(Reading time: 19 - 37 minutes)

06. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

ரொம்ப வலிக்குதாடா கேட்டவனின் விரல்கள் அவள் விரல்களை ஏந்திக்கொண்டன.

காதலை சொல்ல கவிதைகள் தேவையாம்!

யார் சொன்னது?

கண்களும் கண்களும் பேசிக்கொள்ள வேண்டுமாம்!

யார் சொன்னது?

குறைந்தபட்சம் ஒரு ரோஜா பூவாவது தேவையாம்!

யார் சொன்னது?

Ullam varudum thendral

இது எதுவுமே இல்லாமல் அவனே அறியாமல் அவன் தன் காதலை சொல்லிக்கொண்டிருந்தான் அங்கே.

இல்லை. இல்லை. அவன் சொல்லவில்லை. அவன் விரல்கள் சொல்லிக்கொண்டிருந்தன அவன் காதலை..

அவன் கைகளுக்குள் இருந்தது அவள் கை. அவள் வலியை தான் வாங்கிக்கொண்டு விடும் தவிப்பில் அவள் விரல்களை வருடின அவன் விரல்கள்

‘என்னுடனே இருந்து விடமாட்டாயா ‘ என்று கெஞ்சும் விதத்தில் இதமாய் அழுந்தின அவன் விரல்கள் .‘

ஏதோ தனக்கே சொந்தமான ஒரு பொக்கிஷத்தை அடைக்காத்துக்கொள்ளுவது போல் அவள் விரல்களை பொத்திக்கொண்டன அவன் விரல்கள்

சுள்ளென்று சுண்டி இழுத்த வலி சட்டென காணமல் போனது போலே இருந்தது அவளுக்கு.

இமைக்க மறந்துப்போனாள் அபர்ணா. அவள் கண்கள் அவன் முகத்தைவிட்டு அகலவில்லை.  அவன் ஸ்பரிசம் அவன் மனதை மொத்தமாய் உணர்த்தியது அவளுக்கு. அவன் தனக்கு சொந்தமாகி விட்டதை போன்றே ஒரு நிறைவு தோன்றியது அவளுக்குள்ளே.

அவன் கண்களை நிமிர்த்திய நொடியில் மெல்ல கேட்டாள் அபர்ணா 'உங்களுக்கு நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா'?

ம்....? என்றவனால் அவள் முகத்தை விட்டு பார்வையை விலக்க முடியவில்லை.

இல்லைன்னு சொல்லிடுங்களேன் ப்ளீஸ்..... அந்த வார்த்தைகளில் இருந்த தவிப்பு அவள் கண்களிலும் தெரிந்தன.

அந்த தவிப்பில் கொஞ்சம் கரைந்து போனவனாய் சின்ன புன்னகையுடன் அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த நொடியில் மெலிதாய் தூர துவங்கியது மழை .

சட்டென சிதறிய அந்த சின்ன தூரலில் சிலிர்த்து, நிமிர்ந்து, தன்னிலை பெற்று விலகினான் பரத்.

அவள் கொஞ்சம் தவித்து நிமிர காரின் அருகில் சென்று நின்றவன் 'மழை வர மாதிரி இருக்கு சீக்கிரம் வீட்டுக்கு போயிடுங்க. குட் நைட் அபர்ணா.' அவள் முகத்தை கூட பார்க்காமல்  அவள் கண் இமைக்கும் நேரத்துக்குள் காரை கிளப்பிக்கொண்டு பறந்தே விட்டிருந்தான்.

'போ....டா' என்றாள் சத்தமாய். ஒரு நாள் என்கிட்டே வராமலா போயிடுவே? அப்போ இருக்கு உனக்கு. அவள் குரலில் தோற்றுபோன கோபம் நிறைந்திருந்தது.  

தூறல் சற்று பெரிதாக துவங்கியது. நிமிர்ந்து வானத்தை பார்த்தாள் அபர்ணா.  அந்த மழையின் மீதே கோபம் பொங்கியது.

என்ன அவசரமாம் உனக்கு? சிறிது நேரம் கழித்து பெய்தால் தான் என்ன? போ! இன்று நான் நனைய மாட்டேன் போ!

கைப்பையை துழாவி குடையை வெளியில் எடுத்தாள். பொதுவாக அவள் வெயிலில் தான் குடையை பயன்படுத்துவாள். மழைக்கு பயன் படுத்துவதில்லை.

குடையை விரித்தாள் அபர்ணா. இன்று எங்கள் இருவரையும் நீதானே பிரித்தாய். மறுபடி நீயே சேர்த்து வை. அதுவரை நான் உன்னை ரசிக்க மாட்டேன் போ.

குடையை பிடித்துக்கொண்டு நடந்தாள் அபர்ணா.

டு இரவில் விழிப்பு வந்துவிட்டிருந்தது பரத்துக்கு. எத்தனை முயன்றும் உறக்கம் வரவில்லை.

இப்படியெல்லாம் நிகழ்ந்ததே இல்லை. படுத்த இரண்டாவது நிமிடத்தில் ஓடி வந்து தழுவிக்கொள்ளும் உறக்கம் ,காலை ஐந்தரை மணி வரைக்கும் அழகாய் நீடிக்கும்.

எல்லாம் அவளால் தான். என்னை பைத்தியமாக்கி அலைய விடவே பிறந்திருக்கிறாளே எல்லாம் அவளால் தான். ‘என்ன செய்துக்கொண்டிருப்பாள் அந்த ராட்சஸி ? ஒரு வேளை என்னை போலவே உறக்கம் வராமல் அமர்ந்திருப்பாளோ’?

அதுதான் இல்லை!!!! அந்த வேளையில் சின்னதான ஒரு மன நிறைவுடன் நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள் அபர்ணா.

இவனுக்குதான் உறக்கம் கிட்டவில்லை. 'இல்லைன்னு சொல்லிடுங்களேன் ப்ளீஸ்......' அவள் கண்களும் உதடுகளும் கெஞ்சியதை மறக்கவே முடியவில்லை அவனால்.

பக்கம் பக்கமாக எழுதப்பட்ட காதல் கடிதங்கள் கூட சொல்ல முடியாத உணர்வுகளை அந்த மூன்று வார்த்தைகள் சொல்லிவிட்டதை போன்றே தோன்றியது.

நீ எனக்கே எனக்கானவன் என்று தயவு செய்து சொல்லிவிடேன். புன்னகை எழுந்தது அவனிடத்தில். காதலிக்க படுவது இவ்வளவு இனிமையான விஷயமா?

பதில் சொல்லி இருக்கலாமோ? வேண்டாம். இப்படியே இருப்பது தான் நல்லது.

'இல்லைன்னு சொல்லிடுங்களேன் ப்ளீஸ்......'  அது மறுபடி மறுபடி படுத்தியது அவனை. மனம் சமாதானம் அடையவில்லை.

சட்டென மனதிற்குள் சின்னதாய் ஒரு மின்னல். தனது மேஜை டிராயரை திறந்தவன் அதற்குள் இருந்த ஒரு பழைய சிம் கார்டை எடுத்தான். அதை அவன் அதிகம் பயன்படுத்துவதில்லை.

அதை தனது கைப்பேசியில் பொருத்தி உயிர்ப்பித்தவன், குறுஞ்செய்தியை தொடுத்தான் 'இல்லை'. அதை அவள் எண்ணுக்கு அனுப்பியவன் இதழ்களில் சின்னதாய் ஒரு புன்னகை ஓடியது.

மறுபடி அந்த சிம்கார்டை கைப்பேசியிலிருந்து எடுத்து அதை டிராயரின் உள்ளேயே வைத்து மூடினான் பரத். மனம் ஒரு நிலைக்கு வந்தது போலே தோன்றியது. உறக்கம் மட்டும் வருவது போவே இல்லை.

தன் அறையிலிருந்து ஹாலுக்கு வந்து விளக்கை போட்டு டி.வி.யை உயிர்ப்பித்தான்.

ஹாலை ஒட்டியே. அத்தையின் அறை. கதவை திறந்து வைத்துக்கொண்டே உறங்கிக்கொண்டிருந்தார் அவர்.

தொலைக்காட்சியின் ஒலி அவரை தொந்தரவு செய்து விடாமல் இருக்க அவரது அறைக்கதவை சாத்த கதவின் அருகில் சென்றவனை ஒரு நொடி அப்படியே நிறுத்தியது அத்தையின்  குரல்... அஸ்வினி ... எங்கேம்மா இருக்கே ... உன்னை... பார்க்கணும்...’ உறக்கத்தில் புலம்பிக்கொண்டிருந்தார் அவர்.

அ..ஸ்...வி...னி அந்த பெயர் அவனுக்குள்ளே பல அழுத்தங்களை கொடுக்க ஒரு ஆழமான பெருமூச்சுடன் சோபாவில் வந்து அமர்ந்தான் பரத்.

றுநாள் காலை அபர்ணா கண் விழித்தது அந்த குறுஞ்செய்தியின் முகத்தில் தான்.

'இல்லை'

யார் எண் இது? என்ன இல்லையாம்.? முதலில் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

அதை மறுபடி மறுபடி படித்தவளுக்குள் சட்டென பூ பூத்தது போல் இருந்தது.

இல்லைன்னு சொல்லிடுங்களேன் ப்ளீஸ்.... 'இல்லை.'

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.