தாள் அர்ச்சனா.

முதல்லே அவன் கண்ணை திறக்கட்டும். அப்புறம் கிளம்பறேன்

'என்ன  அர்ச்சனா இப்படி சொல்லிட்டே?. அவனை அப்புறமா பார்த்துக்கலாம் இப்போ போய் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடு அதுதான் ரொம்ப முக்கியம்.' அவன் குரல் கொதித்தது.

'பேசு மனோ எல்லாத்தையும் கேட்டுக்கறேன்'. என்றாள் அர்ச்சனா. எனக்கு அவன் கண் முழிச்சா போதும். வேற எதை பத்தியும் கவலை இல்லை.

ஸ்வேதாவுடன் செல்லவில்லை அர்ச்சனா.

அவளை அழைத்த விவேக்கிடம், இல்லண்ணா,. அர்ச்சனாவுக்கு ஆஃபீஸ்லே ஏதோ வேலையாம் அதான் வர முடியலை.' என்றாள் ஸ்வேதா

அதை நம்ப முடியவில்லை விவேக்கால். வசந்த் தன் வேலையை காட்டுகிறானா என்ன?!

யோசித்தபடியே அழைப்பை துண்டித்தான்  விவேக்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.