(Reading time: 33 - 65 minutes)

22. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா

ருத்துவமனையில் உறங்கிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. அவள் அருகில் அமர்ந்திருந்தான் மனோ.

அவள் உதடுகள் ஏதோ புலம்பிக்கொண்டிருந்ததை உணர்ந்து அவள் அருகில் சென்றவனின் காதில் விழுந்தது அந்த வார்த்தைகள்.

மனதிலே ஒரு பாட்டு 'நான் உன்னை காயப்படுத்.....'   வசந்த்.... வசந்த்.... நீ எனக்காக... வசந்த் நான்...உன்ன.. ரொம்ப.....'   உடைந்து பாதி பாதியாய் வார்த்தைகள் வெளி வந்த போதும் அவள் மன நிலை தெளிவாய் புரிந்தது மனோவிற்கு.

அனுவை அழைத்தான் மனோ. அனுவின் அருகிலேயே அமர்ந்திருந்தாள் சாந்தினி.

'வசந்த் எதாவது போன் பண்ணானா?'

இல்லையே என்றாள் அனு.

எப்போ போன் பண்ணாலும் என்கிட்டே உடனே பேச சொல்லு.

என்னாச்சுண்ணா ஏதாவது ப்ராப்ளமா?

'ஆமாம் அர்ச்சனா ஹாஸ்பிடல்லே இருக்கா.

அர்ச்ச....னா ஹாஸ்பிடல்லே இருக்காளா?

ஆமாம் அவன் பேசினான்னா உடனே என்னை கூப்பிட சொல்லு.' துண்டித்தான் அழைப்பை.

அர்ச்சனா மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற வார்த்தையில் துடித்து போனாள் சாந்தினி.

அதன் பிறகு அவள் அனுவை விடவில்லை. அவள் துளைத்து எடுத்ததில் வசந்த் அர்ச்சனா கதையை அவளிடம் முழுவதுமாய் சொல்லிவிட்டிருந்தாள் அனு.

எல்லாவற்றுக்கும் அவள் அப்பாதான் காரணமா? திகைத்து போய் அமர்ந்திருந்தாள் சாந்தினி.

என்னவாயிற்று அர்ச்சனாவுக்கு. எப்படியாவது அர்ச்சனாவை பார்க்க வேண்டும்.

ன்றிரவு மருத்தவமனையிலிருந்து வீடு திரும்பி இருந்தாள் அர்ச்சனா.

மாடியில் இருந்த அப்பாவுக்கு எல்லாம் தெரிந்தது. மாடிக்கு வந்த மனோவிடம் கேட்டார் 'அர்ச்சனா எப்படிப்பா இருக்கா?'

'அவளுக்கு ஒண்ணுமில்லை சித்தப்பா. கீழே வந்து அவளை பாருங்களேன்.' ஏனோ அந்த நிமிடத்தில். அவரை பார்க்க பரிதாபமாய் இருந்தது மனோவிற்கு.

முடியவில்லை அவரால். கீழே வந்து அர்ச்சனாவின் முகத்தை பார்க்கும் துணிவில்லை அவருக்கு.

தன் மகளின் உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தும் உரிமையுடன் அவளை சென்று அவள் அருகில் அமர்ந்து தலையை வருடிக்கொடுக்க முடியாத தவிப்பிலும், குற்ற உணர்ச்சியிலும் உடைந்து போயிருந்தார் அப்பா.

றுநாள் கல்லூரிக்கு போகும் பாவனையில் பெங்களூருக்கு கிளம்பி விட்டிருந்தாள் சாந்தினி.

அனுவின் கைப்பேசியிலிருந்து மனோவின் எண்ணை எடுத்துக்கொண்டு,யாருக்கும் தெரியாமல் விமானம் ஏறி விட்டாள். முதல் முறையாக தனியாக விமான பயணம் என்னும் படபடப்பை விட, திரும்பி சென்றவுடன் வீட்டில் வெடிக்க போகும் பிரளயத்தை பற்றிய படபடப்பு அதிகமாய் இருந்தது.

அது எல்லாவற்றையும் மீறி அர்ச்சனாவை பார்க்க வேண்டும் அவளை வசந்துடன் சேர்க்க வேண்டும் மென்ற தவிப்பு அவளை செலுத்தியது.

எப்படியோ பெங்களூர் வந்து சேர்ந்து, மனோவை தொடர்பு கொண்டாள் சாந்தினி.

'எனக்கு அர்ச்சனாவை பார்க்கணும் அதுக்குதான் வந்தேன்.' விமான நிலையத்திலிருந்து இதையே புலம்பிக்கொண்டு வந்த சாந்தினியை ஆச்சர்யமாய் பார்த்தான் மனோ. 'இப்படி ஒரு பெண்ணா?

விஷயம் அறிந்து வானுக்கும், பூமிக்குமாக குதித்த அனுவை எப்படியோ சாமாதான படுத்தினான் மனோ.

அவள் வீட்டுக்கு வந்து அர்ச்சனாவை பார்க்க மாடி ஏறிய போது எதிர்ப்பட்டார் அர்ச்சனாவின் அப்பா.

அவர் முகமும், அதில் படிந்திருந்த அழுத்தமும், அவளை என்னவோ செய்தது. அவள் மனதிலும் ஏதோ ஒரு அழுத்தம் குடிக்கொண்டது.

அதன் பிறகு அர்ச்சனாவை பார்த்து சாதரணமாக பேசிவிட்டு கீழே இறங்கினாள் சாந்தினி,

றுநாள் காலை அழகாய் விடிந்திருந்தது. அன்று மனோவின் திருமண நாள்.

அன்று காலை தேதியை பார்த்தவுடனே மேலும் சோர்ந்து போனாள் அர்ச்சனா. ஏதேதோ நினைவுகளுடன் மனோவிற்கு வாழ்த்து கூட சொல்லாமல் அலுவலகத்துக்கு கிளம்பி சென்று விட்டிருந்தாள்.

ஆனால் அன்று காலையிலிருந்தே மனோவினுள்ளே ஏதோ ஒரு சந்தோஷம் வளர துவங்கி இருந்தது.

விவேக், சாந்தினி, மனோ என மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அர்ச்சனா ரொம்ப சோகமா இருக்காங்க' என்றாள் சாந்தினி.

'ஆமாமா. இன்னைக்கு காலையிலிருந்து சோக கீதத்தோட வால்யூம் ரொம்ப ஜாஸ்தி ஆகிப்போச்சு.' சிரித்தான் விவேக்.

சட்டென்று ஏதோ ஒரு மின்னல் வெட்ட சொன்னாள் 'இன்னைக்கு உங்களுக்கு வெட்டிங் அனிவர்சரி தானே. இன்னைக்கு ஈவினிங் அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமா? என்று அவள் சொன்ன திட்டத்தை கேட்டு சிரித்தான் விவேக்.

'நீ நிறைய சினிமா பார்ப்பியா?

சிரித்தபடியே  அவள் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டான் மனோ.

'சரி ஓகே.'  எப்படியோ அவளுக்கு சந்தோஷம் திரும்ப வந்தால் சரி.

நேரம் இரவு ஏழை தாண்டி இருந்தது. மாடியில் தனது அறையில் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

அன்றைய தேதியின்  ஞாபகங்கள் அவளை விடுவதாக இல்லை. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏதோ ஒரு புத்தகத்தினுள் மூழ்கி போக முயன்று, தோற்று, படித்த பக்கத்தையே நான்காவது முறையாக படித்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

மாடி ஏறி வந்தான் மனோ. 'ஹேய்! என்ன நீ நைட்டியிலே உட்கார்ந்திருக்கே கிளம்பலையா இன்னும்?

எங்கே?

ஹோட்டலுக்கு. இன்னிக்கு என் வெட்டிங் ஆனிவர்சரி. மறந்து போச்சா உனக்கு?. ஹோடேல்லே எல்லாருக்கும் ட்ரீட். சீக்கிரம் கிளம்பு.

'நீ போயிட்டு வா மனோ. இந்த நாளை கொண்டாடுற மனசு எனக்கில்லை.' அவள் குரல் வறண்டு போயிருந்தது.

நீ முதல்லே கிளம்பு. அதுக்கப்புறம் பார் என்றான் அவள் கண்களுக்குள் பார்த்து. இனிமே இந்தநாளை தான் நீ கொண்டாடுவே. 

பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளை பார்த்து புன்னைகைதான் மனோ. 'கிளம்புடா. உன் அண்ணன் எப்பவும் உனக்கு நல்லது தான் செய்வான்'

கொஞ்சம் வெளியில் போய் வரலாம் என்றுதான் தோன்றியது அவளுக்கும். பழைய நினைவுகளிலிருந்து மனம் கொஞ்சமாவது விடு படும்

தயாராகி கீழே இறங்கி வந்தாள் அர்ச்சனா. அழகான பச்சை வண்ண சேலையில் எளிமையான அலங்காரத்துடன் அழகாய் வந்தாள் அர்ச்சனா..

ஆ....ஹா.... என்று சிரித்தாள் ஸ்வேதா. 'ஏதோ ஒண்ணு குறையுதே. இருங்க வரேன் என்று மல்லிகை பூவை எடுத்து அவள் தலையில் சூட்டினாள் ஸ்வேதா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.