(Reading time: 12 - 24 minutes)

14. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா

டில்லியில் உறக்கம் கலைந்து கண்விழித்தான் வசந்த். இரவு சரியான உறக்கமில்லைதான்.

அவன் படுத்திருந்தது அந்த வீட்டின் மாடியில் இருக்கும் அவனது அறை. அந்த அறையின் முன்னால் இருக்கும் பால்கனியில் இருக்கும் பூந்தொட்டிகளும் செடிகளும் அந்த அறையின் அழகை கூட்டும்

மனதிலே ஒரு பாட்டு அந்த அறை அவனது பொருட்கள், அவனது நினைவுகள்,அவனது பொக்கிஷங்கள் எல்லாம் நிறைந்த அறை.

அவ்வப்போது அனு அந்த அறையை பெருக்கி வைப்பதோடு சரி. வேறு யாரும் அந்த அறைக்குள் வருவதில்லை.

அந்த அறையின் சுவற்றை அலங்கரித்துக்கொண்டிருந்தது அந்த புகைப்படம். மனோவின் நிச்சியதார்த்ததில் மலர்ந்த அர்ச்சனாவின் வெட்க ரேகைகளை பிரதிபலித்த அந்த புகைப்படம்.

அவன் அருகிலிருந்தது அந்த டைரி. இரவு முழுவதும் அந்த டைரியை படித்து அந்த நினைவுகளில் தான் நீந்திக்கொண்டிருந்தான் வசந்த்.

மூன்று வருடத்துக்கு முன்னால், அவர்கள் நிச்சியதார்த்தம் முடிந்து சில மாதங்களுக்கு பிறகு, அர்ச்சனா டெல்லி வந்து இருபது நாள் தங்க நேர்ந்த போது, அர்ச்சனா ரசித்து ரசித்து எழுதிய டைரி

அவள் வந்து நான்கைந்து நாட்களுக்கு பின் ஒரு நாள் கேட்டான் வசந்த்.

'நாம ரெண்டு பேரும் சேர்ந்து டைரி  எழுதலாமா அர்ச்சனா.?

'எதுக்கு? யாரவது எடுத்து படிக்கவா? எத்தனை சினிமா பார்த்தாச்சு. டைரி எழுதறவங்க  அதை படிச்சதா சரித்தரமே கிடையாது. மத்தவங்க தான் படிப்பாங்க.' சிரித்தாள் அழகாக.

அதெல்லாம் யாரும் படிக்க மாட்டாங்க. அது என்கிட்டே பத்திரமா இருக்கும். என் ரூமுக்குள்ள கூட யாரும் வர மாட்டாங்க. கவலை படாதே.  

யாருக்கு கிடைக்கும்?  கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ஒரே வீட்டிலே இருந்து ரொமான்ஸ் பண்ண ஒரு சான்ஸ். அதெல்லாத்தையும் எழுதி வைக்க வேண்டாமா? கண் சிமிட்டி சிரித்தபடி சொன்னான் வசந்த்.

'ரொமான்ஸா அதெல்லாம் நான் பண்ணமாட்டேன்பா'. மெல்ல சிரித்துக்கொண்டாள் அர்ச்சனா.

அவளை ரசித்தபடியே சொன்னான் வசந்த் 'சரி தாயீ. நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். மனசிலே என்னெல்லாம் தோணுதோ அதெல்லாம் அப்படியே எழுது. அது போதும்.  நானும் எழுதறேன்.அப்புறம் ஒரு நாள் சேர்ந்து உட்கார்ந்து படிக்கலாம். அப்போ தெரியும் உனக்கு.

என்ன தெரியும்?

ம்? முதல்லே எழுது. என்ன தெரியும்னு அப்புறம் காட்றேன்

பழைய நினைவுகளில் புரண்டு படுத்தான் வசந்த்.

அவள் டெல்லி வந்ததும், அங்கே தங்க நேர்ந்ததும் யாருமே எதிர்பார்க்காத ஒன்று தான்.

வர்கள் நிச்சியதார்த்திலும் சரி, அது முடிந்த பிறகும் சரி, வசந்த் வீட்டில் உள்ளவர்களிடம் வெகு இயல்பாய் பழகினாளே தவிர, வசந்திடம் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசியதில்லை அர்ச்சனா.

சின்னதான ஒரு வெட்கமும், ஒரு தயக்கமும் அவளை தடுத்துக்கொண்டேதான் இருந்தன.

நேரடியாக எதுவும் சொல்லவில்லை என்றாலும், அவனிடமிருந்து அழைப்பு வரும்போதெல்லாம் மாறிப்போகும் அப்பாவின் முகமும் அவளை குழப்பிக்கொண்டுதான் இருந்தது.

ஒரு வேளை திருமணதிற்கு முன் அவனுடன் பேசுவதை அப்பா விரும்பவில்லையோ என்று நினைத்துக்கொண்டாள் அர்ச்சனா. அதனாலேயே அவளாக அவனை அழைப்பதை தவிர்த்துக்கொண்டே இருந்தாள் அவள்.

அவனது அதிர்ஷ்டமா, அவளது நேரமா தெரியவில்லை, அவளது அலுவலகத்தில் டெல்லிக்கு மூன்று நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

டெல்லி என்றதும் அவளுக்குள்ளும்  சின்னதாய் ஒரு குறுகுறுப்பு எழத்தான் செய்தது.

டெல்லியா? என்றார் அப்பா 'அதெல்லாம் வேண்டாம்'.

இல்லப்பா friends எல்லாரும் போறாங்க. என்னையும் கூப்பிடறாங்க. மூணு நாள் தான்பா ஓடி வந்திடுவேன்.ப்ளீஸ் பா....

எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை அப்பா.,கடைசியில் அரை மனதுடன் சம்மதித்தவர் சொன்னார் வசந்த்கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம். அப்புறம் வீட்டுக்கு வான்னு கூப்பிடுவான். கல்யாணத்துக்கு முன்னாலே அங்கேயெல்லாம் போகக்கூடாது..

சரிப்பா என்றாள் சற்று தழைந்த குரலில்.  அவனிடம் எதுவுமே சொல்லவில்லை அவள்.

அது அப்படியோ, இவள் கிளம்பி சென்னை விமான நிலையத்தை நெருங்கியபோது சரியாய் அழைத்தான் மனோ.

எங்கே இருக்கே நீ?

நா....நான் டெல்லி போயிட்டிருக்கேன். சொல்லிவிட்டிருந்தாள் அவனிடம்.

அடி சக்கை!. இது எத்தனை நாளா?

ஹேய்! ஆபீஸ் டூர் பா. தயவுசெய்து வசந்த் கிட்டே எதுவும் சொல்லிடாதே. அப்புறம் அப்பா கோபப்படுவார் மனோ. ப்ளீஸ்

எதையுமே காதில் வாங்கிக்கொள்ள வில்லை மனோ 'எத்தனை மணி ப்ளைட்?

இல்லை மனோ...

எத்த...னை ம...ணி ப்ளைட்? பதிலை கேட்டுக்கொண்டு அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் மனோ.

தெரியும் அவளுக்கு அடுத்த சில நிமிடங்களில் வசந்துக்கு செய்தி போய்விடுமென்று நிச்சியமாக தெரியும் அவளுக்கு.

விமான நிலையத்தில் வந்திறங்கினாள் அர்ச்சனா. ஒரு பிரும்மாண்ட அரண்மனைப்போல் இருந்த டில்லி விமான நிலையத்தில், சுழன்று கொண்டிருந்த அந்த பெல்டில் மெல்ல நகர்ந்து அவளருகில் வந்த பெட்டியை எடுத்துக்கொண்டு, கால்களை இதமாக்கிய அந்த வழவழப்பான தரையில் தனது  பெட்டியை இழுத்துக்கொண்டு நடந்தவளின் கண்கள் மட்டும் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருந்தன.

வரவில்லையா அவன்?

மனதை  கட்டுப்படுத்திக்கொள்ள எத்தனை முயன்றாலும், கண்கள் மட்டும் எதற்கும் கட்டுப்படுவதாக இல்லை.

'இல்லை வரவில்லை அவன். ஏதாவது முக்கியமான வேலை இருந்திருக்கும்'. தன்னை தானே சமாதான படுத்திக்கொண்டாள் அர்ச்சனா.

,'நிஜமாகவே வரவில்லையா அவன்.'?' மறுபடி கேட்டது அவள் மனம்.

கால்கள் நடந்துக்கொண்டிருக்க, கண்கள் தவித்துக்கொண்டே இருந்தன. 'ஒரு வேளை மனோ சொல்ல வில்லையோ?'

அவர்களை அழைத்து செல்ல வரும் வண்டிக்காக சிறிது நேரம் அங்கேயே காத்திருக்க வேண்டி இருந்தது. நண்பர்கள் இருக்கைகளில் அமர்ந்துக்கொள்ள ,சற்று ஓரமாய் சென்று நின்றுக்கொண்டாள் அர்ச்சனா.

'வேண்டாம் தேட வேண்டாம் அவனை.' அப்பாவுக்கு தெரிந்தால் பிரச்சனைதான்''. தனக்குதானே சொல்லிகொண்டாள், ஆனால் கண்கள் மட்டும் அலைபாய்ந்துக்கொண்டே இருந்தன.

'தே.......டும் கண் பா....ர்வை தவிக்.......க துடி......க்க' பின்னாலிருந்து குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் அர்ச்சனா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.