(Reading time: 11 - 22 minutes)

01. காற்றாக நான் வருவேன் - Anna Sweety

கதைக்கு முன்:

இந்த கதை தொடங்கும் தேசம், கற்பனை தேசம். அன்னா ஸ்வீட்டியாகிய நான் சொல்றதுதான் சட்டம்னு வேற எங்கேயும் ஒத்துக்க மாட்டாங்களே!! அதுதான் சொந்த முயற்சியில் ஒரு தேசம் செய்தேன். (அதான் ஆத்தரா இருக்கிறதோட அட்வான்டேஜ்ங்க) உலக வரைபடத்தில் உள்ள எந்த தேசத்துடனும் இதை தயை கூர்ந்து ஒப்பிடாதீர்கள்.

ர தரவென தான் இழுத்து வரப்படும்பொழுது அவளுக்கு ஞாபகமிருந்தது இரண்டே விஷயங்கள்தான். முதலாவது, அவள் பெயர் தயனி பாஹியா, இரண்டாவது அவளை இழுத்துகொண்டுபோய் இப்படி  இரவு நேரத்தில் இந்த குளிர்ந்த பாலைவனத்தில் வீசப் போவது வேறு யாருமல்ல அவளுடைய மாமியாரேதான். வேறு யாராவது என்றால் தயனி மன்றாடுவதில் பிரயோஜனமிருக்கும்.

Katraga naan varuven

தயனியின் சொத்து முழுவதுமே அவளது கணவன் பெயருக்கு சட்டபடி மாற்றபட்டுவிட்டது. இனி இவள் இவ்வீட்டிற்கு தேவையற்றவள். குப்பையை யாராவது வீட்டில் வைத்துகொள்வார்களா? என்ன, மனித குப்பையை குப்பை லாரியில் பலறறிய வீச முடியாது. அதனால் இவள் மாமியார் இந்த குப்பையை காரில் அள்ளிக்கொண்டு போய் தூர எறிய போகிறாள்......

யனிக்கு மறுபடியும் நினைவு வந்தபோது பார்க்காவிட்டாலும் புரிந்தது படர்ந்திருக்கும் பாலை மண். ஏற்கனவே குளிர் காற்று வீச தொடங்கியிருந்தது. இரவு நேர காற்று. இந்த காற்று அதற்கேற்ற உருப்படியான உடையணியாத எந்த ஒரு திடமான நபரையும்கூட கட்டாயம் கொன்றுவிடும். உச்சந்தலை முதல் கணுக்கால் வரை மூடியிருக்கும் கறுப்பு நிற பாலியெஸ்டர் புர்காவை தவிர வேறு எதையும் அணிந்திருக்கவில்லை இவள். மேலும்......

அதற்கு மேல் அவளுக்கு நினைக்க பிடிக்கவில்லை. இன்னும் இவள் உயிரோடு இருக்கபோவது மிக சொற்ப காலம். இதில் இதென்ன தேவையற்ற நினைவு. அவளுக்கு மிகவும் பிடித்த ஆண்டவரை நினைக்க ஆரம்பித்தாள் ஆசையோடு. மென் அக்னி பரவியது அவள் மேல்.

கிளம்பும் போதே அபிஷேக்கிற்கு தெரியும் அவன் வெகு தாமதமாகிவிட்டான் என. அவன் ஃப்ரெண்ட்ஸ் கொடுத்திருந்த பெரிய லிஸ்டிலிருந்த அனைத்தையும் வாங்கிக்கொண்டு கிளம்ப இவ்வளவு நேரம். வருடம் ஒரு முறையவது அவன் இங்கு வருவதும் இப்படி அள்ளி கொண்டு போவதும் வழக்கம். அதே போல் அவன் பிறந்த வீட்டிற்கு சென்று ஒரு நாளாவது தங்குவதும் அவன் வழக்கம். அதற்குதான் அவன் சென்று கொண்டிருப்பதே!.

ஹனிமூனுக்கு தன் மனைவியை நிச்சயமாக இங்குதான் அழைத்து வர வேண்டும். அவன் மனதுக்கு மிகவும் பிடித்த இடம் இந்த வீடு. பழமைக்கு பழமையாய் புதுமைக்கு புதுமையாய்.... ’ஹேய் நில்லுடா ராஜகுமாரா, முதலில் உன்ன புரிஞ்சுகிட்டு ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு  சம்மதிக்கட்டும், அப்புறம் அந்தபுற கனவெல்லாம் கண்டுகிடலாம்...’ தடுத்து நிறுத்தியது அவன்கூடவே வந்துகொண்டிருந்த மனசாட்சி.

கடந்த இரண்டு வருடமாக தீவிர பெண் தேடும் படலம். பெண் தேட தொடங்கிய புதிதிலேயே அவன் புரிந்து கொண்ட விஷயம் இவன் விருப்பமெல்லாம் விஷயமே இல்லை. பெண் சம்மதித்தாலே போதும் இவன் திருமணம் செய்ய தயாராக இருக்கவேண்டுமென்பது. இவனும் அப்படித்தான் காத்திருக்கிறான். ஆனாலும்.....ம்கூம்.....

இத்தனைக்கும் அபிஷேக்கிற்கு அழகிற்கோ பணத்திற்கோ புகழுக்கோ ஒரு குறைவுமில்லை.

வெண்மையும் சிவப்புமானவன், பதினாயிரம் பேர்களில் சிறந்தோன், இவன் முற்றிலும் அழகுள்ளவன், ஆம்! இவனே முற்றிலும் அழகுள்ளவன். என பாட்டுடை தலைவனாக பாட பட தகுதுயுடையவனாகதான் இருக்கிறான். ஆனாலும்....

இதற்கு மேல் ப்ரச்சனைகளை நினைப்பதில் அவனுக்கு உடன் பாடு இல்லை. வந்திருப்பது விடுமுறையை களிக்க. இதில் எதற்கு தேவையில்லாத சிந்தனை..... இந்த நாளில் இந்த நிமிஷத்தை வாழ வேண்டும். இப்பொழுதைய தேவை சீக்கிரமாக வீடு போய் சேர வேண்டும். காரில் மெல்லியதாக கசிந்து கொண்டிருந்த இசையின் சத்தத்தை சற்று அதிகரித்தான். கார் பறந்தது.

முதன் முதலில் அந்த காட்சியை கண்டபோது அவன் தன் கண்களை நம்பவில்லை. அசுத்த ஆவிகள் இருக்கின்றனதான். ஆனாலும் அவைகளுக்கு உருவம் உண்டா என்ன? அது இப்படி விளக்கு தூணில் சாய்ந்து அசைவாடிக்கொண்டிருக்குமா என்ன? தன் கண்பார்வையை சந்தேகித்தான்.

ஆனால் நெருங்க நெருங்க இதற்கு மேல் தன் கண்களை சந்தேகிப்பது சாத்தியமற்றது என அவனுக்கு புரிந்தது. இதுவரை அவன் எதற்காகவும் பயந்தது கிடையாது. எதற்கும் முதல் முறை உண்டல்லவா? அது இன்றுதானா? ஆனால் உள்ளுணர்வில் பயமென்பது துளியுமில்லை. அந்த உருவத்தை வேகமாக கடந்தான்.

அவன் சென்று கொண்டிருந்த வேகத்திற்கு அந்த உருவத்தின் முகம் இவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் தெரிந்தது. மூக்கில் இருந்து ரத்தம் வடிய கண்மூடி தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் அவள். முகத்தை மறைக்க வேண்டிய முக்காடுதான் காற்றில் அசைவாடிக் கொண்டிருந்தது.

அவன் படித்திருந்த மருத்துவம் அவள் இறந்து கொண்டிருப்பதை அறிதியிட்டு கூறியது. மனமிளக யோசித்தான். ‘என்ன செய்வது இப்பொழுது? ஒருவேளை கொள்ளையடிக்க ஒரு கும்பல் சதி செய்கிறதா?’ காரை முன்னும் பின்னுமாக செலுத்தி நோட்டமிட்டான். ஒருவழியாக அங்கு வேறு யாருமில்லை என உறுதி செய்து கொண்ட பின்னர், கீழே இறங்கினான். அந்த பெண்ணை வாரி எடுத்து பின் இருக்கையில் சாய்த்து படுக்க வைத்தவன், உடனடியாக காரை கிளப்பிகொண்டு விரைந்தான்.

அவளை கையில் தூக்கிய நொடி தெரிந்துவிட்டது அவளை கொன்று கொண்டிருப்பது குளிர் மட்டுமல்ல என. அவள் அணிந்திருந்த ஒரே ஆடையாண அந்த கறுப்பு புர்கா சிதைக்கபட்ட அவள் முதுகு தோலில் ஒட்டி ரத்தமும் சதையுமாகி இருந்தது.

உடனடி மருத்துவ உதவி தேவை அவளுக்கு. என்ன செய்வது?

ரு பெண் உரிய துணையின்றி தனியாக வெளியே வருவது கடும் தண்டனைக்குரிய குற்றம் இங்கு. ஒருவேளை இவனோடு அவள் வந்ததாக புரிந்து கொண்டார்கள் எனில் இருவருக்கும் ஆபத்து. திருமணமாகாத ஆணும் பெண்ணும் தனித்து வெளியே செல்வது அதுவும் இந்த இரவு நேரத்தில், விபசார குற்றமாக கருதப்படும் இந்த நாட்டில். மரண தண்டணைதான். அவளுக்கு திருமணமாகி இருந்தால் இன்னும் மோசம். அது வேசிதனமாக கருதப்பட்டு நடு ரோட்டில் மரண தண்டணை நிறைவேற்றபடும். இருவரையும் கணவன் மனைவியாக கண்பார்களெனில் மனைவியை தாக்கிய குற்றத்திற்காக இவன் கைது செய்யபடுவான்.

பார்க்கின்ற யாருமே இவளை இவன் மனைவி என நம்ப வாய்ப்புகள் ஏராளம். காரணம் இருவரும் இந்திய உடம்புக்கு சொந்தக்காரர்கள். ஆபத்தில் மாட்டிகொள்ள அநேக வாய்ப்புகள் அவனுக்கு இருந்தாலும் அவளை விட்டுவிட்டு வரும் எண்ணமே அவனுக்கு வரவில்லை.

பால் வழியும் அவள் குழந்தை முகம் அவள் தண்டிக்கபட வேண்டிய குற்றவாளியல்ல, அநீதி இழைக்கபட்ட நிரபிராதி என்றது. காரை நேராக தான் பிறந்த வீட்டிற்கு செலுத்தினான்.

அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி, மருத்துவம் செய்து, ஒரு படுக்கை அறையில் அவளை படுக்க செய்து அருகில் திவாணை இழுத்துபோட்டு அதில் அவன் தூங்க சென்ற நேரம், பொழுது விடிய துவங்கியிருந்தது.

யனிக்கு முழுதாக நினைவு திரும்பியபோது அவளுக்கு  சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. பின்பு தான் பாலை வனத்தில் விழுந்து கிடந்தது வரை ஞாபகம் வர அவளுக்கு பலத்த ஆச்சர்யம். எப்படி அவள் இன்னும்?.......

மெல்ல சுற்றும், முற்றும் பார்த்தால் ஏதோ ஒரு வீட்டின் ஏதோ ஒரு அறை. அப்பொழுதுதான் அறையின் உள்ளே நுழைந்த அவனை பார்த்தாள்.

எதையோ யோசித்த வண்ணம் நுழைந்தவன் இவள் விழித்திருப்பதை கண்டவுடன் தன் முகத்தில் மென் புன்னகையையும் சேர்த்துக் கொண்டான்.

“ஹாய் ஐ’ம் அபிஷேக், ஐ’வ் கிவ்வன் யூ பெயின்கில்லர்ஸ், ஹட் டு புட் ஃப்யூ ஸ்டிச்சஸ் டூ, ஹவ் இஸ் த பெய்ன்? ஹவ் ஆர் யு நவ்?” அவள் அச்சூழலை புரிந்து கொள்ளவேண்டும் என்ற அக்கறை அக் கேள்வியில் தலை தூக்கி நின்றது. அதையும் மிஞ்சி நின்றது கரிசனை.

ஒரு ஆண் உள்ளே நுழைவதை கண்டதும் பதறியவள் அவன் மருத்துவ வார்த்தைகளில் அவன் மருத்துவன் என உணர்ந்து சற்று ஆறுதல் கொண்டாலும், அதிகமாக குழம்பினாள்.

“இ...இது ஹாஸ்பிட்டலா? எதுக்கு ஜென் டாக்டர்? லேடி டாக்டர்தானே………..…....” கேள்வியாய் அவனை பார்த்தாள்.

அவன் புன்னகை முழுவதுமாக மலர்ந்தது. அது வெகு அழகாக இருந்தது அவள் கண்களுக்கு. மனதிற்கோ பயத்தை தந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.