(Reading time: 15 - 30 minutes)

04. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

ந்த விரல்களின் மென்மையான ஸ்பரிசத்தில் சட்டென கண் திறந்த விஷ்வாவின் அருகில் அமர்ந்திருந்தாள் இந்துஜா.

அவளை அங்கே எதிரே பார்த்திராதவனாய் திகைத்து, வியந்து எழுந்தான்  விஷ்வா.

மெல்ல எழுந்து, வாடிப்போயிருந்த அவன் முகத்தை படித்தவள் சட்டென சொன்னாள் 'நினைச்சேன். நீ இப்படிதான் இருப்பேன்னு நினைச்சேன். உன் மனசு எவ்வளவு கஷ்டப்படும்ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் விஷ்வா. அதனாலே தான் உன்னை பார்க்க வந்தேன்.'

Ullam varudum thendral

அலைபாய்ந்துக்கொண்டிருந்த மனதை சட்டென சமாளித்துக்கொண்டவனாய் கேட்டான் விஷ்வா  'ஹேய்! வீட்டிலே எல்லார்கிட்டேயும் என்ன சொல்லிட்டு வந்தே நீ? அதுவும் ராத்திரி நேரத்திலே உன்னை நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசர் வெளியே விடவே மாட்டாங்களே?'

நான் மட்டும் தனியா வரலே. அண்ணன், தாத்தாவோட தான் வந்தேன். நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ஊர்லே இல்லை. இன்னைக்கு அண்ணனுக்கு பர்த்டே இல்லையா....

அவன் பேரை கேட்ட மாத்திரத்திலேயே சட்டென மாறியது விஷ்வாவின் முகம். சில நொடிகள், அவள் முகத்தை பார்த்தவன் பார்வையை வேறு புறமாய் திருப்பிக்கொண்டான்.

அதற்கான காரணம் இந்துவுக்கு புரியாமல் இல்லை. சில நொடிகள் மௌனமாய் நின்றவள் மெல்ல பேச்சை தொடர்ந்தாள்

அவன் பர்த்டேவை சாக்கா வெச்சு வெளியே கிளம்பினோம். நீ மைலாப்பூர்லே இருக்கறதினாலே, உன்னை பார்க்கணும்கிற ஐடியாலேதான் கபாலீஸ்வரர செலக்ட் பண்ணேன். என் friend ஒருத்திக்கு பர்த்டே. பக்கத்திலே தான் வீடு. விஷ் பண்ணிட்டு கால் மணியிலே வந்திடறேன்னு பொய் சொல்லிட்டு, ரெண்டு பேரையும் கோவில்ல உட்கார வெச்சிட்டு வந்திருக்கேன் 

'வம்பா உனக்கு.? நீ என்னை பார்க்க வந்தேன்னு தெரிஞ்சா வீட்டிலே எவ்வளவு பெரிய பிரளயம் வெடிக்கும்னு தெரியுமில்ல. உன் அண்ணன் ஒருத்தனே போதும். தயவு செய்து கிளம்பு இந்து.'

இல்லை விஷ்வா..... நீ...

எனக்கு ஒண்ணும் ஆயிடாது. இதை விட பெரிய பெரிய விஷயத்தையெல்லாம் பார்த்தாச்சு. நீ கிளம்பு. வீட்டுக்கு போயிட்டு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையான்னு எனக்கு மெசேஜ் அனுப்பு. போ.

'போ.' மிக எளிதாக சொல்லிவிட்டான். 'இந்த இடத்தை விட்டு வேண்டுமானால் போய் விடலாம். மனதால் உன்னை விட்டு போக முடியாது விஷ்வா.' தனக்குள்ளே சொல்லிக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் நகர்ப்போனவளை பார்த்து மெல்லக்கேட்டான் விஷ்வா,

'ஆமாம் எப்படி இருக்காங்க நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபீசர்?

ம்... நல்லாத்தான் இருக்காங்க...

ஆஸ்துமா அட்டாக் அடிக்கடி வருதா அவங்களுக்கு.?

அது வருது. இருபது நாளுக்கு ஒரு தடவையாவது வருது.

ரொம்ப கஷ்டப்படறாங்களாடா? அவங்களை பார்த்துக்கோடா நிலாப்பொண்ணு' என்றான் தழைந்து போன குரலில்.

அவன் கண்களில் ஒளிர்ந்த பாசம் அவள் உதடுகளில் சின்ன புன்னகையை கொண்டுவந்தது.

ம்... மெல்ல தலையசைத்தவள் 'நான் வரேன் விஷ்வா' என்று நகர்ந்தாள் இந்து.

ஸ்கூட்டியை செலுத்திக்கொண்டிருந்தாள் அபர்ணா. அடுத்த சில நிமிடங்களில் விஷ்வாவின் வீட்டு முன்னால் வந்து நின்றாள்.

விஷ்வாவின் வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. மனம்  அவ்வளவு குழம்பி போயிருந்தது. வீட்டுக்குள் நுழைந்த அபர்ணாவை பார்த்து அழகாய் புன்னகைத்தான் விஷ்வா.

வாங்க. வாங்க. என்ன திடீர்னு?

என்ன விஷ்வா சிரிக்கறே?

அட! சிரிக்கிறதுகூட  குத்தமாடா? என்றான் விஷ்வா.

விளையாடாதே விஷ்வா. உனக்கும் ஜனனிக்கும் என்ன பிரச்சனை.? ஏன் விஷ்வா அவ இப்படி பண்ணா.?

நீ முதல்லே உட்காரு. ஏதாவது சாப்பிடறியா?

ப்.....ளீஸ் விஷ்வா. என்றாள் சற்று உயர்ந்த குரலில்.. என்ன நடந்ததுன்னு சொல்லு.

அந்த நிமிடத்தில் கூட அபர்ணாவிடம் நடந்ததை சொல்லி அவளை காயப்படுத்த விரும்பவில்லை விஷ்வா.

'மனசு ஒத்து போகலை. பிரிஞ்சிட்டோம். அவ்வளவுதான். கல்யாணத்துக்கு பின்னாடி மனசு ஒத்து போகாம பிரியறதை விட இது நல்லதுதான். விடு அப்பூ. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

விஷ்வா, ப்ளீஸ். என் முன்னாடி தயவு செய்து நடிக்காதே விஷ்வா. உன் மனசு இப்போ எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்.

ஹேய்! என்னதிது? ஆளாளுக்கு உன் மனசு எனக்குதான் தெரியும் எனக்குதான் தெரியும்ங்கறீங்க? என் மனசு எனக்கு மட்டும் தான் தெரியும். ஐ. அம் கூல்.

விஷ்வா....

'இங்கே பாரு அப்பூ. என் மனசுக்கு எப்போ ஆறுதல் தேவைப்பட்டாலும் நான் கண்டிப்பா உன் மடியிலேதான் சாஞ்சுப்பேன். எனக்கு உன்னை விட்டா யாரும் கிடையாது. இப்போ எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. டோன்ட் வொர்ரி' என்று புன்னகைத்தவனை அவள் வியப்பாய் பார்த்த நேரத்தில் ஒலித்தது அவள் கைப்பேசி.

திரை 'அப்பா என்று ஒளிர்ந்தது.

'சொல்லுங்கப்பா. அபர்ணா பேசறேன்.

அபர்ணா, அப்பா நாளைக்கு சென்னை வரேன்மா. டிரெயின் ஏறிட்டேன்.

என்னப்பா திடீர்னு?

'திடீர்னுதான்மா' உங்க அண்ணியோட சித்தப்பா பையனுக்கு நாளைக்கு கல்யாணம். அவங்க ரெண்டு பேர்தான். வர்றதா இருந்தது. திடீர்னு ரெண்டு பெரும் லீவ் கிடைக்கலைன்னு சொல்லிட்டாங்க. அதுதான் நான் வரேன்.

'சரி ஜாக்கிரதையாய் வாங்கப்பா மார்னிங் பார்க்கலாம்.' துண்டித்தாள் அழைப்பை.

என்னடா? அப்பா வராரா? என்றான் விஷ்வா. அப்பா எப்போது வந்தாலும் விஷ்வாவுடன்தான் தங்குவார்.

ம். ஏதோ கல்யாணமாம். ஏற்கனவே நிறைய லீவ் போட்டுட்டேன் விஷ்வா. என்னாலே நாளைக்கு லீவ் போட முடியாது. 

அவள் சொல்லும் முன்னரே சட்டென சொன்னான் விஷ்வா. 'நீ கவலை படாதே அப்பாவை நான் டேக் கேர் பண்ணிக்கறேன். நான் கல்யாணத்துக்கு கூட்டிட்டு போறேன் போதுமா.'

விஷ்வா எப்போதுமே இப்படிதான். அவள் கேட்க நினைக்கும் முன்னரே அவளுக்கு உதவி செய்து விடுவான் அவன்.

ஆனால் காலையில் திருமணதிற்கு செல்ல முடிவெடுத்தவனுக்கு அந்த ஒரு உண்மை மட்டும் தெரியவில்லை. அந்த மணப்பெண்ணின் பெயர் ஜனனி என்று மட்டும் தெரியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.