(Reading time: 20 - 40 minutes)

07. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

கைப்பேசியை வெகு இயல்பாய் கையில் எடுத்தான் பரத். அவன் கண்கள் திரை மீது பதிந்தன.

வி..ஷ்...வா... அந்த திரையில் ஒளிர்ந்த ஒவ்வொரு எழுத்தும் அவனுக்குள்ளே அனலை கிளப்பியது.

தலை முதல் கால் வரை சூடேறிப்போக, கைப்பேசியை அழுத்தி அதை காதுக்குக்கொடுத்தான் பரத்.

போனை எடுத்தது இந்துதானா என்று கூட யோசிக்காமல், ஹலோ இந்து.....மா.....என்றான் விஷ்வா.

Ullam varudum thendral

அந்த இந்து.....மா.....வில் மொத்தமாய் கொதித்துதான் போனான் பரத்.

‘என்ன துணிச்சல் இருக்கணும் உனக்கு? என்றான் பரத்.

பரத்தை விஷ்வா எதிர்பார்க்கவில்லை.  அந்த குரலில் இருந்த காரம் ஒரு முறை விஷ்வாவை குலுக்கத்தான் செய்தது. சட்டென ஒரு நொடி மௌனமானான் விஷ்வா.

‘அவ என் தங்கச்சிடா. என்ன தைரியம் இருந்தா அவளுக்கு போன் பண்ணி இந்துமான்னு கூப்பிடுவே? என் கையிலே கிடைச்சேனா வகுந்திடுவேன் உன்னை.’ என்றான் அழுத்தமான குரலில்.

சுள்ளென ஏறியது விஷ்வாவின் கோபம். அதை உள்ளுக்குள்ளே அழுத்திக்கொண்டு, இந்துவுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டபடியே சொன்னான்,

நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுடா க..ண்....ணா....

மாமன் மகன் --- அத்தை மகன் எத்தனை அழகான பந்தம் இது.

பதினோரு பன்னிரண்டு  வயது, வரை விஷ்வா விஷ்வாவென என இவனும் வரை கண்ணா கண்ணா என அவனும் ஒருவர் பின்னால் ஒருவர் சுற்றிக்கொண்டுதானே இருந்தார்கள்.

கண்...ணா.... என்ற அவனது அழைப்பு பரத் மனதின் ஏதோ ஒரு மூலையை ஒரு நொடி லேசாக வருடத்தான் செய்தது.

அடுத்த நொடி எல்லாவற்றையும் தாண்டி பொங்கிய கோபத்தில் எகிறியது பரத்தின் குரல். டேய்.........என் பேரை சொல்லாதே. அந்த உரிமையை நீ இழந்து ரொம்ப நாளாச்சு. நடந்தது எதையும் நான் இன்னும் மறக்கலேடா. போதும் இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோ இல்லைனா நீ ரொம்ப வருத்தப்பட வேண்டியதிருக்கும்.

‘என்னடா மிரட்டுறியா? நிதானத்தை இழக்க துவங்கினான் விஷ்வா. இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவன் தந்தை இறந்த தினம், அன்றைய நிகழ்வுகள் எல்லாம் அவன் மனதிலாடியது.’

‘நீ செஞ்சது எதையும் நானும் மறக்கலேடா.’ என்றான் விஷ்வா. உன்னை தோற்கடிக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன். அவ என் மாமன் பொண்ணுடா. அவளுக்கு போன் பண்றது என்ன? நான் நினைச்சா அவளுக்கு தாலியே கட்டுவேன் உன்னாலே முடிஞ்சா தடுத்துப்பாரு.’ கனல் குரலில் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் விஷ்வா.

துண்டித்த சில நிமிடங்கள் கழித்து, சுவாசம் கொஞ்சம் சீரான பின்தான் என்ன பேசினோம் என்றே உறைத்தது அவனுக்கு. தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தான் விஷ்வா.

ச்சே ...என்ன பேசிவிட்டேன் நான்.? இதன் விளைவுகள் இந்துவை தாக்காதா? தன்னை தானே திட்டியபடியே அமர்ந்திருந்தான் விஷ்வா.

அங்கே எரிமலையாய் அமர்ந்திருந்தான் பரத். அவன் பார்வை அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த இந்துவின் மீதே இருந்தது.

இது எதுவுமே தெரியாமல் நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள் இந்துஜா.

றக்கம் கிட்டவில்லை விஷ்வாவுக்கு. மனம் உளைச்சலின் எல்லையில் நின்றது. இன்றைய நிகழ்வுகளும், அதை தாண்டி பழைய நினைவுகளும் அவனை மாறி மாறி அலைக்கழித்துக்கொண்டிருந்தன.

காலையில் வீட்டின் முன் நின்று விட்டு கிளம்பியதிலிருந்தே பழைய நினைவுகள் அவனை வருத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

பெசன்ட் நகர் கடற்கரையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில், வீட்டை சுற்றி தோட்டம், தோட்டத்தில் ஊஞ்சல் என அழகு கொஞ்சும் வீடு அது. மொட்டை மாடியில் நின்றாலே கடற்கரை கண்ணில் படும்.

பரத், விஷ்வா, இந்து உட்பட எல்லாரும் ஓடியாடி வளர்ந்த வீடு அது. அவனை விட இரண்டு வயது மூத்தவன் பரத்.

பரத்தின் அம்மா சின்ன வயதிலேயே இறந்துவிட அவன் அப்பா மட்டும் இருந்தார் அப்போது. இவர்கள் எல்லாரையும் வளர்க்கும் பொறுப்பு முழுவதையும் எடுத்துக்கொண்டவர். மைதிலி.

மைதிலிக்கு தனது அண்ணன் மீது அப்படி ஒரு பாசம்.

விஷ்வாவின் அப்பா அனந்தராமனுக்கு சிங்கப்பூரில் வேலை என்பதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்னை வந்து செல்வார்.

விஷ்வா பிறந்த போதே மெல்ல துளிர்விட்டது பிரச்சனை. ரோகிணி நட்சதரத்தில் பிறந்தவன்,  கழுத்தில் கோடி சுற்றி வேறு பிறந்தானாம் அதனால் தாய் மாமனுக்கு ஆகாது என்று கிளப்பிவிட்டான் யாரோ ஒரு மகராசன்.

அவன் ஜாதகம் சரியில்லை என்றார்கள். அவன் வளர வளர தாய் மாமனுக்கு பிரச்சனைகள் அதிகமாகும் என்றார்கள்.

என்னனென்னமோ பூஜைகள், வருடா வருடம் விஷ்வாவின் பிறந்தநாளில் பரிகாரங்கள் என எதையுமே விட்டு வைக்கவில்லை அவனது அம்மா. ஒரு கல்லூரியில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த போதும் இதிலெல்லாம் நம்பிக்கை அதிகம் அவருக்கு.

பன்னிரண்டு பதிமூன்று வயது வரை சரியாய் எதுவும் புரியவில்லை விஷ்வாவிற்கு. அதன் பிறகு மெல்ல மெல்ல அவனுக்குள்ளே கேள்விகள் பிறக்க துவங்கின.

என் மாமனுக்கு வரும் பிரச்சனைகளுக்கு நான் எப்படி காரணமாக முடியும்?

ஏன்மா? தினமும் காலையிலே ஏழரை மணிக்கு பூஜை பண்றியே உன் ஆண்டவன் வந்து காப்பாத்த மாட்டாரா உங்க அண்ணனை?. அது இல்லாம தனியா என்ன பரிகாரம் அது இதுன்னு.?

கேள்வி கேட்காதே சொன்னதை செய். என்பார் அவன் அம்மா.

அவனால் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை. அவன் கண்களில் தென்பட்ட விபத்துகளும், வறுமையும் வேதனைகளும் அவனை குழப்பின.

இதெல்லாம் ஏன்மா? இதையெல்லாம் உன் கடவுள் பார்த்துட்டு ஏன் சும்மாவே இருக்கார்.?

இதெல்லாம் அவங்க அவங்க செய்யற பாவ புண்ணியம்டா..

அப்படியென்றால், எனக்கு ஏற்படும் எல்லாவற்றுக்கும் நான் தான் பொறுப்பு என்றால்,நான் செய்யும் பாவ புண்ணியங்கள் தான் காரணம் என்றால் கடவுள் எதற்கு? அப்படியே பார்த்தாலும் மாமாவுக்கு நடக்கும் எல்லாவற்றக்கும் மாமாவே தானே  பொறுப்பு நான் எப்படி பொறுப்பு ஆக முடியும்.?

கடவுள் மறுப்பு கொள்கைகளை பற்றி படிக்க துவங்கினான் விஷ்வா.

உலகத்தில் நடக்கும் எல்லாவற்றுக்கும் இறைவன் தான் பொறுப்பு என்றால் நாம் செய்யும் தவறுகளுக்கும் அவன் தானே பொறுப்பு. அதற்கான தண்டனையும் அவன்தானே அனுபவிக்க வேண்டும். நமக்கு என் தருகிறானாம்.?

தனது கொள்கையை இறுக்கமாக பற்றிக்கொள்ள துவங்கினான் விஷ்வா.  வீட்டில் தினமும் அம்மா செய்யும் பூஜையில் கலந்து கொள்வதை தவிர்க்க துவங்கினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.