(Reading time: 11 - 22 minutes)

18. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா

ர்ச்சனவின் அப்பாவை நோக்கி நடந்தான் வசந்த். அவன் நடையில் சிறிது கம்பீரம் கூடியிருந்தது.

'ஒரு முறை அவர் கண்களை நேருக்கு நேராய் சந்திக்க வேண்டும். அது போதும். கேட்க வேண்டிய கேள்விகளையெல்லாம் அந்த பார்வையே கேட்டுவிடும்'

மனதிலே ஒரு பாட்டு 'நிச்சியமாக அவரால் என் கண்களை சந்திக்கவே முடியாது. அப்படி  சந்திதாராகில் அவரால் மனிதராகவே இருக்க முடியாது' ஒரு பெருமூச்சுடன் அவரை நோக்கி நடந்தான் வசந்த்.

ஆட்டோவின் அருகில் சென்றான் வசந்த்.

அந்த ஆட்டோ டிரைவர் ஹிந்தியில் கத்தி கொண்டிருந்தான்.' என் கிரகக்கோளாறு. இன்று உன்னிடம் சிக்கிக்கொண்டேன். காலையிலிருந்து திண்டாடிக்கொண்டிருக்கிறேன்.'

'டிரைவரின் அருகே குனிந்து ' கித்னா தேனா ஹய் பையா?' என்றான் வசந்த்.

'தோ சௌ'

பதில் பேசாமல் தனது பர்ஸிலிருந்து இரு நூறு ரூபாயை எடுத்து அவன் கையில் திணித்தான் வசந்த்.

ஆட்டோ ட்ரைவரின் புலம்பல் ஒய்ந்த பாடில்லை.

'பஸ்' என்றான் வசந்த். 'தே தியா நா பைசா. காடி நிகாலோ ஔர் ஜாதே ரஹோ.' (பணம் கொடுத்துவிட்டேன் அல்லவா? வண்டியை நகர்த்திக்கொண்டு போய்க்கொண்டே இரு)

நகர்ந்தது ஆட்டோ. நிமிர்ந்தான் வசந்த்,

பர்ஸை பின் பாக்கெட்டுக்குள் சொருகியபடியே மெல்ல மெல்ல கண்களை நிமிர்த்தி அவர் முகத்தை ஏறிட்டான்.

ப்போதுதான், அந்த நொடியில்தான் அவன் யாரென்று உரைத்திருக்க வேண்டும் அவருக்கு. உள்மனம் சுள்ளென்று சுட்டிருக்க வேண்டும். சற்று அதிர்ந்து போய் அணிந்திருந்த கண்ணாடியை சட்டென்று கழற்றினார் அர்ச்சனாவின் அப்பா.

எதுவுமே பேசாமல்,  அவர் கண்களை நேருக்கு நேராய் ஊடுருவினான் வசந்த்.

முடியவில்லை. அவரால் அவன் கண்களை சந்திக்கவே முடியவில்லை. சட்டென பார்வையை தாழ்த்திக்கொண்டார்.

திடீரென்று ஏற்பட்ட அந்த சந்திப்பினால் அவர், மனதில் பரவியிருந்த அதிர்ச்சி உடலில் லேசான நடுக்கத்தை தந்திருக்க வேண்டும். கையிலிருந்த கண்ணாடி நழுவி கீழே விழுந்தது.

குனிந்து கண்ணாடியை எடுத்தார். அது உடைந்து விடவில்லை என்பதை உறுதி செய்யும் சாக்கில் அவன் பார்வையை தவிர்த்தார் அர்ச்சனாவின் அப்பா.

தன் மகளை தன்னிடமிருந்து பிரித்து விடுவான் என்ற பயமும், வெறுப்பும் அவன் மீது இருந்தபோதும் அவன் கண்கள் அவரை நேருக்கு நேராய் சந்தித்த போது, மூன்று வருடத்திற்கு  முன்னால், தன் மகளின் மீதிருந்த அளவு கடந்த பாசத்தால் தான் செய்த அந்த  காரியம்தான் மட்டும்தான் அவர் நினைவிலாடியது

மனசாட்சியின் உறுத்தலினால்  அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை அவரால்.

தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் வசந்த். 'பரவாயில்லை. இன்னமும் அவரிடம் மனசாட்சி மிச்சமிருக்கிறது'

வரை விட்டு பார்வையை அகற்றாமல் சற்று அழுத்தமான குரலில் 'என்ன சார்? சௌக்கியமா?' என்றான் வசந்த்.

பார்வையை நிமிர்த்தவில்லை அவர்.

'ஆ.....ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுத்.......கொடுத்தீங்க? வார்த்தைகள் தடுமாறி வெளியேற தனது பர்ஸை துழாவி ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார் அர்ச்சனாவின் அப்பா.

"நம்ம கணக்கு இந்த ஐநூறு ரூபாயிலே தீர்ந்து போற கணக்கு இல்லை சார். நியாயமா  எனக்கு நீங்க செஞ்சதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நான்தான் கணக்கு தீர்க்கணும்.

திடுக்கென நிமிர்ந்தார் அர்ச்சனாவின் அப்பா

என்ன சார்  அப்படி பாக்கறீங்க? பழசையெல்லாம் மறந்துடீங்களா? நான் இன்னும் எதையும் மறக்கலை சார்.' என்றான்  சற்று காரம் படிந்த அழுத்தமான  குரலில்.

அவனுடைய கத்தி முனை பார்வை அவரை மொத்தமாய் உலுக்கியது. அவர் கண்கள் தன்னாலே தாழ்ந்தன. அவர் இதயம் படபடக்க, உடலில் நடுக்கம் பரவியது.  அவனுக்கு பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை அவரிடத்தில்.

அவன் பார்த்த பார்வையிலேயே மொத்தமாய் தோற்று போனவராய்  குரல் தடுமாற சொன்னார் 'உங்.. உங்கப்பா அப்படி பண்ணு.. பண்ணுவாருன்னு நான் நி... நினைக்ககலை. சத்தியமா நினைக்கலை. அர்ச்சனா என் பொண்ணு. அவ, அ.....வ நான் பெத்த பொண்ணு. உங்களையெல்லாம் பார்த்துட்டா அவ என்னை மறந்திடுறா. அவ இல்லாம நான் நா.....ன் எப்படி இருப்பேன். எனக்கு என் பொண்ணு வேணும். . அத.... அதனாலே தான் உங்கப்பாகிட்டே அப்படி சொன்னேன்.

புருவங்கள் உயர அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் வசந்த். அவன் கண்களில் பரவியிருந்த தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய துவங்கியது.

'அப்போ மட்டுமில்லை இப்பவும் எனக்கு அதேதான். அவ எப்பவும் என் கூடவே இருக்கணும். அவ எப்பவும் என் பொண்ணாவே இருக்கணும்.' தவிப்பும் கலக்கமுமாய் சொன்னார் அர்ச்சனாவின் அப்பா.

அவரை இமைக்காமல் பார்த்தபடியே  நின்றிருந்தான் வசந்த்.

'என் பொண்ணை விட்டுடு வசந்த். எனக்காக தயவு செஞ்சு விட்டுடு. தயவு செஞ்சு எதையும் அவகிட்டே சொல்லிடாதேபா அவ என்னை மொத்தமா வெறுத்திடுவா .' கண்களை நிமிர்த்தி அவனை பார்த்து கெஞ்சியவர் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் விறுவிறுவென நகர்ந்தார்.

சிலையாகிப்போயிருந்தான் வசந்த்.

அவர் பேசிய அந்த நிமிடத்தில் தன்னுடைய அப்பா அங்கே வந்து நின்று பேசியது போலே தோன்றியது அவனுக்கு.

இந்த உலகத்தை விட்டு அவர் போவதற்கு முன்தினம் இப்படித்தானே புலம்பிக்கொண்டிருந்தார் அவர்?

'அனு என் பொண்ணு. அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்.? எனக்கு என் பொண்ணு வேணும். அவ எப்பவும் என் பொண்ணாவே இருக்கணும். அவ எப்பவும் என் கூடவே இருக்கணும்.' திரும்ப திரும்ப இதைத்தானே சொல்லிக்கொண்டிருந்தார் அவர். அவருக்கும் இவருக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லையே?

சற்று தடுமாறிய படியே நடந்தவன், அங்கே மரத்தடியில் இருந்த பெஞ்சில் முகத்தை கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அமர்ந்தான்.

ன்று சனிக்கிழமை என்பதால் அர்ச்சனாவுக்கு விடுமுறை. வீட்டிலிருந்தவளின் மனம் திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கொண்டிருந்தது.

என்னவாயிற்று வசந்தின் அப்பாவுக்கு. மனோவின் திருமணத்தன்று அவர் பேசிய போது அவர் முகத்தில் பரவியிருந்த இயலாமையும் ,வேதனையும் இன்னமும் நன்றாய் நினைவிருக்கிறது அவளுக்கு.

மறுபடியும் தன்னை தானே கேட்டுக்கொண்டாள் அர்ச்சனா  நிஜமாகவே தவறு யார் மீது?

நடந்தவற்றையெல்லாம் திரும்ப திரும்ப புரட்டிப்பார்த்து விடை தேட முயன்றுக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.