(Reading time: 17 - 33 minutes)

14. நினைத்தாலே  இனிக்கும்... - பாலா

ninaithale Inikkum

ரு முதலில் அவள் தந்தையை தான் கண்டாள். அவள் முகம் மலர்ந்து சிரிப்பதற்குள் அங்கு வின்சியின் பெற்றோரும் இருப்பதை கண்டவளின் முகம் திகைப்புக்குள்ளானது.

இவர்கள் ஏன் இங்கு வந்துள்ளார்கள். ஒரு வேளை வின்சியை பார்க்க வந்திருப்பார்களோ?

அந்த நிகழ்வுக்கு பின்பும் வின்சியைத் தவிர மற்ற எல்லோரும் அவள் வீட்டிற்கு வந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆரு முதலில் கொஞ்சம் ஒதுங்கி போனாலும் சிறு வயதில் இருந்து தன் பெற்றோருக்கு நிகராக பார்த்தவர்களை, அதுவும் அவர்களே வந்து பேசும் சமயத்தில் ஒதுக்க இயலவில்லை. அவன் செய்ததற்கு இவர்கள் என்ன செய்வார்கள் என்ற எண்ணம் வேறு. எனவே அவர்களிடம் முன்பு அளவிற்கு பேச இயலாவிட்டாலும், முழுவதுமாக புறக்கணிப்பதுமில்லை. அதிலும் அவர்கள் இவள் மேல் அன்பு மழை பொழியும் போது இவளுக்கே குற்ற உணர்ச்சி ஆகி விடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தன் பெற்றோரே (யாருக்கும் காரணம் தெரியாததால்) தான் வின்சி இங்கு வரக் கூடாது என்றெல்லாம் கூறியதற்கு வன்மையாக கண்டித்து அதற்கான காரணத்தைக் கேட்டு வற்புறுத்திய போதும், (பின்பு அனு ஏதேதோ சொல்லி சமாளித்தது வேறு விஷயம்) வின்சியின் பெற்றோர் அவள் வீட்டிற்கு வந்த எப்போதுமே அதற்கான காரணத்தையோ இல்லை, ஏன்மா இப்படி செய்யற என்றோ அவர்கள் கேட்டதே இல்லை. அதனாலேயே அவளுக்கு அவர்கள் மீது பாசத்துடன் மரியாதையும் அதிகம்.

ஆனால் இதெல்லாம் அவள் கல்லூரி சேர்வதற்கு முந்தைய கதை. அவள் கல்லூரியில் சேர்ந்த பிறகு அவர்களை அவள் சந்திக்கவே இல்லை. ஆருவுக்கே அவர்களை பார்க்காமல் ஏதோ ஒரு மாதிரி தான் இருந்தது. இப்போது தான் ஒரு வருடத்திற்கும் மேலான பிறகு அவர்களை பார்க்கிறாள்.

ஒரு வேளை அவனை பார்க்க வந்து தன்னையும் பார்க்க வந்திருப்பார்களோ என்று எண்ணிக் கொண்டு திரும்ப புன்னகையுடனே அவர்களை கட்டிக் கொண்டாள்.

சிறு நல விசாரிப்புக்களுக்கு பிறகு ஆருவின் தந்தை வெளியில் சென்று பேசலாம் என்றார்.

அதற்குள் அனுவும் வந்து விட, எல்லோரும் வெளியில் மரத்தடியில் போட்டிருந்த பெஞ்ச்சில் சென்று அமர்ந்தார்கள்.

யார் முதலில் ஆரம்பிப்பது என்று குழம்பியது போல எல்லோரும் அமைதியாக இருந்தனர்.

(எல்லோரையும் பார்த்து மானசீகமாக தலையில அடிச்சிக்கிட்ட அனு), அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

“என்ன ஆன்டி எல்லோரும் ஒன்னா வந்திருக்கீங்க. வின்சியை பார்க்க வந்தீங்களா” என்றாள்.

“ஆமா” என்றவர் ஆருவை பார்த்தார். அவளிடம் ஏதும் பேச இயலாமல் கீழே குனிந்து விட்டார்.

(யாரும் ஏதும் பேசாததை பார்த்த அனு இதுங்களை எல்லாம் ரெடி பண்ணி கூட்டிட்டு வந்தா, யாராச்சும் ஒழுங்கா பெர்பார்மான்ஸ் குடுக்கறாங்களா பார்த்தியா என்று திரும்ப தலையில் அடித்துக் கொண்டாள்.)

ஆரு பார்க்காத சமயத்தில் ஆருவின் தந்தையிடம் சைகை காண்பித்தாள்.

ஆருவின் தந்தையும் வின்சியின் பெற்றோரிடம் திரும்பி “பேச வந்ததை பேசுங்க. அமைதியா ஏன் இருக்கீங்க” என்றார்.

வின்சியின் தாய் “ஆரு உன் கிட்ட தான் மா பேச வந்தோம்” என்றார்.

“சொல்லுங்க ஆன்டி”

“ஆரு இதை உன் கிட்ட எப்படி சொல்றதுனே தெரியலை. நான் சொல்றதை கேட்டு நீ தயவு செஞ்சி கோபப்படாதே” என்றவர் சிறிது அமைதி காத்து  பின்பு,

“வின்சி உன்னை விரும்பறான்னு எனக்கு தெரியும். நீங்க ரெண்டு பேரும் பழகறதை பார்த்து நீ கூட அவனை விரும்பறியோன்னு கூட நான் நினைச்சேன்.”

அதற்குள் குறுக்கிட்ட ஆரு “இல்லை, அப்படி எல்லாம் இல்லை” என்றாள் வேகமாக.

“இப்ப எனக்கு அது புரியுதும்மா. ஆனா நீங்க சின்ன பசங்களா இருக்கும் போதே எங்க எல்லாருக்கும் உனக்கு அவன், அவனுக்கு நீன்னு பேசி வைச்சிக்கணும்ன்னு ஆசை. ஆனா பெரியவங்களா ஆன உடனே நீங்க எப்படி வேணும்னாலும் நினைக்கலாம். சோ பசங்களை நாம போர்ஸ் பண்ணக் கூடாது. அவங்க முதல்ல வளரட்டும். அப்புறம் முடிவு செஞ்சிக்கலாம்ன்னு நாங்க அப்ப முடிவு பண்ணிட்டோம்” என்றார்.

ஆருவிற்கு இது அதிர்ச்சியாக இருக்க, அவள் தந்தையை பார்த்தாள்.

அவரும் ஆம் என்பது போல தலையசைக்க திரும்ப வின்சியின் தாய் சொல்வதை கவனித்தாள்.

“நடுவுல என்னென்னவோ நடந்து போச்சி. அது என்னன்னு கூட எங்களுக்கு தெரியலை. அனு ஏதேதோ சொல்லி மழுப்புறா. (இதுல எல்லாம் விவரமா இருங்க. இவ கிட்ட பேச சொன்னா மட்டும் ஒருத்தரை மாத்தி ஒருத்தரை பாருங்க என்று அனு மனதில் அவர்களை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.) அவ சொல்ற எதையும் என்னால ஏத்துக்க முடியலை. நீங்க எங்க கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு நினைக்கறதை நாங்களும் கிளற விரும்பலை. அதனால தான் நாங்களும் இத்தனை நாள் இதைப் பத்தி பேசக் கூட இல்லை.”

“ஆனா இப்ப அதைப் பத்தி பேசாம இருக்க முடியலை ஆரு. என் பையன் எவ்வளவு நல்லா படிப்பான். அவனுக்கு ஸ்டடீஸ்ல எவ்வளவு இண்டரெஸ்ட்ன்னு எல்லாம் உனக்கு நல்லா தெரியும். இப்ப அரியர் வச்சிருக்கான். முன்ன எல்லாம் எப்படா லீவ் கிடைக்கும்ன்னு உடனே வீட்டுக்கு வந்துடுவான். ஆனா இப்ப வீட்டுப் பக்கமே வரர்தே இல்லை. இதுக்கெல்லாம் நீ தான் காரணம்ன்னு நான் சொல்ல வரலை. ஆனா நீ நினைச்சா அவனை மாத்த முடியும். எனக்கு என் பழைய வின்சி வேணும் ஆரு. எங்க அவன் பழைய மாதிரி எனக்கு கிடைக்கவே மாட்டான்னு பயமா இருக்கு” என்றவர் பேச முடியாமல் அழுது விட்டார்.

எல்லோரும் என்ன கூறியும் அவர் அழுகை நிற்கவே இல்லை.

“ஆரும்மா உன்னால மட்டும் தான் முடியும். எனக்காக என் வின்சி என்ன பண்ணிருந்தாலும் மன்னிச்சிடும்மா. எனக்கு பழைய வின்சி வேணும்” என்று கண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தார்.

முதலில் மறுத்து பேச எண்ணிய ஆரு, அவரின் கண்ணீரை பார்த்து அமைதியாக நின்றாள்.

அவருக்கு பாசிட்டிவாக எந்த பதிலும் தர இயலாமல், “அழாதீங்க ஆன்டி” என்றாள்.

“எனக்கு என் பழைய வின்சி கிடைச்சிடுவான் இல்ல ஆரு” என்று கண்ணில் அவள் பதிலுக்காக உயிரையே தேக்கி நின்றார் போல பார்த்தவருக்கு அவர் எதிர்ப்பார்க்கும் பதிலை கூற முடியாமல் தவித்தவள்,

“எதுவும் தப்பா நடக்காது ஆன்டி” என்றாள்.

அவருக்கு அவளின் அந்த பதிலே போதுமானதாக இருந்தது.

“நான் சொன்னேன் இல்லைங்க ஆரு நல்ல பொண்ணுன்னு. பார்த்தீங்களா. நம்ம ஆரு வின்சியை சரி பண்ணிடுவாங்க” என்று அவராக பேசிக் கொண்டே இருந்தார்.

வின்சியின் பெற்றோர் அனுவிடம் பேசிக் கொண்டிருக்க, ஆருவின் தந்தை அவளை அழைத்தார். அவளுடன் சிறிது தூரம் நடந்து சென்று “அவங்க சொன்னது எல்லாம் நிஜம் தான் ஆரு. நாங்க அப்படி எல்லாம் நினைச்சோம். ஆனா எங்க எல்லாருக்கும் உங்களோட விருப்பம் தான் முக்கியமா இருந்துச்சி. இப்ப நான் உன்னை எதுலையும் போர்ஸ் பண்ண விரும்பலை. ஆனா இத்தனை வருஷம் நீங்க எல்லாம் ஒன்னா தான் வளர்ந்தீங்க. வின்சியும் நம்ப வீட்டுல ஒருத்தன் மாதிரி தான். நான் உன் கிட்ட வேற எதையும் கேட்கலை. வின்சி உன்னால மாறுவான்னு எல்லாரும் நம்பறாங்க. அப்படி நடக்கும்ன்னா நீ ஏன் அதை செய்யக் கூடாது. வின்சி அம்மாவை பார்த்த இல்லை, அவங்க ரொம்ப உடைஞ்சி போயிருக்காங்க. வின்சியை நினைச்சி அவங்க இவ்வளவு நாளா எவ்வளவு வருத்தப் பட்டாங்க தெரியுமா. இப்ப நீ பேசனதுக்கு அப்புறம் தான் அவங்க கிட்ட ஓரளவுக்கு தைரியம் தெரியுது. நீ புத்திசாலி பொண்ணு. நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை. பார்த்துக்கோ” என்று நீளமாக பேசி விட்டு மகளுக்கு அறிவுரையாக கூறாமல் அவளிடமே முடிவை விட்டு விட்டார்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் பேசி விட்டு அவர்கள் செல்லும் போது இருவரையும் சாப்பிட வெளியில் கூட்டி செல்வதாக சொன்னார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.