(Reading time: 11 - 21 minutes)

15. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா

'நா.. நான் விவேக் பேசறேன்' என்றான் விவேக்.

சற்று தழைந்திருந்த விவேக்கின் குரலும், அதில் ஒளிந்திருந்த தயக்கமும் வசந்துக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது.

'ம்' சொல்லுங்க மிஸ்டர் விவேக்'. என்றான் நிதானமான குரலில்.

மனதிலே ஒரு பாட்டு ஒரு நொடி வியந்துதான் போனான் விவேக்.

என் மீது கொஞ்சமும் கோபமோ, வெறுப்போ இல்லையா வசந்துக்கு? நான் வசந்தின் இடத்தில் இருந்திருந்தால் விவேக் என்ற பெயரை கேட்ட அடுத்த நொடி  அழைப்பை துண்டித்திருப்பேன். இல்லையென்றால் வாயில் வந்தபடி பேசியிருப்பேன்.

நான் தரம் தாழ்ந்து பேசிய பிறகும், என்னை 'மிஸ்டர் விவேக்' என்று அழைக்கிறானே? எப்படி முடிகிறது அவனால்? அவன் மீது சின்னதாய் ஒரு மரியாதை பிறந்தது விவேக்கிற்கு.

விவேக்கையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

மறுமுனையில் இருந்த இறுக்கமான மௌனம் வசந்துக்கு வியப்பை அளித்தது.

தன் மடியிலிருந்த அனுவின் குழந்தையுடன் விளையாடியபடியே 'என்னாச்சு மிஸ்டர் விவேக்? எதுக்கு தயங்கறீங்க? சொல்லுங்க  என்ன விஷயம்?   என்றான் கொஞ்சம் கூட நிதானம் மாறாத இதமான குரலில்.

அர்ச்சனாவின் கண்களை சந்தித்தன விவேக்கின் கண்கள். அந்த கண்கள் ஒரு விசையாக மாறி அவனை இயக்குவது போல் தோன்ற, தனது சுய கௌரவத்தை தூக்கி எறிந்துவிட்டவனாய்,

'என்னை மன்னிச்சிடுங்க மிஸ்டர் வசந்த்' நான் உங்ககிட்டே ரொம்ப கேவலமா நடந்துகிட்டேன். ஐ யாம் ஸாரி, ஐ யாம் ரியலி ஸாரி மிஸ்டர் வசந்த்.'  என்றான் கொஞ்சம் கூட தயக்கமில்லாத உறுதியான குரலில்.

"அய்யய்யோ! என்ன விவேக் நீங்க? இப்படி திடீர்னு ஷாக் கொடுக்கறீங்க" சிரித்தான் வசந்த். "உங்க கேரக்டரருக்கு இது செட் ஆகவே இல்லையே. விவேக் விவேக்காதான் இருக்கணும் இல்லையா.?"'  .

"இல்லை வசந்த்." என்றான் விவேக். "நான் 'வசந்த்'தா மாறிடலாம்னு பார்க்கிறேன். அப்பவாவது சுத்தி இருக்கிறவங்களுக்கு என்னை பிடிக்குதான்னு பாப்போம்". அவன் கண்கள்  அர்ச்சனாவை ஆராய்ந்தன.

அவனருகில் அர்ச்சனா நின்று கொண்டிருப்பாள் என்று தோன்றியது வசந்துக்கு.

தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் வசந்த் 'காதல் ஒரு மனிதனை இப்படியெல்லாம் இயக்குமா என்ன?

சிரிப்புடன் கலந்த பெருமூச்சுடன் உறுதியான குரலில் சொன்னான் வசந்த்' "வசந்தா மாறிடறது கொஞ்சம் கஷ்டம் மிஸ்டர் விவேக். முயற்சி பண்ணுங்க தப்பில்லை"

'கண்டிப்பா' என்று சிரிப்பில் கலந்த குட் நைட்டுடன் அழைப்பை துண்டித்து விட்டு  நிமிர்ந்தான் விவேக்.

சற்று திகைத்துபோனவளாய் எதுவுமே பேசமால் சிலையாய் நின்றிருந்தாள் அர்ச்சனா. அவள் கண்களில் சில நாட்களாய் தேங்கி நின்ற வெறுப்பு கொஞ்சம் விலகியது போல் தோன்றியது விவேக்கிற்கு.

அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் விவேக். அவன் கண்கள் தவித்துக்கொண்டிருந்தன.

அவள் இதழ்களில் சின்னதாய் ஒரு புன்னகை பூத்துவிடாதா? ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட மாட்டாளா?

அவன் தவிப்பை புரிந்து கொண்டவளாய் மெல்ல புன்னகைத்தாள் அர்ச்சனா.

'எல்லாரும் தான் தப்பு செய்யறோம். ஆனால் செஞ்ச தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறதுக்கு யாரும் தயாரா இருக்கறதில்லை. அதுக்கு தனி தைரியம் வேணும். யூ ஆர் ரியலி கிரேட்' நிதானமான குரலில் சொன்னாள் அர்ச்சனா.

மனதிலிருந்த பெரிய அழுத்தம் சட்டென குறைந்து போக நிம்மதியான சுவாசத்துடன் தலை சாய்த்து புன்னகைதான் விவேக். அதற்கு மேல் எதுவுமே பேசத்தோன்ற வில்லை அவனுக்கு.

புன்னகையுடன் கலந்த குட் நைட்டுடன் அவள் இறங்கி சென்ற பின்பு அப்படியே அமர்ந்தான் விவேக்.

அவள் புன்னகை அவன் கண்களுக்குள்ளேயே இருந்தது. ஏனோ அவள் மீதிருந்த நேசம் பன்மடங்காகி விட்டதை போல் தோன்றியது அவனுக்கு..

மனம் லேசாகி பறப்பதை போல் தோன்ற, நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் விவேக்.

னுவின் கை மணத்தை ரசித்த படியே இரவு உணவை சுவைக்க துவங்கினான் வசந்த்.

அவள் முகத்தை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் எழ சின்னதாய் சிரிப்புக்கூட வந்தது அவனுக்கு.

இப்போது போல் இருக்கிறது, அவனுக்கு பதினோரு  வயதிருந்தபோது ஒரு நாள் காலையில் அவன் வீட்டு வாசலில் படுத்துக்கிடந்தாள் அனு.

அவளை முதலில் பார்த்தவன் வசந்த். அவளை எழுப்பினான் அவன்.

தும் கஹான் சே ஆ ரஹீ ஹோ (நீ எங்கிருந்து வருகிறாய்)

நாம் க்யா ஹை தும்ஹாரா? (உன் பெயரென்ன?)

ஹிந்தியில் அவன் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் திரு திருவென்ற விழிப்பையே பதிலாக கொடுத்துக்கொண்டிருந்தாள் அனு.

'அப்பா இங்கே வாங்களேன்' அவனுடைய தமிழ் அவளுடைய கண்களில் மின்னலை கொண்டு வந்தது.

நீங்க தமிழ் பேசுவீங்களா?

'நீயும் தமிழ் தானா என்றான் வசந்த்.

எங்க அம்மா அப்பாவை கண்டு பிடிச்சு கொடுக்கறீங்களா அண்ணா? அது அவளுடைய அடுத்த கேள்வியாக இருந்தது.

சரி கண்டுபிடிச்சிடுவோம்.முதல்லே நீ எந்த ஊரு அதை சொல்லு?.

'மெட்ராஸ்' என்றாள். அதையும் அவள் அப்பா அம்மா பெயரையும் தவிர வேறெதையும் சரியாய் சொல்ல தெரியவில்லை அவளுக்கு.யாரோ எதற்காகவோ அவளை கடத்திக்கொண்டு வந்து டெல்லியில் விட்டிருக்க வேண்டும் என்று மட்டுமே புரிந்தது.

அவள் அப்பா அம்மாவை தேடும் முயற்சி அப்போது பயனளிக்கவில்லை. அதற்குள் அப்பா அவளை தன் சொந்த மகளாகவே ஏற்றுக்கொண்டு விட்டிருந்தார்..

வசந்தின் மீதிருந்த பாசத்தை விட அவள் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைக்க துவங்கினார் அப்பா.

'என்ன யோசனை ? சாப்பிடு' அனுவின் குரல் கலைத்தது.

எங்க அம்மா அப்பாவை கண்டு பிடிச்சு கொடுக்கறீங்களா அண்ணா? முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு வசந்த் கேட்க சட்டென சிரித்தே விட்டிருந்தாள் அனு.

கொஞ்சம் லேட்டானாலும் சொன்னபடி இந்த அண்ணன், உன்னை உங்க அப்பா அம்மாவோட சேர்த்து வெச்சுட்டேனா இல்லையா?

'ம்' மெல்ல சிரித்தாள் அனு.

அப்புறம் உங்க அம்மா அப்பா எப்படி இருக்காங்க? சாப்பிட்டு கை கழுவிய படியே கேட்டான் வசந்த்.

ம். நல்லாயிருக்காங்க.

'நாளைக்கு ஞாபகப்படுத்து அவங்களுக்கு போன் போட்டு ஒரு ஹாய் சொல்லுவோம். பேசி ரொம்ப நாளாச்சு' என்ற படியே மாடிக்கு படி ஏறினான் வசந்த்.

அது எப்படி வசந்தால் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லாரிடமும் அன்பு பாராட்ட முடிகிறது. யோசித்தபடியே நின்றிருந்தாள் அனு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.