(Reading time: 32 - 63 minutes)

31. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ந்த குயின்ஸ் லேன்ட் பயணம் அவர்கள் எல்லோருக்கும் இனிமையான பயணமாக இருந்தது. ஆனால் ஸ்வேதாவை தவிர.

ஸ்வேதா மிகவும் கோபமான மனநிலையில் இருந்தாள்.

அன்று காலையில் கிளம்பும் போது தான் உற்சாகமாக கிளம்பியது என்ன, ஆனால் இப்போது நடப்பது என்ன என்று அவளுக்கு கோபமாக இருந்தது.

நடந்து நடந்து எல்லோருமே களைத்துப் போய் இருந்தனர். ஜோதி அடுத்த ரைடுக்கு ஓட, சாப்பிட்டு விட்டு போகலாம் என்று தடுத்து சாப்பிட சென்றனர்.

“என்ன வேணும் ஸ்வேதா” என்றாள் ஜோதி.

பாலுவிற்கும் இங்கு வந்தும், அவள் ஏதும் விளையாடாமல் ஏதோ தனித்து இருந்தது போல் இருந்ததால், அவனும் “ஆமா ஸ்வேதா. உனக்கு என்னென்ன பிடிக்குதோ எது வேணும்னாலும் சொல்லு” என்றான்.

அப்போது தான் எல்லோருக்கும் அவள் நியாபகம் வந்தது போல் அவளை விழுந்து விழுந்து கவனிக்கவும், அவளுக்கும் ஏதோ இவ்வளவு நேரம் நிகழ்ந்தது தற்செயலாக இருக்குமோ, தான் தான் தவறாக எண்ணிவிட்டோமோ என்றெல்லாம் எண்ணி விட்டாள்.

அங்கு ஸெல்ப் சர்வீஸ் தான். எனவே இளவரசனும், பாலுவும் எழுந்து யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சந்துரு எழவும், பாலு “நீ உட்காருப்பா. இது சகளைங்க எங்களோட ட்ரீட். சோ எல்லாம் நாங்க பார்த்துப்போம்” என்றான்.

சந்துருவும் சிரித்துக் கொண்டே அமர்ந்து விட்டான்.

ஸ்வேதாவும் ஏற்கனவே எல்லோரும் கவனித்த சந்தோசத்தில் இருந்ததால் முதல் ஆளாக அவளுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் ஆர்டர் செய்தாள்.

எல்லோரும் ஆர்டர் செய்துக் கொண்டிருந்தார்கள்.

போன் பேசிக் கொண்டிருந்த பவித்ராவிடம் “என்ன வேண்டும்” என்று சைகையில் கேட்டதற்கு நீங்களே ஆர்டர் செய்ங்க என்று சைகையில் சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

இருவரும் சென்று எல்லோரும் கேட்டதை ஒவ்வொன்றாக கொண்டு வரவும், பவித்ரா வந்தமரவும் சரியாக இருந்தது.

பவித்ரா அங்கிருந்த உணவை பார்த்து, “இது நான் வெஜ் ரெஸ்டாரண்ட்டா, நான் இன்னைக்கு நான் வெஜ் சாப்பிட மாட்டேன்” என்றாள்.

ஸ்வேதா ‘அப்படியா சாப்பிடாட்டி போ’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

“இன்னைக்கு ஃப்ரைடே கூட இல்லையே, இன்னைக்கு ஏன் சாப்பிட மாட்ட” என்றாள் ஜோதி.

“இல்லக்கா. நான் எல்லா வீக்கும் இந்த டே இப்படி தான். நான் வெஜ் சாப்பிட மாட்டேன்”

“ஒரு நாள் தானே. இன்னைக்கு மட்டும் சாப்பிடு” என்றாள் ஸ்வேதா.

பாலு “மத்தவங்களோட நம்பிக்கையை நாம இப்படி சொல்லக் கூடாது ஸ்வேதா” என்றான்.

உடனே இனியா  “சரி வா பவி. நாம வெஜ் ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டுட்டு வரலாம். இவங்க சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ளே வந்துடலாம்” என்றவாறு எழுந்தாள்.

ஆனால் எல்லோருக்கும் உணவு வந்து விட்டிருந்தது.

இனியாவை அனுப்ப வேண்டாம், அவள் இளவரசனுடன் உண்ணட்டும் என்றெண்ணிய ஜோதி “நீ இரு இனியா. நான் பவித்ரா கூட போறேன்” என்றாள்.

பாலுவும் “இருங்க. நீங்க ரெண்டு பேர் மட்டும் ஏன் போறீங்க. நானும் வரேன். மத்தவங்க எல்லாம் இங்கேயே சாப்பிடட்டும்” என்றான்.

“அப்ப இங்க ஆர்டர் பண்ணதை எல்லாம் யார் சாப்பிடறது” என்றாள் ஸ்வேதா.

“ஆமா அது வேற இருக்கு இல்ல” என்று பாலு கூறும் போதே,

சந்துரு “நான் பவித்ரா கூட போறேன். நீங்க எல்லாரும் இதை அட்ஜஸ் பண்ணி சாப்பிட்டுடுங்க” என்றவாறே எழுந்தான்.

ஸ்வேதாவோ அதை அதிர்ச்சியாக பார்க்க, எல்லோருக்கும் அது சரி என படவே “சரி” என்று கூறி விட்டனர்.

பவித்ராவிற்கும் சிறு அதிர்ச்சி தான்.

அவள் முகத்தை பார்த்த சந்துரு கண்ணசைவிலே வரும் படி கூறிவிட்டு முன்னே சென்றான்.

எல்லோரும் உணவில் கவனம் செலுத்த ஆரம்பிக்க, ஸ்வேதா மட்டும் போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சந்துருவின் கண்ணசைவில் பின் செல்லும் பவித்ராவை பார்க்க பார்க்க அவளுக்கு வெறுப்பாக இருந்தது.

எங்கிருந்து வந்தாள் இவள் என்று கோபத்துடன் எண்ணிக் கொண்டாள்.

முதல் ஆளாக உணவை ஆர்டர் செய்ததால் அவளால் அவர்களுடன் செல்லவும் இயலவில்லை. எனவே எரிச்சலுடன் உணவை உண்ண ஆரம்பித்தாள்.

இதில் வேறு இளவரசனும் இனியாவும் ரொமான்ஸ் செய்துக் கொண்டே சாப்பிட்டார்கள். அவர்களையாவது அவள் போனால் போகிறது என்று விட்டு விட தயார், ஆனால் திருமணம் ஆகி எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்ட ஜோதியும், பாலுவும் செய்யும் சேட்டைகளை தான் அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

அவர்கள் செய்யும் ஒவ்வொரு கேலிக் கிண்டலுக்கும் அவள் மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தாள்.

எப்படியோ ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து அவர்களை பார்க்க போகலாம் என்றெண்ணி அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தாள் ஸ்வேதா.

ஆனால் மற்றவர்கள் கிளம்பினாள் தானே.

“சரி சாப்பிட்டாச்சி இல்ல, நாம வெஜ் ரெஸ்டாரண்ட் போகலாம், அங்க போய் அப்படியே அவங்க கூட ஜாய்ன் பண்ணிக்கலாம்”

“இரு. இப்ப என்ன அவசரம், வேற ஏதாச்சும் வேணுமா” என்றான் பாலு.

இனியா “இளா. எனக்கு ஐஸ்கிரீம்”

“நோ நோ. உனக்கு உடம்பு சரி இல்லை. சோ நோ ஐஸ்கிரீம்”

“ஹேய் இதெல்லாம் அநியாயம். என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. எனக்கெல்லாம் ஒன்னும் இல்லை. ஒழுங்கா ஐஸ்கிரீம் வாங்கி தாங்க”

“நோ வே”

“அப்படி எனக்கு உடம்பு சரியில்லைன்னா எதுக்கு என்ன வெளியில கூட்டிட்டு வந்தீங்க”

“அது சும்மா உனக்கு ஒரு சேன்ஜ்ஜா இருக்கட்டும்னு தான்”

“வவ்வ வவ்வ. எனக்கு அதெல்லாம் தெரியாது. ஒழுங்கா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தாங்க. இதுக்கே இப்படி சொல்றீங்க. இன்னும் ஸ்விம்மிங் பூல் இருக்கு, எல்லா வாட்டர் ரைட்ஸும் நான் போகலாம்னு இருக்கேன். நீங்க ஜஸ்ட் ஐஸ்கிரீம்க்கே இப்படி சொல்றீங்க”

இளவரசன் சுற்றி பார்த்து விட்டு இனியாவின் காதுக்கருகில் சென்று ஏதோ கூற இனியா முகம் சிவந்து அவனை முறைத்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.

ஸ்வேதா ‘என்ன கொடுமை சார் இது’ என்ற ரேன்ஜிற்கு இதை எல்லாம் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த முறைப்பையும் யாராவது கண்டு கொண்டாள் தானே.

சிறிது நேரத்தில் சந்துருவும் பவித்ராவுமே வந்து விட்டார்கள். அவர்கள் தொலைவில் வரும் போதே பார்த்து விட்டாள் பவித்ரா.

ஒன்றாக நடந்து வந்த இருவரும் ஒருவர் பார்க்காத போது மற்றொருவரை பார்த்துக் கொண்டே வந்தனர்.

அருகில் வரவர இருவருமே தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதாவின் நெஞ்சு கொதித்தது.

இதெல்லாம் பத்தாது என்று எல்லோரையும் அவரவர் வீட்டில் ட்ராப் செய்யும் போது இனியா பவித்ராவை தன்னுடன் அழைக்க இளவரசன் அவன் அம்மா அவளை அழைத்து வர சொன்னதாக கூறி அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

ஸ்வேதாவால் என்ன முயற்சி செய்தும் பவித்ராவை அவளின் போட்டியாக நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.