(Reading time: 13 - 25 minutes)

11. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

ன்னை ஞாபகம் இருக்கா மா உனக்கு?' நிதானமான குரலில் கேட்டார் டாக்டர் சிதம்பரம்.

புன்னகையுடன் தலையசைத்தாள் அர்ச்சனா. ' உங்களை மறக்க முடியுமா?'

'என்னை மறந்திருந்தா கூட தப்பில்லை அர்ச்சனா' என்றார் டாக்டர் 'ஆனா நீ யாரை மறக்க கூடாதோ அவனை  மறந்துட்டியே'

அவளுக்குள்ளே திடுக்கென்றது.அவர் அப்படி சட்டென்று கேட்பார் என்று எதிர்பார்கவில்லை அர்ச்சனா.

சமாளித்துக்கொண்டு ஏதோ சொல்ல விழைந்தவளை பேச விடாமல் தொடர்ந்தார் ' எனக்கு உன் மேலே ரொம்ப வருத்தம் அர்ச்சனா.  உங்களுக்குள்ளே என்ன பிரச்சனைனு எனக்கு தெரியாது. ஆனால் எது நடந்திருந்தாலும் அவன் அப்பா தற்கொலை பண்ணிகிட்ட போதாவது நீ அவன் கூட வந்து நின்னிருக்கணும் இல்லையா?  அப்போ எவ்வளவு துடிச்சு, எப்படி உடைஞ்சு போயிட்டான் தெரியுமா?

அர்ச்சனாவின் தலைக்குள்ளே இடி இறங்கியது. இதயம் அதிர்ந்தது

'என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் இவர்?'

'வச...வசந்த் அப்பா தற்...தற்கொலை பண்ணிக்கிட்டாரா? குரல் நடுங்க கேட்டாள் அர்ச்சனா.

'என்னம்மா நீ?  ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்கிறியே?

'சத்தியமா தெரியாது அங்கிள் எனக்கு. சத்தியமா தெரியாது.' கண்களில் நீர் சேர்ந்தது. ஏ..  ஏன்? என்னாச்சு அவருக்கு? குரலில் பதற்றம் தெறித்தது.

அவர் ஏதோ சொல்ல வாய்திறந்த நொடியில், அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்றான் விவேக்.

அவர்கள் எதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவன் காதில் விழுந்த சில வார்த்தைகளே அவனுக்கு புரிய  வைத்துவிட்டிருந்தன.

சட்டென்று மௌனமானார் டாக்டர் சிதம்பரம். ஏனோ விவேக்கின் எதிரே எதையுமே சொல்ல தோன்றவில்லை அவருக்கு.

பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த டாக்டரையும், மொத்தமாய் அதிர்ச்சி பரவிக்கிடந்த  அர்ச்சனாவின் முகத்தையும்  கண்களால் ஊடுறிவினான் விவேக்.

சந்தின் அப்பா தன்னை மாய்த்துக்கொண்ட தினம், மனோவும்,அவன் அப்பாவும் பதறிக்கொண்டு டெல்லிக்கு ஓடிய காட்சி, விவேக்கின் கண்முன்னே ஓடி மறைந்தது.

தன் கையில் இருந்த தட்டிலிருந்து சப்பாத்தியை வாயில் போட்டபடியே அர்ச்சனாவின் முகத்தை ஆராய்ந்தான் விவேக்

மனதில் இருந்த வலியில் அதற்கு மேல் ஒற்றை வாய்கூட உண்ண முடியாதவளாய் தளர்ந்து விட்டிருந்தாள் அர்ச்சனா.

சில நொடிகள் கழித்து அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்தவராய், தன் கார்டை எடுத்து அர்ச்சனாவிடம் நீட்டினார் டாக்டர்.

'என் நம்பர் இதிலே இருக்குமா. எனக்கு போன் பண்ணு. நான் உன் கிட்டே கொஞ்சம் பேசணும்'

'கண்டிப்பா' என்றபடியே அந்த கார்டை தன் கைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டாள் அர்ச்சனா.

ஏதோ பேசிக்கொண்டே டாக்டரை வெகு இயல்பாய் அங்கிருந்து நகர்த்திக்கொண்டு சென்றுவிட்டிருந்தான் விவேக்.

அதற்கு மேல் ஒரு வாய் உணவு கூட உள்ளே இறங்கவில்லை. தட்டை போட்டுவிட்டு கைகழுவினாள் அர்ச்சனா.

'அவருக்கு மேலே போற நேரம் வந்திடுச்சு. போயிட்டார் அவ்வளவுதான்' அன்று சொன்னானே வசந்த். எல்லாவற்றையும் தனக்குள்ளே புதைத்துக்கொண்டு அப்படி சொன்னானா? அவன் ஏன் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை?

'இதைத்தான் குறிப்பிட்டனா மனோ? ஒரே ஒரு முறை அவனிடம் மனம் விட்டு பேசு என்றானே?'

'எத்தனை அன்பான மனிதர் அவர். தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு என்ன நடந்தது அவருக்கு?

தலைக்குள்ளே கேள்விகள் அணிவகுத்தன. மனம் தவித்தது.

எப்படி துடித்திருப்பான்? எப்படி கதறி இருப்பான் வசந்த்? அந்த காட்சி கண்முன்னே வந்தது போல் வலித்தது.  அவனிடம்  ஒரு முறை பேச வேண்டும் என்று தோன்றியது.

அவன் எண் அவளிடம் இல்லை. 'ச்சை......' தன் மீதே வெறுப்பு வந்தது அவளுக்கு.

சற்று ஓரமாய் சென்று நின்றுக்கொண்டு மனோவின் எண்ணை அழுத்தினாள் அர்ச்சனா. விவேக்கின் பார்வை அவள் மீதே இருந்தது.

சந்துடன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தான் மனோ.

சற்று தேறியிருந்தான் வசந்த். அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அறைக்கு வந்துவிட்டிருந்தான். நாளை காலை வீட்டிற்கு போகலாம் என்றார் டாக்டர்.

ஒலித்தது மனோவின் கைப்பேசி. 'அர்ச்சனா' என்று ஒளிர்ந்தது திரை

சில நொடிகள்  அதையே பார்த்துக்கொண்டிருந்தவன் சட்டென்று அழைப்பை துண்டித்தான்.

மறுபடி அழைத்தாள். மறுபடி கட்.

யாருடா? என்றான் வசந்த்.

'எல்லாம் அந்த ராட்ஷசி தான். பார்ட்டி எல்லாம் முடிஞ்சிருக்கும். இப்போ சும்மா போன் பண்ணி பேருக்கு உன்னை பத்தி  விசாரிப்பா. ஒண்ணும் தேவையில்லை. நான் அவகிட்டே இனிமே பேசறதா இல்லை.

அடுத்த நிமிடம் குறுஞ்செய்தி வந்தது அவளிடமிருந்து. 'வசந்த் அப்பாவை பற்றி பேசவேண்டும். தயவு செய்து பேசு'

சற்று திகைத்து போனவனாய் அதை வசந்திடம் காட்டினான் மனோ. 'என்னடா இது?' அவகிட்டே யார் என்ன சொன்னாங்கன்னு தெரியலையே. என்றபடி கைபேசியை அழுத்த போனவனின் கையை பிடித்து நிறுத்தினான் வசந்த்.

'வேண்டாம் மனோ. அவகிட்டே நடந்தது எதையும் சொல்ல வேண்டாம்' என்றபடியே கட்டிலை விட்டு எழுந்தான் வசந்த்

சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு ஆழமாய் சுவாசித்தவன் ஜன்னலின் அருகே சென்று இருட்டை வெறிக்க துவங்கினான்.

மெல்ல  நடந்து அவனருகே வந்த மனோ அவன் தோளை அழுத்தினான் ''ஏன் டா.? நடந்தது எல்லாம் தெரிஞ்சா அவ உன்கிட்டே ஓடி வந்திடுவா டா.'

'அதுதான் வேண்டாங்கிறேன்'. என்றான் உறுதியான குரலில் அவ அப்படி என்கிட்டே வரான்னா மனசார ஓடி வரணும். என் மேலே பரிதாப பட்டு வரக்கூடாது மனோ.

இமைக்காமல் அவனேயே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ

'பாவம்டா அவ. என்றான் வசந்த் எனக்காக அவ எவ்வளவு தவிக்கிறான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அவ அப்பாவை மீறி அவளாலே அதை ஒத்துக்க முடியலை. அவ அப்பா ஒரு பக்கம் ,நாம ஒரு பக்கம், நடுவிலே இந்த விவேக்னு எல்லாரும் அவளை அழ வெச்சிட்டிருக்கோம். யாருமே அவளை அவளா இருக்க விடறதில்லை. போதும். நடந்ததை எல்லாம் சொல்லி, அவ மனசை இன்னமும் கஷ்டப்படுத்த நான் தயாரா இல்லை.

எந்த கட்டாயமும் இல்லாமல், அவ வாழ்கையை பத்தி அவ மனசார முடிவெடுக்கணும். அப்படி அவ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு அது சம்மதம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.