(Reading time: 23 - 45 minutes)

01. சிறகுகள் - பாலா

ண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை நிறைந்திருக்க அவள்  மனம் உற்சாகத்தில் நிறைந்திருந்தது.

கீழே அந்த பசுமையை பார்ப்பதற்கும் அந்த உயரத்திலிருந்து வானத்தை பார்ப்பதற்கும் தெவிட்டாத காட்சியாக இருந்தது.

Siragugal

வானத்தை ஒரு பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு பறவை அந்தப் புறம் பறக்க அவளுக்கும் ஏனோ பறக்க தோன்றியது. நாமும் பறந்தால் எப்படி இருக்கும் என்று அவள் எண்ண, எண்ணி முடித்த வினாடி அவளுக்கு சிறகுகள் வந்து அந்த சிறகுகள் சிறகடிக்க ஆரம்பித்தது.

அவளால் அதை நம்ப இயலாமல் தன் கைகளை அசைப்பதை போல் அசைத்துப் பார்த்தாள். உடனே அவள் சிறகுகள் சிறகடிக்க அவள் பறக்க ஆரம்பித்தாள்.

அந்த பறவை சிறிது தூரத்தில் பறக்க அதை பிடிக்கும் ஆர்வத்துடன் அவளும் விரைவாக பறக்க ஆரம்பித்தாள்.

மனம் முழுக்க சந்தோசத்துடன் சொல்ல இயலாத பரவசத்துடனும் பறந்து கொண்டிருந்தவளின் சிறகுகள் திடீரென்று காணாமல் போக அவள் கீழே விழ ஆரம்பித்தாள்.

திடீரென்று எழுந்து விட்டாள் தேன்மொழி.

‘சே எல்லாம் கனவா, எல்லாம் ஏதோ நினைவு போல் இருந்ததே’, அவளுக்கு இன்னும் ஏதோ பறப்பது போல் இருந்தது.

‘உள்ளத்தின் எண்ணங்கள் கூட கனவாக வரும் என்று சொல்வார்களே, ஒரு வேளை என் ஆழ்மன எண்ணங்கள் தான் இப்படி கனவாக வருகிறதோ’ என்று எண்ணிக் கொண்டாள்.

திரும்ப அந்த கனவை நினைத்து கொண்டவளின் முகத்தில் ஒரு கீற்றுப் புன்னகை.

‘இருந்தாலும் எனக்கு ஆசை கொஞ்சம் அதிகம் தான். சிறகு முளைப்பது, பறப்பது என்று என்னவெல்லாம் எண்ணங்கள்’

அதோடு அதைப் பற்றி எண்ணாமல் எழுந்து மணியை பார்த்தவள்.

‘ஐயோ மணி ஆறாகி விட்டதே’ என்று எண்ணியவாறு எழுந்தவளுக்கு அப்போது தான் உரைத்தது. இப்போது தனக்கு வேலை இல்லை என்பதும், தான் எங்கிருக்கிறோம் என்பதும்.

எண்ணங்கள் எங்கெங்கோ சென்று மனதை வருத்தப்பட வைக்க, அதை உதறி விட்டு எழுந்தாள்.

குளித்து விட்டு தன் அன்னையிடம் சென்றவள் “என்னம்மா, என்ன செய்யறீங்க. உங்களை யாரு சீக்கிரம் எந்திரிக்க சொல்றது” என்று சிறிது கோபத்துடன் கேட்டாள்.

“அது இருக்கட்டும். நீ ஏன்டா சீக்கிரம் எந்திரிச்சிட்ட, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறது தானே”

“ம்மா பேச்சை மாத்தாதீங்க. நான் இத்தனை மணிக்கு எந்திரிக்கறது சீக்கிரம், ஆனா நீங்க மட்டும் நாலு மணிக்கே எந்திரிச்சி உடம்பை கெடுத்துக்கோங்க. சரியா”

“இல்லம்மா. இப்ப தான் எந்திரிச்சேன்” என்றார் ஏதோ சமாளிப்பாக.

“ம்மா. உங்களுக்கு பொய் சொல்ல வராது. சோ வேஸ்ட்டா ட்ரை பண்ணாதீங்க.”

தப்பு செய்த குழந்தையைப் போல் பெற்ற மகளிடம் விழித்துக் கொண்டு நின்றிருந்தார் கௌசல்யா.

அவரின் அந்த செய்கையும், அந்த நிர்மலமான முகமும் தான் தேன்மொழியை எந்த வித கோபம், பிடிவாதம் என்றாலும் எல்லாவற்றையும் விட்டுவிட வைக்கும்.

தாயை வாஞ்சையுடன் பார்த்தவள் “அப்பா தான் வீட்டுல இல்லைல்ல, இப்ப யாரை கிளப்பி வெளியில வேலைக்கு அனுப்பனும்ன்னு இப்படி விடியற்காலைல எழுந்து வேலை செய்யறீங்க” என்றாள்.

“இல்லடா. பழக்க தோஷம் விட மாட்டேங்குதே, நானும் நீ சொல்றதுக்காக எவ்வளவு முயற்சி செஞ்சி தான் பார்க்கறேன், ஆனா தூக்கம் கலைஞ்சி போயிடுதே, எவ்வளவு நேரம் தான் தூங்காம சும்மா படுத்திருக்கறது, நீயே சொல்லு”

“உன்னை என்ன தான் மா செய்யறது. சொன்னா புரிஞ்சிக்கோம்மா. ஒரு நாளைக்கு செவன் ஹவர்ஸ் தூங்கனும், அப்படி இல்லன்னா அட்லீஸ்ட் சிக்ஸ் அவர்ஸாச்ச்சும் தூங்கனும், நீ நைட்டும் லேட்டா தூங்கிட்டு, மார்னிங்கும் சீக்கிரமா எந்திரிச்சா என்ன அர்த்தம். உன் ஹெல்த் நீயே ஸ்பாய்ல் பண்ணிக்காதம்மா” என்று தாய்க்கு ஏதோ குழந்தைக்கு சொல்வதை போல புரிய வைக்க முயன்றுக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

“நான் சீக்கிரம் படுத்துட்டேனே டா”

தாயை முறைத்தவாறே “படுக்கறது பெரிசு இல்லம்மா. தூங்கனும். இப்ப இருக்கற நிலைமைல அவ்வளவு சீக்கிரம் நீ தூங்கி இருக்க மாட்ட” என்றாள்.

அப்போது சரியாக அவரின் இளைய மகள் வர ‘அப்பாடி தப்பிச்சேன்’ என்று எண்ணியவராக, “என்னடி, எவ்வளவு நேரம் தான் தூங்குவ” என்று தன் இளைய மகளை அதட்டினார் கௌசல்யா.

தாயை முறைத்தவாறே “ரொம்ப தான்மா. அக்காவை மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறது தானேன்னு சொல்லுற, என்னை மட்டும் இப்படி திட்டுற. நான் இவ்வளவு நேரம் ஹால்ல தான் இருந்தேன். உங்க ராமாயணம் முடிஞ்ச பிறகு வந்து காபி குடிக்கலாம்ன்னு இருந்தேன். நீங்க முடிக்கற மாதிரி இல்ல, அதான் எப்படியாச்சி நாமே கஷ்டப்பட்டு காஸ் ஆன் பண்ணி, கஷ்டப்பட்டு பாத்திரத்தை வைச்சி, கஷ்டப்பட்டு பால் ஊத்தி, கஷ்டப்பட்டு” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலே தேன்மொழி அவளை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அக்காவின் பார்வையில் அனல் ஏறுவதை உணர்ந்த மலர்விழி, “ஹிஹிஹி. சரிம்மா. காபி கொடு” என்றாள்.

தேன்மொழி அவள் துணிகளை எடுத்துக் கொண்டு, “நான் டிரஸ் துவைக்க போறேன்ம்மா” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

“அதான் அப்பா இல்லைல்ல டா. வாஷிங் மெசின்லயே போட்டு துவையேன்” என்றவருக்கு தீட்சண்யமான பார்வை தான் பதிலாக கிடைத்தது.

“அதுக்கில்ல” என்று திரும்ப ஏதோ கூற வந்தவரை தடுத்து விட்டு,

“ஒரு விஷயம் செய்யக் கூடாதுன்னா செய்யக் கூடாது. அதென்ன ஒருத்தவங்க இருக்கும் போது ஒரு மாதிரி நடக்கறது, இல்லாதப்ப ஒரு மாதிரி நடக்கறது, எனக்கு அதெல்லாம் பிடிக்காது”

“சரி. அப்பாவே இருந்தா கூட என்ன சொல்ல போறாரு. அது எப்பவோ ஏதோ சொல்லிட்டாருன்னு நீ ஏன் இன்னும் இப்படி நடந்துக்கற”

“எப்படியோ பேச்சுன்னு ஒன்னு வந்துடுச்சி இல்ல, பேசின பேச்சை மாத்த முடியாதும்மா. அதுவும் இல்லாம அன்னைக்கு இருந்த நிலைமைக்கும் இன்னைக்கும் என்ன பெரிய வித்தியாசம். அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் எனக்கு வேலை இல்லை.” என்றவள் சென்று விட்டாள்.

அன்னையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மலர்விழி “சரி விடும்மா. அக்காவை பத்தி தான் தெரியும்ல. விடு. அது சரி. உன்னை காப்பாத்தறதுக்கு நான் உள்ளே வந்தா நீ என்னையே போட்டு தாக்கறியே, இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா” என்றாள்.

“ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவராக அவளுக்கு காபியை கொடுத்தார்.

துணிகளை துவைத்து மாடியில் காயப் போட்டு விட்டு நிமிர்ந்தவளின் கவனத்தில் அங்கிருந்த மரத்தில் இருந்த ஒரு குருவி பட்டது.

அதைப் பார்த்தவளின் நினைவில் காலையில் கண்ட கனவு தான் நியாபகம் வந்தது.

நிஜ வாழ்க்கையில் தான் யாரும் சிறகடிக்க விடுவதில்லை. கனவில் கூட திடீரென்று அந்த சிறகுகள் மறைந்து விட்டதே என்று எண்ணிக் கொண்டாள்.

“சாப்பாடு போடும்மா. பசிக்குது” என்று கெஞ்சிக் கொண்டிருந்த மலர் விழியை கௌசல்யா கண்டு கொள்வதாய் இல்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.